அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் செய்தி : பணமின்றி பயணம்
பயணம் உங்களுக்கு பிடித்த விஷயம் - ஆனால் அதற்கான பணம் உங்களிடம் இல்லை என்றால்! பயணிப்பது கடினம் தானே. ஆனால் பணம் இல்லாமலும் பயணிக்க முடியும் - முயற்சி செய்தால் என்று நிரூபித்து இருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள் - தினமலர் தளத்தில் படித்த செய்தி ஒன்றிலிருந்து சில வரிகள் -
கல்லுாரி முடித்து வேலைக்கு சென்ற பின் நண்பர்கள் இணைந்து சுற்றுலா செல்வதே அரிதாக மாறிய இன்றைய காலத்தில் இரண்டு நண்பர்கள் இணைந்து இந்தியா முழுவதும் பணம் இன்றி பயணம் செய்வதையே முழு நேரமாக மாற்றி, அதை செய்தும் காட்டியுள்ளனர். அந்த அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார்கள் யாசின், சந்துரு.
வழக்கமான பயணமாக இருக்கக்கூடாது. இதில் கிடைக்கும் அனுபவம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த கூடியதாக இருக்க வேண்டும் என முடிவு செய்து துவங்கியது இப்பயணம். கையில் பணம் எதுவும் எடுத்துச் செல்லாமல் லிப்ட் கேட்டும், நடந்து மட்டுமே செல்ல திட்டமிட்டு 2022 டிசம்பர் 19ல் கேரளாவில் இருந்து பயணத்தை துவக்கினோம்.
பயணத்தை துவக்கிய போது பிற மொழி பேசுபவர்களிடம் சரியாக உரையாட முடியாமல் போனது. தொடர்ந்து முயற்சி செய்து பிற மாநில மக்களிடம் எப்படி பேசுவது, பயணம் குறித்து கேட்பவர்களிடம் உரையாடுதல் ஆகியவற்றை வளர்த்து கொண்டு தொடர்ந்து பயணித்தோம்.
முழுப்பதிவும் படிக்க நினைத்தால் சுட்டியும் கீழே தந்திருக்கிறேன்.
பயணம் செய்ய வேண்டாம் பணம் (dinamalar.com)
******
இந்த வாரத்தின் ரசித்த காணொளி : மார்த்தா சிஸ்டர்
சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு சிறு காணொளி ஒன்று - இது குறும்படமா இல்லை ஏதேனும் சினிமா படத்தின் பகுதியா அல்லது விளம்பரமா என்பது தெரியவில்லை. ஆனால் மனதைத் தொட்ட காணொளி என்பதில் சந்தேகமில்லை. உங்கள் மனதையும் தொடலாம் - கீழே உள்ள சுட்டி வழி பாருங்களேன்!
https://www.facebook.com/reel/1203952267285041
******
பழைய நினைப்புடா பேராண்டி : ஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்.....
2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
ஓவியர் கோபுலு அவர்கள் ஆனந்த விகடனில் வரைந்த ஓவியங்கள் காலத்தால் அழியாதவை. நகைச்சுவை உணர்வு அவரது ஓவியங்களில் ததும்பும் அழகை எப்போது வேண்டுமானாலும் ரசிக்க முடியும். அவர் நகைச்சுவைகளுக்கு மட்டுமே ஓவியம் வரைந்திருக்கிறார் என்று நினைத்துவிடக்கூடாது. பல அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார் அவர்.
சமீபத்தில் 1948-ஆம் வருடத்தின் ஆனந்த விகடன் தீபாவளி மலர் கிடைத்தது. அந்த புத்தகத்தில் கோபுலு அவர்கள் ஆறுவிதமான ருதுக்கள் பற்றிய ஓவியங்களை வரைந்திருப்பதைக் கண்டேன். முதலில் ”ருது” என்றால் என்ன என்று பார்த்து விடுவோம் –
”கதிரோனின் வழிபாட்டுக்கான மந்திரங்களிலும், இதர வர்ணனைகளிலும் சூரிய சக்தியினால் ஏற்படும் சீதோஷ்ண நிலைகளும் மாறுபாடுகளும் விவரமாக அறியக் கிடக்கின்றன. வருஷத்தில் ஆறு விதமான பருவ மாறுதல்களுக்கும் சூரியனையே காரணமாக்கி, அவைகள் வஸந்த-க்ரீஷ்ம-வர்ஷ-சரத்-ஹேமந்த-சிசிர ருதுக்களென்ற பெயர்களினால் குறிப்பிடப் படுகின்றன”
ஒரு ருது என்பது இரண்டு மாதம். இந்த ருதுக்கள் ஒவ்வொன்றிலும் மனித சுபாவங்கள் மாறுபடுகின்றன. ஆறுவித ருதுக்களின் லக்ஷணங்களையும் ஸ்ம்ருதிகளின் வர்ணனைக்கு ஒட்டியவாறு பின்வரும் ஓவியங்களில் கோபுலு அவர்கள் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். பார்க்கலாம் வாருங்கள்!
முழு தகவல்கள் படிப்பதோடு, அற்புதமான ஓவியங்களையும் மேலே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!
******
இந்த வாரத்தின் அனுபவம் : சுத்தம்…
இரயில் பயணங்களில் பல விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். இரயில்வே துறை குறித்த பல்வேறு குறைகளை பட்டியலிடுகிறோம் - அரசு இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதிக் குவிக்கிறோம். ஆனால் ஒரு பயணியாக இரயில்களை பயன்படுத்தும் போது நாம் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்கிறோமோ என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்வேன். சமீபத்தில் தமிழகம் இரயில் வழி வந்தபோது பார்த்து நொந்த விஷயம் ஒன்று உங்கள் கவனத்திற்கு…
பதினான்கு நாட்கள் வட இந்திய பயணம் முடிந்து (காசி, பிரயாகை, அயோத்யா, ஆக்ரா, மதுரா) தமிழகம் திரும்பும் மூன்று பேர் கொண்ட குடும்பம் எனது பக்கத்து இருக்கைகளில் வந்தார்கள். அவர்களுக்குள் இரயில் வசதிகள் சரியில்லை, பெட்டிகள் அழுக்காக இருக்கிறது, குளிரூட்டப்பட்ட பெட்டி என்றாலும் சூடு தெரிகிறது (இத்தனைக்கும் AC நன்றாகவே வேலை செய்தது!) என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சற்று தூங்கி எழுந்து பல் தேய்த்து, முகம் கழுவி, தலைக்கு எண்ணெய் தடவி வாரிக்கொண்டு, முடியைச் சுருட்டி பெட்டியின் உள்ளேயே போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுத்தமாக இருக்க நினைக்கும் அதே நேரத்தில் அவர்களைச் சுற்றி இருக்கும் இடமும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் எப்போது வரும் இவர்களுக்கு.
"சீவீ முடிச்சி சிங்காரிச்சு, சிவந்த நெத்தியில பொட்டும் வைச்சு, ஆசை தீர மாப்பிள்ளை அழகை அள்ளி பருகும் கன்னிப் பெண்ணே" என்று என்னை அறியாமல் என் வாய் முணுமுணுத்தது! "அடங்கு டா டேய்!" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
******
இந்த வாரத்தின் ரசித்த WhatsApp Forward: பெட்ரோமாக்ஸ் லைட்
ஆமா torch light கொண்டுவான்னா petromax light கொண்டு வந்திருக்க ராதா?
அப்பவாவது என் காலை மிதிக்காம நீ நடக்கறியான்னு பாக்கத்தான் கிருஷ்ணா.
******
இந்த வாரத்தின் ரசித்த படம் - கற்பனை வளம்
மேகக் கூட்டங்களை பார்க்கும் போது பல வித எண்ணங்கள் தோன்றுவதுண்டு. அதன் வடிவங்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன என யோசித்துப் பார்ப்போம் அல்லவா? இப்படி சில மேகக் கூட்டங்களை படம் பிடித்து அதற்கு வடிவம் கொடுக்கிறார் ஒருவர். முகநூலில் பார்த்து ரசித்த அப்படியான ஒரு சில படங்கள் கீழே! நீங்களும் பார்த்து ரசிக்கலாம்!
******
இந்த வாரத்தின் தொல்லை : கார் விக்கலையோ கார்
சமீபத்தில் ஞாயிறு ஒன்றில் மதியம் உறங்கும் வேளையில் அலைபேசியில் ஒரு அழைப்பு. பொதுவாக தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுப்பதில்லை. என்னதான் True Caller App இருந்தாலும் பல சமயங்களில் பெயர் வராமல் எண் மட்டுமே வருவதை தவிர்க்க முடிவதில்லை. அது போல வெறும் எண்ணாகவே வந்தது. சரி எழுந்து விட்டோம், வந்த அழைப்பை எடுத்துப் பேசுவோம் என பேசினால், எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல் - “நீங்க உங்க கிட்ட இருக்க காரை விக்கணுமா?” கேட்டவுடன் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது! பொம்மை கார் கூட வீட்டில் இல்லாத என்னிடம் இந்த கேள்வி! கோபத்தைத் தணித்துக் கொண்டு “நான் கார் விக்கணும்னா முதல்ல கார் வாங்கணும்! இப்பத்திக்கு வாங்கறதா இல்லை! அதுக்கப்புறம் தான் விக்கறது பத்தி யோசிக்கணும்! அதனால முதல் வேலையா உங்க டேட்டா பேஸிலிருந்து என் நம்பரை எடுத்துடுங்க! இதே வேலையா போச்சு! எத்தனை தடவை இப்படி கார் விக்கறீங்களான்னு ஃபோன் பண்ணுவீங்க!” என்றேன். சாரி சார் என்று அழைப்பைத் துண்டித்தார் எதிர்முனை பெண்மணி. இது போல பல எண்களை நான் Block செய்து கொண்டேயிருந்தாலும் புதியதொரு எண்ணிலிருந்து இது போன்ற அழைப்பு வருகிறது! முடியல!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
22-06-2024
பயணத்திலும் பயணம்.. சாகசப்பயணம்... வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குகோபுலு நல்ல ஓவியர். தேவனின் கதைகளுக்கு பெரும்பாலும் அவர்தான் ஓவியம்.
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குகுறும்படம் சுட்டி க்ளிக் செய்துள்ளேன். பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குபக்கத்தில் இருந்தவர் கன்னிப்பெண்ணோ... ஓஹோ...
குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.
நீக்குபக்கத்தில் இருந்தவர் கன்னிப்பெண் இல்லை - ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ராதே கிருஷ்ணா....!
பதிலளிநீக்குமேக ஓவியம் டாப். நானும் நான் எடுத்த மேகப்படங்களில் முயற்சித்துப் பார்க்கிறேன்!
நீங்கள் எடுத்த படங்களில் முயற்சித்துப் பார்த்துச் சொல்லுங்கள் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குவெறும் எண்ணாக இல்லாமல் அழைப்பவர் பெயரோடு இனி அழைப்புகள் தருவது என்று டிராய் தீர்மானம் செய்து, சோதனை முயற்சியாக சில இடங்களில் தொடங்கியும் விட்டார்களாமே....
பதிலளிநீக்குசோதனை முயற்சியாக பெயருடன் அழைப்பு - நான் பார்க்கவில்லை ஸ்ரீராம். எந்தப் பகுதியில் என்று தெரியுமா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சுத்தம் - சரியான கருத்து.கார் லோன் தரோம்னு வேற பிடுங்கி எடுப்பார்கள்.சரின்னு ஒரு BMW வாங்கிப் போடலாம்னு பார்த்தா அதுக்கு provision இல்லையாம்
பதிலளிநீக்குBMW கார் வாங்க provision இல்லை - ஹாஹா... அதையே வாங்கிடலாம் - கொடுத்தால்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி வெங்கடேஷ்.
வாசகம் மற்றும் பதிவில் இடம்பெற்ற அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமார்த்தா சிஸ்டர் மிக அருமையான சிஸ்டர்.
கண்டிப்பான, அன்பான சிஸ்டர். அருமையான நடிப்பு.
பகிர்வுக்கு நன்றி.
மேக கூட்டங்களை நானும் இன்று படம் எடுத்து முகநூலில் போட்டேன். எனக்கும் மேகங்களில் முகங்களை தேடுவேன். அவரின் கற்பனை வளம் மிக அருமை.
கார், ராதா கிருஷ்ணா அனைத்தையும் ரசித்தேன்.
வாசகம் மற்றும் பதிவின் மற்ற பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குவாச்கம் மிக அருமை.
பதிலளிநீக்குஅந்த இளைஞர்களின் பயணம் நிஜமாகவே சவாலான பயணம் அதுவும் கையில் பணம் இல்லாமல் பயணம் என்பது ரொம்ப யோசிக்க வைத்தது.
கீதா
கையில் பணம் இல்லாமல் பயணம் - இப்போது இப்படியான இளைஞர்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன. சற்றே அதிகமாக ரிஸ்க் எடுக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
மார்த்தா ஸிஸ்டர் படமோ அதன் ஒரு க்ளிப்போ அல்லது குறும்படமோ என்று தோன்றுகிறது. நெகிழ்ச்சியான சீன் மனதை தொட்டது.
பதிலளிநீக்குகீதா
மார்த்தா சிஸ்டர் - இணையத்தில் இது குறித்து தெரிந்து கொள்ள முயற்சித்தேன் - முடியவில்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
நீக்குகோபுலுவின் ஓவியங்களைச் சொல்ல வேண்டுமா! அனைத்தும் ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் சுட்டிகள் வேறு tab ல் திறப்பது போல் அமைக்க வில்லை என்று நினைக்கிறேன்.
ரயிலில் பலரும் பளாஸ்டிக் குப்பைகள் தாங்கள் கொண்டுவரும் காகிதக் குப்பைகள் பலவற்றையும் கீழேயே போடுகின்றனர். அவ்வப்போது பெருக்க வருபவர்கள் வரும் வரை அவை அப்படியே கிடக்கும். எனக்கு வாய் துறு துறுக்கும் இதெல்லாம் எடுத்துக் குப்பைத் தொட்டியில் கொண்டு போடுங்கள் என்று. பெரியவர்கள் செய்வதைத்தானே குழந்தைகளும் செய்யும்! அவர்களும் பிஸ்கட் பேப்பர், சாக்கலேட் பேப்பர்களைக் கீழே போடுவதைக்கண்டேன். என்ன சொல்ல?
கீதா
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குராதே கிருஷ்ணர் - பெட்ரோமாஸ் அழகு - அதன் கீழான கருத்து சிரித்துவிட்டேன்!!
பதிலளிநீக்குமேகக் கூட்டத்தில் கற்பனைப் படங்களை மிகவும் ரசித்தேன்.
மேகக் கூட்டம் ஆமாம் பல வித உருவங்கலை வடிவங்களை நினைத்துப்பார்ப்பதுண்டு. நான் முன்பு கையால் வரைந்த போது இப்படிச் செய்ததுண்டு. கொரோனா சமயத்தில் க்ளிக்கிய மேகக் கூட்ட ஃபோட்டோக்களை கணினியில் போட்டு வடிவங்களைச் செய்ததுண்டு. கொம்பு போட்டு ஹாலோவீன் போன்று செய்து அமெரிக்காவில் வசிக்கும் உறவினர் குழந்தைகளுக்கு அனுப்பியதுண்டு. அந்தப் படங்கள் எல்லாம் போயே போச்! ஹார்ட் டிஸ்க் பழுதடைந்து போனதில்.
கீதா
மேகக் கூட்டங்கள் - கற்பனைகளைச் சிறகடிக்கச் செய்யும் தான். உங்களது எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
இந்த மாதிரி தெரியாத எண்களை நானும் எடுப்பதில்லை ப்ளாக் செய்து விடுகிறேன். நேற்றிலிருந்து ஒரே எண் ஆனால் கடைசி இரு எண்கள் அல்லது மூன்று எண்கள் மட்டும் மாறியிருக்கும் ஒவ்வொன்றாக ப்ளாக் செய்ய செய்ய அதே எண்ணின் கடைசி எண்கள் மாற்றப்பட்ட எண்களிலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. இதே ஊர் தான்!! இதுவரை 6 வந்துவிட்டன. அனைத்தையும் ப்ளாக் செய்தாச்சு.
பதிலளிநீக்குகீதா
நானும் பல எண்களை இப்படி தொடர்ந்து ப்ளாக் செய்து கொண்டே இருக்கிறேன். வேறு வழியில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
இன்றைய வாசகம் மிகச்சரியான நிலவரம்.
பதிலளிநீக்குஆனால் நியாயமானவனுக்குதான் கோபம் வரும் என்பதும் உண்மை.
என்ன செய்வது காலமாற்றம் நியாயங்களையும் வழி மாற்றுகிறது.
பயண நண்பர்களை பாராட்டுவோம்.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.
நீக்கு