வெள்ளி, 4 டிசம்பர், 2020

கதம்பம் - வெங்கலப் பானை - தமிழ்நாடு தினம் - டிமார்ட் - ஆண்கள் தினம் - காணொளி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளில் எனது முகநூல் பக்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட தகவல்கள்/விஷயங்களின் தொகுப்பினை பார்க்கலாம்.  அதற்கு முன்னர் இந்த நாளை தொடங்கும் விதமாக நல்லதொரு வாசகத்தினுடன் தொடங்கலாம் வாருங்கள்!


வாழ்க்கை ஒரு பயணம்… நல்லதோ கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள். இன்பம் வந்தால் ரசித்துக் கொண்டே செல்லுங்கள். துன்பம் வந்தால் சகித்துக் கொண்டே செல்லுங்கள். எங்கேயும் தேங்கி விடாதீர்கள். தேங்கினால் துயரம், வாடினால் வருத்தம், நிற்காமல் ஓடுவதே பொருத்தம். ஓடுங்கள் நதியாக வளைந்து நெளிந்து இலக்கை அடையும் வரை.


*****


வெங்கலப் பானை - 2 நவம்பர் 2020:





வெங்கலப் பானை என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் சம்பவம் ஒன்று! என்னுடைய சிறுவயதில் கோவையில் எங்கள் வீட்டுப் பரணில் எலி இருப்பதாக சந்தேகம் வர, அப்பா பரணை சுத்தம் செய்தார்!


அதில் புது தென்னந் துடைப்பங்கள் சில, வெங்கலப் பானை, தாத்தா பாட்டிக்கு திவசம் செய்ய வேண்டி  ஹோமகுண்டம், சணல் என்று பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.. 


ஒவ்வொன்றாக எடுக்க எடுக்க வெங்கலப்பானை ஒன்றின் உள்ளே ரோஸ்கலரில் புதிதாக பிறந்திருக்கும் ஐந்து எலிக்குட்டிகள் துடைப்பக் குச்சிகள், சணலுடன் சேர்ந்த படுக்கையில் முழித்து பார்க்கின்றன...:))

அப்பா பிறகு அந்த எலிக்குட்டிகளை வெளியே சென்று விட்டுவிட்டு வந்தார்..🙂


திடீரென்று வெங்கலப் பானை புராணம் எதற்கு என்கிறீர்களா??


இந்த வாரம் என்னுடைய சேனலில் வெங்கலப் பானையில் செய்த ஒரு உணவின் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.. என் மாமியாரிடமிருந்து கற்றுக் கொண்ட ரெசிபி. இணைப்பு இதோ..


அரிசி உப்புமா


பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..


தமிழ்நாடு தினம் - 1 நவம்பர் 2020:


காலையில் வழக்கத்துக்கு மாறாக பண்பலையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருக்குறளும் இன்று கேட்டவுடன்,  எதற்காக என்று கூர்ந்து கவனித்தேன்..இன்று தமிழ்நாடு தினமாம்..தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு சார்பில் இன்று முதல் நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட உள்ளது.. 1956 நவம்பர் 1 தனி மாநிலமாக ஆனதென்றாலும் இதுவரை விழா எதுவும் அனுசரிக்கவில்லை என்று தகவல்.


செம்மொழியாம் தமிழ்மொழியில் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு, அகநானூறு, காப்பியங்கள் என்று தமிழின் சிறப்புகள் சொல்ல எத்தனையோ உள்ளன..அவற்றில் இல்லாத வாழ்க்கை தத்துவங்களா??


தமிழரின் பண்பாடு, உணவுமுறைகள், கலாச்சாரம், கலைகள் இவை போற்றுதலுக்குரியது..பண்டைக்கால தமிழரின் நாகரீகம் கீழடி அகழாய்வில் பிரமிப்பைத் தருகிறது..எத்தனை திட்டமிடல்கள்!!


தமிழரென்று பெருமையாய் சொல்லிக் கொள்வோம்..வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்


டிமார்ட் விசிட் - 7 நவம்பர் 2020:


நேற்று திருச்சியில் உள்ள D Martக்கு சென்று வந்தோம்..திருச்சியில் ஆரம்பித்து நெடுநாட்களாகி விட்டது என்றாலும் நாங்கள் இங்கு சென்றது இதுவே முதல்முறை! 


உள்ளே ஏகப்பட்ட கும்பல்! மாஸ்க் அணிந்து தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்றாலும் மாஸ்க்கை கழட்டி விட்டு தும்முபவரை என்ன செய்வது???


தேவை இருக்கோ இல்லையோ ஒவ்வொருவரும் வண்டி முழுவதும் பொருட்களை அள்ளிப்போட்டுக் கொண்டே செல்கிறார்கள்.. இப்படிப்பட்ட மக்களை தான் பார்க்க முடிந்தது!!


நாங்கள் நெடுநாட்களாக வாங்க நினைத்த பொருட்கள் ஒரு சிலது அங்கே கிடைத்ததால் அவற்றை மட்டும் வாங்கி வந்தோம்.


இன்று மளிகைப் பொருட்களும், காய்கறியும் வாங்குவதற்காக தெற்கு வாசல் வரை செல்லும் வேலையிருந்தது! கொத்தமல்லி வாங்க நினைத்து கேட்டவுடன் அந்த கடைக்காரர் மாஸ்க்கும் அணியாமல் பலமான தும்மல் போடுகிறார்...🙁


காஃபி பொடி வாங்கும் கடையில் அருகிலிருந்த ஒருவர் மாஸ்க்கை கழட்டி கையில் வைத்துக் கொண்டு இருமுகிறார்...🙁 வழியெங்கும் எல்லாக் கடைகளிலும் பலவித வண்ணங்களில் மாஸ்க் விற்பனை.. ஆனால்?? இங்கு யார் அணிகிறார்கள் என்று தான் தெரியலை??


வழக்கம் போல வெளியிலிருந்து வந்ததும் குளியலை போடுவதைத் தவிர வேறு வழியில்லை..🙁


கடைகளிலும், ஆங்காங்கே ஒருசில வீடுகளிலும் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். இது வட இந்தியர்களின் கலாச்சாரம்!


சர்வதேச ஆண்கள் தினம் - 19 நவம்பர் 2020:


ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி இன்றைய நாளை ஆண்கள் தினமாக கொண்டாடப்படுவதாக fmல் காலையில் சொன்னதைக் கேட்க முடிந்தது! 


ஆண் என்பவன் பொதுவாக தன்னுடைய விருப்பு, வெறுப்பு, அன்பு, பாசம், கண்ணீர் போன்றவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமூகத்தில் தன்னை ஆளுமை மிக்கவனாக காண்பித்துக் கொள்ளவே விரும்புவான். தன்னை உருக்கிக் கொண்டு குடும்பத்தை காப்பாற்ற நினைப்பவன். 


என்னுடைய வாழ்வில் முக்கியமான மூன்று ஆண்கள் உண்டு!!இவர்களுக்கு என் நலனில் எப்போதும் அக்கறை, கரிசனம், அன்பு என்று எல்லாமே உண்டு. 


முதலாவது  என் முதல் ஹீரோவான என் அப்பா தான். தன் உழைப்பாலும், பண்பாலும் என்னை உருவாக்கியவர். மகளைப் பற்றி பெருமை பேசவும், பாராட்டவும் மட்டுமே இந்த மனிதருக்குத் தெரியும். 


அடுத்து என் வாழ்வில் பெரிதும் இடம்பெறும் இரண்டாவது ஹீரோவான என்னவர் தான்!! தன்னை நம்பி வந்த ஜீவனை  பத்திரமாக பார்த்துக்கணும், எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று அனுதினமும் நினைப்பவர். எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்! இவருக்கு பாராட்டவெல்லாம் தெரியாது..🙂 அதேசமயம் குறை சொல்லிக் கொண்டே இருக்கவும் தெரியாது...🙂 என்னை எழுத ஊக்குவித்தவர்.


அடுத்து என் வாழ்வில் இடம்பெறும் ஆண் என் தம்பி தான். இவனுக்கும் எனக்கும் பெரிய வயது வித்தியாசம் ஒன்றும் இல்லை. சண்டை போடவும், பகிர்ந்து கொள்ளவும், அறிவுரை சொல்லவும் இருக்கும் பந்தம்.


இது போக பள்ளி, கல்லூரி, சுற்றம், பதிவுலகம், முகநூல் என்று எல்லா இடத்திலும் கண்ணியமாகவும், சகோதரத்துவமாகவும், நண்பர்களாக வும் பழகிய ஆண்கள்!!


உங்கள் அனைவருக்கும் நன்றியுடன் என் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்.


என்ன நண்பர்களே இந்த நாளில் ”கதம்பம்” பதிவாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம். 

 

நட்புடன்,


ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. ஓடிக்கொண்டே இருந்தால் வந்த துன்பமோ இன்பமோ மறந்து வரும் பாதையில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேற முடியும்.  நல்ல வாசகம்.

    வெண்கலப்பானையில் சமைத்த நாட்கள் நினைவுக்கு வருவது போல எங்கள் வீட்டில் சில வருடங்களுக்குமுன் எடுத்து வெளியில்போட்ட ரோஸ் நிற எலிக்குஞ்சுகளும் நினைவுக்கு வருகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      ரோஸ் நிற எலிக்குஞ்சுகள் - பலர் வீட்டிலும் இப்படி நடந்திருக்கிறது போலும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அரிசி உப்புமா செய்வதுண்டு.  காணொளி கண்டு ரசித்தேன்.

    பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் துணி மாஸ்க், தெருவில் விற்கும் துணி மாஸ்க்குகள் உபயோகப்படுத்தக் கூடாது.  மூன்று அடுக்கு மாஸ்க், மற்றும் N 95 போன்ற மாஸ்க்குகளே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று அடுக்கு மாஸ்க் - தில்லியில் தரமான துணி மாஸ்க் கிடைக்கின்றன ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அனைத்தும் முகநூலிலேயே படிச்சேன். இங்கேயும். வாழ்த்துகள் ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. ஆம் மாஸ்க் எதற்காக விற்கிறார்கள் ?
    நல்ல கேள்வி

    ஆண்கள் தினத்தன்றுதான் உலக கழிப்பறை தினமும்கூட...

    கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஸ்க் எதற்கு - :)

      உலக கழிப்பறை தினமும் ஆண்கள் தினம் அன்றே! அடக் கொடுமையே! ஹாஹா..

      கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மகளைப் பற்றி பெருமை பேசவும், பாராட்டவும் மட்டுமே இந்த மனிதருக்குத் தெரியும். //

    ஹைஃபைவ்! ஆதி.

    வெங்கலப்பானை என்றாலே எலிக்கு ரொம்பப் பிடிக்கும் போல!!!! அதுலதான் பெரும்பாலும் குட்டி போடுது! கரப்புகளுக்கும் ரொம்பப் பிடிக்குமாக்கும்! நானும் வெண்கலப் பானையில் தான் அரிசி உப்புமா செய்வது. உருளி என்னோடது. ஒரிஜினல் வெண்கலம் கொஞ்சம் கறுப்பு தோய்ந்தாற்போல இருக்கும்.

    மாஸ்க் அணிவது பற்றிச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை...மக்கள் அந்த அளவிற்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுது.

    வாசகம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கலப் பானை என்றாலே எலிக்கு ரொம்பப் பிடிக்கும் போல! ஹாஹா... இருக்கலாம் கீதாஜி.

      மாஸ்க் - ஒன்றும் சொல்வதற்கில்லை - அதே தான். தில்லியிலாவது பரவாயில்லை பெரும்பாலானவர்கள் அணிந்து கொண்டிருக்கிறார்கள். நம் ஊரில் தான் மோசக்.

      வாசகம் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கதம்பம் அருமை மேடம்.
    ஆம், ஆண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.
    தந்தையையும், கணவரையும் தம்பியையும் நினைவு கூர்ந்தது மிக்க மகிழ்ச்சி.
    மாஸ்க் போடுவது இன்னும் குறஞ்சிடும் கொரோனா இன்னொரு அலை அடிக்காதவரை.
    டிசம்பர் பதினாறு முதல் கடற்க்கரைகளும் திறக்கப்படவிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வீடியோ அன்றைக்கே பார்த்துவிட்டேன் ஆதி. நல்லாருக்கு உங்கள் வீடியோக்கள் எல்லாமே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்பு ஆதி , அருமையான வெங்கலப் பானை போன்றே
    ருசிகரமான பதிவு.

    அரிசி உப்புமா காணொளியும் அருமை.

    வாசகமும் அருமை..
    நல்லதொரு கதம்பம். நம் பதிவர்கள் எல்லோருக்கும் எலி
    பற்றின நினைவுகள் அதிகம்.
    நன்றி மா. நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. எங்கள் வீட்டு வெங்கலப்பானையும், எங்கள் ஆத்தாவும் நினைவிற்கு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அரசி உப்புமா அம்மா செய்வது போல் இருந்தது. மாஸ்க் இல்லாமல் நம்மை போன்றோர் வெளியே செல்லும் நாள் எப்பொழுது வரும் என உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஸ்க் இல்லாமல் வெளியே செல்லும் நாள் எப்போது - ஆண்டவனே அறிவான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....