அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ப்ரயாக்ராஜ் - ஷங்கர் விமான் மண்டப் - கச்சோடி சப்ஜி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
“SOMETIMES
WE’RE GONNA HAVE OUR BAD DAYS, BUT WE MUST CONTINUE TO WORK TO BE GREAT. KEEP
SMILING. IT LOOKS BEAUTIFUL ON YOU!” - DEMI LOVATO.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி எட்டு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள்
கீழே!
அறிமுகம் ; விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ; விதி நாற்பத்தி இரண்டு ; விதி நாற்பத்தி மூன்று ; விதி நாற்பத்தி நான்கு ; விதி நாற்பத்தி ஐந்து ; விதி நாற்பத்தி ஆறு ; விதி நாற்பத்தி ஏழு ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
நாற்பத்தி எட்டாம் விதி சொல்வது, "திறந்த மனதுடன் மாற்றங்களை ஏற்று, கற்றுக்
கொண்டு, அதற்கேற்ப செயலாற்ற எப்போதும் தயாராக இரு".
மூல நூலில், இதை "ASSUME
FORMLESSNESS" என்கிறார் எழுத்தாளர்.
கொள்கலனின் வடிவம், மற்றும் தட்பவெப்பச் சூழலுக்கு
ஏற்ப எப்படி தண்ணீர், தன் வடிவத்தையும், இயல்பையும் மாற்றிக்கொள்கிறதோ, அது போல,
எவர்கள் எல்லாம் சூழலின் தன்மை, மாற்றங்களைத் திறந்த மனதுடன் உணர்ந்து அதற்கு ஏற்ப
கற்றலைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல தங்களை மாற்றிக் கொள்கின்றனரோ
அவர்கள்தான் நீண்ட காலத்திற்கும் வலிமையானவராகத் திகழ்வார்கள்.
தற்காலத்தில், செயற்கை நுண்ணறிவால் மனிதர்களால் தாங்க
இயலாத அளவு மாற்றங்கள் ஏற்பட்டு, பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்
குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், அதிகாலையில் மக்களை
சரியான நேரத்தில் எழுப்புதல் என்னும் வேலைவாய்ப்பும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்,
தொலைபேசி இணைப்பை உரியவர் எண்ணுக்கு மாற்றி விடும் பணி வாய்ப்பும் இருந்ததை பலர்
அறிந்திருக்க மாட்டோம்.
அக்காலத்திய மக்களால், இன்றைய வேலைச் சந்தையின்
எண்ணற்ற வாய்ப்புகளையும், சவால்களையும் குறித்துக் கற்பனை கூட செய்திருக்க முடியாது.
எக்காலத்திலும், மனிதர்கள் உருவாக்கும் புதுப்புது
எந்திரங்களும், தொழில்நுட்பங்களும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நன்மைக்காகவே என்பதை
அனைவரும் ஒப்புக்கொள்வோம்.
அந்நிலையில், அவற்றால் நம் வாழ்வாதாரம் இதுவரை
உயர்ந்துகொண்டுதான் வருகிறது என்பதையும் கண்கூடாகக் காணும் நாம், அவற்றால்
உருவாகும் மாற்றங்கள் குறித்து அஞ்சுவதும், இருண்ட ஒரு எதிர்காலத்தைக் கற்பனை
செய்வதும் தவறான புரிதலாலேயே ஆகும்.
எனவே, மாற்றங்களை நம் முன்னேற்றத்திற்காகக் கையாளும்
அடிப்படை வழிகளை ஒரு சிறந்த ஆளுமையின் வாழ்வனுபவங்கள் மூலம் புரிந்து கொள்ளலாமா?
1. குழந்தைக்கு இணையான ஆர்வத்தைத் தக்கவைத்தல்;
'சிலர் இருபத்தைந்து வயதிலேயே இறந்துவிடுகின்றனர்!
அவர்களை அடக்கம் செய்யத்தான் எழுபத்தைந்து வயது ஆகிறது;' என்றார் சுதந்திர அமெரிக்காவைக் கட்டமைத்தவர்களில்
ஒருவரான திரு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்கள்.
கல்லூரியோடு கற்றல் நின்று விடுவதாகவும்,
பணிச்சூழலுக்கும் கற்றலுக்கும் எந்த தொடர்பும் இல்லாததாகவும், ஓய்வு வயது என்ற
ஒன்று இருப்பதாகவும் எண்ணுபவர்களை நோக்கிச் சொல்லப்பட்டதே இக்கூற்று.
இப்படிப்பட்டவர்களுக்குத்தான், வாழ்வே
கசப்பானதாகவும், உலகே தீயவர்களால் நிறைந்திருப்பதாகவும், எந்த மாற்றத்தைக்
கண்டாலும் அச்சமூட்டுவதாகவும் தோன்றுவதுண்டு.
அதற்கு மாறாகக், குழந்தைகளுக்கு இணையாக, எந்த ஒன்றைப்
பற்றியும் துருவித் துருவி கேள்வி கேட்டு கற்கும் ஆர்வத்தை வாழ்நாள் முழுதும் கை
கொள்பவரை, ஞானம் எப்போதும் கைவிடாமல், இளமையுடனும் உத்வேகமுடனும் வைத்திருக்கும்.
சிலரால் அவர் இழிவுபடுத்தப்பட்டாலும், அவருக்கான
சரியான குருவை பல வடிவங்களில் அடைந்து விடுவதும், அவர்கள் மூலம், காலத்திற்கேற்ப
சரியான இடத்தில் பொருந்திக் கொள்ளும் பக்குவம் பெறுதலும் நிச்சயம் நடந்தே தீரும்.
அப்படிப்பட்ட மனநிலையை வாழ்நாள் முழுவதும் பராமரித்தவர்தான்,
முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகருமான அமரர் திரு அப்துல் கலாம்
அவர்கள்.
தமிழ் வழி கற்ற அவரின் ஆங்கில தாகத்திற்காகத் திரு கனகசுந்தரம் அவர்கள், அறிவியல் தாகத்திற்காகத்
திரு சிதம்பரம் சுப்பிரமணியம் அவர்கள், பணிக்காலத்தில் வழிகாட்டிய திரு விக்ரம்
சாராபாய் அவர்கள் என வாழ்நாள் முழுதும் அவருக்கான ஆசிரியர்களுக்குப் பஞ்சமே
ஏற்பட்டதில்லை.
"தாம் கற்றவற்றை சரியாகப் புரிந்து கொண்டவரால்,
ஒரு ஐந்து வயது குழந்தைக்கும் அக்கருத்துகளைத் தெளிவாகப் புரிய வைத்துவிட
முடியும்" என்றார் அமெரிக்க இயற்பியல் ஆசிரியர்,
திரு ரிச்சர்ட் ஃபெய்ன்மன் அவர்கள்.
அதற்கேற்ப, தாம் கற்றவற்றை மாணவர்களிடம் எளிமையாகக்
கொண்டு சேர்த்ததோடு, மாணவர்களிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை வரவேற்றவர்தான்
திரு அப்துல்கலாம் அவர்கள்.
2. கனவுகளிலிருந்து பிறந்த இலட்சியங்களை விடா
முயர்ச்சியுடன் பின்தொடர்தல்;
"ஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது
ஆசை, பலமுறை வந்தால் அது லட்சியம்"
என்பது திரு அப்துல் கலாம் அவர்களின் பிரபலமான கூற்று.
தமது மாணவ பருவத்தில், வறுமை காரணமாகச்
செய்தித்தாள்களை விநியோகித்த போது, அவற்றில் வந்த (Spitfire Fighter) ஸ்பிட்ஃபயர்
ஃபைட்டர் விமானம் குறித்த தகவல்களால் விமானியாகும் கனவைப் பெற்றார்.
கடும் முயற்சிக்குப் பிறகு, விமானிக்கான நேர்காணலில்
தோல்வியடைந்தபோதும், தமக்கான நோக்கம் அதையும் விடப் பெரியது என உணர்ந்து, நாட்டின்
பாதுகாப்புத் துறைக்காக அளப்பரிய பங்களிப்பை அளித்தார்.
அதுபோல, தாம் திட்டமிட்டது நடக்காத காலங்களிலும், தம்
அடிப்படை ஆர்வத்தை உணர்ந்து தொடர்ந்து அதை நோக்கிய பயிற்சியில் ஈடுபடுபவரை,
எவராலும் கற்பனை செய்ய இயலாத உயர்ந்த நோக்கத்திற்காக, இவ்வுலகம் எப்போது
வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்.
மேலும், நம் ஒவ்வொரு உடல் உறுப்பும்
செயல்படுவதற்காகவே படைக்கப்பட்டது என்பதை உணர்ந்தவர் மட்டுமே, தம் முழு
வாழ்நாளையும், நெகிழ்வோடும் உயிர்ப்போடும் நடத்திச் செல்வார்.
அதற்கேற்ப, 'வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்து கொண்டே மரணிக்கிறவன்
ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்து விடவேண்டும்' என்ற தன் கூற்றை, அனைவரும் வியக்கும் வண்ணம்,
செயலிலும் நிரூபித்தவர் தான் திரு கலாம் அவர்கள்.
இலட்சியங்களில் சில, வாழ்நாளில் நிறைவேறாமல்
போனாலும், அவற்றை நோக்கிய பயணத்தில் கிடைக்கும் படிப்பினைகளால், வாழ்விற்கான
அர்த்தமும், நம் திறமைகளின் எல்லையை விரிவாக்கும் புது வழிகளும் புலப்படுவதோடு,
அடுத்த தலைமுறைக்கான கலங்கரை விளக்காக நாம் மாறுவதும் உறுதி.
நாடாளுமன்றத்தை வெறும் அரசியல் ஆதாயத்திற்காகப்
பயன்படுத்துவதைத் தவிர்த்து, தேச நன்மைக்காக விவாதித்து திட்டமிடும் ஒரு இடமாக
மாற்றுவதே, திரு கலாம் அவர்களின் நிறைவேறாத கனவுகளில் ஒன்று.
அதைச் சாத்தியப்படுத்தும் வழி தமக்கு தெரியாத
போதிலும், மாணவர்களிடம் அதற்கான தரமான யோசனைகள் கிடைக்கும் என்னும் அசைக்க முடியாத
நம்பிக்கையை தன் இறுதி ஷில்லாங்
பயணத்தில் ஒரு கேள்விப் படிவமாக விதைத்துச் சென்றவரே திரு கலாம் அவர்கள்.
3. பிறர் கண்களுக்குப் புலப்படாதவராகத் திகழ்தல்;
சதுரங்கம் பலகையில், இராஜா முக்கியமான காயாக
மதிக்கப்பட்டாலும், இராணிதான் வலிமை மிக்கவராக இருப்பார்.
அது போல, தம்மை முன்னிலைப்படுத்தாமல், தமக்கு
உதவியவர்களை வெளிப்படையாக நினைவு கூர்ந்து முன்னிலைப் படுத்துபவர்கள், நீண்டகால அளவில் பல உற்ற
நண்பர்களைப் பெற்று, எத்தகைய மாற்றத்தையும் சமாளிப்பவர்களாகத் திகழ்வதை எங்கும்
காணலாம்.
திரு கலாம் அவர்களின் எந்த பேச்சையும், அவரின் எந்த
நூலையும் எடுத்துக் கொண்டாலும், அவரின் நன்றி மறவா பண்பு வெளிப்படுவதைக் காணலாம்.
இது போல, இந்நூலின் அனைத்து விதிகளுக்கும் உதாரணமாக
இவர் வாழ்வின் ஏதாவது ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்ட இயலும்.
எனவே, மாற்றங்களை எதிர்கொண்டு, அவற்றிற்கேற்ப நம்மை
தொடர்ச்சியாக மீளுருவாக்கம் செய்வதிலேயே, வாழ்வின் சுவாரசியமும், வலிமைக்கான
சாராம்சமும் ஒளிந்துள்ளதாக இந்நூல் உணர்த்துவதைப் புரிந்துகொள்ளலாம்.
மற்ற விதிகள் சில சமயங்களில் மறந்து போனாலும்,
இவ்விதி ஒன்றின் சாரத்தை மனதில் கொண்டாலே போதுமானது என நான் சொல்வேன்.
“சுத்தியலைத் திறமையாகப் பயன்படுத்தும் ஒருவன்,
எல்லாமே ஆணிதான் என்று நினைக்கிறான்.”
என்றார் மனித வளத்துறை அறிஞரான திரு ஆபிரகாம் மாஸ்லோ அவர்கள்.
இக்கூற்றிற்கேற்ப, நம் முன் தோன்றும் எத்தகைய
சவாலும், நம் மதிப்பை உலகோர் முன் உயர்த்தும் நோக்கத்துடனே
படைக்கப்பட்டிருப்பதாகக் கருதி, வாழ்வை துணிச்சலுடனும், ஆர்வத்துடனும் சுவைத்து
மகிழ்வோம்.
இத்தொடரை எழுதும் யோசனையை ஆரம்பத்திலிருந்தே
ஊக்குவித்தும், சரியான திருத்தங்களைச் செய்தும் எனக்கு உறுதுணையாக நின்ற திருமதி
கீதா அவர்கள், தவம் வார இதழின் நிறுவனரான திருமதி அனிதா ராஜேஷ் அவர்கள்,
இத்தளத்தில் எழுதும் வாய்ப்பை அளித்த திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடரின் ஒவ்வொரு விதியையும், தம் பொன்னான நேரத்தை
ஒதுக்கியும், படித்தும், மேலான ஆலோசனைகளைப் பின்னூட்டமாக அளித்த திரு ஸ்ரீராம்
அவர்கள், திரு கில்லர்ஜி அவர்கள், திருமதி கோமதி அரசு அவர்கள், திரு திண்டுக்கல்
தனபாலன் அவர்கள், திரு ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா அவர்கள், திருமதி நிர்மலா
அவர்கள், திரு மதுரைத் தமிழன் அவர்கள், திருமதி மாதேவி, அவர்கள், திரு ஈஸ்வரன்
அவர்கள் மற்றும் நான் மறந்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
இவர்களோடு, என் எழுத்துப் பணியை ஆரம்பத்திலிருந்தே
ஊக்குவித்துக் கொண்டிருக்கும் நண்பர்களான திருப்பதி மஹேஷ், திருமதி ஜீவா அவர்கள்,
திரு சரவணன் அவர்கள், திரு புருஷோத்தமன் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அனைவரின் ஆசிகளோடு, அடுத்த ஒரு சிறந்த நூல் குறித்த
விவாதத்தோடு விரைவில் சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் இத்தொடரை நிறைவு
செய்கிறேன்.
முற்றும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
எனக்குத் தெரிந்து இது உங்கள் முதல் பெரிய முயற்சி. வெற்றிகரமாக, மிக வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். மென்மேலும் இது தொடரட்டும். அருமையான பணி. இன்றைய விதியும் விளக்கங்களும் அருமை. நிறைவு நிறைவாய் இருந்தது.
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துகளுக்கும், ஆழ்ந்து படித்து பின்னூட்டங்கள் அளித்ததற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
நீக்குதிருப்திகரமாக தங்களது விமர்சனத் தொடரை முடித்து விட்டீர்கள் வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குகசடறக் கற்க...
பதிலளிநீக்குநல்லதொரு தொடர்... பாராட்டுகள்...
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்குகசடறக் கற்க...
பதிலளிநீக்குநல்லதொரு தொடர்... பாராட்டுகள்...
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்குஅருமையான தொடர்
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.
நீக்குஅருமையான தொடர் . நிறைய தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவாழ்வில் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
அனுபவம் தினம் தினம் கிடைக்கிறது.
உங்கள் வாசிப்பு அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். வாசிப்பனுபவம் தொடரட்டும்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோமதியரசு மேடம். அனைவருக்கும் பயன்தரவல்ல மேலும் பல நல்ல நூல்களை வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறேன். வாசிப்பணுபவம் நிச்சயம் தொடரும்.
நீக்குசில தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் பதிவினை தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. இன்றுதான் படித்து முடித்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் 💐
தங்கள் தொடரின் வழியாக புத்தகத்தை படித்து முடித்த திருப்தி ஏற்பட்டது. நன்றி.
மீண்டும் இதுபோன்ற சிறந்த தொடரினை எழுத வாழ்த்துக்கள் 💐💐💐💐
தங்கள் பொருமையான வாசிப்பிற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரங்கராஜன் மேடம்.
நீக்குநல்லதொரு நூல் குறித்த விவாதத்தோடு விரைவில் மீண்டும் சந்திப்போம்.