புதன், 12 ஜூன், 2019

க்ரேஸி மோகன் அவர்களுடன் ஒரு அனுபவம் – அடாது மழை பெய்தாலும்!




அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இருப்பதிலேயே மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம் எதுவென்றால், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான். அப்படியான ஒரு விஷயத்தினை பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்தவர் திரு க்ரேஸி மோகன் அவர்கள். க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், சாக்லேட் கிருஷ்ணா, ஒரு பேபியின் டைரிக் குறிப்பு, க்ரேஸி கிஷ்கிந்தா, ரிடர்ன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ், மதில் மேல் மாது என அவரது நாடகங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். திரையிலும் பல படங்களில் வசனகர்த்தாவாக இருந்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவர்! அவரது வசனத்திற்காகவே நான் திரும்பத் திரும்ப பார்த்த கமல் படங்கள் பல உண்டு! கமலுக்காக அவரது படத்தினை ஒரு முறை பார்ப்பதே கடினம்! ஆனால் க்ரேஸி மோகன் வசனம் என்பதற்காகவே பல முறை பார்த்திருக்கிறேன் – மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என பெரிய பட்டியலே உண்டு!

அவருடன் எனக்கான அனுபவம் பற்றி தான் இன்றைக்கு சொல்லப் போகிறேன் – நாடகங்கள் மீது அவர் வைத்திருந்த மரியாதை, எப்படியான நிலையிலும் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தது அவர் மீது மிகுந்த மரியாதை கொள்ள வைத்தது.  1990-ஆம் ஆண்டு நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். ஜூனியர் ஜேசீஸ் என்ற இளைஞர் பிரிவு ஜேசீஸ் கிளப்பில் நான் தலைவராக இருந்த போது [மொத்தமே பத்து பேர் தான் அந்த ஜூனியர் ஜேஸீஸ் குழுவில்!] நடந்த ஒரு நிகழ்வு. ஜேஸீஸ் கிளப்பிலிருந்து ஏதோ ஒரு Fund Raising நிகழ்வாக திரு கிரேஸி மோகன் அவர்களின் “ஒரு பேபியின் டைரிக்குறிப்பு” நாடகத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

டிக்கட் விற்பனை, தங்குமிட ஏற்பாடு, விருந்தினர் வரவேற்பு, கலைஞர்களுக்கான வசதிகள் செய்வது போன்றவற்றை ஜேசீஸ் குழுவினர் செய்ய, டிக்கெட் செக்கிங், கூட்டத்தினை கட்டுப்படுத்துவது போன்ற சில வேலைகளை எங்களுக்கு அளித்திருந்தார்கள். எங்களுக்கும் க்ரேஸி மோகன் குழுவினரின் “ஒரு பேபியின் டைரிக்குறிப்பு” நாடகத்தினை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு – நான் நேரில் பார்த்த முதல் நாடகமே அது தான்! நெய்வேலி நகரின் 24-ஆம் வட்டத்தில் இருக்கும் திறந்தவெளி கலையரங்கத்தில் தான் நாடகம் ஏற்பாடு ஆகியிருந்தது. எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. நாடகக் குழுவினர் வந்தாயிற்று. பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு சரிபார்த்து உட்கார வைத்தாயிற்று.

நாடகம் ஆரம்பித்தது. விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை! நெய்வெலியில் எப்போது மழை வரும் என்று சொல்ல முடியாது! திடீரென மழை வரும் – வந்தால் நின்று நிதானமாக அடித்துப் பெய்யும். திறந்த வெளி அரங்கம் என்பதால் பார்வையாளர்கள் எல்லோரும் ஓடி நாடக மேடைக்குள் பிரவேசிக்க, நாடகத்தினை நிறுத்த வேண்டியாதாயிற்று! எங்களுக்கெல்லாம் ஒரே பதட்டம். காசு கொடுத்து பார்க்க வந்தவர்கள் பாதி நாடகம் நடத்த முடியாவிட்டால் திரும்பக் கேட்பார்களோ, பிரச்சனை ஆகுமோ என்று குழம்பிக் கொண்டிருக்க, திரு கிரேஸி மோகன் அவர்கள் பதட்டமே இல்லாமல் எல்லோரையும் அவரது பேச்சினால் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். கவலையே படாதீங்க, மழை நின்ற பிறகு தொடர்ந்து நாடகம் நடத்தாமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை என்று எங்களை ஆஸ்வாசப்படுத்தினார்.

சிறிது நேரம் அடித்துப் பெய்த மழை நிற்க, விட்ட இடத்திலிருந்து மீண்டும் சரியாகத் தொடங்கியது நாடகம்.  சில காட்சிகள் முடிந்திருக்கும், மீண்டும் மழை துவங்கியது! இப்படி மூன்று முறை நாடகம் – மழை என மாறி மாறி காட்சிகள்! ஒவ்வொரு முறையும் நிறுத்திய இடத்திலிருந்து சரியாகத் துவங்கியது நாடகம் – அவ்வளவு Perfection! ஒன்று, ஒன்றரை மணி நேரம் நடக்க வேண்டிய நாடகம், அன்றைக்கு முடிக்க மூன்றரை நான்கு மணி நேரம் ஆனது! இரவு நாடகம் முடிந்தபோது பத்தரை பதின்றொன்று மணி ஆகியிருக்கும். குழுவினருக்கு விடை கொடுத்து அனுப்பும் வரை நானும் அங்கேயே இருந்தேன். நான் இரவு வீடு திரும்பியபோது பன்னிரெண்டு மணிக்கு மேல்!

தன்னுடைய பணியில் அத்தனை Sincerity! நாடகம் ரசித்தது மட்டுமல்லாது அவரது இந்தப் பண்பும் என்னால் மறக்கவே முடியாது! மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் நாங்களும் சில நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம் – பதட்டமாகிவிட்டது என்று சொன்னபோது, “அடடா எதுக்கு? நாடகம் நடத்தவேண்டிய நாங்களே பதட்டமாகலையே! எல்லாம் நல்லபடியாவே நடக்கும்!” என்று அவர் சொன்னது இன்றைக்கும் நினைவில்!  அலுவலகத்தில் இருக்கும்போது அவர் மறைவு பற்றித் தெரிந்தவுடன் இந்த நினைவுகள் எனக்குள்! அவரது மறைவு நாடக உலகிற்கு ஒரு பெரிய இழப்பு.  ”க்ரேசியைக் கேளுங்கள்” என்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்ட ஒரு கேள்வி-பதிலுடன் பதிவினை முடிக்கலாம்.

“எப்படி மரணம் நிகழ்ந்தால் அது நம்மை சோகத்தில் ஆழ்த்தாது?” என்ற ஒரு கேள்வி கேட்டு ஒரு க்ரேஸியான பதில் தரச் சொன்னதற்கு க்ரேஸி மோகன் சொன்ன பதில்!

”குளிக்கும்போது சோப்பு கரையற மாதிரி, அப்படியே கரைஞ்சு, சாக்கடைக்குள்ள போயிட்டோம்னா, மரண பயமே கிடையாது. மரண ஆச்சர்யம் தான்! என்ன நமக்குத் தெரிஞ்சவங்க, குளிக்கப் போனவன் திரும்பாம காணாம போயிட்டானேன்னு தேடிட்டு இருப்பாங்க…. சோகத்தை விட மர்மம் பெட்டர் இல்லையா?”

க்ரேஸி அவர்களின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்பது நிஜம்! மேலுலகிலும் அவர் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார் என நம்புவோம்!
        
நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. க்ரேஸி அவர்களின் மறைவிற்கு இரங்கல்கள்.

    அருமையான நகைச்சுவைக் கலைஞர்...

    பதிவு பார்த்துவிட்டு வருகிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு கலைஞரை இழந்து இருக்கிறது தமிழ் நாடக/சினிமா உலகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. Good morning.

    திங்கள் அன்று செய்தி கேள்விப்பட்ட நிமிடம் முதல் எதுவும் ஓடவில்லை என்றே சொல்லலாம். எதிர்பாரா மறைவு. இருக்கும்போது உணர்வதில்லை. மறைந்தவுடன் புரிகிறது எவ்வளவு பெரிய இழப்பு என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம்.

      பெரிய இழப்பு தான் இது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நானும் அந்த கேள்வி பதில் நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். வேறு சில காணொளிகளும் பார்த்துக்கொண்டிருந்தேன். திங்கள் காலை அவர் தனது சகோதரர் பாலாஜியிடம் "விவேகானந்தர், பாரதியார் எல்லாம் சின்ன வயசிலேயே மறைந்து விட்டார்கள். வந்த வேலை முடிந்தால் போய்விட வேண்டியதுதான்" என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படி ஆகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    மேலும்,

    மோகன் அவர்கள் வந்த வேலை முடிந்து விட்டதாகத் தெரியவில்லை. சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்த வேலை முடிந்து விட்டதாகத் தெரியவில்லை! :(((

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமையான அஞ்சலி கிரேஷி மோகனுக்கு.

    //அடடா எதுக்கு? நாடகம் நடத்தவேண்டிய நாங்களே பதட்டமாகலையே! எல்லாம் நல்லபடியாவே நடக்கும்!” //
    நாடகம் நடத்தி முடிக்கும் வரை அவர் மன நிலை எப்படி இருந்து இருக்கும் !
    நல்லபடியாக மழையிலும் முடித்து கொடுத்து விட்டோம் என்ற நிம்மதி கிடைத்து இருக்கும்.

    அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும், அவர் நாடககுழுவை சேர்ந்த சொந்தங்களுக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.
    32 பேர் கொண்ட நாடக குழு சொந்தங்கள் என்றும் கூட்டுக்குடும்பம் என்றும் சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக் குடும்பம் - அதில் ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தவர் அவர்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம். திங்கள் அன்று கண்விழித்ததும் வாட்ஸ் அப்பைல் பார்த்த முதல் தகவல்.
    மனம் உடல் கலங்கிவிட்டது.
    எத்தனை நல்ல மனிதர், இத்தனை பேரைச் சிரிக்க வைத்திருக்கிறார்.
    இப்பொழுது அழ வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
    அவர்து குடும்பத்துக்கு நம் எல்லோடின் அனுதானபங்கள். தொடர்ந்து மாரத்தான் மாதிரி
    க்ரேசி பற்றியே படித்துக் கொண்டிருக்கிறேன்.
    சென்னை,துபாய் இரண்டு இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேன்.
    மெரினாவில் அவரும்,மாது பாலாஜியும்
    நடக்க வருவார்கள்.
    உயர்ந்த மனிதன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... மனதை மிகவும் வருந்த வைத்த செய்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  6. அவரது வசனங்கள் எனக்கும் பிடித்தமானவை ஜி

    வசூல் ராஜா படம் மிகப்பெரிய வெற்றியடைய காரணம் இவரே...

    எனது இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. சிறந்த கலைஞர். ஆழ்ந்த இரங்கல்கள். மக்கள் மனதில் என்றும் நிலைத்து வாழ்வார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. உண்மையில் நம் வீட்டில் உறவினர் ஒருவரை இழந்த சோகம் நம் அனைவரையும் வருத்திக் கொண்டிருக்கிறது. அவர் உடல்நிலையைச் சரியாகக் கவனித்துக் கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்கள் இருந்திருக்கலாமோ என்னும் எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில வருடங்கள் இருந்திருக்கலாமோ? லாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. //கமலுக்காக அவரது படத்தினை ஒரு முறை பார்ப்பதே கடினம்!// உண்மையை உரக்கச் சொல்லி அதைப் பதிவும் செய்தமைக்கு நன்றி, நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை உரக்கச் சொல்லி - :))) உலக்கை நாயகனை உங்களுக்கும் பிடிக்காதே கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தினாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. வெங்கட்ஜி உங்கள் அனுபவம் அருமையான அனுபவம். க்ரேசி மோகன் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை நானும் கேள்விப்பட்டுள்ளேன். பதற்றமே படாதவர்.

    வாட்சப்பில் வந்தது நீங்கள் சொல்லியிருக்கும் அவரது கேள்வி பதில் ...அதில் அவர் மரணம் பற்றிச் சொல்லியிருப்பதில் கூட ஒன்றும் சொல்லியிருப்பார் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும்....

    அதைக் கேட்டதும் எனக்கு மனம் மிக மிக வேதனை அடைந்தது. நானும் அவரது நகைச்சுவையை மிகவும் விரும்பிக் கேட்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனிதர். இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  12. கிரேஸி மோகன் ஒரு எளிமையான மனிதர். அவரைப்பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடமும் சில தகவல்கள் இருக்கின்றன. தற்சமயம் பயணத்தில் இருப்பதால் எழுத முடியவில்லை. நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் எழுதிய பதிவினை படித்து விட்டேன் பானும்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கிரேஸி மோகன் ஒரு எளிமையான மனிதர். அவரைப்பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடமும் சில தகவல்கள் இருக்கின்றன. தற்சமயம் பயணத்தில் இருப்பதால் எழுத முடியவில்லை. நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

  14. சார்ப்ப, கிரேசி மோகன் அவர்களின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்திவிட்டது. அவரது கேள்வி பதில் நிகழ்ச்சியில் மரணம் நிகழ்ந்தால் அது நம்மை சோகத்தில் ஆழ்த்தாது?” என்ற ஒரு கேள்வி கேட்டு ஒரு க்ரேஸியான பதில் தரச் சொன்னதற்கு க்ரேஸி மோகன் சொன்ன பதில்! மனதை நெருடல் வைக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். ரங்கராஜன், புது தில்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

      நீக்கு
  15. சார் என்று படிக்கவும், ஆட்டோ டெக்ஸ்ட் மாற்றம் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோ டெக்ஸ்ட் - பல சமயங்களில் தொல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

      நீக்கு
  16. அவரது இழப்பு எதிர்பாராதது. தமிழர்கள் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளரை, நடிகரை இழந்துவிட்டது. அவரது இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவரது ஆத்மா சந்தியடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாதி ஐயா.

      நீக்கு
  17. "இருப்பதிலேயே மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம் எதுவென்றால், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான். " மிக அருமையான வரிகள்! நான் கூட ஒரு முறை பாடகி ஹரிணியிடம் ' உங்கள் இசையாலும் அதன் இனிமையாலும் எத்தனை உள்ளங்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறீர்கள்! ' என்று சொன்னபோது, ' அது உங்களைப்போன்ற பெரிய‌வர்களின் ஆசீர்வாதம் அம்மா' என்றார் பணிவுடன்! அடுத்தவருக்கு மகிழ்ச்சியை எந்த வகையிலும் தர முடிவது என்பது ஒரு வரப்பிரசாதம்.அது கிரேஸி மோகன் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

    என் ஆழ்ந்த இரங்க‌ல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவருக்கு எந்த வகையிலும் தர முடிவது என்பது ஒரு வரப் பிரசாதம் - உண்மை தான்மா. அடுத்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவது கடினமான விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    கிரேசி மோகனின் நகைச்சுவை எழுத்துக்கள் சிறந்தவை. அவருடன் தங்களின் அனுபவமும், எதற்கும் பதறாமல், அவர் நாடகத்தை முழுதாக நடத்திக்கொடுத்த சம்பவமும் கேட்டு மனது வருத்தப்படுகிறது. எத்தனை பொறுமையாக மனிதர்..இவ்வளவு சிறந்த மனிதரை நாம் இழந்து விட்டோம். அவரை பிரிந்து வாடும் அனைவரும் மன அமைதி கொள்ள பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  20. சிறந்த மனிதருக்கு அருமையான நினைவேந்தல். க்ரேசி மோகனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  21. கிரேசி மோகனின் மிக தரமான மற்றும் ஆபாசம் இல்லாத நகைச்சுவை கண்டு நான் வியந்திருக்கிறேன்.அவருடைய நாடகங்களை சென்னை தொலைக்காட்சியில் விடாமல் பார்த்து மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாத ஒன்று. தமிழ்நாடு ஒரு நல்ல நகைச்சுவையாளரை இழந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நகைச்சுவையாளரை இழந்து விட்டோம் என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....