வியாழன், 3 டிசம்பர், 2020

வாங்க பேசலாம் - எதுக்கு படிக்கணும், எதுக்கு எழுதணும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால், அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்கமாட்டான்…. அது போல தான் பிரச்சனைகளைக் கொடுக்கும் இறைவன், சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான். 


******




மாய்ஞ்சு மாய்ஞ்சு என்னமோ எழுதிட்டே இருக்கீங்களே, உங்களுக்கு அலுக்கவே அலுக்காதா? அப்படி என்னதான் சந்தோஷம் இருக்கு எழுத்திலோ, படிப்பிலோ!  கிடைக்கிற நேரத்தில ரெண்டு சினிமா பார்க்கலாம், சீரியல் பார்க்கலாம், பாட்டு கேட்கலாம் அத விட்டுட்டு எழுதறதும் படிக்கிறதும் என்ன பழக்கமோ? 





இப்படி ஒருவர் என்னிடம் கேட்டார் - நாள் முழுவதும் விட்டால் 24 மணி நேரமும் முட்டாள் பெட்டியின் முன் அமர்ந்து ஏதோ டமக்கு டப்பா குத்துப் பாட்டோ, காசு வாங்கிக் கொண்டு அழுது அழுது மூக்கு சிந்தும் அழுகை சீரியலோ, எப்படி எந்த குடும்பத்தினை அழிக்கலாம் என திட்டமிடும் சீரியலோ பார்த்துக் கொண்டே இருப்பவர் அவர். இவை எதுவுமே அவருக்கு அலுப்பதே இல்லை.  என்னைப் பார்த்து இப்படிக் கேட்டதில் தவறில்லை. அவருக்கு பிடித்ததை அவர் செய்கிறார்! எனக்குப் பிடித்ததை நான் செய்து விட்டுப் போகிறேன் - அவ்வளவு தானே! அப்படிக் கேட்ட நண்பருக்கு என் புன்சிரிப்பு (அசட்டு சிரிப்பு என எங்கிருந்தோ ஒரு சத்தம் வருகிறது! ஹாஹா) பதிலாக உதிர்த்து விட்டு, நகர்ந்து விட்டேன்.  “நீ திருந்த மாட்டே போ!” என்று அவரும் நகர்ந்து விட்டார்.  அவரவர்க்கு அவரவர் செய்வதே சரியென்று தோன்றுவது சகஜமான விஷயம் தானே.  


அது சரி, எதற்காக எழுத வேண்டும், எதற்காக படிக்க வேண்டும்!  சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சென்னை செல்லும் பல்லவன் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் ஒரு மூத்த பெண்மணியும் ஒரு இளைஞரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.  நாம் காதுகளை மூடிக்கொண்டாலும் பேசுவது கேட்கத் தானே செய்கிறது (ராஜா காது கழுதைக் காது! ஹாஹா) அவர் வீட்டிலுள்ள உறவினர் ஒருவர் பற்றி பேசிக் (குறை சொல்லி) கொண்டிருந்தார்கள்.  ”விக்கிற விலைவாசில, இப்படி காசை கரியாக்கறான் - புத்தகமா வாங்கி குவிக்கிறான்!  அதெல்லாம் படிச்சப்புறம் வெறும் குப்பை! இத வாங்கற செலவில, தங்க நகை வாங்கினா சேமிப்பாகவாது இருக்கும்!  சொன்னா நம்மள திட்டறான் - பைத்தியக் காரன்!  சொன்னா புரிஞ்சா தானே?  அவனுக்கு அப்புறம் அதை எல்லாம் எங்கே போடறது? குப்பைல தான் போடணும்!”


அவர்கள் பேசுவதைக் கேட்க எனக்கு எரிச்சல் தான் வந்தது!  படிக்கும் பழக்கமே குறைந்து வரும் இந்த நாட்களில் இப்படியும் சிலர் அதனை இன்னும் அதிகரிக்கச் செய்கிறார்கள்.  அவர்களை திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டேன் - எதையாவது சொல்லலாம் என மனது துடித்தாலும் அடக்கிக் கொண்டு - ராஜா காது கழுதைக் காது என்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது!  கேட்கும் விஷயங்களுக்கெல்லாம் கொந்தளிப்பது நம் உடலுக்கு நல்லதல்லவே! 


சரி மீண்டும் எழுதுவதற்கே வருவோம்.  நானும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இங்கே வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அப்படி என்ன எனக்குக் கிடைத்துவிட்டது என்று கேட்கிறார் அந்த நண்பர்!  காசு பணமா சம்பாதித்து விட்டாய்? பைசாவுக்கு பொறாது இந்தப் பழக்கம் என்பது அவர் வாதம்!  அது சரி, நாம் என்ன பைசா சம்பாதிக்கவா எழுதுகிறோம்?  மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது அதனால் எழுதுகிறோம் என்பதை அவருக்குச் சொல்லி புரிய வைக்கவா முடியும்!  பாருங்களேன், எப்படியான சந்தோஷத்தினை இந்த எழுத்து தந்திருக்கிறது என்பதை சமீபத்திய ஒரு நிகழ்வினைச் சொன்னால் புரியும்.  


தமிழகத்திலிருந்த போது தில்லியிலேயே பழக்கமான ஒரு மூத்த சகோதரி “அக்கா” என்றே அவரை அழைப்பது வழக்கம் - வாட்ஸப் வழி ஒரு தகவலைக் கேட்டார் - “இந்தக் கல்யாண மண்டபத்திலிருந்து உங்க வீடு கிட்டக்கவா இருக்கு?” என்று!  திருவரங்கத்திற்கு அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்றும் கூடுதல் தகவல்!  அன்று மாலை எங்கள் சகோதரி இல்ல விழாவிற்கு புறப்படவேண்டும் என்றாலும் உடனேயே குடும்பத்துடன் ஆட்டோவில் திருமண மண்டபத்திற்குச் சென்றோம்.  இங்கே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் - அக்காவின் உறவினரை நாங்கள் முன்னாலே அறிந்தவர்கள் அல்ல!  அங்கே சென்று அக்கா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம் - தில்லி நினைவுகள், நட்பு என பல விஷயம் பேசினோம்.  


அக்கா அவரது உறவினர்களையும் அறிமுகப்படுத்தி, வலைப்பூவில் எழுதுகிறாரே அவர் தான் இவர் என அறிமுகம் செய்து வைத்ததும், ஆஹா நீங்கள் தானா அந்த பயணக் காதலன்!  உங்கள் பதிவுகள் எல்லாம் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் - நன்றாக எழுதுகிறீர்கள் - எத்தனை தகவல்கள்!  உங்களுக்குப் போட்டியாக உங்கள் மனைவியும் நன்றாக எழுதுகிறார்களே.  மகளின் ஓவியங்கள், கைவேலைகள் என அனைத்தையும் சொல்லிப் பாராட்டியபோது மனதுக்கு ஒரு மகிழ்ச்சி, நிறைவு இருக்கத் தான் செய்தது! அங்கே நீண்ட நேரம் இப்படி பேசிக் கொண்டிருந்தததில் நேரம் போனதே தெரியவில்லை. காசு பணம் சம்பாதிக்க மட்டுமா ஒரு செயலைச் செய்ய வேண்டும் - இது போன்ற எதிர்பாரா பாராட்டுகளும் நமது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரத்தானே செய்கிறது.  இதையெல்லாம் என்னிடம் “எழுத்தில் என்ன கிடைத்து விடப்போகிறது?” என்று கேட்ட நண்பருக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது அல்லவா! 


அக்காவிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் பாசத்தோடு கொடுத்த தாம்பூலப் பைகளையும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம்!  மனதில் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும்!  இந்த மகிழ்ச்சிக்கு எழுத்தால் கிடைக்கும்/ கிடைக்கப்போகும் பணம் ஈடுகொடுத்துவிடுமா என்ன?  


இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

32 கருத்துகள்:

  1. உங்கள் நண்பர் சீரியலாவது பார்க்கிறார்.  என் நண்பர் ஒருவர் பாட்டும் கேட்க மாட்டார், சீரியல்களை பார்க்க மாட்டார், புத்தகங்களும் படிக்க மாட்டார்.  "எப்படிதான்யா பொழுது போகிறது?"  என்பேன்?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சிலர். எந்தவித பொழுதுபோக்கு விஷயங்களும் இல்லாமல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மனதுக்கு மகிழ்ச்சியான செயல்களை செய்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி.  பழைய தம்ஸ் அப் அல்லது கோல்ட்ஸ்பாட் விளம்பரம் ஒண்டு நினைவுக்கு வருகிறது.  இந்தக் குளிர்பானத்தைக் குடித்துக்கொண்டிருக்கும் இவளைஞனிடம் வந்து நேரத்தை வேஸ்ட் செய்கிறாய் என்றதும் அவர் நீ சம்பாதித்து என்ன செய்வாய் என்று கேட்பதும், ஹாயாக உட்கார்ந்து குளிர்பானம் குடிப்பேன் என்று அவர் சொல்வதும் இவர் அதைத்தான் நான் இப்போதே செய்கிறேன் என்பதும்...!  வலையுலகத்தால் ஏற்பட்ட நட்புறவின் இல்லம் சென்று சந்தித்து வந்த நிகழ்வு பாராட்டபப்ட்ட வேண்டியது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் நம்மை சந்தோஷப்படுத்துவதாக இருப்பதே நல்லது தானே! குளிர்பான விளம்பரம் எனக்கும் நினைவில் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. யாரும் அறிவுரைகள் கேட்பதில்லை. கொடுக்க மட்டும் நிறைய வருவார்கள். ஒரு சிகெரெட் பிடிப்பவனிடம் சென்று சிகரெட்டை நிறுத்த அறிவுரை கூறினால் திரும்ப அடி அல்லது கடும்சொல் தான் கிடைக்கும். 

    காதருந்த ஊசியும் வாராது தான் கடைவழிக்கே. கற்ற செல்வம் நல்வழி சென்று கடைவழிக்கு துணை செய்யும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதறுந்த ஊசியும் - உண்மை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இந்த மகிழ்ச்சிக்கு எழுத்தால் கிடைக்கும்/ கிடைக்கப்போகும் பணம் ஈடுகொடுத்துவிடுமா என்ன?

    பணம் ஈடு கொடுக்காது
    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எழுத்துக்களும் பதிவுகளும்தான் உங்கள் இருவருக்கு பின்பும் வாழும் . பணமும் சொத்துக்களும் இருக்காது.

      நீக்கு
    2. புரிதலுக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேசன்.

      நீக்கு
    4. எழுத்து நமக்குப் பின்னரும் இருக்கும் - உண்மை தான் கணேசன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எழுத்து என்பது பொழுதுபோக்கு. அது நமது மனதுக்குத் தரும் மகிழ்ச்சியே தனி.

    மற்றபடி பணம் வரும் என்று நினைத்து எழுதினால், பணம் வருவது இருக்கட்டும், முதல்ல எழுத்து நல்லா வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்து என்பது பொழுதுபோக்கு. உண்மை.

      பணம் வரும் என்று நினைத்து எழுதினால், எழுத்து நல்ல வருமா? ஹாஹா... நல்ல கேள்வி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சார்.
    நான் மின் புத்தகங்களை பெண்டிரைவிலும் கணிணியிலும் சேமித்து படிப்பதால் வீட்டில் குப்பைகள் குறித்து பேச்சு எழுவதில்லை.
    புக் படிக்கும்போது மட்டும் ஆஃபீஸ் வேலை இல்லனாலும் என்ன கிழிக்குர என்பாரகள்.
    அவர்களின் வீட்டு வேலைகளில் என்னால் முடிந்த பங்கை ஆற்றிவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தால் அணைத்தும் சுமூகமாவதோடு என் மூளையும் சுருசுருப்பாயிடும்.
    ஓடும் ஆறு, குளத்தை விட சுத்தமானது.
    அதுபோல, தினமும் நூல் படிப்பவர் நேர்மறை எண்ணங்களுடன் தெளிவாக செயல்படுவார்.
    அணுபவங்களை, எழுத்தில் கொண்டு வருதல், அதை படிப்பவர்களை விட, எழுதுபவருக்கு காலப்போக்கில் பல வகையில் பயன் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த். இப்போதெல்லாம் நானும் அச்சுப் புத்தகங்கள் வாங்குவதை குறைத்து விட்டேன். கிண்டிலில் இல்லாத சில புத்தகங்கள் மட்டும் வாங்குவதுண்டு.

      வீட்டிலும் படிப்பதால் என் வீட்டில் இந்தப் பிரச்சனைகள் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அப்படி என்ன எனக்குக் கிடைத்துவிட்டது என்று கேட்கிறார் அந்த நண்பர்! காசு பணமா சம்பாதித்து விட்டாய்? பைசாவுக்கு பொறாது இந்தப் பழக்கம் என்பது அவர் வாதம்! அது சரி, நாம் என்ன பைசா சம்பாதிக்கவா எழுதுகிறோம்? மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது அதனால் எழுதுகிறோம் என்பதை அவருக்குச் சொல்லி புரிய வைக்கவா முடியும்! //

    வெங்கட்ஜி இது அப்படியே என்னிடமும் கேட்பவர்கள் ஒருவர் அல்ல பலர்! நான் புத்தகம் வாங்குவதுமில்லை. இணையம் வழிதான் அதுவும் இலவசமாகக் கிடைப்பதுதான்!

    கரெக்ட் நீங்க சொல்லிருப்பது போல நாம் நம் மகிழ்ச்சிக்கு எழுதுகிறோம். மனம் பல வேண்டாதவற்றை நினைத்துக் கெடுவதை விட நல்ல வலையில் புத்தகங்களில் நமக்குப் பிடித்ததை வாசித்து, எழுதுவது என்பது எவ்வளவு நல்லது!

    உங்களை உங்கள் எழுத்தை, ஆதி மற்றும் ரோஷினியை எல்லாரையும் அந்த நட்பு அக்காவின் உறவினரும் பாராட்டியது மிக மிக மகிழ்வான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்ந்து படியுங்கள்... யார் வேண்டுமானாலும் எதுவானாலும் சொல்லிக் கொண்டு போகடும் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நான் எழுதுவதை இதுவரை என் சுற்றமோ நட்போ (வலை நட்புகளைத் தவிர) பார்த்ததுமில்லை, அதைப் பற்றிப் பேசியதுமில்லை! பதிவுகளை விடுங்கள் கதைகளைக் கூட! ஹா ஹா ஹா அவர்களைப் பொருத்தவரை நான் வெட்டியாகச் செய்கிறேன் என்பது. சில வார்த்தைகளைக் கேட்கும் போது எழுதும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. எழுத நிறைய இருக்கு என்றாலும் இப்போது எழுதுவதே இல்லை எனலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது வீட்டிலும் இப்படி நிறைய பேர் உண்டு. அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மனதிற்கு பிடித்த விஷயங்கள் செய்யும் போது மிக்க மகிழ்ச்சி தரும். படிக்கும் போது, எழுதும் போது தனிமையை உணர்வது இல்லை. எழுத்ததாற்றல் ஒரு வரம். படிப்பதை வளர்த்து கொள்ளலாம். இவை இரண்டும் செய்ய முடியாத வர்கள் நிலை குறித்து வருத்தம் தான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதிற்கு பிடித்த விஷயங்கள் மகிழ்ச்சி தரும் என்பது உண்மை தான் கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான பதிவு. டிவி அனைவரும் பார்க்க முடியும். ஆனால் எழுதுவது சிலரால்தான் முடியும். இந்த ஆத்ம திருப்தி போதாதா? பணம் நிச்சயமாக இந்த திருப்தியை அளிக்காது. சிலருக்கு எழுத வராது என்ற காரணத்தால் எழுதுபவர்களை விமர்சிப்பது சரியல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எழுத வராது என்ற காரணத்தால் எழுதுபவர்களை விமர்சிப்பது சரியல்ல!/ சரியாகச் சொன்னீர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. வாசிப்பு நிச்சயமாக உங்கள் மனதைக் கூர்மையாக்கும். “

    வாசிப்பு நம் மனதில், மூளைக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

    இது உங்களை மேன்மை படுத்த உதவுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாசிப்பு உங்கள் மனதைக் கூர்மையாக்கும்!// ஆயிரத்தில் ஒரு வார்த்தை மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. உண்மை தான். படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள ருசி மற்றவற்றில் இருப்பதில்லை என்பது உண்மையே. ஆனால் நான் புத்தகங்கள் வாங்கிச் சேமிப்பதில்லை. பாதுகாப்பது கஷ்டம் என்பதோடு எனக்குப் பின்னர் படிக்க யாரும் இல்லை என்பதே உண்மை. ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருதப் புத்தகங்கள் எனில் பிள்ளை, பெண்ணிடம் போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகங்கள் வாங்குவது குறைந்திருக்கிறது கீதாம்மா - பாதுகாப்பது/பராமரிப்பது கடினமாக இருக்கிறது என்பதால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. இப்போது கண் பிரச்னையால் எழுதுவது குறைந்திருந்தாலும் படிப்பது குறைந்திருந்தாலும் முழுவதும் நிறுத்த முடியவில்லை. நிறுத்தவும் மாட்டேன். இதில் உள்ள சந்தோஷமும் மன, நிறைவும் வேறே எதிலும் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண் பிரச்சனை - கவனமாக இருங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....