கடந்த
ஃபிப்ரவரி மாதத்தில் சில நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்திருந்தபோது எனது பெற்றோர்கள்
தந்தை வழி, தாய் வழி குலதெய்வம் கோவில்களுக்குச் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள்.
குலதெய்வம் கோவிலுக்குப் போகும்போது வீட்டில் உள்ள அனைவரும் செல்ல வேண்டுமெனவும்
அப்பா சொல்வார். ஒவ்வொரு முறை சொல்லும்போதும், குழந்தைகளுக்கு தேர்வு, பெண்களுக்கு
வர முடியாத சூழல் என தள்ளிப் போய்க்கொண்டிருக்கும். இம்முறை எல்லோரையும்
எதிர்பார்க்காது, நானும் பெற்றோர்களும், எனது பெரியம்மாவும் [அம்மாவின் அக்கா]
இரண்டே நாட்களில் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து பயணம் செய்தோம்.
முதலில்
சென்றது எங்கள் குலதெய்வமான அபிராமேஸ்வரர் கோவிலுக்கு. இக்கோவில் விழுப்புரம்
அருகில் இருக்கும் அய்யூர் அகரம் எனும் கிராமத்தில் இருக்கிறது. இக்கோவில் பற்றி
பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன். இன்று
பார்க்கப்போவது நாங்கள் சென்ற எனது அம்மாவின் கிராமத்தில் இருக்கும் குலதெய்வ
கோவில். பன்ரூட்டியிலிருந்து புதுப்பேட்டை வழியாகச் செல்லும் போது இருக்கும் ஒரு
சிறிய கிராமம் ஒறையூர்.
ஒறையூர்
கிராமத்தில் தான் அம்மா வழி தாத்தாவின் வீடு இருந்தது. ஒரு காலத்தில் அந்த ஊரில் இருந்த பல விளைநிலங்கள்
எங்கள் தாத்தாவுடையதாக இருந்தது. கிராமத்தில் பெரிய தனக்காரர் என்று செல்வாக்கு. கிராமத்து
பாதையில் பயணிக்கும்போது பசுமையான நெல்வயல்களும், கொய்யா தோப்புகளும் நம்மை
மகிழ்ச்சியோடு வரவேற்றன. பெரியம்மாவும், அம்மாவும் தங்களது வயல்களாக இருந்த
இடங்களை காண்பித்துக் கொண்டே வந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சொந்த
ஊருக்கு வருவதில் அவர்களுக்குள் ஒரு குதூகலம்.
அவர்கள்
இருந்த வீடுகள் இருக்கும் தெருவிற்குள் எங்கள் மகிழுந்து சென்று நின்றதும்,
கிராமத்து மக்கள் அனைவரும் பார்த்தபடியே எழுந்து நின்றனர். ”யாரு வீடு நீங்க?” என்று கேட்க ஆரம்பித்தனர். இந்த வீடு எனத் தெரிந்ததும், அவர்கள்
அனைவருக்குமே மகிழ்ச்சி. ஒரு பெண்மணி,
கொஞ்சம் வயதானவர் அம்மாவையும், பெரியம்மாவையும் பார்த்த உடனேயே கைகளைப் பிடித்துக்
கொண்டு பழைய நினைவுகளுக்குச் சென்று விட்டார். அவர் அம்மா-பெரியம்மாவின் பால்ய கால
நண்பரின் மனைவி - கன்னியம்மா.
முதலில் கோவிலுக்குச் சென்று வருகிறோம் பிறகு இங்கே
மீண்டும் வருகிறோம் என்று சொல்லி, பச்சையம்மா எனும் கிராமத்து தேவதையைக் காணச்
சென்றோம். அலைபேசி மூலம் பூசாரிக்கு சொல்லி இருந்ததால் அபிஷேகத்திற்கு வேண்டிய
ஏற்பாடுகள் செய்து, கிராமத்து தேவதைகளுக்கான வஸ்திரங்களும் வாங்கி தயாராக
இருந்தார். எல்லா கோவில்கள் போல இல்லாது பச்சையம்மனின் முன்னால் அமர்ந்து கொண்டு
பூஜைகளைப் பார்க்க முடியும்.
பூஜைகளை முடித்து வீடு திரும்பினால் கன்னியம்மா
எங்களுக்காக வீட்டுத் தோட்த்தில் இருந்து நாட்டு அவரைக்காய், முருங்கைக்காய் என்று
நிறைய பறித்து வைத்திருந்தார் – கார் டிக்கி நிறைந்து விட்டது என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்! – “இது எல்லாமே உங்கள் வீட்டில் விளைந்தது – உங்களுக்குத் தான்
முதல் உரிமை!” என்று சொல்லி நிறைய பொருட்களைத் தந்து விட்டார். பெரியம்மா அவருக்கு கொஞ்சம் காசு தர, வேண்டவே
வேண்டாம் என மறுத்து விட்டார்.
பச்சையம்மா கோவில் பக்கத்தில் இருந்த ஒரு விளை
நிலத்தில் நிறைய மல்லாக்கொட்டை [வேர்க்கடலை] பயிர்கள் இருக்க, முதல் முறையாக
அந்தச் செடிகளை நான் பார்த்தேன். “பச்சையா
திங்கறீங்களா? புடிங்கித் தாரேன்!” என்று சொன்ன அங்கிருந்த பெண்ணின் மனது நகரத்து
மக்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான்.
பக்கத்தில் கொய்யாத் தோப்பு இருக்க, அங்கிருந்து விழுப்புரம், கடலூர் போன்ற
சிறுநகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.
தோப்பிலிருந்து கொய்யாக்காய் கொடுக்க அவர்கள் தயார் என்றாலும் வாங்கிக்
கொள்ள எங்களுக்குத் தான் வயிற்றில் இடமில்லை!
வீட்டினுள் சென்று தாங்கள் வளர்ந்த இடங்களை பார்த்த
அம்மாவிற்கும் பெரியம்மாவிற்கும் தங்களை அறியாமலேயே கண்களில் கண்ணீர். அந்தக் கால மரத்தூண்களும், வீட்டின் சில
இடங்களும் அப்படியே இருக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய தரையில் பதித்த இயந்திரம்
இன்னமும் அப்படியே இருக்கிறது!
நினைவுகளில் மூழ்கிய அம்மாவிற்கும், பெரியம்மாவிற்கும் அந்த வீட்டினை
விட்டு வெளியே வர மனமே இல்லை. நிறைய
கதைகளைச் சொல்லிக் கொண்டே அங்கிருந்து பயணத்தினை துவக்கினார்கள்.
பல வருடங்களுக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச்
செல்வது சில நல்ல நினைவுகளை மீட்டெடுத்தாலும் இழந்த பலவற்றையும் நினைவுக்குக்
கொண்டுவந்த மனதை கஷ்டப்படுத்துகிறது.
அம்மாவிற்கோ, பெரியம்மாவிற்கோ அந்த ஊரில் இப்போது காணி நிலம் கூட
இல்லை! சொந்த வீடு என்று சொல்லிக்கொண்டு உரிமையோடு
உள்ளே நுழைய அனுமதியும் இல்லை.
இன்னமும் கன்னியம்மா போன்ற வெள்ளை மனது கொண்ட
மனிதர்களும் இந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நகரங்களை
நோக்கி நகர்ந்து விட்ட நம் போன்ற சிலர் அனைத்தையும் இழந்து விட்டோமோ என்று கூட
தோன்றியது.
பணி ஓய்வு கிடைத்த பிறகாவது இம்மாதிரி ஏதோ ஒரு
கிராமத்தில் போய் நிம்மதியாக, எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் கழிக்க வேண்டும்
என்ற நினைப்பிருக்கிறது. என்ன நடக்குமோ?
யாரறிவார்!
மீண்டும் சந்திப்போம்.....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
பதிவின் முகப்பில் மாற்றப்பட்ட உங்களது புகைப்படம் அருமை. தென்னாற்காடு மாவட்டத்திற்கே உரிய வட்டார வழக்கு சொல்லான ‘மல்லாக்கொட்டை’ பற்றி படித்தபோது பழைய நினைவுகள் மனதில் வந்து போயின.(நானும் அந்த மாவட்டத்தை சேர்ந்தவன்) உங்களது சிற்றூர் பயணம் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஓ நீங்களும் தென்னாற்காடு மாவட்டம் தானா? மகிழ்ச்சி ஐயா.
நீங்கள் பிறந்து வளர்ந்த நெய்வேலிக்கு அருகில் உள்ள விருத்தாசலத்தை அடுத்துள்ள சிற்றூரில் பிறந்து விருத்தாசலத்தில் படித்தவன்.
நீக்குஓ.... விருத்தாசலம் வழியே நிறைய முறை சென்றதுண்டு. கோவிலுக்கு ஒரே ஒரு முறை சென்ற நினைவு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
கண்டிப்பாக தங்களின் இந்த எண்ணம் ஈடேறும் வெங்கட் சார்.
பதிலளிநீக்கு"//பச்சையா திங்கறீங்களா? புடிங்கித் தாரேன்!” என்று சொன்ன அங்கிருந்த பெண்ணின் மனது நகரத்து மக்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான்.//"
- உண்மை தான் ஐயா, கிராமத்தில் இருக்கும் அந்த மனிதத்தன்மை, நகரங்களில் வெகு சிலரிடம் மட்டுமே இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குதங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.
நீக்குபிழைப்புக்காக வாழ்க்கைக்காக பிறந்த ஊரைப் பிரிந்து வந்த அனைவரும் எத்தனை காலம் கழிந்து அம்மண்ணை மிதித்தாலும் கிடைக்கும் பரவசம் சொல்லில் அடங்காது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதெல்லாம் வாழ்தலின் கட்டாயத்துக்கான மனச் சமாதானம் தான் சகோ. அவரவர்க்கு அவரவர் மண்ணும் மக்களும் உசத்தி தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....
நீக்கு'மல்லாக் கொட்டை' என்ற வட்டார வழக்கு எத்தனை ஊர் உலகம் சுற்றியும் மறக்கவில்லையே தங்களுக்கு ...! பிறந்த ஊரும் மக்களும் மொழியும் இரத்தத்தில் கலந்த ஒன்றல்லவா!!
பதிலளிநீக்குஅம்மா அவங்க பிறந்த ஊர், சாமியெல்லாம் பார்த்ததும் சின்ன வயசு நினைவெல்லாம் வெளியானதும் கூடவே உடன்பிறந்தவரும் இருந்ததும் நெகிழ்வூட்டுகின்றன.
மறக்க முடியுமா என்ன?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்...
இனிய பதிவு..
பதிலளிநீக்கு//பச்சையா திங்கறீங்களா? புடிங்கித் தாரேன்!..//
மண்வாசம் வீசும் வார்த்தைகள்..
//அப்படிச் சொன்ன பெண்ணின் மனது நகரத்து மக்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான்.//
சந்தேகம் தான்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குகிராமத்து வாழ்க்கையும் , வெள்ளந்தி மனிதர்களும் அங்கு வாழும் ஆசையைத் தூண்டுகிறார்கள்... இருந்தாலும் அதற்கான சந்தர்பங்களை நாம் ஏற்படுத்திக் கொள்வதேயில்லை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குஎங்க ஊருக்குப் பக்கத்து ஊருக்குப் போயிருக்கீங்க. புதுப்பேட்டை _ ஏறக்குறைய பத்து வருடங்கள் வேலைக்காக இந்த ஊருக்குத்தான் போய்வந்தேன். பதிவைப் பார்த்ததும் சந்தோஷம். நினைத்தவுடன் என்னால் போக முடியலையேன்னு பொறாமையாகூட இருக்கு.
பதிலளிநீக்கு"அம்மாவிற்கோ, பெரியம்மாவிற்கோ அந்த ஊரில் இப்போது காணி நிலம் கூட இல்லை! சொந்த வீடு என்று சொல்லிக்கொண்டு உரிமையோடு உள்ளே நுழைய அனுமதியும் இல்லை" _____ இப்படி ஆகிவிடக் கூடாதே என்றுதான் சட்டுபுட்டுனு ஊரைப் பார்த்து நடையைக்கட்ட நினைக்கிறேன். கடவுள் என்ன நினைக்கிறாரோ !
இப்போது தென்னாற்காடு இல்லை. எப்போதோ கடலூர் மாவட்டமாகிவிட்டது.
கடலூர் மாவட்டம் என்று பல வருடங்களுக்கு முன்னரே ஆனாலும், எனக்கென்னவோ தென்னாற்காடு என்று சொல்வது தான் வழக்கம்! :)
நீக்குஆமாம் உங்கள் ஊரும் பன்ரூட்டி பக்கம் ஆயிற்றே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
சின்ன வயசில் சுற்றிய இடங்களை பார்ப்பதே பரவசம் தான். அம்மாவின் ஆசை நிறைவேற்றி வைப்பது அதை விட மிக பெரிய பரவசம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குஅருமையான மலரும் நினைவுகளை தந்த ஊர் பயணம் அருமை.
பதிலளிநீக்குஅன்பான ஊர்மக்களை கண்டு வந்த மகிழ்ச்சி அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும். நிறைய நாள் அது அளிக்கும் தெம்பு. பச்சை அம்மாவும், கன்னியம்மாவும் ஒன்று தான் அன்பு செலுத்துவதில்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குபிறந்த பொன்னாடு - இனிய பகிர்வுகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குநான் சுமார் பத்துவயதில் ஓராண்டுகாலம் என் பாட்டியுடன் இருந்த கிராமத்துக்கும் எங்கள்(இப்போது எங்களுடையதல்ல) வீட்டுக்கும் என் வாரிசுகளை அழைத்துச் சென்றதும் வேரைக் காட்ட ஊரைக் காட்ட தேரைக் காட்ட என்று பதிவு எழுதி இருந்ததும் நினைவுக்கு வருகிறது. ஓராண்டுக்கும் குறைவாய் இருந்த எனக்கே அப்படி என்றால் அங்கே பிறந்து வளர்ந்து இழந்தவர்கள் நிலை எப்படி இருக்கும்.?
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டெடுத்தது போலும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குகிராமம் என்றாலே ஒருவகை சுகம்தான்! அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குகாணி நிலம் இல்லாவிட்டாலும் பூமித்தாய் அம்மாவின் காலடிகளை அறிந்திருப்பாள். கன்னியம்மாவின் வடிவில் வந்து அன்பு பொழிந்திருக்கிறாள். மல்லாக் கொட்டையாக மனசில் மலர்ந்திருக்கிறாள். மதுரை சென்ற போதும் பாட்டிவீட்டைப் பார்க்கும் போது தாத்தாவின் ஈஸிச்சேர் இல்லை. தாத்தா இல்லை. பாட்டியின் கீரைக் குழம்பில்லை.இருந்தும் அவர்கள் செலுத்திய அன்பு நெகிழ வைத்தது. அருமையான பதிவு வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குதாத்தாவின் ஈஸிச்சேர் இல்லை. தாத்தா இல்லை. பாட்டியின் கீரைக் குழம்பில்லை.இருந்தும் அவர்கள் செலுத்திய அன்பு...//
நீக்குபதிவினால் மேலெழுந்த ஊர்ப் பாசத்தை மேலும் நெகிழ்த்திய வார்த்தைகள்!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குவலைப்பக்கத்தைத் திறந்ததுமே க்ளோசப்பில் எட்டிப் பார்க்கிறீர்களே!
பதிலளிநீக்குஎங்கள் குலதெய்வத்தைப் பார்க்கப்போய் நீண்ட வருடங்கள் ஆகி விட்டன!
அடடா உங்களை பயமுறுத்திட்டேன் போல! மாற்ற வேண்டும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
“பச்சையா திங்கறீங்களா? புடிங்கித் தாரேன்!” என்று சொன்ன அங்கிருந்த பெண்ணின் மனது நகரத்து மக்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான்....// நிச்சய்மாக இது உண்மையே!
பதிலளிநீக்குஇது போன்ற வெள்ளந்தி மனிதர்கள் இன்னும் இருக்கும் கிராமத்தில் சென்று செட்டில் ஆவது ஆஹா அருமை..
உங்கள் அனுபவம் மிகவும் அருமை...
படம் மாற்றி இருப்பது நன்றாக இருக்கின்றது....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு'என்ன ரொம்ப நாளா உங்கள இந்தப்பக்கம் காணோம்னு நீங்க கேக்கறாப்பல இருக்கு உங்கள் புகைப்படம்! கோவிச்சுக்காதீங்க, இனி ரெகுலரா வரேன்!
பதிலளிநீக்குநம் சொந்த ஊருக்குப் போனாலே தனி சுகம் தான். அந்த சுகத்தை நீங்கள் உங்கள் அம்மாவிற்கும், பெரியம்மாவிற்கும் கொடுத்திருக்கிறீர்கள். இதைவிடப் பெரிய பரிசு அவர்களுக்கு இனி ஒன்றும் வேண்டாம்!
அடடா... இந்தப் படம் எல்லோரையும் பயமுறுத்தும்படி இருக்கு போல! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
அருமையாண நினைவலைகள் நண்பரே..
பதிலளிநீக்குபணி ஓய்வு கிடைத்த பிறகாவது இம்மாதிரி ஏதோ ஒரு கிராமத்தில் போய் நிம்மதியாக, எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் கழிக்க வேண்டும் என்ற நினைப்பிருக்கிறது.
எனது முடிவே இதுதான் நண்பரே....
உங்களுடையது நல்ல முடிவு கில்லர்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிராமத்தில் ஓய்வுக்காலம் என்று நினைத்தால் மகிழ்ச்சி தான். நீங்கள் விரும்புவது போல் அமைய என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅருமையான அனுபவப் பகிர்வு...
பதிலளிநீக்குபெண்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை எப்படி மிஸ் பண்றாங்க என்பதை உணர்த்திய பதிவு ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குத ம ஆறு
பதிலளிநீக்குதமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி மது.
நீக்குபசுமையான நினைவுகள்.....
பதிலளிநீக்குபசுமரத்தாணி தான் நாகராஜ் ஜி.
த.ம. 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குEvery blog ur adding a sentimental touch ...nice..nice
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி நண்பரே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
என்ன நானும் தென்னாற்காடு மாவட்டமாக இருந்த வளவனூர்தான். என்னுடைய பதிவும் பார்த்திருப்பீர்கள். குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன். சும்மா,கடாசறது,மல்லாட்டை இன்னும் எவ்வளவோ பதங்கள் தென்னாற்காடுடையது அல்லவா.பழைய மனிதர்கள் பாசமுள்ளவர்கள். பெருமையாக இருக்கு தென்னாற்காடு மாவட்ட உறவு. அன்புடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரை கண்டதால் மீண்டும் எனது பதிவினை படித்து அந்த நினைவுகளில் மூழ்க முடிந்தது அம்மா.... நம்ம ஊர் பதங்கள்.... உண்மை தான் எத்தனை நாளானாலும் மறக்க முடியாதவை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....