புதன், 5 ஏப்ரல், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஏழு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ப்ரயாக்ராஜ் - B(d)டே ஹனுமான் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"BE COURAGEOUS. CHALLENGE ORTHODOXY. STAND UP FOR WHAT YOU BELIEVE IN. WHEN YOU ARE IN YOUR ROCKING CHAIR TALKING TO YOUR GRANDCHILDREN MANY YEARS FROM NOW, BE SURE YOU HAVE A GOOD STORY TO TELL." - AMAL CLOONEY.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஏழு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம்விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ; விதி நாற்பத்தி இரண்டு ; விதி நாற்பத்தி மூன்று ; விதி நாற்பத்தி நான்கு ; விதி நாற்பத்தி ஐந்து ; விதி நாற்பத்தி ஆறு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 


நாற்பத்தி ஏழாம் விதி சொல்வது, "குறி வைத்த இலக்கை அடைந்தவுடன் சரியாக நிறுத்தும் பக்குவத்தைப் பெற்றுக்கொள்".

 

மூல நூலில், இதை "DO NOT GO PAST THE MARK YOU AIMED FOR; IN VICTORY, LEARN WHEN TO STOP" என்கிறார் எழுத்தாளர்.

 

இலக்கை நோக்கிய நம் பயணத்தில், தோல்விகளை எதிர்கொள்ளும்போது, மிக கவனமாகக் காரணங்களை ஆராய்ந்து மீள முயல்வோம்.

 

ஆனால், நிதர்சனத்தில் நாம் அதீத எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது, வெற்றி பெறும் தருணங்களிலேயே ஆகும்.

 

பெரும்பாலான மனிதர்கள், தம் மோசமான காலகட்டங்களை விட, தாம் நினைத்தது நடக்கும் பொற் காலங்களிலேயே, ஆணவம் மிகுந்து பல தவறுகளை இழைத்து விடுவதுண்டு.

 

அவையே, அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதோடு, சுற்றத்தார் மனதில் வெறுப்பு எனும் வடிவில், பெரும் வீழ்ச்சிக்கான விதைகளையும் விதைத்துவிடுகின்றன.

 

எனவே, கசப்பான தோல்விகளை விட, இனிமையானதும், சிக்கலானதுமான வெற்றிகளைக் கையாளுவதில் பின்பற்றவேண்டிய இன்றியமையாத வழிமுறைகளை அறிந்து கொள்ளலாமா?

 

1. ஆசுவாசப்படுத்திக் கொள்ளுதலும் காரணங்களை ஆராய்தலும்;

 

'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்னும் சொல்லாடலுக்கேற்ப, நம் நீண்டகால பொறுமைக்கும், போராட்டங்களுக்குமான வெகுமதியாக இத்தகைய வெற்றியை நினைப்பதும், அவ்வெற்றியின் விளைவுகளை துரிதகதியில் விரிவுபடுத்த எண்ணுவதிலும் எந்தத் தவறும் இல்லை.

 

உலகிலுள்ள அனைத்து போதைப் பொருட்களையும் விட, நம்மையே நாம் மறக்கச் செய்யும் சவாலான காலமே இது என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

 

ஏனெனில், இவ்வெற்றிக்கு நாம் மட்டுமே காரணமாகவும், மற்ற அனைவரையும் விட நம் பலம் பெருகி விட்டதாகவும் தவறாக நினைக்கத் தூண்டும் அபாய ஆற்றல் இக்காலத்திற்கு உண்டு.

 

எனவே, பொற்காலமாகக் காட்சியளிக்கும் இக்காலத்தில், சில கணங்களாவது இவ்வெற்றிக்கான காரணங்களை அசை போட்டுப் பார்ப்பது மிகவும் அவசியம்.

 

அப்போதுதான், இவ்வெற்றியில் நம் கடின உழைப்பின் பங்கு எவ்வளவு? தற்செயலின் பங்கு எவ்வளவு? தக்க சமயங்களில் உதவியவர்களின் பங்கு எவ்வளவு, நாம் இழைத்த தவறுகள் என்னென்ன? உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ள இயலும்.

 

அதன் விளைவாக, நமக்கு உதவியவர்களுக்கு நன்றியுடன் இருந்து, அவர்களின் தொடர் ஆதரவை உறுதி செய்ய இயலும்.

 

நாம் இழைத்த தவறுகள் மற்றும் நம்மைக் காத்த தற்செயல் நிகழ்வுகள் மூலம், நம் திறமையின் எல்லைகள் புலப்பட்டு அவற்றை மேம்படுத்துவதற்காகத் திட்டமிடவும் முடியும்.

 

இவை அனைத்தும், நம் தொடர் வெற்றியை உறுதி செய்யவும், சவாலான எதிர்காலத்திற்காக நம்மைத் தயார் செய்யவும் மிகவும் அவசியமானவை.

 

சன் ஃபார்மா போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள், தயாரிப்பு மற்றும் விற்பனைக்கும் அப்பால், புதிய கண்டுபிடிப்புகளுக்காகவே ஒரு ஆராய்ச்சிப் பிரிவை கிளை நிறுவனமாக உருவாக்கிப் பேணுவதற்கும் இதுவே காரணமாகும்.

 

2. மாறிவரும் சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அடுத்தகட்ட இலக்குகளை நிர்ணயித்தல்;

 

நம் திறமைக்கான மதிப்பு, அது எத்தனை மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதிலேயே உள்ளது.

 

மனிதர்களின் தேவைகளும், மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள சமூகத்தின் எதிர்பார்ப்புகளும், தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவை.

 

தொடர்ச்சியான ஆழ்ந்த கவனத்தால், மாறி வரும் காலத்தின் தேவையையும், அதற்கான தொழில்நுட்பத்தையும் உணர்பவராலேயே, தம் திறமைகளைத் தகவமைத்து தம் மதிப்பை உயர்த்த இயலும்.

 

1945 இல், ஜே. சி. மஹிந்திரா, கே. சி. மஹிந்திரா என்னும் இரண்டு சகோதரர்களால் ஒரு எஃகு வியாபார நிறுவனமாக தொடங்கப்பட்டதே "M and M" எனும் நிறுவனம்.

 

இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கேற்ப, தம் தயாரிப்புகளை வடிவமைத்தும், மேம்படுத்தியுமே இந்நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது.

 

ராணுவத்திற்குத் தேவையான ஜீப்புகள், விவசாயிகளின் உழுதல் பணியை எளிமையாக்கும் டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை உருவாக்கி முதலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டது.

 

1970 களில் விஸ்வரூபம் எடுத்த பெட்ரோல் விலையேற்றப் பிரச்சனையைச் சமாளிக்க, டீசல் வாகனங்களை வடிவமைப்பதை தம் அடுத்த இலக்காக அமைத்து வெற்றி கண்டது.

 

1990 களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் உருவான புதிய நடுத்தரவர்க்க மக்களின் தேவைகளுக்கேற்ப, ஸ்கார்பியோ, சைலோ உள்ளிட்ட கார்களைத் தயாரித்து தம் வளர்ச்சியைத் தக்கவைத்துள்ளது.

 

இதற்கு மேல், இரு சக்கர வாகனங்கள், மென்பொருள் துறை, நிதி நிறுவனம் என பல துறைகளிலும் தம்மை விரிவுபடுத்திக்கொண்ட மஹிந்திரா குழுமத்தின் சுவாரசியமான வரலாற்றை பின்வரும் காணொளியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

Mahindra & Mohammad கதை தான்  M&M!!! Albin vs Keshav

 

மேற்குறிப்பிடப்பட்ட வழிகளால், வெற்றிக்கனியை ருசிப்பதோடு, அதை ஒரு பொன் முட்டையிடும் வாத்தைப் போல் எச்சரிக்கையுடன் கையாளும் அவசியத்தை உணரலாம்.

 

கடந்த காலங்களை விட, இன்றைய காலத்தின் வளர்ச்சியும், தேவைகளும் அதி வேகமாக மாறுவதாகவும், அதனால்தான், பலர் ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரமே இன்றி, அவசரத்திற்குள்ளாகி தவறிழைப்பதாகவும் பலர் குறைப்பட்டுக் கொள்வதுண்டு.

 

இத்தகைய மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள, நூல் கூறும் அதி சிறந்த இறுதி உத்தி ஒன்றை கடைசி விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,


இரா. அரவிந்த்

13 கருத்துகள்:

  1. வெற்றிபெற்ற அல்லது வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்ட ஒரு மனிதனின் மமதை ஆட்டத்தைப் பார்த்து சமீபத்தில் நொந்து போனவன் நான்.  அவனும் கூட இப்போது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான் என்று நினைக்கிறேன். ஆம், பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா எனும் வரிகளில் அர்த்தம் இருக்கிறது.  "எங்கு நிறுத்துவது என்று தெரிய வேண்டும்"  அது புகழ் போதையில் பலருக்கு தெரியாமல் போய்விடும் விஷயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. கசப்பான தோல்விகளை விட, இனிமையான வெற்றிகளைக் கையாளுவதில் பின்பற்ற
    வேண்டிய இன்றியமையாத வழிமுறைகள்..

    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஐய்யா.

      நீக்கு
  3. அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  4. ஆணவம் வெற்றிக்கு தடுப்பணை போன்றது.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. அருமையான விதி, அரவிந்த்! வெற்றியையும் தோல்வியையும் ஒரே போன்று பாவிக்கும் எண்ணம் வர வேண்டும். தலைக்கு எதுத்துக் கொள்ளக் கூடாது. வெற்றியை எடுத்துக் கொண்டால் ஆணவம், மமதை வந்தால் வீழ்ச்சி அடுத்து என்பதைச் சொல்லவே வேண்டாம் அது உறுதி!

    இது எல்லோருக்கும் பொருந்தும்....

    இந்த நூலில் முதலில் வந்தவற்றை விட கடைசியில் வருபவை எல்லாம் ரொம்பவே யதார்த்தமாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம். நூலின் கடைசி நான்கு விதிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் செம...ஜி! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....