திங்கள், 10 ஏப்ரல், 2023

வாசிப்பனுபவம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது - நர்மதா சுப்ரமணியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட என்னைப் போல் ஒருவன்… பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

புத்தகம் - தொட்டுப் பார்த்தால் அது வெறும் காகிதம்; தொடர்ந்து வாசித்தால் அது வெற்றிக்கான பாதை… 

 

******


 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது” எனும் சிறுகதைத் தொகுப்பு. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 31

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது? உயிராய் உணர்வாய்! : இரு சிறுகதைகள் (Tamil Edition) eBook : சுப்ரமணியம், நர்மதா: Amazon.in: Kindle Store

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்திய வாசிப்புப் போட்டியில் இருக்கும் பதினான்கு நூல்களில் நர்மதா சுப்ரமணியன் அவர்கள் எழுதிய ”யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது” எனும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இரண்டே இரண்டு சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு மின்னூல் இது.  மேலும் நூல் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 

 

கல்லூரி காலத்தில் கவிதை, தமிழ் மீது பற்று என இருந்த கதையின் நாயகி, திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்தை என அவற்றிலிருந்து விட்டு விலகி நிற்கிறாள். கல்லூரி காலத் தோழி ஒருவரின் தூண்டுதலில் மீண்டும் எழுதத் துவங்குகிறார். ஆனால் அதில் சில பிரச்சனைகள் வர எழுத்திலிருந்து விலகி நிற்கிறார்.  அவர் மீண்டும் எழுதினாரா, அவரது கணவருடைய பங்களிப்பு போன்றவற்றைச் சொல்லும் சிறுகதை, முதல் சிறுகதை.  பல குடும்பங்களில் இப்படி தங்களது திறமைகளை பரிமளிக்க முடியாமல் குடும்பத்திற்காக விட்டு விலகி நிற்கும் சூழல் இருப்பதுண்டு. அதனை இக்கதை வழியேயும் உணர முடிகிறது.  இந்த சிறுகதையில் ஆங்கில வார்த்தை என்றாலும் தமிழாகவே மாறிவிட்ட அலாரம் (Alarm) என்பதற்கு அவர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தை சிறப்பு! பாராட்டுகள். 

 

ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எது முக்கியம் - அன்பாய் நேசிக்கும் பெண் போதுமா, இல்லை அழகு தான் முக்கியமா? அவளின் வண்ணம் தான் முக்கியமா? என்று சொல்லும் கதை இரண்டாம் சிறுகதை.  அதுவும் கண்டதும் காதல்… அந்தக் காதல் வெற்றி பெற்றதா? இல்லை தோல்வியில் முடிந்ததா? என்பதை மிகவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.  

 

ஆக மொத்தம் தொகுப்பில் இருக்கும் இரண்டு சிறுகதைகளுமே நன்றாகவே இருக்கின்றன.  ஒரு சிறு விண்ணப்பம்.  இப்படி இரண்டு சிறுகதைகள் மட்டுமே கொண்டு மின்னூலை வெளியிடுவது சரியல்ல.  சிலர் ஒரே ஒரு கதையை அதுவும் ஐந்தாறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் கதையைக் கூட மின்னூலாக வெளியிடுகிறார்கள்.  அடுத்த மின்னூலில், அது சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில், குறைந்தது ஐந்து சிறுகதைகளாவது இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நல்லது. மின்னூலைப் படிப்பவர்களுக்கும் ஒரு நல்ல நூலை, செறிவான நூலை படித்த மகிழ்ச்சி உண்டாகும்.  இது ஒரு யோசனை மட்டுமே!  

 

மேலும் பல நூல்களை வெளியிட கதாசிரியருக்கு வாழ்த்துகள். படிக்க இருக்கும் உங்களுக்கும் பாராட்டுகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர் சுப்பிரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

9 கருத்துகள்:

  1. சிறுகதைகளில் நல்ல பேஸ் அமைந்தால் கதை சிறந்து விளங்கி விடும்.  இவர் உபயோகப்படுத்தி இருப்பது அந்தக்கால கே எஸ் ஜி பிளாட்.  மனதில் நின்று விடும்.  நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  2. கிண்டில் மின்னூல்களுக்கு இப்போதும் வரவேற்பு இருக்கிறதா?  நான் கூட இரண்டாவது நூல் முயற்சிக்கலாமா?!

    பதிலளிநீக்கு
  3. alarm வார்த்தைக்கு என்ன வார்த்தை உபயோகபப்டுத்தினார் என்று சொலலாதது அநீதி!!!  நான் எங்கே கிண்டில் சென்று படிக்கப்போகிறேன்?  

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான விமர்சனம் ஜி அலாரம் தமிழ் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  5. புத்தக விமர்சனம் நன்று. மற்றும் உங்கள் யோசனையை சொன்னது நல்லது.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு நூல் அரிமுகம் சார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....