செவ்வாய், 27 மார்ச், 2018

சிங்க நடை போட்டு – கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவேனா




மூன்று வாரங்களாக புதிய பழக்கம் – அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டு, அருகில் இருக்கும் தால்கட்டோரா பூங்காவிற்குச் சென்று பூங்காவினை ஒரு சுற்று சுற்றி வரத் தொடங்கி இருக்கிறேன். இது திடீர் பழக்கம் – விழா ஒன்றில் எடுத்த முடிவு – அடுத்த நாள் முதல் பூங்காவினைச் சுற்றி வர வேண்டும்! அடுத்த நாள் முதல் ஒரு நாளும் விடாமல் காலை ஐந்தரை மணிக்கு மேல் புறப்பட்டு ஏழு மணிக்குள் வீட்டுக்குத் திரும்பி, சமையல் முடித்து அலுவலகம் - தொடர்ந்து இப்படி நடந்து கொண்டிருக்கிறேன். உடன் வரும் நண்பர் சில நாட்கள் வருவதில்லை என்றாலும், நான் போவதை நிறுத்தவில்லை.  எத்தனை நாட்கள் தொடரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் காலையில் இப்படி பூங்காவில் நடப்பது புத்துணர்வு தருவதாக இருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.




பொதுவாக தலைநகர வாசிகள் கொஞ்சம் சோம்பேறிகள் என்பது என்னுடைய மாற்ற முடியாத நம்பிக்கை. கடைகள் கூட காலையில் திறப்பதில்லை. பொறுமையாக எழுந்து பொறுமையாகவே கடைகளை திறப்பார்கள். அலுவலகம் செல்பவர்கள் வேறு வழியின்றி சீக்கிரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் பூங்காவிற்குச் சென்று பார்க்கும் போதுதான் தலைநகரிலும் அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் சிலர் உண்டு என்பது தெரிகிறது. பெரிய பூங்கா, நிறைய மரங்கள், பூத்துக் குலுங்கும் செடிகள், சற்றே குளிர்ந்த காற்று, பறவைகளின் பரவசமூட்டும் குரல்கள் என ரம்மியமான காலைப்பொழுது. ஒவ்வொரு நாளும் இப்படி காலை நேரத்தில் பூங்காவில் நடப்பது மிகவும் புத்துணர்வு தருகிறது. நாள் முழுவதுமே அந்த புத்துணர்வு நீடிக்கிறது. தொடர்ந்து நான்காவது வாரமாக, அதுவும், கடந்த நான்கு நாட்களாகவே தனியாகத் தான் சென்று வருகிறேன்.

பூங்காவில் பார்க்கும் நபர்கள் அனைவரும் "ஹரி ஓம்" எனச் சொல்லி ஒருவரை ஒருவர் வணங்குகிறார்கள் – தெரிந்தவர், தெரியாதவர் என யாராக இருந்தாலும் சரி – இந்த "ஹரி ஓம்" முழக்கம் உண்டு. ராஜஸ்தான், ஹரியானா பகுதிகளில் இப்படி பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் சொல்வது வழக்கம் உண்டு – "ராம் ராம் ஜி!" "ராம் ராம் சே!" எனச் சொல்வது பார்த்து நானும் அங்கே செல்லும் நாட்களில் இப்படி தெரிந்தவர் தெரியாதவர் என அனைவருக்கும் வணக்கம் சொல்வதுண்டு. தலைநகர் வாசிகள் இந்தப் பழக்கத்தினை மறந்து விட்டார்கள். பூங்காவில் இப்படி பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் சொல்வதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இந்தப் பழக்கம் நம் நாட்டிலேயே இருந்திருக்கிறது என்றாலும், வெளிநாட்டவர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று தான் உதாரணம் காட்டுகின்ற பலர் இங்கே உண்டு.

போலவே இன்னுமொரு பழக்கமும் உண்டு. வீட்டிலிருந்து வரும்போதே, இரண்டு பைகளில் தானியங்கள் கொண்டு வருவார்கள். கூடவே தண்ணீர் குடுவைகள். பூங்காவில் இருக்கும் பறவைகள் அனைத்திற்கும் தானியங்கள் இரைத்து, மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். சிலர் தானியங்களுக்கு பதிலாக கோதுமை மாவு கொண்டு வந்து மரங்களின் அடியில் தூவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எறும்புகளுக்கு உணவாக இந்த கோதுமை மாவு போடுவதும் இங்கே வழக்கம் – நம் ஊரில் அரிசி மாவில் கோலம் போடுவது போல, இங்கே கோலம் போடும் வழக்கம் இல்லை என்பதால், நேரடியாக கோதுமை மாவு போடும் பழக்கம். நல்ல விஷயம் தானே.

ஹாஸ்ய யோகா என்ற பெயரில் சத்தமாகச் சிரிப்பவர்கள், உடற்பயிற்சி என்ற பெயரில் கை-கால் அசைப்பவர்கள், ஓடுவது போல நடப்பவர்கள், பாட்டுக் கேட்டுக்கொண்டே அல்லது அலைபேசியில் பேசிக்கொண்டே நடப்பவர்கள் என பல ரகமான மனிதர்களை இங்கே பார்க்க முடியும். ஒரு நாள் பூங்கா அருகில் இருக்கும் சாலை ஒன்றின் ஓரத்தில் ஒரு இளைஞர் தனியாக Shadow Boxing – எதிரே எதிராளி இருப்பது போல பாவனையுடன் குத்துச்சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எதிர் பக்க சாலையில் நடந்து கொண்டிருந்த பெண்ணுக்கு, தனியே குத்துச் சண்டை போடும் இளைஞரைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு! கொஞ்சம் நேரம் சாலை ஓர இருக்கையில் அமர்ந்து வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். சிரிப்பது நல்லது – எனக்கு ஏனோ "ஊர்ல எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்காங்க போல இருக்கு"ன்னு ரஜினி வேஷ்டி இல்லாம போகும்போது சொல்வாரே அது நினைவுக்கு வர, நானும் சிரித்தபடியே நடந்தேன்.

பிரணாப் முகர்ஜியின் தம்பி போல ஒருவரை தினமும் பார்க்க முடிகிறது – ஓடுவது போலவே நடக்கிறார். ஒரு மூதாட்டியும் அவரது கணவரும் – ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி, தினமும் வருகிறார்கள் – நடக்கும்போது மூதாட்டி பேசிக்கொண்டே வருகிறார் – "நீ சொன்னா சரியா தான் இருக்கும்" என்று தலையாட்டியபடியே வரும் அவரது கணவர்! இப்படி இருந்துட்டா பிரச்சனையே வராது! பலருக்கு உடல் பருமன் தான் இப்படி நடை பழக வைக்கிறது. சிலர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி நடந்து வருவதைப் பார்க்கும்போது "எப்படியாவது இந்த உடம்பு குறைஞ்சா நல்லது"ன்னு யோசித்தபடி வருவது தெரியும். ஒரு நாள் மூன்று பெண்கள் – மூவருக்குமே பருத்த உடல்! ஓடிக்கொண்டிருக்கும் போதே, ஒரு பெண், "இதுக்கு மேல் என்னால முடியாதுப்பா, நான் அப்படி உட்கார்ந்துக்கறேன், நீங்க ஓடிட்டு வாங்க!" என்று சொல்ல, மற்ற இருவரும், "ஏய், கல்யாணத்துக்கு முன்னாடி இளைச்சிடுவியாடி! இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!" என்று கேட்க, "எல்லாம் இளைச்சிடுவேன்! பார்த்துக்கலாம்!" என்று உட்கார்ந்தார்.

ஒவ்வொரு நாளும், நடக்கும் போது இயற்கையான காற்று, உடலுக்கு ஆரோக்கியம் என நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் கிடைக்கிறது. கூடவே, இப்படி ஏதாவது விஷயங்களும் கேட்கக் கிடைக்கிறது. அது சரி "நீங்க நடக்கறதுக்குப் போறீங்களா இல்லை இப்படி வம்பு கேட்க போறீங்களா?" அப்படின்னு யாரும் கேட்கறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆயிடறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. வெங்கட் ஜி அதிகாலை நடைப்பயிற்சி ரொம்ப புத்துணர்வு தரும்..அதுவும் பூங்கா என்று சொல்லியிருப்பது ஆஹா போட வைத்தது...இங்கு சிறிய பூங்கா வீட்டருகில் ஆனால் நிறைய தடவை ரவுன்ட் அடிக்கணும்...என்பதால் நான் சாலையில் செல்வது வழக்கமாகிவிட்டது...

    ஆமாம் இங்கும் வணக்கம் வைப்பதுண்டு...நார்த்தில் சிலர் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஹரி ஓம் அல்லது ராம் ராம் சொல்லுவது வழக்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பூங்கா தான். அதுவும் பெரிய பரப்பளவு கொண்ட பூங்கா! இங்கேயும் வீட்டினருகில் சிறு பூங்கா உண்டு என்றாலும் பூக்கள் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. அது சரி "நீங்க நடக்கறதுக்குப் போறீங்களா இல்லை இப்படி வம்பு கேட்க போறீங்களா?" அப்படின்னு யாரும் கேட்கறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆயிடறேன்.//

    ஹா ஹா ஹா ஹா அப்படிப் பார்த்தா பதிவுக்கும் மேட்டர் தேறும்...

    நீங்கள் சொல்லியிருப்பது போல் வித விதமான மனிதர்களைப் பார்க்கலாம்...நல்லகாற்று, புத்துணர்வு, பாஸிட்டிவ் விஷயங்கள் எல்லாம் கிடைக்கும்..

    சிலர் அங்கேயே உடற்பயிற்சிய்ம் செய்வதையும் இங்கு பார்க்கிறேன்...ஆம் ஜி பெரும்பான்மையோர் உடல் எடை குறைக்க என்றுதான்..அல்லது சர்க்கரை வியாதி, ப்ரெஷட் இதயப் பிரச்சனைகள் என்று..ஆனால் நார்மலாக இருப்பவரும் நடப்பது மிகவும் நல்லதே..

    தொடருங்கள் ஜி!!! உங்கள் வாக்கிங்கை..வாழ்த்துகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்படி பார்த்தா பதிவுக்கும் மேட்டர் தேறும்// உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. மக்கள் பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் உணவு அளிப்பது தண்ணீர் கொடுப்பது சந்தோஷமாக இருக்கு ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல விட்டுப்போன இன்னுமொரு விஷயம் உண்டு - அது பிறிதொரு சமயத்தில்...... கொஞ்சம் சஸ்பென்ஸ் வைக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. உங்கள் முதல் பாரா எனக்கும் முற்றிலும் பொருந்தும்! நானும் ஒரு மாதமாய்....!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... நீங்களும் பூங்காவில் நடக்க ஆரம்பித்து விட்டீர்களா.... மகிழ்ச்சி. சேம் பிஞ்ச்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கீதா அலுப்பில்லாமல், (சென்னை பாஷையில் பால் மாறாமல்!) நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். பாராட்டவேண்டும் அவரை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் மாறாமல் நடைபயிற்சி - உண்மை தான் - கொஞ்சமல்ல நிறையவே மன உறுதி வேண்டியிருக்கிறது! அதுவும் தனிமையில் நடக்க வேண்டுமென்றால் கஷ்டம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவேனா....//ஹா ஹா ஹா ஹா ஹா யாருக்கு ஜி??!!ஹா ஹா ஹா..

    கீதா

















    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கு! :)) ஹாஹா. பார்த்த எனக்கென்னமோ அந்தப் பொண்ணு ஒல்லியாகும்னு - கல்யாணத்துக்கு முன்னாடி - நம்பிக்கை இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. சுவையான அனுபவங்கள். நான் "முன்பு ஒருமுறை நடந்தபொழுது" (அவ்வப்பொழுது TGR பார்த்து அதிர்ச்சி அடையும்பொழுது ஒரு இரண்டு அல்லது மூன்று மாதம் நடப்பது என் வழக்கம் "இனி தினமும் தொடர்ந்து நடக்கணும்" என்கிற மாறா உறுதியோடு! அப்புறம் அது க தே க போல ஆகிவிடும்!) ஏற்பட்ட அனுபவங்கள், சிந்தனைகளை எங்கள் தளத்தில் 'நடக்கும் அனுபவங்கள்' என்று எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க தே க போல ஆகிவிடும்! இந்த முறையாவது அப்படி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. காலை நடை நல்ல புத்துணர்வு கிடைக்கும்.
    நடப்பது குறைந்து வரும் வேளையில் நடப்பதற்கு நேரம் ஒதுக்குவது நல்ல செயல்.

    சிரிப்பது எப்படி யோகா என்று ஆகி இருக்கோ , அது போல் அழுகையும் யோகவாக ஆகி இருக்கிறது.

    ஒரு கும்பலாக உட்கார்ந்து அழுகிறார்கள் அப்புறம் கண்ணைதுடைத்துக் கொண்டு போகிறார்கள். அன்று தொலைகாட்சியில் காட்டினார்கள். அழுவது மன அழுத்தத்தை குறைக்குமாம்.

    இதைதான் நாம் கடவுளிடம் சொல்லி தினம் அழுது கொண்டு இருந்தோம் காலம் காலமாய். இப்போது அதுவும் யோகா.

    பஜனை பாடல் பாடும் போது கைதட்டி பாடுவோம் அதுவும் யோகாவில் வந்து இருக்கு கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு தினம் காலை கைதட்ட வேண்டுமாம்.

    தோப்புக்கரணம் யோகா, கீழே உட்கார்ந்து கை ஊன்றாமல் எழுந்து கொள்வது யோகா என்று நாம் மறந்தவைகள் எல்லாம் இப்போது திரும்பி வருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழுகையும் யோகா - இங்கே இப்படி யாரும் இன்னும் ஆரம்பிக்கவில்லை!

      நாம் மறந்தவைகள் எல்லாம் இப்போது திரும்பி வருவது - உண்மை தான். பழக்கத்தில் இருந்த நல்ல விஷயங்கள் மீண்டு வருவதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. நடைப் பயிற்சியில் கூட பதிவிற்கான செய்திகள் கிடைக்கின்றன ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைப் பயிற்சியில் கூட பதிவிற்கான செய்திகள் - உண்மைதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. நடைப்பயிற்சியை விட சிறந்த பயிற்சி எதுவும் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. Dear Venkat
    My comments after a long time.
    Good post. Some gud news too. Keep it up. All d best. Hope let us meet soon at our place.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  12. Dear Venkat
    நல்ல பகிர்வு. சில நல்ல செய்திகளும் கூட.
    வாழ்க உங்கள் பணி.
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  13. நடைப் பயிற்சியின் போது ஹரி ஓம் என்று யாராவது சொன்னால் வீட்டுக்கு ஓடவேண்டாம் நானும் நடைப் பயிற்சி பற்றி எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் எதற்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அனைத்து உடற்பயிற்சியை விட நடைப் பயிற்சி மிகவும் நல்லதென்று செய்திகள் வருகின்றன. நீங்களும் நல்ல விஷயமாக அதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் நன்றி.
    நானும் அதை மேற்க்கொள்ள முயற்சித்து வருகிறேன் நடக்கமாட்டேன் என்கிறது.
    பார்க்கலாம்..
    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது நடங்க ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  15. அதிகாலை நடைப் பயிற்சி - ரொம்ப நல்லா இருக்கும். அதுவும் சுத்தமான காற்று இரைப்பையை நிரப்பும்போது வரும் சந்தோஷம்...

    நானும் பூங்காவில் நடக்கும்போது பலவித கேரக்டர்களை அவதானிப்பேன். பல சமயம் நகைச்சுவையா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் - ஒவ்வொரு நாளும் பார்க்கும் சிலரைப் பற்றி எழுத யோசனை உண்டு. பார்க்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. நடைப்பயிற்சி செய்வது வியாதிகளை தடுக்கும் அற்புதமான விடயம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நடப்பது சுகமான விஷயமாக இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  17. நடைப்பயிற்சி உடலுக்கு, மனதுக்கு ஆரோக்கியம் தரும். நான் இப்பயிற்சியினை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா. மனதுக்கும் ஆரோக்கியம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....