சனி, 5 டிசம்பர், 2020

காஃபி வித் கிட்டு - ப்ளாஸ்டிக்குப் பதிலாக மாஸ்க் - விளம்பரம் - மின்னூல் - ராய் ப்ரவீன் - பனிப்பொழிவு

காஃபி வித் கிட்டு – 90


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய்த் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தமற்றதாய்த் தெரியும். 


******

இந்த வாரத்தின் எண்ணங்கள் – ப்ளாஸ்டிக் லாவ்! மாஸ்க் பாவ்!




புதுதில்லி மாநகராட்சி சமீபத்தில் UNDP உடன் சேர்ந்து ஒரு திட்டத்தினை தொடங்கியிருக்கிறது - அது தான் தலைப்பில் உள்ள ப்ளாஸ்டிக் லாவ்! மாஸ்க் பாவ்! அதாவது நெகிழி குப்பிகளைக் கொடுத்து மாஸ்க் பெற்றுக் கொள்ளலாம் எனும் திட்டம் தான் அது. மாஸ்க் தவிர துணிப் பைகளும் வாங்கிக் கொள்ளலாம். கனாட் ப்ளேஸ் பகுதியிலிருக்கும் சர்க்கா ம்யூசியத்தில் (இராட்டை அருங்காட்சியகம்) இந்த வசதியைத் தருகிறார்கள். சிலர் பயன்படுத்தவும் தொடங்கி விட்டார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம். பெற்றுக் கொள்ளும் நெகிழிக் குப்பிகளை சரியானபடி Recycle செய்தார்கள் எனில் நல்லதே! தில்லியில் பல இடங்களில் இப்படி ப்ளாஸ்டிக் போட்டு பணம் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அமைத்து சிலர் வருடம் ஆகிறது. ஆனால் ஆரம்பித்து சில நாட்கள் வரை மட்டுமே அவை வேலை செய்தது - தற்போது அவற்றில் பெரும்பாலானவை பெயருக்கு இருக்கிறது! அவ்வளவு தான். 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

இந்த விளம்பரம் முன்னரே பகிர்ந்திருக்கிறேனா என்று நினைவில்லை. ஆனாலும் மீண்டும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஏரியல் சோப் பவுடர் பற்றிய விளம்பரம். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டுமா என்ன என்று கேட்கும் விளம்பரம். பாருங்களேன்!

 


ஏற்கனவே பல வீடுகளில் ஆண்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று சண்டைக்கு யாரும் வர வேண்டாம்! ஹாஹா… எதையும் பொதுவாக சொல்லிவிடமுடியாது! சிலவற்றில் மாற்றங்களும் நிச்சயம் இருக்கத் தான் செய்யும்! 

இந்த வாரத்தின் திரும்பிப் பார்க்கலாம்!

எனது வலைப்பூவில் இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – ராய் ப்ரவீனின் பாடலும் நடனமும் அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

புந்தேலா ராஜாக்களில் ஒருவரான ராஜா இந்திரமணி அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் பாதிகளில் ஓர்ச்சா நகரத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். அவர் இயல் இசை நடனத்தில் மிகுந்த நாட்டம் உடையவராக இருந்தாராம். எப்போதும் நிறைய இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி, நடனம் ஆடும் ஒரு அழகிய பெண்மணி தான் ராய் ப்ரவீன். அந்த ராஜாங்கத்திலேயே பாட்டு மட்டுமல்லாது நடனத்திலும் தலை சிறந்தவள். பாட்டு பாடி நடனம் ஆடும் ராய் ப்ரவீன் அழகிலும் குறைந்தவளல்ல. அவள் மீது ராஜா இந்திரமணிக்கு ஆசை. ராய் ப்ரவீனுக்கும் ராஜா மீது தீராத காதல். 

என்ன தான் காதலும் ஆசையும் இருந்தாலும் எல்லா ராஜாக்களைப் போல இவரும் தனது காதலியும் நடனம் ஆடுபவருமான ராய் ப்ரவீனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆசை நாயகியாகத்தான் வைத்திருந்தார். நடனம், பாடல், காதல் என்று சென்று கொண்டிருந்த அந்த வாழ்வில் ஒரு திருப்பம். 

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே.



இந்த வாரத்தின் இலவச மின்னூல் தகவல் – அரக்கு பள்ளத்தாக்கு:

இந்திய நேரப்படி, இன்று மதியம் 12.30 முதல் வரும் வியாழக் கிழமை மதியம் 12.29 வரை எனது “அரக்கு பள்ளத்தாக்கு” மின்னூல் அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முன்னரே ஒரு முறை தந்திருக்கிறேன் – இது இரண்டாம் முறை! விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.


இந்த வாரத்தின் காணொளி - வருடத்தின் முதல் பனிப்பொழிவு 

Mountain Fairy என்று ஒரு யூட்யூப் சேனல் இருக்கிறது. முன்பு கூட ஒரு முறை அவரது காணொளி ஒன்றினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வாரமும் அவரது காணொளி ஒன்று தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் பகுதியில் இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவு பற்றிய காணொளி இது. எத்தனை பனிப்பொழிவு என்று பார்த்து ரசிக்கலாமே!

 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை...

நட்புடன்


வெங்கட் நாகராஜ்
புது தில்லி

12 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.

    பிளாஸ்டிக்கை அப்படி எல்லாம் ஒழித்துவிட முடியுமா என்ன!  இல்லை மக்களைத்தான் ஒழுங்காக மாஸ்க் போடவைத்துவிட முடியுமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      பிளாஸ்டிக்கை ஒழித்து விட முடியுமா என்ன - மாஸ்க் போட வைத்துவிட முடியுமா என்ன? ஹாஹா... அதானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நலமா? இன்றைய வாசகம் அருமை. இவ்வார காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. பிளாஸ்டிக் பணமாக மாறிப் போவதும் நன்மைக்கே. இதனால் நம்மை சுற்றியுள்ள சுகாதாரம் நல்லபடியான மாறுதலுக்கு வரக்கூடும்.பிளாஸ்டிக்கிற்கு பதிலாக தற்போதைய அவசியமான மாஸ்க் கிடைப்பதும் சிறந்த விஷயம்.

    விளம்பரம் நன்றாக உள்ளது. இந்த காலத்து ஒவ்வொரு வீட்டின் நிலைப்பாடுகளை பார்த்துதான் இந்த விளம்பரமே வந்ததோ என்னவோ:)

    திரும்பி பார்க்கலாம் ராஜா கதை பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. முழுவதும் சென்று படிக்கிறேன். மின்னூல் தகவலுக்கு நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. நான் நலம். நீங்களும் நலம் தானே.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை. பிளாஸ்டிக் செய்தி தங்கள் மூலமாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இக்காலத்தில் அன்பு அர்த்தமற்றவையாகவே ஆகிக் கொண்டிருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தமற்றதாக ஆகும் அன்பு - இப்படியும் உண்டு தான் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. புது தில்லி அரசின் முயற்சி போற்றுதலுக்கு உரியது
    தொய்வின்றித் தொடரவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நல்ல முயற்சி தொடர்ந்தால் நல்லதே!. பார்க்கலாம் எவ்வளவு தூரம் இவர்கள் இதைத் தொடர்கிறார்கள் என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. அரக்கு பள்ளத்தாக்கு தரவிறக்கம் செய்து விட்டேன்... நன்றி ஜி...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....