அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்குமே
வாகனத்தில் செல்வது பிடித்த விஷயம் தானே. அதுவும் தனக்கென்று ஒரு வாகனம்
வைத்திருந்தால் மகிழ்ச்சி. வசதி படைத்த சிலர் தங்களுக்கென்றே நிறைய வாகனங்கள்
வைத்திருப்பார்கள் – குஜராத் – அஹமதாபாத் நகரில் இருக்கும் ஒருவர் கிட்டத்தட்ட 250
கார்களை வைத்திருக்கிறார் – அனைத்தும் விண்டேஜ் கார்கள். அது பற்றி படிக்காதவர்கள்
இங்கே படிக்கலாம்…
மனிதர்களிடமே இத்தனை வாகனங்கள் என்றால் இறைவன் என்ன சும்மாவா? ஒவ்வொரு
இறைவனுக்கும் விதம் விதமாக வாகனங்கள். புராணக் கதைகளில் படித்திருக்கிறோமே –
புஷ்பக விமானத்தில் இறைவன் வந்து இறங்கினார் என!
யானை முகத்தானுக்கு மூஞ்சூறு,
வேலனுக்கு மயில், சிவனுக்கு நந்தி, பூதகணம், ரிஷபம் என பல வாகனங்கள் விஷ்ணுவுக்கு
கருடன் – ஹனுமன் என பல வாகனங்கள், ஐயப்பனுக்கு புலி, இப்படிச் சொல்லிக் கொண்டே
போகலாம். எதற்காக இந்த வாகனங்கள், அவை குறிப்பது என்ன என்பதை இறைவனின் வாகன அமைப்பும், தத்துவ விளக்கமும்
என்ற பதிவினை ஒரு வலைப்பூவில் படித்தேன். நீங்களும் விரும்பினால் படிக்கலாம். நாம்
இன்றைக்குப் பார்க்கப் போவது வேறு விஷயம். இந்த வாகனங்களைச் செய்யும் ஒரு நபரிடம்
சமீபத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதைப் பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப்
போகிறோம்.
எங்கள் பகுதியில் திருமலா
திருப்பதி தேவஸ்தானம் கட்டி இருக்கும் திருப்பதி பாலாஜி மந்திர் பற்றி ஏற்கனவே சில
முறை எழுதி இருக்கிறேன். சில வருடங்களாக இங்கே திருப்பதியில் நடப்பது போலவே
பிரமோற்சவம் நடத்துகிறார்கள். அந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையிலும்
மாலையிலும் உற்சவ மூர்த்தி விதம் விதமான வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். சென்ற
வருடம் கோவிலில் இந்த மாதிரியான வாகனங்கள் ஏதும் இல்லை. பக்தர்களும் கோவில்
நிர்வாகமும் சேர்ந்து சென்ற வருட பிரமோற்சவம் முடிந்த உடனேயே அடுத்த
வருடத்திற்குள் கோவிலுக்கென்று பிரத்தியேகமாக வாகனங்களை செய்து பார்க்க
ஆசைப்பட்டார்கள்.
அப்படியான வாகனங்களை செய்து தர
தமிழ்நாட்டின் தாராசுரம் [கும்பகோணம்] பகுதியிலிருந்து வந்தவர் தான் திரு மது
அவர்கள். அவரும் அவரது குழுவினர்களும் தமிழகத்திலிருந்து தலைநகர் தில்லிக்கு வந்து
இங்கேயே தங்கி கருட வாகனம், ஹனுமந்த வாகனம், கஜ வாகனம், ஹம்ச பக்ஷி வாகனம், சேஷ
வாகனம் என பல வாகனங்களை மது அவர்களது குழுவினர்கள் செய்து முடித்து இந்த
வருடத்தின் பிரஹ்மோற்சவம் சமீபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. அனைத்து
வாகனங்களும் மரத்திலான பீடங்களில் அமைக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றன.
பொதுவாக, ஆரம்ப நாட்களில் மரங்களில் தான் வாகனம் செய்வார்கள். பிறகு மரத்தில்
செய்து அதன் மேல் பித்தளை, தங்கம் அல்லது வெள்ளி தகடுகள் வேய்ந்து செய்வார்கள்.
இங்கே செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள் பித்தளைத் தகடுகள் வேயப்பட்டவை.
பிரஹ்மோற்சவம் சமயத்தில் எனது கேமராவில்
படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது அவரது வாகனங்களுடன் தன்னையும் படம் எடுத்துத்
தரும்படிக் கேட்டுக் கொண்டார். வாகனங்களையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து
அவருக்கு வாட்ஸப் மூலம் அனுப்பி வைத்தேன். முடிந்தால் அவர் பற்றியும், அவரது
தொழில் பற்றியும் நண்பர்களுக்குச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டார் –
அதற்கென்ன, வலைப்பூவில் படங்களுடன் தகவல்களும் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி
இருந்தேன். இதோ பதிவாகவும் இன்றைக்கு வெளிவந்தாயிற்று! திரு மது அவர்கள், பதிவில் ஏற்கனவே
சொன்னது போல கும்பகோணம் அருகே இருக்கும் தாராசுரம் பகுதியில் ஸ்ரீ பாலாஜி ஆர்ட்ஸ்
& க்ராஃப்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் வைத்திருக்கிறார். அவரது விசிட்டிங்
கார்ட் கீழே!
இறைவனுக்கான வாகனம் செய்யும் அவரது
தொழில் மேன்மேலும் சிறப்படைய எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைக்க
பிரார்த்தனைகள். அவர் செய்த வாகனங்கள்
இப்பதிவில் படங்களாக. இந்த வாகனங்களில் இறைவன் உலா வந்த படங்கள் விரைவில் வேறு ஒரு
பதிவில் வரலாம்! – நிழற்பட உலாவாக!
நண்பர்களே, இன்றைய பதிவு/படங்கள்
பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குமுதல் படமே மனதிற்கு நிறைவு என்றால் கீழே வரும் போது ஆஞ்சு கண்ணில் பட்டுவிட்டார்! மனம் மகிழ்ச்சியில்...
கீதா
வணக்கம் கீதாஜி! ஆஞ்சு - மனதில் நிறைந்திருக்கிறார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அருமை!
பதிலளிநீக்குஅவர்களின் கலை மேலும் வளர வேண்டும்!
விசிட்டிங்க் கார்டை நோட் செய்து கொண்டேன். சமீபத்தில் மகனின் ஆந்திர நண்பர் ஒருவர் தங்கள் கிராமத்துக் கோயிலில் அம்மனுக்கான ஆபரணங்கள் எல்லாம் எங்கு கிடைக்கும் கும்பகோணத்தில் என்று கேட்டிருந்தார். இதை அவருக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பி, ஆங்கிலத்திலும் மெசேச் அனுப்பிவிட்டேன் ஜி. மிக்க நன்றி
கீதா
அம்மனுக்கான ஆபரணங்கள் அநேகமாய் எந்த நகைக்கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும். இவர்களிடமும் கிடைக்கலாம். ஆனால் பழமை வாய்ந்த ஆபரணங்களை விற்பது ஒரு சில கடைகளே என நினைக்கிறேன்.
நீக்குஅம்மனுக்கான ஆபரணங்கள் பல கடைகளில் கிடைக்கிறது. திருச்சி மங்கள் & மங்கள் கடையிலும் நிறைய விஷயங்கள் இப்படி உண்டு கீதாஜி! சென்னையிலும் சில கடைகள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் கீதாம்மா....
நீக்குபழமையான ஆபரணங்கள் வெகு சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. தேடித்தேடி சென்று வாங்கியதுண்டு - தலைநகரில் உள்ள ஒரு கோவிலுக்காக....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான அறிமுகம். சுவாமிமலை, தாராசுரம் பகுதியில் இப்படிப் பல சிற்பிகளைக் காண முடியும். அற்புதமான வேலைப்பாட்டுத் திறன் கொண்டவர்கள் இவர்கள். இவர்களில் பல ஸ்தபதிகளும் உண்டு என்பார்கள். சிற்ப சாஸ்திரங்களில் வல்லவர்கள் என்பார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதாம்மா....
நீக்குஉண்மை தான். கும்பகோணம் அடுத்த சிற்றூர்கள் பலவற்றில் இப்படியான கலைஞர்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது கலைகள் நலிந்து வருவது வேதனை தரும் செய்தி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எவ்வளவு அற்புதமான திறமையாளர்கள் அருமை ஜி கார்டை படம் எடுத்து தெரிந்த கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்புவேன்.
பதிலளிநீக்குஆஹா மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்கள் மூலம் அவர்களுக்கு பணி கிடைத்தால் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஇறைவனின் அருளும் கொடையும் அவர்களுக்கு இருப்பதால்தான் இப்படியான கைத்திறமை அவர்களுக்கு கைவந்திருக்கிறது. பேறு.
வணக்கம் ஸ்ரீராம். இறைவனின் அருளும் கொடையும் - உண்மை. அவன் அருளன்றி வேறேது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாகனச் சிற்பங்கள் வெகு அழகாய் இருக்கின்றன. கண்ணைக் கவர்கின்றன. அவர்களுக்குப்பாராட்டுகளும், வாழ்த்துகளும், பகிர்ந்த உங்களுக்கு நன்றியும்.
பதிலளிநீக்குவாகனச் சிற்பங்கள் - அனைத்துமே அழகு தான்! எனக்கு அதிகம் பிடித்தது ஆஞ்சி தான் ஸ்ரீராம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குமிக மிக அருமையான வாகனங்கள் தரிசனம்.
எத்தனை அழகு.
இந்த சிற்பி மிக மிகத் திறமை வாய்ந்தவர்.
விசிட்டிங்க் கார்ட் நல்ல ஐடியா.
மென்மேலும் நன்றாக வளரவேண்டும். நன்றி மா.
வணக்கம் வல்லிம்மா..... வாகனங்கள் படங்கள் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//இறைவனுக்கான வாகனம் செய்யும் அவரது தொழில் மேன்மேலும் சிறப்படைய எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைக்க பிரார்த்தனைகள்.//
பதிலளிநீக்குநானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
ஈடுபாட்டுடன் செய்யும் போது வாகனங்கள் அழகாய் அமைந்து விடும். இவை எல்லாம் நன்றாக இருக்கிறது.
ஒரு படம் இரண்டு தடவை வருகிறதே!
சந்திர பிரபை வாகனத்திற்கு பதில் இது வந்து விட்டதோ!
அவர்கள் வெற்றி பெற உங்களது பிரார்த்தனை - மகிழ்ச்சி கோமதிம்மா....
நீக்குஒரே படம் - இரண்டு முறை! தவறுதலாக வந்து விட்டது. நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதொரு கலைஞரை அவரது ஆக்கங்களுடன் அறிமுகம் செய்திருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஇறைவனுக்கான வாகனம் செய்யும் அவரது தொழில் மேன்மேலும் சிறப்படைய நாமும் வேண்டிக் கொள்வோம்...
வணக்கம் துரை செல்வராஜூ ஜி!
நீக்குஉங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை ...கலை வளர்ப்போம் மகிழ்வு பெறுவோம் !!!
பதிலளிநீக்குவணக்கம் ஜட்ஜ்மெண்ட் சிவா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல கலைஞரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். கும்பகோணம் பகுதியில் பல கலை விற்பன்னர்கள் உள்ளார்கள். அவர்களை பெரும்பாலோர் கண்டுகொள்வதேயில்லை என்பது வேதனையே.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஉண்மை. கும்பகோணம் பகுதியில் இப்படியான கலைஞர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களை பெரும்பாலோர் கண்டு கொள்வதில்லை என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல கலைத்திறமையும், நுட்பமான வேலைப்பாடும் உள்ளார்ந்த ஈடுபாடும் இருந்தால்தான் இப்படியான கலைகள் சாத்தியம். வாகனங்களைப் பார்த்தாலே கடவுளுக்கும் உலா போக ஆசைவரும் என்று தோன்றுகிறது. கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி.
நீக்குவாகனங்களைப் பார்த்தாலே கடவுளுக்கும் உலா போக ஆசை வரும் - ஹாஹா... உண்மை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.