புதன், 9 டிசம்பர், 2020

ஓஷோவின் மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - இரா. அரவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நிம்மதியான வாழ்க்கை என்பது, ஓடி ஓடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை.  இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான்! 


******


இந்த நாளில் நாம் பார்க்கப் போவது ஒரு புத்தக அறிமுகம். அறிமுகம் செய்யப் போவது நண்பர் இரா. அரவிந்த்.  வாருங்கள் அவரது அறிமுகத்தினைப் படிக்கலாம்! ஓவர் டு அரவிந்த்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி! 

******





குழந்தைகளிடம்,'வருங்காலத்தில் நீ என்ன ஆவாய்' எனக் கேட்டால் 'மருத்துவர்' என்று சொல்லும் குழந்தையை அதிகமாக மதிக்கிறோம். பெற்றோர்களில் சிலர் அவ்வெண்ணத்தைத் திணிக்கவும் முயல்வதைப் பார்க்கிறோம். 


அதற்கான முக்கிய காரணம், மருத்துவராக தங்கள் குழந்தைகள் அதிகம் சம்பாதிப்பதுடன், குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்று பெற்றோர் நம்புவதே. 


எந்தத் துறையையும் ஒரு பணம் ஈட்டும் கருவியாக மட்டும் பார்க்காமல், அதை மேலும் ஆழமாக புரிந்துகொள்பவர்களே வெற்றிபெறுகிறார்கள். மருத்துவத்துறையையும், அதன் வாடிக்கையாளர்களான பொதுமக்களையும் புரிந்துகொள்வது மருத்துவத் துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. 


அதற்கான ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழும் தகுதி படைத்ததே, ரஜனீஷ் என்ற அமரர் திரு ஓஷோ அவர்களின் முக்கிய உறைகளின் தொகுப்பான 'From Medication to Meditation'என்ற ஆங்கில மூலத்தின் தமிழ் வடிவமான 'மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை' எனும் நூல். 


நூலின் அற்புதங்கள் : 


1. நோயாளிக்கு முக்கியத்துவம்:


வெவ்வேறு வகையான நோய்களையும், அதற்கான மருந்துகளையும் பயில்வதையே மருத்துவமாக எண்ணும் மனிதர்கள் மத்தியில், நோயாளியே முக்கியம் என்பதையும், ஆரோக்கியமும் நோயற்ற தன்மையும் வெவ்வேறு என்பதையும், ஒவ்வொரு நோயாளியும் தனித்தன்மையானவர் என்பதையும், அவர்களின் மனநிலையே எழுபது சதவிகித நோய்களுக்கான காரணம் என்பதையும் உணரச் செய்வதே, இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும். 


உலகின் வெவ்வேறு மருத்துவ முறைகளையும், அலோபதி மருத்துவத்தின் பல துறைகளையும் போல் அல்லாமல், மனிதனை, மனமும் உடலும் இணைந்த ஒரு முழு அமைப்பாகக் காணவும், நோய்க்கான ஆதாரத்தை அறிந்து குணப்படுத்தவும் வலியுறுத்தும் இந்நூலின் கருத்திற்கேற்ப செயல்படும் மருத்துவர்களே கைராசிக்காரர்களாகத் திகழ்வது கண்கூடு. 


2. வாழ்வை வாழும் முறை :


ஒவ்வொரு நிமிடத்திலும் புது ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கும் நம் வாழ்வை ஒரு கொண்டாட்டமாக வாழ வலியுறுத்துவதன் மூலம், அதன் நடைமுறை சாத்தியத்திற்கு அப்பால், வாசிப்பவர்களுக்கு புது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது இந்நூல். 


எண்ணங்களை சுவாசத்தால் கட்டுப்படுத்துதல், நம் எண்ணங்களை கண்காணிக்கும் விழிப்புணர்வு, விழிப்புணர்வால் நம் உண்மையான தேவைகளை உணர்ந்து செயல்படுதல், அதன் மூலம் நமக்கு உகந்த உணவைக் கொள்ளல், கனவற்ற தூக்கத்தைப் பெற்று முழு படைப்பாற்றலோடு புத்துணர்ச்சியாய் வாழ்தல் என முழு ஊக்கத்துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக் கிடக்கின்றன. 


3. அன்பின் வலிமை :


சிகிச்சை முறைகளுக்கும், உபையோகிக்கும் மருந்துகளுக்கும் அப்பால், நோயாளியின்பால் மருத்துவன் கொள்ளும் நேசத்தின் மகத்துவத்தைச் சுட்டும் ஓஷோ,, அன்பிற்கும் அக்கறைக்கும் அளிக்கும் விளக்கம் அனைவரும் உணர வேண்டியதாகும்.  


முதலில் தன்னை நேசித்தல், நம் உடலுக்கு நன்றியாய் இருத்தல், வலியை உடல் தன் தேவையை உணர்த்தும் மொழியாக புரிந்துகொள்ளுதல், நோயாளியை சக நண்பன் போல் நடத்துதல், அவர்களின் தனித்துவத்தை உணரச் செய்தல் முதலியவை, மருத்துவர்களைத் தேவர்களாக உயர்த்தும் அன்பின் வலிமையை பறைசாற்றும் நூலின் பகுதிகள். 


நூலை புரிந்துகொள்வதில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய இடங்கள் : 


1. காழ்ப்பை வளர்க்கும் இடங்கள் :


வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு, சமூக விதிகளின் மீதும், அதன் தலைவர்களான பெரியவர்கள் மீதும் அதிருப்தி இருப்பதும், அதை பிரதிபலிக்கும் வண்ணம் பேசும் திரு ஓஷோ போன்றவர்கள் பெரும் வறவேற்பு பெறுவதும் இயல்பு. 


லட்சக்கணக்கான ஆண்டுகள் அனுபவத்தாலும், பெரும் இழப்புகளாலும் இந்நிலையை அடைந்துள்ள மானுட சமூக அமைப்புகளின் மீதும், அதன் அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் மீதும், இவர் வைக்கும் விமர்சனத்தை கண்மூடித்தனமாக இளைஞர்கள் நம்பி ஏற்று மாபெரும் தவறுகளைச் செய்யும் வாய்ப்புகள் அதிகம். 


நோயின் அறிகுறிகளான வலியையோ, உளச்சோர்வையோ எதிரியாகக் கருதி தவிர்க்க முயலாமல், அவற்றை மதித்து அவற்றின் ஊற்றுக்கண்ணை விழிப்புணர்வு மூலம் கண்டறிந்து குணப்படுத்தப் பரிந்துரைக்கும் ஓஷோவின் அறிவுரைகளைக் கடைபிடிப்பதே உசிதமானது. 


அவ்வாறே, நம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக நமக்குத் தோன்றும் சமூக, பண்பாட்டு விழுமியங்கள் உருவானவற்றிற்கானக் காரணங்களைப் படிப்படியாக ஆய்ந்து, தெளிந்து, அதன் குறைபாடுகளைக் களைந்து, மேலான சமூகத்தை உருவாக்க முயல்வதே, அவரின் அடுத்த தலைமுறையினரான நம் கடமையாகும். 


'மற்றவருடைய தாயைப் பழிக்காமலேயே நம்முடைய தாயைப் பாராட்டலாம்' என்பார் மு.வரதராசனார். 


அதே போல, மேற்கத்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், மதங்களையும், மருத்துவ முறைகளையும் குறித்து இவர் செய்யும் விமர்சனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், திறந்த மனதுடன் உலகோர் அனைவருடனும் பழகி ஆய்ந்து தெளிவதே, சமூகத்தை அடுத்த படிநிலைக்கு இட்டுச் செல்லும் சிறந்த வழி. 


2. பொதுமைப்படுத்துதல் :


உணவு குறித்த விவாதங்களில், 'மனித உடல், சைவ உணவிற்கு மட்டுமே பொருத்தமானது, மனிதனைத் தவிர எந்த விலங்கின் நாவையும் ஒரு குறிப்பிட்ட உணவிற்கு அடிமைப்படுத்த முடியாது' போன்ற கவர்ச்சிகரமான பொதுக் கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என சொந்த அனுபவத்தால் நானே உணர்ந்துள்ளேன். 


இவற்றிற்கும் மேல், அடக்கப்பட்ட, கவனிக்கப்படாத குறைகளின் வெளிப்பாடே வலிகளும் நோய்களும் தீய பழக்கங்களும் என உணர்த்தும் திரு ஓஷோ அவர்கள், அதையே, புற்றுநோய், எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணங்கள் எனக் கூறுவது அறிவியலால் ஆராய்ந்து தெளிய வேண்டிய இடங்கள். 


மேற்குறிப்பிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் குறித்து தனக்கு முழுதாகத் தெரியாது என ஒப்புக்கொண்டே தன் பேச்சைத் தொடரும் ஓஷோ, இப்படி காரணங்களை அடுக்கி, திருமணம் உள்ளிட்ட புனித சடங்குகளைச் சாடுவதும், அவர் வலியுறுத்தும் தீர்வான பாலியல் சுதந்திரமும் வாசகர்கள் மிக எச்சரிக்கையாக கவனிக்கவேண்டிய இடங்கள். 


வாழ்வில் சுதந்திரத்தின் மகத்துவத்தை உணரும் நாம், நம் கட்டற்ற சுதந்திரத்தின் பாதுகாப்பு, மற்றவர்களின் உடலையும், உணர்வுகளையும் மதிப்பதிலேயே உள்ளது என்பதையும், அதுவே நம் சமூகம் வலியுறுத்தும் சுய ஒழுக்கம், அடக்கம் போன்றவற்றின் அடிப்படை நோக்கம் என்பதையும் உணர்ந்து இவர் கருத்துகளைப் பரிசீலித்தல் சாலச் சிறந்தது.  


வாழ்வை கொண்டாட்டமாகக் களிக்க வழிகளை சிறப்பாகக் கூறும் திரு ஓஷோ அவர்கள், மரணத்தையும் கொண்டாட்டமாக எதிர்கொள்வது குறித்தும், மனிதனின் சராசரி வாழ்நாள் பற்றியும், நவீன மருந்துகளை விஷம் என விமர்சித்தது குறித்தும் சொல்லியிருப்பவற்றை, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வாசகர்கள் தெளிவடைய வேண்டிய இடங்கள். 


இறுதியாக : 


மேற்கூறிய இடங்களில் எச்சரிக்கையாய் இருப்பதன் மூலம்,  மருத்துவம் குறித்தும், எண்ணங்களின் ஆற்றல் குறித்தும், அனைத்திற்கும் ஆதாரமான உயிர்களின் மீதான அன்பின் ஆக்கப்பூர்வமான சக்தி குறித்தும் உணர்ந்து நடப்பதே இந்நூல் படிப்பதன் பயன். 


நூலின் கடைசிப் பகுதிகளில் திரு ஓஷோவின் தீர்க்கதரிசனங்களாக வரும் மரபணு சீராக்கல் மூலம் நோய்களை ஒழித்து அதி புத்திசாலிகளை உருவாக்கும் அறிவியல் சாதனை, பண்ணாட்டு விஞ்ஞானிகளின் கூட்டமைப்புகள் போன்றவை நிறைவேறும் சாத்தியங்கள் பெருகுவதை ஆச்சரியத்துடன் காண்கிறோம். 


அதன் மூலம், உலக நடப்புகள் குறித்த ஆழ்ந்த அறிவும், வருங்காலம் குறித்த தீர்க்கதரிசனமும், மானுட உடல், மனம் குறித்த புரிதல்களும் ஓஷோவிடம் இருந்து நாம் எளிதாக பெற வேண்டியவை எனலாம். 


அனைத்திற்கும் தீர்வாக ஓஷோ முன் வைக்கும் வெவ்வேறு தியான முறைகளும், அவற்றின் மூலம் உடலுக்கும் மனதிற்கும் அப்பால் மனமற்ற நிலைக்குச் சென்று பிரபஞ்சத்தின் முழு ஆற்றலை உபயோகிக்கும் உன்னத நிலையை அடைவதும், படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாகவும், நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகவும் தோன்றுகிறது. 


அதற்கான முதல் படிநிலையாக,  நம் உடலை ஆலயமாக மதித்து, அதன் உணர்வுகளை விழிப்புடன் கண்காணித்து மதிப்பதன் மூலம், நம்மை முதலில் அறிந்து, படிப்படியாக மானுடம் முழுமையையும் நேசிக்கும் ஆரோக்கியமான உன்னத உலகைப் படைக்கும் பக்குவம் பெற இந்நூலை பின்வரும் சுட்டிகளில் வாங்கி பயனடையலாம். 


ஆங்கில மூலம்


தமிழாக்கம்


நட்புடன்,


இரா. அரவிந்த்

14 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம்.

    இன்றைய வாசகம் - அலைகள் ஓய்வதில்லை பாடல் வரி "அதுக்கெல்லாம் ஞானம் வேணும்..   ஞானம் வேணும்...  ஞானம் வேணும் டோய்யா.." என்கிற வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது!!!!

    பதிலளிநீக்கு
  2. ஆழமான விமர்சனம் நண்பர் திரு. இரா.அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தலைப்புகள் இட்டு, அதற்கான விளக்கமும் கொடுத்து, நூல் விமர்சனம் அருமை...

    பதிலளிநீக்கு
  4. மொழிபெயர்ப்பு தொடர்பாக, புரிய எளிதாக இருப்பதற்காக உரிய உள் தலைப்புகளுடன், நான் எழுதிய கட்டுரை தினமணி இணைய தளத்தில் வெளியானபோது ஒரு நண்பர் உள் தலைப்பு இல்லாமலிருந்தால் கட்டுரை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார். எனக்கு அதில் உடன்பாடில்லை. உள் தலைப்பு கொடுத்து பகிரப்படும்போது வாசகனுக்கு எளிதில் சென்றுவிடும் என்பது என் கருத்து. அதனை இந்த மதிப்புரையில் நீங்கள் பின்பற்றிய விதம் சிறப்பு. மொழிபெயர்ப்பாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....