அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பனுபவம் - உனக்கென மனக்கோயில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அப்பாக்கள் தினம்! - 16 ஜூன் 2024:
நேற்றைய பொழுதில் இணையத்தில் 'அபியும் நானும்' திரைப்படத்தை மகளும் நானும் பார்த்து மகிழ்ந்தோம்! இந்தத் திரைப்படம் எங்கள் இருவரின் ஆல் டைம் ஃபேவரிட் என்று சொல்லலாம்! அப்பா மகள் இடையே உள்ள இணையற்ற பிணைப்பை, அந்த உறவின் உண்மையான அழகை மெல்லிய நீரோட்டம் போல கதை வாயிலாக சிறப்பாக சொல்லிச் சென்றிருப்பார் இயக்குனர்!
அப்பா!
ஒவ்வொரு குடும்பத்திலும் உயர்ந்ததோர் இடத்தில் கம்பீரமாய், மிடுக்கான தோற்றத்தில் பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத உருவமாக அப்பா என்பவர் இருப்பார்!
தன் குடும்பத்தின் நலனுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் ஜீவனாகவும், குடும்ப பாரத்தை கட்டியிழுத்துச் செல்லும் தலைவனாகவும் இருப்பார்! பிள்ளைகளுக்கு உதாரணப் புருஷனாகவும் நல்லதோர் வழிகாட்டியாகவும் இருப்பவர்!
அப்பாவைப் பற்றி என்னுடைய பக்கத்தில் நிறைய நிறைய எழுதியிருக்கிறேன்! ஒவ்வொரு நாளுமே அப்பாவை நினைக்காமல் நான் இருந்ததில்லை! தன்னுடைய செயல்களால் எங்கள் மீது கொண்ட இணையற்ற பாசத்தால், ஒழுக்கத்தால் என்னைக் கவர்ந்தவர்! என்றும் என்னுடைய முதல் ஹீரோ அப்பா தான்!
என்னருகில் இல்லாவிட்டாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் தான் என்ன! அப்பா எனும் அற்புதமான உறவுக்கு ஈடு இணையில்லை! பசுமையான நினைவுகளில் அப்பாவின் கைப்பிடித்து வலம் வந்த சின்னஞ்சிறு சிறுமியாகவே இன்னும் இருக்கிறேனே! இதை விட என்ன வேண்டும்!
நான் என் அப்பாவைக் கொண்டாடுவது போல மகளும் தன் அப்பாவைக் கொண்டாடி மகிழணும்! என்றும் அவளின் நினைவில் உயர்ந்தவராக இருக்கணும்!
*******
அன்பு சூழ் உலகு! - 17 ஜூன் 2024:
சென்ற வாரத்தில் ஒருநாள் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன்! எங்கள் குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிற்குத் தான் திருமணம்! கலகலப்பான பெண்! வெகு விமர்சையாக நடைபெற்றது திருமணம்! அரங்கு நிறைந்த கூட்டம்! புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அந்த மண்டபத்திற்கும் நான் முதல்முறையாக செல்கிறேன்!
அங்கே அமர்ந்திருந்த அக்கம் பக்கத்தவர்களுடன் சற்று பேசிக் கொண்டிருந்து விட்டு மணமக்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக மணமேடைக்கு சென்றிருந்தோம்!
அங்கே மகள் திடீரென்று 'குட்மார்னிங் மிஸ்!' என்றாள்! விசாரித்ததில் அவளுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியராம்! அவர் பெண் வீட்டுக்கு உறவாகவோ நெருங்கிய நட்பாகவோ இருக்கலாம்! பரபரப்பாக ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்! மகள் என்னிடம் சொன்னதும் எங்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தார்!
மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பை கொடுத்து விட்டு கீழே இறங்கி காலணிகளை போட்டுக் கொண்டிருக்கும் போது என் கையை யாரோ பற்றி இழுத்தார்கள்! யாரென்று பார்த்ததில் டெல்லியில் எங்கள் பகுதியில் எங்கள் நட்புவட்டத்தில் இருந்த தோழி ஒருவர்! சர்ப்ரைசாக இருந்தது தோழியுடனான அந்த சந்திப்பு!
அரங்கு நிறைந்த கூட்டத்தில் என் முகத்தை மேடையில் பார்த்ததும் நினைவில் வைத்து ஓடி வந்திருக்கிறார்! எவ்வளவு வருஷமாச்சு உன்ன பார்த்து! இதுக்கு முன்னாடி கூட நான் திருச்சி வந்திருக்கேன்! நீ இங்க இருக்கன்னு தெரியலையே! வெங்கட் எங்க? குழந்தை நல்லா வளர்ந்துட்டாளே! என்று ஒருவரையொருவர் விசாரித்து அன்பை பரிமாறிக் கொண்டோம்!
தோழி மாப்பிள்ளை வீட்டுக்கு உறவாம்! இப்போது கொச்சியில் வசிக்கிறார்கள்! கும்பலில் பின்னாடி அமர்ந்திருந்த அவர் கணவர் இருக்குமிடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்! மகிழ்ச்சியில் தோழியின் கரத்தை பற்றிக் கொண்டு இப்படியும் அப்படியுமாக நாற்காலிகளுக்கு இடையே புகுந்து சென்று பேசினேன்..:)
நீ கோயம்புத்தூர்ல இருப்பேன்னு நினைச்சேன் என்றார் தோழி..:) என்னைச் சார்ந்தவர்கள் எல்லோருமே இங்கே தான் வசிக்கிறார்கள்! என் வட்டம் மிகச்சிறியது! இருவரையும் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்து விட்டு உணவு சாப்பிடச் சென்றோம்!
இது மலையாளத்து சாயல் கொண்ட திருமணம்! மாப்பிள்ளை பக்கம் மும்பை! எல்லாரும் ஆராம்ஸே சாப்பிடுங்கோ! என்ற குரல் ஒலிக்க அவியல் மற்றும் கோதுமை பிரதமனுடன் அருமையான சாப்பாடு! கொசுறாக சாக்லேட் சிரப்பில் மூழ்கிய ஐஸ்க்ரீமும் , குல்கந்து பீடாவும் வழங்கப்பட்டது!
தாம்பூலப் பையை வாங்கிக் கொண்டு பல வருடங்கள் கழித்து தோழியை சந்தித்த மகிழ்ச்சியை அக்கம்பக்கத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
*******
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பழைய ஆசிரியர், பழைய தோழி ஆகிய சந்திப்புகள், வித்தியாசமான உணவு, உபசரிப்புகள்... உற்சாகம் கூடி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பதிலளிநீக்குஉண்மை தான் சார். இந்த மாதிரி அனுபவங்கள் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
அப்பாவின் நினைவுகள் அருமை. வெங்கட் ரோஷ்ணி படங்கள் அருமை.
பதிலளிநீக்குஅபியும் நானும் எனக்கும் பிடித்த படம். பழைய நட்பை சந்தித்து அன்பை பரிமாறி கொண்டது மகிழ்ச்சி.
அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம். அப்போது அன்பு சூழ் உலகுதான்.
ஆமாம் அம்மா. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம் என்பது உண்மை தான்! அன்பு சூழ் உலகு!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
தந்தை மறக்க இயலாது இதயம்.
பதிலளிநீக்குதிருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மனதுக்கு உற்சாகமாக இருக்கும்.
உண்மை தான் சார். அப்பா எனும் உறவின் அழகை யாராலும் மறக்க இயலாது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
வெங்கட்ஜி - ரோஷிணி படங்கள் செம. ரசித்தேன்.
பதிலளிநீக்குஅபியும் நானும் படம் நான் முழுவதும் பார்த்ததில்லை. பார்த்த சீன்கள் ரொம்பப் பிடிக்கும்.
இப்படி நட்புகள், பழைய ஆசிரியர் என்ற சந்திப்புகள் அன்புப் பரிமாறல்கள் உற்சாகம் தரும். கல்யாணச் சாப்பாடு கோதுமைப் பிரதமன் ஆஹா!!!!
கீதா
மகளும் நானும் இந்தத் திரைப்படத்தை நிறைய முறை கண்டு களித்திருக்கிறோம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. அப்பாவை பற்றிய தங்களது வார்த்தைகள் மன நெகிழ்வை ஏற்படுத்தின. அப்பாவையும், அம்மாவையும் மறக்க இயலுமா? நம் நினைவிருக்கும் வரை தினமும் நம்முடனே வாழ்பவர்கள். உங்களுக்கும், அன்பு ரோஷிணிக்கும் நல்ல அப்பாக்கள் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பார்த்த அந்த திரைப்படம் நானும் பார்த்திருக்கிறேன். நல்ல பாசமான படம்.
நீங்கள் சென்றிருந்த திருமணத்தில், தங்கள் மகளின் பழைய ஆசிரியையை சந்தித்ததற்கும், தங்கள் பழைய சினேகிதியை சந்தித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி. தீடிரென இப்படி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது மனம் கண்டிப்பாக ஒரு திருப்தியில் மகிழ்ந்து போகும். அப்படிப்பட்ட தங்கள் மகிழ்வான அனுபவங்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகளுக்கும் எனக்கும் நல்ல தகப்பன்கள் கிடைத்திருப்பது இறைவன் அளித்த வரம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.