திங்கள், 11 அக்டோபர், 2021

வாசிப்பனுபவம் - பிரதிமை - சே. விஜயராகவன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட எங்கள் வீட்டு கொலு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BE STRONG ENOUGH TO WALK AWAY FROM WHAT ISN’T BEST FOR YOU, AND BE PATIENT ENOUGH TO WAIT FOR THE BLESSINGS YOU DESERVE.


******




சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் சே. விஜய ராகவன் அவர்கள் எழுதிய “பிரதிமை” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: சஸ்பென்ஸ் + த்ரில்லர் நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 77

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


பிரதிமை : சஸ்பென்ஸ் - இன்வஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லர் (Tamil Edition) eBook : ராகவன் , சே. விஜயராகவன்


******* 


ஒரு கல்லூரி - அதில் ஒரு வகுப்பு….  கல்லூரி என்றாலே கொண்டாட்டங்களும், மாணவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளும் பிரச்சனைகளும் உண்டு தானே! ஒரே வகுப்பில் இருந்தாலும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நாட்கள் கடந்த பின்பு வந்த ஞானத்தில் இரு குழுவினரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பயணம் செல்ல திட்டமிடுகிறார்கள்.  பயணம் என்றாலே கொஞ்சமல்ல நிறைய ஸ்வாரஸ்யம் தானே - அதுவும் என்னைப் போன்ற பயணக் காதலனுக்கு! அதனால் பயணத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலுடனேயே படித்தேன்.  பயணம் தொடங்குவதற்கு முன்னரே, மாணவர்களில் ஒருவருக்கு அலைபேசி வழி செய்தி வருகிறது - சக மாணவர் ஒருவரைக் கொன்று விட்டால் நிறைய பணம் தருகிறோம் என்று! 


அந்த மாணவன் என்ன செய்தான், நிஜமாகவே மாணவர்களில் ஒருவர் கொல்லப்பட்டாரா, பயணத்தின் போது என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடனேயே தொடர்ந்து ஆவலுடன் படிக்க நேர்கிறது.  தமிழகத்திலிருந்து கேரளத்திற்குச் செல்கிறது கல்லூரி மாணவர்களின் குழு.  முதல் நாள் நல்லவிதமாகவே கடந்து முடிகிறது - மாணவர்களின் குழு என்றால் பயணத்தில் அலப்பறைகளுக்குக் கேட்க வேண்டுமா?  எல்லாமே சிறப்பாகச் சென்று அன்றைய நாள் முடிகிறது.  அடுத்த நாள் காலையில் மாணவர்களில் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து போகிறார்!  என்ன நடந்தது கொலையா? தற்கொலையா?  காவல்துறை, சஸ்பென்ஸ், தமிழக மற்றும் கேரள காவலர்கள் என விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர்.  


க்ரைம் கதைக்கு நடுவில் ஒரு வரலாற்றுக் கதையும் பின்னணியில் வந்து கொண்டிருக்கிறது.  அந்த வரலாற்றுக் கதைக்கும் இந்த க்ரைம் கதைக்கும் என்ன சம்பந்தம்?  தமிழகத்திலிருந்து வந்த காவல்துறை அதிகாரியின் மனைவி எழுதிய வரலாற்றுக் கதையை படித்தபடி வருகிறார் - நாமும் கூடவே படிக்கிறோம்!  தற்போது நடந்த கொலைக்கும் இந்த வரலாற்றுக் கதைக்கும் சம்பந்தம் உண்டா? என்ற கேள்விகளுடன் நாமும் படிக்க சஸ்பென்ஸ் தொடர்கிறது.  நல்லதொரு க்ரைம்/சஸ்பென்ஸ் கதையைச் சிறப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர் விஜய ராகவன். அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!  


கல்லூரி வாழ்க்கையில் மாணவர்கள் செய்யும் சில வேதனையான விஷயங்கள் - போதை பழக்கத்திற்கு அடிமையாவது, காதல், காதலில் போட்டி, அரசியல் செல்வாக்கு போன்ற விஷயங்களையும் சேர்த்து விறுவிறுப்பிற்குக் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.  விறுவிறுப்பான இந்தக் கதையை நீங்களும் படித்து ரசிக்கலாமே!


*******


இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களால் வெளியிடப்பட்ட நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: எங்கள் மின்புத்தகங்கள்...


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….



16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான கதையாயிருக்கும் என்று தெரிகிறது.  க்ரைம் கதை எழுதுவதும், நகைச்சுவை கதை எழுதுவதும் சற்று சிரமம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரைம் மற்றும் நகைச்சுவை கதை எழுதுவது கடினமே ஸ்ரீராம். எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. விமர்சனம் சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆஹா வெங்கட்ஜி எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்...க்ரைம், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன். உங்கள் விமர்சனம் ரொம்பவே தூண்டுகிறது. நல்ல விறு விறுப்பான கதை என்று தெரிகிறது...

    நன்றி அறிமுகத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கும் பிடித்த விஷயமா இது... மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. //நூலாசிரியர் விஜய ராகவன். அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்! //

    வாழ்த்துக்கள்.
    உங்கள் விமர்சனம் படிக்கும் ஆவலை ஏற்படுத்தும் நல்ல விமர்சனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. விமர்சனம் அருமை. விஜய ராகவனிற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....