சனி, 29 ஜூன், 2024

காஃபி வித் கிட்டு - 191 - கள்ளக்குறிச்சி - புதிய பயணத் தொடர் - ராஃப்டிங் - நாஞ்சில் மனோ - Beauty - ஜாது கி ஜப்பி - புத்தரின் கை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வாரணாசி - மேலும் சில படித்துறைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் வேதனை : கள்ளக்குறிச்சி…



கள்ளக்குறிச்சி நிகழ்வு - இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை இந்தச் சாராயத்திற்கு - அது டாஸ்மாக் சரக்காக இருக்கட்டும், இல்லை கள்ளச்சாராயமாக இருக்கட்டும் - இழக்கப்போகிறோமோ?  ஒரு சிலரின் லாபத்திற்காக எத்தனை உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.  எத்தனை குடும்பங்கள் இன்றைக்கு நடுத்தெருவில்! இப்படியான நிகழ்வுகளை தடுக்க வேண்டிய அரசாங்கம் இறந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவி என்ற பெயரில் 10 லட்சம் கொடுப்பதோடு தன் கடமை முடிந்தது என்று நினைத்துக் கொள்வது அதை விட வேதனை - ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?  குடி குடியைக் கெடுக்கும் என்பதை குடிப்பவர்கள் என்றைக்குதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? இதில் சில பிரபலங்களின் உளறல்களைக் கேட்கும்போது கோபம் தான் வருகிறது - அளவாகக் குடிக்க வேண்டும் என்று ஒருவர் முத்தான கருத்தை உதிர்த்து இருக்கிறார்! என்ன சொல்ல! வேதனை! இறந்தவர்கள் விட்டுச் சென்ற இளம் சிறார்களை நினைத்தால் மனம் முழுக்க வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. 


******


இந்த வாரத்தின் தகவல் : அடுத்த பயணத் தொடர்


தற்போது இந்த வலைப்பக்கத்தில் வாரணாசியில் ஒன்பது நாட்கள் பயணத் தொடர் வெளிவந்து கொண்டிருப்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். அது முடிவதற்குள் அடுத்த பயணத் தொடரா? என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல்.  ஒரு வாரத்திற்கு வாரணாசி பயணத் தொடர் வராது - அதற்கு பதிலாக நம் பக்கத்தில் புதிதாக எழுதி வரும் திருமதி விஜி வெங்கடேஷ் (திருமதி ஜீவி) அவர்களின் பயண அனுபவம் ஒன்று வரும் வாரத்தில் சில பதிவுகளாக வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் எனது பயணக் கட்டுரைகள் தானே வந்து கொண்டிருக்கிறது. சற்றே மாறுதலாக வேறு ஒருவரின் பயணக் கட்டுரையை - அவரது பார்வையில் பயண அனுபவங்களை நீங்கள் ரசிக்கும் விதத்தில் இந்தப் பயணத் தொடர் இருக்கப்போகிறது - ஒரு வாரத்திற்குப் பிறகு எனது வாரணாசி பயணத் தொடர் மீண்டும் உங்கள் பார்வைக்கு வந்து சேர இருக்கிறது என்கிற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  எங்கே பயணம், எப்போது சென்ற பயணம் என்பதெல்லாம் வரும் திங்கள் அன்று தெரிந்து கொள்ள காத்திருங்கள்!


******


பழைய நினைப்புடா பேராண்டி : ப்யாஸ் நதியில் ராஃப்டிங்.....


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ப்யாஸ் நதியில் ராஃப்டிங்..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ நகர்.  குளிர் பிரதேசமான மணாலி என்று சொல்லும்போது குலூவையும் சேர்த்து, குலூ-மணாலி என்று தான் சொல்வார்கள். இரண்டுமே அருகருகே இருக்கும் இரு நகரங்கள்.  மணாலியில் பனிப்பொழிவும் பனிபடர்ந்த சிகரங்களும் பார்க்கலாம் என்றால் குலூவில் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யும் த்ரில் அனுபவம் பெறலாம்.  வாருங்கள் கூழாங்கற்கள் நிரம்பிய [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யலாம்.


குளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்பர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.


Small, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும்.  14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களுக்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.


சீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம்.  பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் அதிர்ச்சி : நாஞ்சில் மனோ…


பதிவுலகில் நாஞ்சில் மனோ அப்போது தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த நேரம். எல்லோருடைய பதிவுகளுக்கும் வந்து கருத்திட்டு ஊக்கம் தந்த நல்ல மனிதர்.  பிறகு பதிவுலகை விட்டு வெளியே போனாலும், முகநூலில் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தவர். உடல் நிலை சரியில்லாமல் சென்ற வாரம் இப்பூவுலகை விட்டு விலகினார் என்ற செய்தி தெரிந்தபோது மனதில் அதிர்ச்சி.  சில நாட்களுக்கு முன்னர் தான் மற்றொரு பதிவரான கருண் குமார் அவர்களின் மரணம் அதிர்ச்சி தந்தது என்றால் இப்போது இன்னுமொரு மரணம்.  வேதனையான இழப்பு.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:  Stop the Beauty Test


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக Dove Soap விளம்பரம் ஒன்று. ஹிந்தி மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் subtitle உண்டு என்பதால் புரிந்து கொள்ள முடியும்.  பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியை பார்க்க முடியவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Dove | The Beauty Report Card #StopTheBeautyTest (youtube.com)


******


இந்த வாரத்தின் தகவல் - ஜாது கி ஜப்பி


ஹிந்தியில் முன்னா பாய் MBBS என்று ஒரு படம் - சஞ்சய் தத் நடித்த படம் - இது தான் தமிழில் வசூல் ராஜா MBBS என்ற பெயரில் வந்தது.  சஞ்சய் தத் பலருக்கும் இந்தப் படத்தில் ஜாது கி ஜப்பி என்ற பெயரில் கட்டிப்பிடி வைத்தியம் செய்வார் (அதையே தமிழிலும்!).  உங்களுக்குத் தெரியுமா வருடத்தின் ஒரு நாள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் அதாவது Hug செய்வதற்கென்றே ஒரு நாளை வைத்திருக்கிறார்கள் வெளிநாட்டவர்கள்! International Hug Holiday என்று ஜூன் மாதம் 29-ஆம் நாள் கொண்டாடுகிறார்களாம்! ஒரு சிலர் ஜனவரி 21-ஆம் தேதி தான் இந்த நாள் என்றும் சொல்வதுண்டு. இப்படிச் செய்வதால் ஆரோக்யமான பலன்கள் உண்டு என்றும் சொல்கிறார்கள்!  எச்சரிக்கை: இதைக் கேட்டுவிட்டு வழியில் போகும் எவரையேனும் நீங்கள் கட்டிப்பிடித்தால் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல! 


******


இந்த வாரத்தின் அறிமுகம்: புத்தரின் கை



சைனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கிடைக்கும் எலுமிச்சை வகையைச் சார்ந்த ஒரு பழம். புத்த மத வழிபாட்டுத் தலங்களில் பிரசாதமாக படைக்கப்படும் இந்தப்பழத்திற்கு என்ன குணங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்தத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம். என்ன பார்க்கத்தான் (படம் மேலே!) ஒரு மாதிரி இருக்கிறது! இந்தியாவில் இப்படியான ஒரு பழத்தினை நான் பார்த்ததில்லை. உங்களில் யாரேனும் இந்தப் பழத்தை பார்த்ததுண்டா? இதைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்டா? சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

29 ஜூன் 2024


18 கருத்துகள்:

  1. கள்ளக்குறிச்சி சம்பவம் வேதனைதான்.  அங்கு மறுபடியும் விற்பனையைத் துவக்கி விட்டார்களாம்.  அடுத்த பயணத்தொடர் ரசிக்கக் காத்திருக்கிறோம்.  வருக வருக திருமதி விஜி வெங்கடேஷ்.  நண்பர் நாஞ்சில் மனோ பெயர் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரது தளம் சென்ற நினைவில்லை.  வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகள்.  சிறு வயதுக்காரர்தான் என்றும் தெரிகிறது.  விளம்பரம் கட்டாயம் பிறகு பார்க்க வேண்டும்.  ரசனையான பல விளம்பரங்கள் / குறும்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்துவீர்கள்.  புத்தரின் கை புதிய தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை பேர் இறந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை - தொடர்ந்து அமோகமாக விற்பனை தொடங்கி விட்டது! :(

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கள்ளக்குறிச்சி விடயம் இன்னும் ஒருமாத காலம் பேசுவார்கள் பிறகு மீண்டும் வேறொரு ஊரில் இது நிகழும்.

    குடிப்பவர்களுக்கு இரக்கப்படுவது அவசியமற்றது
    அவர்களது குடும்ப நிலைதான் கவலையாக உள்ளது.

    நாஞ்சில் மனோ அவர்களின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிப்பவர்களுக்கு இரக்கப்படுவது அவசியமற்றது - அதே தான் எனது கருத்தும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. கள்ளக்குறிச்சி மிகுந்த கவலைதரும் சம்பவம்.

    பதிவர்களின் மரணம் துயர்தருகிறது. அவர்கள் ஆத்மசாந்திக்கு பிரார்த்திப்போம்.

    புத்தா பிங்கர் இப்பொழுதுதான் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கள்ளக்குறிச்சி - வேதனை தான்.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  4. கள்ளக்குறிச்சி நிகழ்வு மிகவும் வேதனையான ஒன்று. அவர்களாகத் தேடிக் கொண்ட முடிவு. இதில் குடிப்பவர்கள் மீது எனக்கு எந்த இரக்கமும் வேதனையும் வரலை. ஆனால் அவர்களின் குழந்தைகள் எதிர்காலம்.... இப்படி குடியை வளர்க்கும் ஆட்சிகள். என்ன சொல்ல? இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் ஜி. மீண்டும் தொடங்கிடுவாங்க முதலருந்தே!

    வாங்க விஜி! உங்க பயணத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    நாஞ்சில் மனோவின் மரணம் ரொம்ப அதிர்ச்சி. எங்க ஊர்க்காரர். அவரிடம் வலைத்தளம் வழியாகப் பேசியதுண்டு. பெரிய வயதும் இல்லை. அவர் தளங்கள் வாசித்ததும் உண்டு ஜாலியா பேசுபவர். கரண்குமார் தெரியவில்லை. இப்படியான மரணங்கள் வேதனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடியை வளர்க்கும் ஆட்சி - அதே. அவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம்.

      நாஞ்சில் மனோ - வேதனையான மரணம். நல்ல மனிதர் - வயதும் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. விளம்பரம் மனதை வேதனை செய்தது. பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு அழகுக்கும் கார்டா? கடவுளே ! இது உண்மையா? 80% பள்ளிகளில் என்றும் சொல்லப்படுகிறது. இது விளம்பரத்திற்காகவா? பெண் குழந்தையின் வாய்ஸ் ஓவரில் சொல்லப்படுபவை கேட்டப்ப என்ன நாம இன்னும் பின் தங்கித்தான் இருக்கிறோமா இப்படி என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கும் இப்படியான மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. விளம்பரம் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. புத்தரின் கை - இப்பழம் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை ஜி. அந்தத் தளம் போய் பார்க்கிறேன். நான் முதல்ல என்னவோ மிளகாய் பஜ்ஜியதான் இப்படி அழகா அடுக்கி வைச்சிருக்காங்க போலன்னு நினைச்சேன்!!!! ஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தரின் கை - எனக்கும் புதிய தகவல் தான் கீதா ஜி. பதிவினை படித்தவர்களும் தெரியாது என்றே சொல்லி இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. நிஜமாகவே கட்டிப்பிடி வைத்தியம் நேர்மறையான ஒரு இதத்தைத் தரும் வைத்தியம் தான். நான் இருக்கிறேன் உனக்கு என்று மறைமுகமாகச் சொல்லும், ஆறுதல் மற்றும் அன்பை வெளிப்படுத்தும் ஒன்று.

    பியாஸ் நதியில் ஒரு முறை சின்னதாக ராஃப்டிங்க் அனுபவம் உண்டு. மற்றொரு முறை சென்ற போது திடீரென தண்ணீர் கூடியதால் கேன்சல் செய்துவிட்டாங்க. பதிவு நினைவுக்கு வந்தது உங்கள் அனுபவம் பத்தி சொல்லியிருந்ததும்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டிப்பிடி வைத்தியம் - பலன் இருந்தால் நல்லதே! இப்படியான ஆறுதல் அவ்வப்போது தேவையாகவே இருக்கிறது பலருக்கும்.

      பியாஸ் நதி ராஃப்டிங் - சிறப்பான அனுபவம் தான். நீங்களும் ராஃப்டிங் செய்திருப்பதில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வாசகம் அருமை, உண்மை.
    கள்ளக்குறிச்சி நிகழ்வுகள் வேதனைதான் .
    திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களின் பயணத்தொடர் படிக்க ஆவல்.

    பழைய நினைப்புகளை நினைத்து பார்ப்பது சுகம் மீண்டும் போய் பார்த்து வந்தேன்.

    நாஞ்சில் மனோ மறைவு தெரியும் கருண் குமார் மறைவு தெரியாதே! இவர் ஆசிரியர் என்று நினைக்கிறேன். இருவருக்கும் அஞ்சலிகள்.

    ரசித்த விளம்பரம் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை தரும்.
    கட்டிப்பிடி வைத்தியம் மிக அருமையானதுதான். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக நான் இருக்கிறேன் என்பது ஆறுதல் தரும்.
    புத்தரின் கை இப்போதுதான் அறிந்து கொண்டேன். பார்க்க வாழைப்பழ சீப்பு போல இருக்கிறது.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. விஜி வெங்கடேஷ்29 ஜூன், 2024 அன்று 10:14 PM

    என் பயணத் தொடரை வரவேற்றதற்கு நன்றிகள்.படிக்க சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.உங்கள் நேர்மையான கருத்துக்களை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....