புதன், 26 மே, 2021

கதை மாந்தர்கள் - ப்ரதீப் குமார் Bபாலி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீ செல்லும் பாதையை சரியாக தேர்ந்தெடு! பிறகு அந்தப் பாதையில் உனது பயணத்தைத் தொடங்கு..


******






ப்ரதீப் குமார் Bபாலி - சுருக்கமாக ப்ரதீப் ஜி அல்லது Bபாலி ஜி. நான் தில்லியில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து சில வருடங்களுக்கு முன்னதாகவே பணியில் சேர்ந்தவர். நான் பணியில் சேர்ந்த நாளிலிருந்தே நல்ல நண்பர்.  பிறகு அதிகாரியும் ஆனவர்.  அதிகாரியாக ஆன பின்பும் முன்பிருந்த அதே நட்பு தான் பாராட்டியவர். பதவி கிடைத்தவுடன் நட்பை மறந்து விடாதவர்.  நல்லதொரு பாடகர் - கிஷோர் குமார் பாடல்களை பாடி அவ்வப்போது தனது Sound Cloud பக்கத்தில் சேமிப்பதோடு அதன் சுட்டிகளை அனுப்பித் தந்து குறை/நிறைகளைச் சொல்லச் சொல்வார்.  குறைகளைச் சொன்னாலும் அதனை ஏற்றுக் கொண்டு, அடுத்த முறை இன்னும் சிறப்பாகப் பாடுவேன் என்று சொல்வார்.  பாடுவதை விட அவருக்குப் பிடித்தமான விஷயம் ஓவியம்!  ஒரு படத்தைப் பார்த்தால், அச்சு அசலாக அப்படியே வரைந்து விடும் திறமை அவருக்குண்டு.  பல இயற்கை காட்சிகளை வரைந்து பார்த்திருக்கிறேன்.  சீரிய சிந்தனைகளைக் கொண்டவர்.  தீப் தாட்ஸ் என அவ்வப்போது அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்.  





REIKY-ஐ முறையாக பயின்றவர்.  அவருக்குத் தெரிந்த யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் உடனேயே அந்த மனிதருக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார்.  தனது அலுவலகப் பதவியினை மிகவும் சீரிய வழியில் செய்தவர்.  தனது பதவி மூலம் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எத்தனையோ பேருக்கு உதவி செய்தவர்.  உதவி என்று கேட்டு வரும் அத்தனை பேருக்கும் தன்னால் முடிந்த உதவியைச் செய்தவர்.  இது மட்டுமே தனது வேலை என்றில்லாமல், எல்லாப் பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வார்.  நாங்களும் அவருடன் பணிபுரிந்ததால், பல சமயங்களில் எங்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்தி விடுவார்.  பல சமயங்களில் இரவு நேரம் வரை வேலை செய்து கொண்டிருப்போம்.  சில நாட்களில் வீடு திரும்பிய பிறகு கூட, அலைபேசி வழி தொடர்பு கொண்டு, அரசுப் பணிக்காக, இப்படி ஒரு மின்னஞ்சல் தயார் செய்து உடனே அனுப்பி விடு என்று அழைப்பார் - அப்படி அழைக்கும் போது மணி இரவு பன்னிரெண்டு மணியாகக் கூட இருக்கலாம்! 


அவர் செய்த உதவிகள் குறித்து பொதுவாக வெளியில் சொல்லிக் கொண்டதே இல்லை.  எனக்குத் தெரிந்த சிலருக்கும் அப்படி உதவி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் உதவி செய்ததோடு அதை மறந்து விடுவதே நல்லது என்பதை அவ்வப்போது சொல்வார்.  பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் ஒரே பிரிவில் பணி புரிந்திருக்கிறேன்.  அவருக்கு என்னுடைய வீட்டில் இருப்பவர்களையும் தெரியும். அதே மாதிரி அவர் வீட்டினருக்கும் என்னைத் தெரியும்.  பல சமயங்களில் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கல்களில் மாட்டி விடுவார். அந்த மாதிரி சமயங்களில் கூட ”இதுவும் கடந்து போகும்” என்று சொல்லி எங்களையும் கவலைப் படாதீர்கள் என்று சொல்வார்.  ஒரு சில சிக்கல்களிலிருந்து விடுபட நானும் சக நண்பர்களும் சிறு உதவி செய்தால் கூட அதனை பெரியதாகச் சொல்லி மகிழ்ச்சி அடைவார். 


சிறப்பாக பணி புரிந்து ஏப்ரல் மாதக் கடைசியில் 60-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி மாதத்தின் கடைசி நாள் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டியவர்.  26-ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  வேறென்ன தீநுண்மி எனும் அரக்கன் தான்.  அவருக்கு சிகிச்சைக்காக தீநுண்மியிலிருந்து விடுபட்டவர்களின் PLASMA தேவை என தகவல் வந்தது.  தில்லியிலிருக்கும் தெரிந்தவர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பி வைத்தேன் - திருவரங்கத்திலிருந்தே.  முப்பதாம் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே பணி ஓய்வு பெற்றார்.  அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது.  மே மாதம் நான்காம் தேதி ICU-விலிருந்தபடியே அலைபேசியில் அழைத்து ஒரு சில உதவிகள் கேட்டார்.  திருவரங்கத்தில் இருந்ததால் அந்த உதவியை என்னால் நேரடியாகச் செய்ய முடியவில்லை. ஆனாலும் நண்பர்களிடம் பேசி அந்த வேலையைச் செய்து முடிக்கச் சொல்லி இருந்தேன்.  


உடல் நிலை குறித்து அவ்வப்போது விசாரித்துக் கொண்டிருந்தேன்.  தேறிவிடுவார் என நானும், மற்ற நண்பர்களும், அவரது குடும்பத்தினரும் நினைத்துக் கொண்டிருந்தபோது எட்டாம் தேதி காலை தகவல் வந்தது.  அதிகாலையில் தீநுண்மியின் பக்க விளைவாக Heart Attack! அவர் இல்லை என்று தகவல் வந்ததிலிருந்தே பல நண்பர்கள், அலுவலகம் சாராத நண்பர்கள் உட்பட என்னை அழைத்த வண்ணம் இருந்தார்கள் - அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  யாருக்குமே அவர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை.  இத்தனை நல்ல மனிதருக்கு இத்தனை சீக்கிரம் முடிவு வந்து விடும் என்று எங்களில் யாராலும் நம்ப முடியவில்லை என்பதே உண்மை.  இன்னமும் கூட என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள இயலவில்லை. கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட முடியாத சூழல்.  தில்லியில் இருந்திருந்தாலும் பார்த்திருக்க முடியாது - 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பதால்!  கணவனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும் மகனுக்கும் எங்களால் என்ன ஆறுதல் சொல்லி விட முடியும். வாட்ஸ் அப் வழி ஆறுதல்கள் மட்டுமே அனுப்பி வைக்க முடிந்தது.


நல்லதொரு மனிதர் எங்களை விட்டுச் சென்று விட்டார். அவரது ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும்.  


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


26 கருத்துகள்:

  1. சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் வெளியிடப் பட்டிருப்பதிலிருந்தே அவர் இல்லாமல் போய்விட்டார் என்று புரிந்து கொள்ள முடிந்தது..  மிகவும் நல்லவராக வாழ்ந்திருக்கிறார்.  என்ன விதியோ...   கொடுமையாக இருக்கிறது.   அவரைப்பிரிந்து வாடும் உறவுகளுக்கும் உங்கள் உள்ளிட்ட நட்புகளுக்கும் இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ளும் மனதைரியம் அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரும் கொடுமை தான் இந்த தீநுண்மி. தினம் தினம் வரும் செய்திகள் - குறிப்பாக தில்லியிலிருந்து வரும் செய்திகள் மன வருத்தத்தையும் அழுத்தத்தையும் அதிகரிக்கும் விதமாகவே இருக்கிறது ஸ்ரீராம். நல்ல மனிதர்கள் கஷ்டப்படும் போது வேதனை அதிகரித்து விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தங்களது நண்பரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.

    தற்போது தினமும் இவ்வகை செய்திகள் வருகிறது ஜி. நமக்கும், யாவர்க்கும் தாங்கி கொள்ளும் மனம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் தினம் கேட்கும் செய்திகள் வேதனை தருபவையாகவே இருக்கிறது கில்லர்ஜி. தாங்கிக் கொள்ளும் மனம் தான் தேவை. விரைவில் சூழல் சரியாக வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்ல மனிதரை இறைவன் இன்னும் சிறிது காலம் வாழ வைத்து இருக்க கூடாதா? என்று மனம் நினைக்கிறது.
    அவர் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறைவன் ஆறுதலை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு மனிதர். எத்தனையோ பேருக்கு உதவி செய்தவர்... ஆண்டவன் அவரை அழைத்துக் கொண்டானே....

      தாங்களும் பிரார்த்தனை செய்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மிக நல்ல மனிதரை இழந்த வறுத்தத்துடன் இதயம் கணக்கிறது.
    பல நல்ல இதயங்களை இது போன்று நித்தமும் இழக்கிறோம்.
    கொரோனா நோயால் ஐசீயூ வரை செல்லும் சிலருக்கு ஏனோ உளரீதியான சிக்கல்கள் ஏற்படுவதையும் அறிந்து திகைக்கிறேன்.
    பிளாஸ்மா சிகிச்சையின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.
    என்னவோ அணைத்தும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும், அவர் குடும்பம் ஆருதல் பெறவும் வேண்டிக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சிகிச்சைகள் தோல்வியில் தான். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல எல்லாவற்றையும் முயற்சிக்கிறார்கள். சரியான தீர்வு தெரியும் வரை இப்படித்தானே செய்ய முடியும் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல மனிதரை உங்கள் நண்பரை இழந்தது மிகப் பெரிய வேதனை. ஆழ்ந்த இரங்கல்கள். அவர் குடும்பத்திற்கு சக்தி அளிக்க இறைவனை வேண்டுவோம்.

    இப்படித்தான் பல நல்ல உயிர்கள் பலியாகின்றன இந்த கோவிட்டிற்கு. என்ன சொல்ல என்று தெரியவில்லை.

    விரைவில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கத்தான் முடிகிறது நம்மால்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு மனிதர் அவர். இப்படி ஒரு முடிவு வரும் என நினைக்க முடியாது... ஆனாலும் அப்படி ஒரு முடிவு அவருக்கு... வேதனை தான் துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இரக்கமே இரக்கப்படும் மனிதர்... மிகவும் வருத்தம் தருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரக்கமே இரக்கப்படும் மனிதர்.... உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி படம் பார்த்து தலைப்பைப் பார்த்ததுமே ஓரளவு பதிவு எதைப் பற்றி என்று புரிந்துவிட்டது. அதுவும் இறந்தகால வரிகள் உறுதிப்படுத்தியது.

    எத்தனை நல்ல மனிதர்! இப்படியானவர்கள் உலகில் நிறைய நாள் இருக்க வேண்டாமோ? இப்படி இந்த அரக்கன் தன் கைகளை ஆக்டோபஸ் போல பல்லாயிரம் கைகளை நீட்டி நீட்டி தன் கைக்கு அகப்படுவதை எல்லாம் தன் பசிக்கு இறையாக்கிக் கொள்கிறதே. இப்படியான செய்திகளைக் கேட்டு மனம் கலவரம் அடைகிறது பதற்றம் மட்டும் ஒரு பயம் ..

    முகம் எங்கேயோ பார்த்தது போல இருக்கிறது. ரொம்ப தெரிந்த முகம் போலத் தோன்றுகிறது.

    ஆழ்ந்த இரங்கல்கள். அவர் குடும்பம் இந்த இழப்பைத் தாங்கி மீண்டு வர பிரார்த்தனைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு பார்த்ததும் புரிந்திருக்கலாம். ஆமாம் கீதா ஜி.

      நல்ல பல மனிதர்களை இழந்து கொண்டிருக்கிறோம். ரொம்பத் தெரிந்த முகம் - நீங்கள் பார்க்க வாய்ப்பிருந்ததாகத் தோன்றவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ப்ரதீப் குமார் பாலியை "பலி" என்றே படித்தேன். ஆனால் உண்மையும் அது தான் எனத் தெரிந்ததும் மனது வேதனையுற்றது. எங்களுக்கும் நெருங்கிய/தூரத்து உறவுகள்/நட்புகள் எனச் செய்திகள் வருகின்றன. ஆறுதல் சொல்லக் கூட முடியவில்லை. தொலைபேசி அழைப்பு வந்தாலே உடலும் மனமும் பதறுகிறது! ( உங்கள் நண்பரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலி என்றே படித்தேன் - பல பேருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். அவரது பெயரை மாற்றி உச்சரித்ததை பல முறை கேட்டிருக்கிறேன் கீதாம்மா.

      பல செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன - வேதனையான நேரம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தில்லியீல் இந்த நிலை சகஜமாகி விட்டதே.
    மிகவும் வருந்த வைக்கிறது உங்கள் நண்பர் மறைவு.

    நல்ல மனிதரோ அல்லாதவரோ,குடும்பத்தலைவரை இழப்பது
    மிக சோகம்.
    இறைவன் தான் அவர் குடும்பத்தைத் தேற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருக்கிறது தில்லியில். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு துக்கச் செய்தி வந்த வண்ணமே இருக்கிறது வல்லிம்மா.

      குடும்பத் தலைவரை இழப்பது மிக சோகம் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்லுள்ளம் கொண்டிருந்த தங்கள் நண்பரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், என்றுதான் தீருமோ இந்த கொடுமைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்று தான் தீருமோ இந்த கொடுமைகள் - இந்தக் கேள்விக்கு பதிலே தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம் கோயில்பிள்ளை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதிவை படித்துக் கொண்டே போகும் பொழுது மெல்ல மெல்ல பல்ஸ்  ஆரம்பித்தது. கடைசியில் அந்த விரும்பப் தகாத  செய்திதான். உங்களின் நம்பரும், அதிகாரியுமான பிரதீப் குமார் பாலியின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பத் தகாத செய்தி தான் - ஆனாலும் நல்லதொரு மனிதர் பற்றி இங்கே பதிவு செய்ய நினைத்தேன் பானும்மா. தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. இழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன
    ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரும் இழப்புகள் - வேதனையான உண்மை கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....