புதன், 27 அக்டோபர், 2021

தமிழகப் பயணம் - தரங்கம்பாடி எனும் Tranquebar


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சிங்காடா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எவரையும் உங்களுக்கு ஏற்ப மாற்ற நினைக்காதீர்கள்; அவர்கள் விருப்பப்படியே விட்டுவிடுங்கள்; உங்களைப் புரிந்தால் திரும்ப வருவார்கள்!


******





செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை ஐந்து பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 


ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ


Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி


சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்


மீன் செத்தா கருவாடு


பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி






சென்ற பகுதியில் சொன்னது போல, முதல் நாள் மாலை நிகழ்ச்சிகள் - நாங்கள் சென்றிருந்தட் தில்லி நண்பரின் சஷ்டியப்தபூர்த்தி நிகழ்ழ்ச்சிகள் இல்லை என்று தெரிந்ததும், அன்றைய மாலை நேரத்தினை வீணாக்க வேண்டாம் என முடிவு செய்து உடனடியாக திட்டமிட்டோம்.  திருக்கடையூரிலிருந்து தரங்கம்பாடி எனும் Tranquebar பத்து கிலோமீட்டருக்கும் தொலைவான தூரம் தான் என்று சொல்ல, அங்கே என்ன இருக்கிறது என்று நண்பர் ஸ்ரீபதி கேட்டார்.  நானும் அங்கே கடற்கரை, கோட்டை, கோவில் என சில பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு என்று சொன்னாலும், சில இடங்கள் மாலை நேரமாகி விட்டபடியால் மூடி இருக்கலாம் என்றும் சொன்னேன்.  கோட்டை, கோவில் போன்றவற்றை உள்ளே சென்று பார்க்க முடியாவிட்டாலும், நிச்சயம் கடற்கரைக்குச் செல்ல முடியும் என்று சொல்ல, உடனடியாக புறப்பட்டோம்.  






நாங்கள் புறப்பட்ட சமயம் தான் தில்லியிலிருந்து இன்னும் சில நண்பர்கள் தங்குமிடமான ஹோட்டல் மணிவிழா வாயிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் பயணித்து வந்ததால் பயண அலுப்பு இருக்கும், அவர்களுக்காகக் காத்திருக்காமல் நாங்கள் மட்டும் செல்வது என முடிவெடுத்து புறப்பட்டு விட்டோம்.  நான், நண்பர் ஸ்ரீபதி மற்றும் அவரது இல்லத்தரசி என மூவரும், அவர்கள் சென்னையிலிருந்து அமர்த்திக் கொண்டு வந்த வாகனத்திலேயே தரங்கம்பாடியை நோக்கி புறப்பட்டு விட்டோம்.  தரங்கம்பாடி எங்களுக்கு எந்த விதமான வரவேற்பை அளிக்கப் போகிறது என்பது பற்றி யோசித்தபடியே, நண்பருடனும் பேசிக் கொண்டே சில நிமிடங்களில் தரங்கம்பாடி கடற்கரையைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற போது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகியிருந்தது.  கடற்கரையில் அமைந்திருக்கும் டேனிஷ் கோட்டையின் கதவுகள் சாற்றப்பட்டு விட்டன என்பதால் உள்ளே சென்று பார்க்க இயலவில்லை.  வெளியிலிருந்து தான் பார்க்க முடிந்தது. 





கடற்கரை தவிர மற்ற இடங்கள் எல்லாம் மூடியிருக்க, கடற்கரை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது - கடற்கரையை கதவு வைத்தா மூட முடியும்? இருந்தாலும் அங்கேயும் தன்னார்வலர்கள் பலர் கடலுக்குள் இறங்காவண்ணம் பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள்.  சில உள்ளூர் இளைஞர்கள் அங்கே தன்னார்வலர்களாக தொண்டு செய்கிறார்கள்.  வெளியிடங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் பிரதேசத்தின் ஆபத்துகள் தெரிவதில்லை என்றும், கொஞ்சம் ஏமாந்தால் கடலலைகள் ஆட்களை உள்ளே இழுத்துச் சென்று இடிபாடுகளுக்குள் அமுக்கி விடும் ஆபத்து இருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களை மதித்து அவர்களுடன் பேச்சுக் கொடுக்க அவர்கள் சொன்ன சில விஷயங்கள் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

சுனாமி சமயத்தில் அவர்கள் எட்டு, பத்து வயதுக்குள் இருந்த சிறுவர்கள் என்றும் அந்தச் சமயத்தில் இழந்த நண்பர்களும், உறவினர்களும் ஏராளம் என்பதையும் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  கூடவே அவர்களது தாத்தா, பாட்டி போன்றவர்கள் முன்பு கடற்கரையிலிருந்த கோவில்கள் பற்றி சொல்லி இருப்பதையும் சொல்லி, அவை அனைத்தும் தற்போது கடலுக்குள் மூழ்கி விட்டது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு நன்றி சொல்லி, அவர்கள் செய்யும் இந்த தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது என்பதையும் சொல்ல அவர்களுக்கும் மகிழ்ச்சி.  நம்மால் முடிந்தது இப்படி பாராட்டுவது எனும்போது நமக்கும் நட்டமில்லை, அவர்களுக்கும் மகிழ்ச்சி என்பது கூடுதலாக நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் அல்லவா.


கடற்கரையில் இருந்த பல வித மனிதர்களின் நடவடிக்கைகள், புதிதாக திருமணம் ஆன ஜோடிகள், சுற்றுலாப் பயணிகள் தன்னார்வலத் தொண்டர்கள் சொல்வதைக் கேட்காமல் பாறைகளில் மீதேறிச் சென்று எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள், படங்கள் என அனைத்தும் பார்த்தபடியே நாங்களும் சில படங்களை எடுத்துக் கொண்டோம்.  சிறிது நேரம் அங்கே இருந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத் துவங்க, புறப்படலாம் என நினைத்து, எங்கள் வாகனம் இருந்த இடம் நோக்கி நடக்கத் துவங்கினோம்.  அதற்கு முன்னர் அங்கே ஐஸ்க்ரீம் போன்றவை விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருக்க, நாங்களும் கோன் ஐஸ் வாங்கி சுவைத்து விட்டு, எங்கள் ஓட்டுனருக்கும் ஒன்றை வாங்கிக் கொண்டு சென்றோம்.  வாகன நிறுத்துமிடத்தில் இருந்த அவரிடம் அதைக் கொடுத்து, பொறுமையாக சாப்பிடுங்கள், பிறகு புறப்படலாம் என்று சொல்லி அப்படியே பக்கத்தில் நடந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்.  



கிடைத்த நேரத்தில் எங்களால் கடற்கரையை மட்டுமே பார்க்க முடிந்தது என்றாலும், எங்களுக்கு மனதில் மகிழ்ச்சியாக இருந்தது - நேரத்தினை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டதால்!  முடிந்தால் அடுத்த முறை இந்தப் பக்கம் வரும்போது நின்று நிதானித்து தரங்கம்பாடியில் இருக்கும் மற்ற இடங்களையும் பார்க்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டு இருந்தோம்.  சில நிமிடங்களில் எங்கள் ஓட்டுனர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்திருக்க தரங்கம்பாடி கடற்கரையிலிருந்து புறப்பட்டு திருக்கடையூர் வந்து சேர்ந்தோம்.  அங்கே சென்ற பிறகு என்ன செய்தோம், என்ன பார்த்தோம் போன்ற விஷயங்களை எல்லாம் அடுத்த பதிவில் சொல்கிறேன்.  இந்தப் பதிவில் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் எடுத்த சில படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  படங்கள், காணொளிகள் குறித்த உங்கள் கருத்துரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. கோட்டையும் திறந்திருந்திருந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருந்திருக்கும்.  கடற்கரையில் அந்த உள்ளூர் தம்பிகளின் சேவை பாராட்டப்படவேண்டியது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோட்டைகள் - திறந்திருந்தால் பார்த்து ரசித்திருக்கலாம்! படங்களும் எடுத்திருக்கலாம். மீண்டும் ஒரு முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வர வேண்டும் என நினைத்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாசகம் அருமை.

    தரங்கம்பாடி நினைவுகள் வருகிறது. உங்கள் பதிவை படித்தவுடன்.
    நிறைய தடவை போன ஊர் இரண்டு மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன்.
    கோட்டை மிகவும் பழமையாக தெரிகிறது இப்போது.

    முன்பு இப்படி சேவை செய்யும் ஆட்கள் கிடையாது. இப்போது இருப்பது மகிழ்ச்சி.

    கோயிலை கொண்டு போய் விட்டது கடல். வேறு கட்டியதும் சிதிலமாகி வருகிறது.

    கோட்டை உள்ளே நன்றாக இருக்கும். காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தரங்கம்பாடி பதிவு எழுதும்போதே உங்களையும் நினைத்துக் கொண்டேன். நீங்கள் விரிவாக எழுதி இருப்பீர்கள் என்றும் நினைவுக்கு வந்தது.

      சேவை செய்யும் இளைஞர்கள் - நல்ல விஷயம் தான்.

      புதிய கோவிலும் சிதிலமாகி வருவது வேதனையான விஷயம்.

      கோட்டை பார்க்க வேண்டும் கோமதிம்மா. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று வர வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காணொளிகள் அருமை... நேரத்தை சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். நேரம் சரியாகவே இருந்ததில் மகிழ்ச்சி எனக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கோட்டை அழகு... அதைவிட கடலைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அலுப்பே இருப்பதில்லை என்பது உண்மை. எனக்கும் பிடித்த விஷயம் இது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகமும் இனிமையான அணுபவங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அன்பின் வெங்கட் ,
    நலமுடன் இருங்கள்.
    தரம்பாடி கடலும் காட்சிகளும் மிக மிக அருமை.

    இது போன்ற கோட்டைகள் கிழக்குக் கடற்கரையோரம் நிறைய பார்க்கலாம்.
    ஆனால் எல்லாம் இடிபாடுகள்.

    அந்த வாலிபர்களின் சேவை சிறப்பு. இன்னும் அந்த சுனாமி நினைவு
    மிக வருத்தப் பட வைத்தாலும் அதிலிருந்து
    மீண்டு ,மற்றவர்களுக்கு உதவும் இந்த இளைஞர்களின்
    உதவும் மனப்பான்மை மிக அருமை.
    அவர்களை அந்தக் கடலன்னை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரங்கம்பாடி கடற்கரை காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      வாலிபர்களின் சேவை சிறப்பானதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காணொளிகளும், அதில் தெரியும் கடல் அலைகளும்
    நம்மேல் தெறிப்பது போல உணர்கிறேன்.

    கடலின் ஈர்ப்பு சக்தி அளவிட முடியாதது.
    மெஸ்மரைசிங் எஃபெக்ட்.
    படங்களுக்கு மிக நன்றி. சுவையாகச் சென்றிருக்கிறது இந்தப் பயணம்.
    அதை நீங்கள் பகிரும் விதமும் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இன்னும் சில நிமிடங்கள் இருக்க ஆசை இருந்தாலும் புறப்பட வேண்டியிருந்தது வல்லிம்மா.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இந்த வாலிபர்களின் கண்ணில் தெரியும் வெகுளித்தனம்
    எத்தனை அழகு. தரங்கம்பாடியில் அகழ்வாராய்ச்சி செய்கிறார்களா என்று தெரியவில்லை.
    உயிர்களையும்,
    அவ்வளவு பெரிய கோவிலையும் விழுங்கிய கடலுக்கு
    பேராசை அதிகம்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலிபர்களின் கண்ணில் தெரியும் வெகுளித்தனம் - உண்மை வல்லிம்மா.

      கடலின் பேராசை - சரியாகச் சொன்னீர்கள். கடல் விழுங்கிய கோவில்கள் எத்தனை எத்தனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. கடற்கரை அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயண விவரங்களும், படங்களும் காணொலிகளும் அருமை.
    பல ஆண்டுகளுக்கு முன் தரங்கம்பாடி சென்று வந்த நினைவுகள், மனதில் அலையாய் மோதுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. திருக்கடையூருக்குப் பல முறை போயிருந்தும் கிட்டத்தில் தரங்கம்பாடி இருப்பது தெரியாமல் போச்சே! இனி வாய்ப்புக் கிடைக்குமோ என்னமோ! பார்க்கலாம். நல்லதொரு பதிவு. அருமையான அரிய தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இடம் கீதாம்மா. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மகிழ்ச்சி. தரங்கம்பாடியில் கடற்கரை அருகில் வைப்புத்தலம் உள்ளதே பார்த்தீர்களா? அதன் பழைய கோயிலையும், புதிய கோயிலையும் புகைப்படங்கள் எடுத்து விக்கிப்பீடியாவில் பதிந்துள்ளேன். தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் காணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்ற போது மாலை நேரம் ஆகிவிட்டதால் பெரும்பாலான இடங்கள் மூடிவிட்டார்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. அதனால் கடற்கரைக்கு மட்டுமே செல்ல முடிந்தது. உங்கள் பதிவினை பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....