அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட Venkat’s Travalogue பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
சூரியனையும் சந்திரனையும் ஒப்பிட முடியாது. அவரவர்களுக்கான நேரம் வரும் போது ஒளி தருவார்கள். எனவே உங்களையும் பிறரையும் ஒரு போதும் ஒப்பீடு செய்யாதீர்கள்.
******
பித்தளை - தற்போது நகரங்களில் பித்தளை பாத்திரங்களின் மவுசு குறைந்து விட்டாலும், கிராமங்களில் இன்றைக்கும் திருமண சீராக பித்தளைப் பாத்திரங்கள் வைத்துக் கொடுப்பதைப் பார்க்கிறேன். பித்தளையில் பாத்திரங்கள், விளக்கு என பல பொருட்களை இன்றைக்கும் கல்யாண சீராகக் கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. எங்கள் அம்மா மற்றும் பெரியம்மாவின் திருமணத்தின் போது கொடுத்த பித்தளை பாத்திரங்களில் பல இன்னமும் வீட்டுப் பரணில் உண்டு. அம்மா வீட்டிலிருக்கும் பித்தளை பாத்திரங்களில் சிலவற்றை கடையில் போட்டு விட்டாலும், பெரியம்மா வீட்டில் இன்னமும் கூட நிறைய பித்தளை பாத்திரங்கள் உண்டு - விதம் விதமான வடிவங்களில், விதம் விதமான பித்தளைப் பாத்திரங்களை, பரணை சுத்தம் செய்யும் போது பாத்திருக்கிறேன். பித்தளையில் சாப்பாடுக் கேரியர் கூட பார்த்திருக்கிறேன். பல்வேறு அளவுகளில் காஃபி ஃபில்டர், டவரா-டம்ளர், குடங்கள், அண்டாக்கள், தவலைகள் என பல பாத்திரங்கள் உண்டு. பிறிதொரு சமயத்தில் அந்தப் பித்தளைப் பாத்திரங்களை படம் எடுத்து பகிர்ந்து கொள்கிறேன்.
சகோ தேனம்மை கூட செட்டிநாட்டு வழக்கங்களில் கொடுக்கப்படும் பித்தளைப் பாத்திர சீர் வரிசை குறித்து சில பதிவுகளில் எழுதி இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக எவர்சில்வர் பாத்திரங்கள், Melamine பாத்திரங்கள் போன்றவை பித்தளையினை கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறது. வட இந்தியாவில் தான் கண்ணாடி பாத்திரங்களின் ஆதிக்கம் என்றால் இங்கேயும் இப்போது நிறைய வீடுகளில் கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்திலும் கண்ணாடி பயன்பாடு உண்டு என்றாலும் அதிகமாக இருந்ததில்லை. எங்கள் அம்மா வீட்டில் இருந்த கண்ணாடி பாத்திரங்கள் வெகு குறைவு - இல்லை என்றே கூட சொல்லலாம். கண்ணாடியில் பொருட்கள் போட்டு வைக்கும் பாட்டில்கள் இருந்ததே தவிர பாத்திரங்களாக பயன்படுத்தவில்லை.
வடக்கே சென்ற பிறகு தான் பித்தளை அங்கேயும் பயன்பாடு உண்டு என்பது தெரிந்தது. அதிலும் குறிப்பாக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் பகுதிகளில் பித்தளை கொண்டு விளக்குகள், பாத்திரங்கள் தயாரிக்கும் உற்பத்தி நிலையங்கள் உண்டு. அங்கே இருந்து பித்தளை பாத்திரங்களும் கைவினைப் பொருட்களும், உள்நாடு மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியைக் கவனித்துக் கொள்ளும் அரசு அலுவலகம் கூட இதற்காகவே மொராதாபாத் பகுதியில் இருந்தது. நண்பர் சில மாதங்கள் அங்கே பணி புரிந்ததுண்டு. தலைநகரின் கோவில்களுக்காக, மணிகள், தட்டுகள், பெரிய பாத்திரங்கள் போன்றவற்றை, சில நண்பர்களுடன் சென்று வாங்கி வந்தோம். நம் ஊர் பித்தளை பாத்திரங்களை விட, மொராதாபாத் பித்தளை பாத்திரங்களின் தரம் குறைவு என்றே சொல்ல வேண்டும். அழகழகான கைவினைப் பொருட்கள் பித்தளையில் அங்கே உண்டு. பார்க்க மட்டுமே செய்தோம் - அந்தப் பயணத்தில்! பித்தளையின் விலை அப்படி!
வடக்கிலிருந்து கொஞ்சம் தமிழகத்திற்கு மீண்டும் கொஞ்சம் திரும்பி வரலாம். என் அக்காவின் திருமணத்திற்கு பாத்திரங்கள் வாங்கும் போது கூட கும்பகோணத்தில் ஒரு பெரிய கடையிலிருந்து தான் பாத்திரங்கள் வாங்கினார்கள். பெரும்பாலும் Kali Brand Eversilver பாத்திரங்கள் என்றாலும், அங்கேயே தான் பித்தளை பாத்திரங்களும் வாங்கினார்கள். அரிசி அளந்து போடும் ஆழாக்கு முதல், அண்டா வரை பித்தளையில் பாத்திரங்கள். அவற்றை அக்கா பயன்படுத்தியதாகத் தெரியவில்லை என்றாலும் வாங்கினோம்! எங்களது திருமணத்தின் போது கூட பித்தளையில் சில பாத்திரங்கள் - ஆழாக்கு, தட்டு, உருளி போன்ற சில பொருட்களை மகளுக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார்கள். ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நம் ஊர் பித்தளை பாத்திரங்களை விட மொராதாபாத் பாத்திரங்களில் புதுமையைப் புகுத்தி பல வடிவங்களில் பாத்திரங்களையும், பொருட்களையும் செய்கிறார்கள். இன்றைக்கு சீரழிந்து வரும் தொழிலாக இது இருந்தாலும் கூட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே மொராதாபாத் பகுதியில் பித்தளைப் பாத்திரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தகவல்கள் எல்லாம் தருவது சரி தான் - இன்னிக்கு எதற்காக, பித்தளை குறித்த தகவல்களுடன் ஒரு பதிவு? பித்தளை பத்தி எங்களுக்குத் தெரியாதா என்ன என்று உங்களில் சிலர் நினைக்கலாம்! அந்த விஷயத்திற்கு தான் இப்போது வரப்போகிறேன்.
ஒவ்வொரு திருமண நாளுக்கும் ஏதோ ஒரு பொருளின் பெயரால் அந்த திருமண நாளை அழைப்பது வெளிநாடுகளில் வழக்கம். முதலாவது திருமண நாள் Cotton Anniversary என்றால் ஐந்தாவது திருமண நாள் Wooden Anniversary! பத்தாவது திருமண நாள் Aluminium Anniversary! அந்த வரிசையில் பத்தொன்பதாவது திருமண நாள் Bronze Anniversary என்று சொல்கிறார்கள். Geni என்ற தளத்தில் குடும்பத்தினர் அனைவருடைய பிறந்த நாள், மண நாள் போன்றவற்றை சேமித்து வைத்திருக்கிறேன். குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மின்னஞ்சல் மூலம் யாருக்கு பிறந்த நாள், யாருக்கு மண நாள் போன்ற தகவல்கள் வந்து சேரும். சென்ற வாரத்தில் அத்தளத்திலிருந்து “டேய் ராசா, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் Bronze Anniversary வரப்போவது! பித்தளைல ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக் கொடுடா” என்று அன்புக் கட்டளை வந்தது! சரி பித்தளைல ஏதாவது வாங்கலாம்னா ஊரு/நாடு பூரா ஊரடங்கு! எப்படியும் வெளியே போகவும் முடியாது! அதுனால, வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பித்தளை பாத்திரத்தை எடுத்து கொஞ்சம் பளபளன்னு தேய்ச்சு கையில் கொடுக்கலாம்னு இருக்கேன்!
எங்களுக்கு இன்னிக்கு தான் இந்த Bronze Anniversary! வாழ்த்தப் போகும், வாழ்த்திய/வாழ்த்தாத அனைத்து நட்புகளுக்கும், மற்றவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. ”ம்ம்ம்ம்ம்… அது ஆச்சு பத்தொன்பது வருஷம்” என நான் மனசுக்குள் நினைத்ததை, உங்களுக்குத் தெரிஞ்சாலும், அம்மணிகிட்ட போட்டுக் கொடுத்துடாதீங்க ப்ளீஸ்!
இன்றைக்கு வழக்கமாக வெளியாக வேண்டிய வாசிப்பனுபவம் பதிவு மாலையில் வெளியாகலாம்! நண்பர்களே, இப்பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம். அது வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
ஆஹா... இனிய மணநாள் வாழ்த்துகள். பித்தளை திருமணநாளில் வாழ்க்கை தங்கமாக ஜொலிக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
இனிய திருமண நாள் வாழ்த்துகள். ஆசிகள். பித்தளை வருடமாக இருந்தாலும் தங்கம்/வைரம் போல் பிரகாசித்துக்கொண்டே இருக்கவும் பிரார்த்தனைகள். இருவரும் இதே மகிழ்வோடும்/ மன நிம்மதியுடனும் சந்தோஷமாக இருக்கவும் பிரார்த்தனைகள். ஆதியிடமும் சொல்லிடுங்க. ரோஷ்ணிக்கும் வாழ்த்துகள். அருமையான பெற்றோரின் வளர்ப்பில் மேன்மேலும் பிரகாசிக்கட்டும்.
பதிலளிநீக்குமண நாள் வாழ்த்துகள் சொன்னமைக்கு நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பித்தளை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது. பாஸ் கஷ்டப்பட்டு 108 பித்தளை 20 பைசா நாணயங்கள் சேகரித்து வைத்திருந்தார். இவையும் மற்றும் பித்தளை பாத்திரங்களும் சின்ன சாமி சிலைகளும் பட்டு புடவைகளும் இரண்டாவது பையன் பிரசவத்தின் (1984) போது திருட்டு போயின.
பதிலளிநீக்குJayakumar
1984-ல் நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு வந்திருக்கிறது இப்பதிவு! பித்தளை 20 பைசா நாணயங்கள் - தாமரை போட்டு இருப்பது எங்கள் வீட்டிலும் சேர்த்து வைத்திருந்தார்கள். பெரியம்மா வீட்டிலும் இருந்தது. அதை வைத்து அர்ச்சனை செய்வார் பெரியப்பா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
எங்களிடம் அந்த 20 காசு நாணயங்கள் சுமார் நூறு இன்னமும் இருக்கின்றன.
நீக்குஉங்களிடமும் அந்த தாமரை காசுகள் இருப்பதில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் நிறைந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇருவருக்கும் வாழ்க வளமுடன்
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குBronze Anniversary! வாழ்த்துக்கள்.
பித்தளை விளக்குகள், கலைப்பொருட்கள் படங்கள் அழகு.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் வழி பகிர்ந்த பொருட்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஜி.
பதிலளிநீக்குபித்தளை படங்கள் ஸூப்பர்.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குபித்தளை படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குசுவையான தகவல்கள் சார்.
பதிலளிநீக்குஇனிய மணநாள் வாழ்த்துக்கள்.
தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
மனம் நிறைந்த இனிய மணநாள் வாழ்த்துகள் வெங்கட்ஜி! இருவரும் எப்போதும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருந்திட பிரார்த்தனைகளும்
பதிலளிநீக்குதுளசிதரன்
கீதா
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.
நீக்குநம் வீட்டிலும் பித்தளைப் பாத்திரங்கள் நிறைய இருந்தன. இப்போது எல்லாம் விற்றுவிட்டார்கள் சிலர் அவர்கள் பெண்கள் கல்யாணத்திற்குப் பிரித்து எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.
பதிலளிநீக்குநான் என் பிறந்த வீட்டில் கொடுத்த பித்தளைபாத்திரங்களில் பானை, வெங்கல உருளி சின்னது எல்லாம் பயன்படுத்திவருகிறேன். சின்ன சின்ன விக்ரகங்கள் உண்டு.
பித்தளையில் பல கைவினைப் பொருட்களும் வருகின்றன அழகாக இருக்கின்றன. ஆனால் பள பள என்று வைத்துக் கொள்வதுதான் கொஞ்சம் வேலை வாங்கும்.
பித்தளைப் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி
கீதா
பித்தளைப் பாத்திரங்கள் பராமரிப்பது கொஞ்சம் கடினம் தான் கீதாஜி. புளி, பீதாம்பரி போன்றவை போட்டு தேய்த்து வைப்பதற்குள் வேலை பெண்டு நிமிர்த்தி விடும் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னிடமும் முக்கியமான பித்தளை/வெண்கலம்/செம்புப் பாத்திரங்கள் இருக்கின்றன. விக்ரஹங்களும் பஞ்சஉலோகத்தால் ஆனவையும் உண்டு. பித்தளை, வெண்கலமும் உண்டு. ஒரு பெரிய வாளி/அல்லது ப்ளாஸ்டிக் தொட்டியில் நீரை நிரப்பி 2,3 எலுமிச்சைகளைப் பிழிந்து ஒரு கைப்பிடிக்குக் குறையாமல் உப்பையும் போட்டு விக்ரகங்களை அதில் மூழ்க விட்டு அரை மணி/ஒரு மணி கழித்து எலுமிச்சைத் தோலால் விம்/அல்லது வேறே ஏதேனும் பாத்திரம் தேய்க்கும் பொடியால் தேய்த்தால் பளிச்! அதிகம் வேலையும் வாங்காது. இண்டு, இடுக்கில் இருக்கும் அழுக்கெல்லாம் வந்து விடும்.
நீக்குஎலுமிச்சை/உப்பு மூலம் தேய்க்கலாம் - தகவலுக்கு நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
திருமணநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்க்கை தங்கமாய் ஒளிவீசட்டும்
வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Happy Bronze Anniversary Greetings Venkat and Adhi.Wishing you Happy days and years with Adhi and Roshni.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ரமேஷ்.
நீக்குஇந்த பதிவை மிஸ் பண்ணியிருக்கேன். திருமண நாள் நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வெங்கட் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வெங்கட்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி மனோம்மா.
நீக்குபித்தளைப்பாத்திரங்கள் பற்றிய தகவல்கள் அருமை! கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் தான் பித்தளை விளக்குகள் செய்கிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள் அங்கே சென்று தான் பித்தளை பொருள்கள் வாங்குவார்கள். எங்கள் வீட்டிலும் அம்மா கொடுத்த பித்தளை குத்து விளக்கும் பரிசாய் வந்த விளக்குகளும் இருக்கின்றன.
பதிலளிநீக்குநாச்சியார்கோவில் பித்தளை விளக்கு - தகவல் தந்தமைக்கு நன்றி மனோம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மதுரையில் வெண்கலக் கடைத்தெரு என்ற ஒரு தெருவே இருக்கு. பித்தளை, வெண்கலம், தாமிரப் பாத்திரங்கள்/பரிசுப் பொருட்கள்னு அனைத்தும் ஒரே தெருவில் வாங்கலாம். இப்போப் போயே சில வருஷங்கள் ஆகிவிட்டன. நாச்சியார் கோயில் பித்தளை/வெண்கல விளக்குகள் பற்றி என் புக்ககத்திலும் பெருமையாய்ப் பேசுவார்கள். என்னோட விளக்கெல்லாம் திருச்சூர் விளக்கு ஒண்ணு இன்னொண்ணு அப்போ நாகர்கோயிலில் இருந்து வந்த வெண்கலச் சாமான்களோடு வந்தது. என் மாமியாருக்கு அதில் அவ்வளவு திருப்தி இல்லை. ஆகவே எங்க பெண் கல்யாணத்திற்கு அங்கே போய் விளக்கு வாங்கச் சொன்னார்னு நாங்க இருவரும் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடைகளே அதிகம் இல்லை. இத்தனைக்கும் முக்கியக் கடைத்தெரு. இருந்த விளக்குகளும் பெரிய பெரிய ஓட்டல்கள்/பங்களாக்களில் அலங்காரத்துக்காக வைக்கப்படுபவை போன்ற விளக்குகள். கல்யாணத்துக்குக் குத்துவிளக்கு வாங்கறதுக்குள் திணறிப் போயிட்டோம். அப்புறம் அந்த ஊரில் தெரிஞ்சவர் ஒரு தாத்தா மூலம் அவருக்குத் தெரிந்த ஒரு கடையில் போய் அரை மனதாக ஒரு விளக்கு வாங்கினோம். ஆனால் அந்த விளக்குக் கொடுக்கனு எடுத்துப் போயும் காடரர்கள் அதை விட நல்ல விளக்காக வாங்கி இருக்கவே அதையே கொடுத்துட்டோம். இந்த விளக்கு எங்களுடனேயே இன்னமும் இருக்குனு நினைக்கிறேன். அல்லது அம்பத்தூரைக் காலி பண்ணும்போது கோயிலுக்குக் கொடுத்துட்டோமா? நினைவில் இல்லை. நாச்சியார் கோயிலில் இப்போதும் அந்த வழியே போய் வரும்போது கடைத்தெருவழியாகவே போவோம். அப்படி ஒண்ணும் பெரிசாப் பித்தளை/வெண்கலச் சாமான்கள் இல்லை. ஆனால் கும்பகோணத்தில் பெரிய கடைத்தெருவில் பாத்திரக் கடைகளில் கிடைக்கின்றன.
நீக்குநாச்சியார் கோவில் சென்ற போது கிடைத்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாம்மா. பழமையான கடைகள் இப்போது எல்லா ஊர்களிலும் அடைத்துக் கொண்டே வருகிறார்கள். திருநெல்வேலியில் கூட நான் ஒரு முறை சென்ற போது பெரிய பாத்திரக் கடை ஒன்ற்றிற்குச் சென்றேன் - கோவில் அருகே இருந்த கடை - அங்கே யானை விளக்கு வாங்கி வந்தேன். இப்போது இயங்குகிறதா எனத் தெரியவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.