சனி, 23 அக்டோபர், 2021

காஃபி வித் கிட்டு - 131 - பாவ் (B)பாஜி - அறிவுக்கொலு - குடியிருப்பு - மழைத்துளி - ஓவியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


VALUE THE PERSON WHO GIVES YOU TIME; IT’S NOT JUST TIME.  THEY SHARE A PART OF LIFE WITH YOU.


******


இந்த வாரத்தின் உணவு - அன்னக்கூட் - பாவ் (B)பாஜி :





ISKCON - International Society for Krishna Consciousness - நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கலாம்.  அவர்கள் பல ஊர்களில், நாடுகளில் அமைத்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவர்களது கோவில்களில் அன்னக்கூட் என்ற பெயரில் உணவகங்களும் உண்டு.  தற்போது அவர்களது வழிபாட்டுத் தலங்கள் தவிர வெளி இடங்களிலும் ”Annakoot - God’s Own Cuisine” என்ற பெயரில் உணவகங்கள் - Chain of Restaurants - திறக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.  தில்லியிலேயே நான்கு இடங்களில் இருக்கிறது இப்போது - சமீபத்தில் - அக்டோபர் எட்டாம் தேதி அன்று எங்கள் வீடு இருக்கும் கோல் மார்க்கெட் பகுதியிலேயே ஒரு சிறு உணவகம் திறந்திருக்கிறார்கள். அங்கே அமர்ந்து சாப்பிட வசதிகள் இல்லை.  பெரும்பாலும் இனிப்புகள் மட்டுமே! அதைத் தவிர கச்சோடி, பூரி, சமோசா போன்றவை விற்கிறார்கள்.  விதம் விதமான இனிப்பு வகைகளும் கிடைக்கின்றன.  



படம்: இணையத்திலிருந்து...

இந்தக் கிளை திறப்பதற்கு சில நாட்கள் முன்னர் தான் நானும் நண்பர் ஒருவருமாக அவர்களது பெங்காலி மார்க்கெட் கிளைக்குச் சென்றிருந்தோம். பூரி, பாவ் (B)பாஜி போன்றவற்றைச் சுவைத்தோம். அவர்களது உணவுகளை ”சாத்விக்” உணவுகள் என்று சொல்கிறார்கள் - வெங்காயம், பூண்டு போன்றவை சேர்ப்பதில்லை. அங்கே சுவைத்த பாவ் (B)பாஜி மற்றும் பூரி படங்கள் இதோ இந்தப் பதிவில் - உங்கள் பார்வைக்கு! சுவையும் நன்றாகவே இருந்தது.  இரண்டு Plate பூரி, ஒரு Plate பாவ் (B)பாஜி மற்றும் அரை கிலோ (g)கூட்(d) சந்தேஷ் எல்லாம் சேர்த்து ஆன தொகை ரூபாய் 540/- மட்டும்! பாவ் (B)பாஜி, பூரி, (g)கூட்(d) சந்தேஷ் என அனைத்துமே நன்றாக இருந்தது. இவர்களிடம் இருக்கும் குலாப் ஜாமூன் கூட நன்றாகவே இருக்கிறது (ஒரு பீஸ் 25 ரூபாய் 25 பைசா! அது என்ன பைசா கணக்கோ?) தலைநகரில் இருக்கும் பிரதான உணவகமான ப்ரீத் விஹார் கிளையில் இன்னும் பல உணவுகள் கிடைக்கின்றன - தென்னிந்திய உணவுகளும் கிடைக்கிறது!


******


பழைய நினைப்புடா பேராண்டி: அறிவுக்கொலு – சரஸ்வதி பூஜை


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - அறிவுக்கொலு – சரஸ்வதி பூஜை


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


கணவன் தன் வாழ்க்கைத் துணைவியுடன் கங்கா ஸ்நானத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான். வழியில் ஒரு பெண் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கிறாள். வாழ்க்கைத் துணைவி அந்த ஆடல் பாடலில் லயித்துத் தன் நாயகனையும் பிரயாண நோக்கத்தையும் மறந்து நிற்கிறாள். எனவே தாமதித்துப் போகிறாள். கணவனையும் கோபித்துக் கொள்கிறாள், ’நான் வருமுன் கங்கா ஸ்நானம் செய்து விட்டீர்களே’ என்று. கணவனோ இளநகையரும்பி, ’தேவியே! உன் விளையாட்டே உனக்குப் பெரிதா யிருக்கிறது. பாட்டிலும் கூத்திலும் நீ உன்னை மறந்து, கொலு வைத்த மாதிரி அங்கே நின்று விட்டாய். என்மீதும் கோபம் கொள்கிறாய். நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கப் போகிறேன்’ என்றான். சாபம் என்றதும் மின்னல் போல் துடித்த மேனி சாபத்தை அறிந்து கொண்டதும் ஆனந்தத்தில் பூரிக்கிறது. ‘நீ பூலோகத்தில் போய்க் கவிஞர் நாவில், உழவர் கைகளில், மகான்கள் நெஞ்சில் கொலு வீற்றிருக்க வேண்டும்’என்பது தான் சாபம்! சாபமா, அனுக்கிரகமா? இது புராணம்.


ஆற்றங்கரை மண்டபம் ஒன்றில் மாலை இளந்தென்றலை அனுபவித்த வண்ணம் தாமும் தனிமையுமாக இருக்கும் போது கலைமகளே தோன்றிக் கன்னிக்கவிதை கொணர்ந்து தமக்குத் தந்ததாகப் பாரதியார் பாடியிருக்கிறாரல்லவா? மணமாலையும் கையுமாகத் தோன்றிய கலைமகள் தம்மை நோக்கி, ‘இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாளம்மா!’என்று அதிசயப்படுகிறார். அந்த ’இளம் புன்னகை’ மட்டுமா பாரதியாரின் அதிசயக் கவிதை? துர்க்கா தேவியின் வித்தியாச ரூபமும், சிம்ம கர்ஜனையும் சிரிப்பும் சேர்ந்த்து தானே பாரதியாரின் ஆவேச கீதம்?


******


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - நிரந்தரக் குடியிருப்பு :




இந்த வாரம் பார்த்து ரசித்த ஒரு வாட்ஸ் அப் நிலைத்தகவல் - நன்றாக இருந்தது.  நீங்களும் ரசிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - இரவின் மழைத்துளி:


சமீபத்தில் சொல்வனம் பக்கத்தில் படித்து ரசித்த ஒரு கவிதை, உங்கள் பார்வைக்கு - நீங்களும் ரசிக்க!  


இரவின் மழைத்துளி


இரவுபெய்த பெருமழையில்

ஒரு சிறு மழைத்துளி

அந்தமரத்தின் இலைநுனியில்

மதில் மேல் பூனையாக

ஒட்டிக் கொண்டிருந்தது…


தான் அசைந்தால்,

இலை அசையும்

இலை அசைந்தால்

மழைத்துளி மண்ணில்

விழுந்துவிடுமென்று

மரம் தன்னைத்தானே

மௌனித்துக்கொண்டது…


விடியும்போது உதிக்கும்

சூரியனின் சுடுதணலில்

சுருண்டு காய்ந்து போகும்

மழைத்துளியை யார்தான்

காப்பாற்றக்கூடும்?

ஒருஇலையோ அல்லது

ஒருமரமோ?


– ரோகிணி


******


இந்த வாரத்தின் ரசித்த படம் - கடற்கரை ஓவியம் :





சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு படம் - கடற்கரை ஓவியம் ஒன்று! பாருங்களேன். 


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


28 கருத்துகள்:

  1. பூரி படம் கவர்கிறது.  25 பைசாக்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றனவா?  ரோகிணியின் கவிதை ரசிக்க வைத்தது..  இந்தப் பொருளில் நானும் ஒன்று எழுதி இருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பாவ் பாஜி/பூரி/பாஜி பார்க்க நன்றாக இருக்கிறது. நாங்க அம்பேரிக்காவில் இஸ்கான் கோயில்களில் மதிய உணவு சாப்பிட்டிருக்கோம். கூட்டம் அதிகமாக இருக்கும். முதல் முறையே எல்லாமும் எடுத்துக் கொண்டுவிட வேண்டும். பின்னர் போகலாம்னு இருந்தால் நிற்க இடமே இருக்காது. இனிப்பை மட்டும் கடைசியில் 2,3 இனிப்புக்களின் பெயரைச் சொல்லி நம் விருப்பத்தைக் கேட்டறிந்து கொண்டு கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஸ்கான் கோயில்களில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ரோகிணி கவிதை என்பதை ரோஷ்ணி எனப் படித்துவிட்டு வியந்து பின் தெளிந்தேன். :) மற்றதற்குப் பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பெயர்க் குழப்பம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கவிதை வரிகளும், ஓவியமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. முதல் படங்கள் அற்புதமாக இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை.
    பழைய பதிவு சொன்ன செய்தியும் மிக அருமை.
    கடற்கரை ஓவியம் மனதை கவர்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமையான பதிவு. கடற்கரை ஓவியம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கடற்கரை மணற் சிலை அருமை.

    பாவ் பாஜி, பூரி பாஜி - கண்ணைக் கவர்கிறது. இனிப்பு சேர்த்து 540 ரூபாயா? அட தேவுடா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணைக் கவர்ந்த பாஜி - மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். சுவையும் நன்றாகவே இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்னகூட் - பற்ரிய செய்திகள் அருமை.. குறைந்த விலையில் நிறைந்த சேவை...

    மழைத்துளி கவிதையும்
    மணல் சிற்பமும் அழகு.. அழகு.

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு அருமையாக உள்ளது. இனிப்புகள் பார்க்கவே நன்றாக உள்ளன. அன்னகூட் பற்றிய விபரங்களும் தெரிந்து கொண்டேன்.

    சரஸ்வதி பூஜை செய்திகள் பதிவுக்குச் சென்று படித்து அறிந்து கொண்டேன். நல்ல விபரமாக எழுதி உள்ளீர்கள்.

    ரோகிணியின் மழைத்துளி கவிதை.. மிகவும் ரசித்தேன்.

    கடற்கரை மணல் ஓவியம் பிரமாதமாக உள்ளது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அன்பின் வெங்கட்,
    எல்லாமே நாவூற வைக்கும் இனிப்பும் சுவையான
    பாவ் பாஜியும் அருமை.
    இவ்வளவு வண்ணத்துடன் நான் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இஸ்கான் கோவில் உணவு எப்பொழுதுமே இனிமை.

    ரோஹிணி அவர்களின் கவிதை மிகக்
    கருத்துடன் சிறப்பாக இருக்கிறது.
    இலையின் கருணையும் மழைத்துளியும், மரத்தின் பாசமும்

    எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஸ்கான் கோவில் உணவு - வேறு ஒரு இடத்திலும் சுவைத்ததுண்டு வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கடற்கரை மணல் சிற்பம்,
    காணக் காண இனிமை. பகிர்வுக்கு மிக நன்றிமா/
    காஃபி வித் கிட்டு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வாவ்... அந்த கடற்கரை சிற்பம் மிக மிக அருமை.... புன்னகை மிளிரும் முக வதனம்... அதன் உயிரோட்டம் மிகவும் கவர்ந்தது. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரை சிற்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாஞ்சில் சிவா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....