வெள்ளி, 28 மே, 2021

Post 2501 - 28 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி இரண்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நண்பர்களின் பார்வையில் பகுதி ஒன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும் தான் இந்த வாழ்க்கை. அதில் அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்கள் - ரூமி.


*****




செப்டம்பர் 2009-இல் ஆரம்பித்த எனது இந்த வலைப்பூ பயணம் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!  இது வரை இந்தப் பக்கத்தில் 2500-க்கும் மேலான பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்.  இந்தச் சமயத்தில் வலையுலகு தந்த நட்புகளில் சிலரையும், தில்லி நண்பர்கள் சிலரையும் எனது வலைப்பூ குறித்த அவர்களது எண்ணங்களை எழுதி அனுப்பச் சொல்லி கேட்டிருந்தேன்.  அப்படி எழுதி அனுப்பிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. நேற்று அப்படி ஒரு பதிவினை வெளியிட்டேன்.  இதோ இந்த வரிசையில், இரண்டாவதாக, தலைநகர் தில்லியில் வசிக்கும் எனது நீண்ட கால நண்பரும், சமீபத்தில் வெளியிட்ட மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணத் தொடரை இங்கே எழுதியவருமான நண்பர் திரு சுப்ரமணியன் அவர்கள் எனது வலைப்பூவினைப் பற்றியும் அதில் வெளியிடும் பதிவுகள் குறித்தும் எழுதி அனுப்பிய அவரது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  அவரது வேலைகளுக்கு இடையே, எனக்காக தனது எண்ணங்களை எழுதி அனுப்பிய நண்பர் மணி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் - அவரது எண்ணங்களைப் படிக்கலாம்! 


*****


எண்ணம் - 2 - சுப்ரமணியன், தில்லி:





அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு, நல் வணக்கம். தீநுண்மியின் தொல்லை தீராத நிலையில், அனைவரும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவும். அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம். MASK FIRST SHOES NEXT.


அன்பு நண்பர் வெங்கட்டின் வலைப்பூவை ஆரம்ப நாட்களிலிருந்து தொடர்ந்து வாசித்து (ஸ்வாசித்து) வருபவன் என்ற முறையில் வலைப்பூவை பற்றி எனது தாழ்மையான கருத்துரையை சமர்ப்பிக்கின்றேன்.


நாங்கள் 80-களில் தலைநகர் நோக்கி தமிழகத்தில் இருந்து வந்து தனித்திருந்தோம். திக்குத் தெரியாத காட்டில் திரிந்து கொண்டிருக்கும் போது சேற்றில் முளைத்த செந்தாமரைகளாய், அத்திப்பூக்களாய், ஒரு சில பலாப் பழங்களாய், பிளக்கும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைக்கும் இனிய பலாச்சுளைகளாய் நாங்கள் ஒன்றிணைந்து நண்பர்களானோம்.


அப்படி ஏற்பட்ட 80-களின் எங்கள் நண்பர்கள் குழு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாய் நட்பு எனும் ஒற்றை ஆலமரத்தின் விழுதுகளாய் வளர்ந்தோங்கி வருவது யாம் பெற்ற பாக்யம்.


”என்ன இது ஒண்ணுமே புரியலையே? என்ன சொல்ல வரான்னே தெரியலையே” எனும் தங்களின் மன ஓட்டம் புரிகிறது. நண்பரின் வலைப்பூவை பற்றி எழுதும் முன் ஒரு முன்னோட்டமாய் மேற்சொன்னவை. அறிவியலும் தொழில்நுட்பமும் போட்டி போட்டு முன்னேறியதன் விளைவு…

  1. கடித வழி அஞ்சல் முறை மின்னஞ்சல் ஆகி கட்செவி அஞ்சலாக (என்ன அப்பு எனும் வாட்ஸ்அப்) (இதுவே சற்று மெருகே(ற்)றி, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் எனும் கட்டுரையானது.
  2. கைவிரல்கள் தேய சுழற்றி சுழற்றி செய்த தொலைபேசி தொலைந்து பொத்தான் தொலைபேசி ஆகி குறுஞ்செய்தி தீப்பெட்டி ஆகி பேஜர் சர்வீஸ், கைப்பேசியானது.

மேற்சொன்ன இரண்டு புரட்சிகளால், நாம் இழந்தது படிப்பு (வாசிப்பு). நாளிதழ்கள், வார, இருவார, மாத இதழ்கள், கதைகள் இவையெல்லாம் கற்பனை ஆகிப்போனது. தற்போதைய சந்ததியினருக்கு அதுவும் இந்த தீநுண்மி நாட்களில் வாசிப்பில்லா வாழ்க்கை பழக்கமாகிவிட்டது. இப்படி இருக்கையில் மனம் தளராமல், பணிச்சுமைக்கு இடையில், தலைநகரில் ஒற்றை மனிதராய் இருந்துகொண்டு, (அம்மாடியோ இதுவே பெருஞ்சுமை ஆயிற்றே) விடாமல் எழுதிவரும் வெங்கட்டின் எழுத்துக்களை படிக்க முடிவதில் பெருமகிழ்ச்சி. இனி வலைப்பூவைப் பற்றி…


கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையில் நண்பர்களையும், உறவினர்களையும்(???) பார்ப்பது மிகவும் அரிதாகி வருவதால், இவரின் வலைதளம் நம்மை சமதளம் ஆக்குகிறது என்பது நிதர்சனமான உண்மை. ஏதோ நானும் எழுதுகிறேன், நீங்களும் படியுங்கள் என்று இல்லாமல், பல்வகையாய், பல்சுவையாய், அதையும் இயல்பாய் எழுதுவது தனிச்சிறப்பு. கதைமாந்தர்/ராஜா காது கழுதை காது/வலை பின்னோட்டம்/பயணக் கட்டுரைகள்/காணொளி/கருத்துகள்/குறும்படம் என பல விஷயங்கள் இவரது பக்கத்தில்.   இவரை இணைபிரியா இவரின் துணைவியாரும் ரயில் தண்டவாளம் போல போட்டிபோட்டு வலையில் பின்னுவது மிகப் பிரமாதம். மகளின் ஓவியங்களோ மகத்தானது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை முழுமையாய் நிரூபிக்கும் குடும்பம். 


இடையிடையே சிறு போட்டிகள் வைப்பது சாலச்சிறந்தது. அடுத்து,


  • கருத்தூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை ஒரு பதிவாக வெளியிட முடிந்தால் மிகவும் நிறைவாக இருக்கும். 
  • இந்தியா/தமிழ்நாட்டிலேயே பலரும் அறியா/தெரியா விஷயங்கள் நிறைய இருப்பதாக நம்புகிறேன். அறிந்தும் அறியாததும் எனும் தலைப்பு ஒன்றில் அவற்றை எழுத முடிந்தால் மிகவும் பய(ல)னுள்ளதாய் இருக்கும். 
  • பல்வேறு குடும்பங்களாய் வலைப்பூவை பின் தொடர்கிறோம். குடும்பங்களில் உள்ள இளைஞர்கள்/இளைஞிகளை மல்லுக்கட்டி இழுத்து பங்கேற்க வைத்தால், சற்று சுவாரசியமாய் இருக்கும் என நம்பிக்கை. மேலும் அடுத்த சந்ததியின் நட்பு வட்டமும் உருவாகும்.


குறை ஒன்றும் சொல்வதற்கில்லை. வலைப்பூவை நாங்களும் தொடர்வோம். எனவே நீங்களும் தொடருங்கள். 


வணக்கங்கள் வாழ்த்துக்கள். வலை வளர வாசிப்பும் வளரும். 


வாசிப்போம்… ஸ்வாசிப்போம்.


அன்புடன் 


சுப்பிரமணியன். 


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த வலைப்பூவில் வெளிவரும் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணங்களையும் நிறை குறைகளையும் சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


26 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தொகுப்பாக வழங்கி இருக்கிறார். வெங்கட்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  3. சுருக்கமாக எனினும்..அருமையாக..இருந்தது நண்பர் பதிவு செய்திருந்தது..ஆயிரமாவது பதிவுக்கு நான் இதுபோல் எழுதியதாக நினைவு...தலைநகரப் பதிவருக்கு..தலையாய பதிவருக்கு என்று தலைப்பிட்ட ஞாபகம் இருக்கிறது...நான் ஆர்வம் குறைகையில் எல்லாம் உங்கள் சுவாரஸ்யமான பயனுள்ள பதிவுகளே ஆர்வமூட்டிப் போகிறது என்றால் ..நம் பதிவுலகில் குடும்பமே மிகச் சிறந்த பதிவர்களாக இருக்கும் சிலரில் நீங்கள் முதன்மையானவர்கள்.என்றால் அது மிகையில்லை..உங்கள் எழுத்தின் இரசிகனாக வாழ்த்துகளைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ரமணி ஜி. தொடர்ந்து எழுத உங்களைப் போன்றவர்களும் ஒரு காரணம். ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. மிகச் சரியாக, அருமையாகச் சொல்லியுள்ளார். நல்வாழ்த்துகள். தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. அநேகமாக காலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னரே வெங்கட் அவர்களின் அன்றைய பதிவை படித்துவிடுவேன். (துபாயில் இருப்பதால் நேர வித்தியாசம் சௌகரியம்) என்றாவது புதிய பதிவு இல்லை என்றால் ஏமாற்றம்தான். நெருங்கிய உறவினர் அல்லது ஆப்த நண்பர் குடும்பத்தினருடன் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிற வலைப்பூ. Viswanathan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி விஸ்வநாதன் ஜி. தொடர்ந்து வாசிப்பது அறிந்து மனம் உவகை அடைந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. மிக மிக அழகான தமிழில் அருமையான விமர்சனம்

    வாழ்த்துகள் நண்பருக்கும் வெங்கட்ஜிக்கும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. நண்பரின் விமர்சனத்தை மிகவும் ரசித்து வாசித்தேன் என்ன அழகாக எழுதுகிறார்! வலையில் எழுதலாமே!

    ரொம்ப அழகாக எழுதியிருக்கிறார். பாராட்டுகள், வாழ்த்துகள் நண்பருக்கும் வெங்கட்ஜி, ஆதி ரோஷிணி மூவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. இதுவரை அவருக்கு இருந்த பணிச்சுமையில் எழுதுவது கடினமாக இருந்தது. இன்னும் சில நாட்களிலிருந்து மேலும் சில பதிவுகள் அவரை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அவர் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மிக அருமையான வலைத்தள விமர்சனம்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைத்தள விமர்சனம் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. மிக அருமையான எழுத்து. இவர் போல நண்பர்கள் மிகத் தேவை
    அன்பு வெங்கட்.
    சீர்தூக்கிப் பார்த்து சொல்லும் நற்சொற்கள்
    நட்புகளிடம் இருந்துதான் வரும்.
    இவர் பெயரை என் கருத்தில் சொல்லாமல் விட்டு விட்டேன்.

    வாழ்த்துகள் திரு. சுப்ரமணியன். வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுப்ரமணியன் அவர்களின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாழ்த்துகள், பாராட்டுகள். இத்தனை எல்லாம் நடந்திருக்கு. நான் வேறே உலகில் இருந்திருக்கேனே! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      /இத்தனை எல்லாம் நடந்திருக்கு. நான் வேறே உலகில் இருந்திருக்கேனே!/ - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. "ஏதோ நானும் எழுதுகிறேன், நீங்களும் படியுங்கள் என்று இல்லாமல், பல்வகையாய், பல்சுவையாய், அதையும் இயல்பாய் எழுதுவது தனிச்சிறப்பு. கதைமாந்தர்/ராஜா காது கழுதை காது/வலை பின்னோட்டம்/பயணக் கட்டுரைகள்/காணொளி/கருத்துகள்/குறும்படம் என பல விஷயங்கள் இவரது பக்கத்தில்" -முற்றிலும் உண்மை என்பதை அனைவரும் ஆமோதிப்பார்கள் என்பது திண்ணம்.

    சிறப்பான துவக்கமும் (அறிமுகம்) சீரான விமர்சனமும் - பாராட்டுக்கள் திரு சுப்பிரமணியன்.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....