மனிதமும் மாவடுவும்:
நேற்று கடைத்தெருவுக்குச் சென்று உறவினருக்காக
வடுமாங்காய் தேடி அலைந்தேன். எங்கும் தென்படவில்லை. கிலோ 200 க்கு மேலே விற்பதால் வியாபாரிகள்
எடுக்கத் தயங்குகின்றனராம்.
கிளிமூக்கு மாங்காயின் பிஞ்சுகள் மட்டும்
ஒருவரிடம் இருந்தது. கிலோ 50 என்று சொன்னார்கள். சரி! இதையாவது வாங்கிக் கொள்ளலாம்
என்று பிஞ்சுகளைப் பொறுக்கிப் போட்டேன்.
அப்போது ஒரு பெண்மணி விலை கேட்டு வந்தார்.
அவரிடம் அந்த கடைக்காரர் விலையைச் சொன்னதும் ஒருத்தர் தான். அதனால கால் கிலோ தருவீங்களா?
என்றார். இல்லம்மா! தரமுடியாது! என்று சொல்லி விட்டார்.
அந்தப் பெண்மணி நகர்ந்ததும், கடைக்காரரின்
அம்மா "தம்பி பிள்ளைதாச்சியா இருக்கப் போகுதுப்பா!! அப்படி தரமுடியாதுன்னு சொல்லாத"
என்று சொல்லி, அந்தப் பெண்மணியை கூப்பிட்டார். வா தாயி! எடுத்துக்கோ என்றார். ஆனாலும்
அந்தப் பெண்மணி சென்று விட்டார். அந்த அம்மாவின் முகம் வாடியது.
அப்போது தான் அவர்களின் மறுபக்கமும்
எனக்குப் புரிந்தது. விலையை கேட்டுவிட்டு சில நேரங்களில் அப்படியே சென்று விடுகிறோம்.
ஆனால், அவர்கள் இப்படியும் யோசிக்கிறார்கள் என்று.
அன்புள்ளங்கள்:
நேற்று மாலை வழியில் பார்த்த எனக்குத்
தெரிந்த வயதானப் பெண்மணி ஒருவர். அவர் வயது தோழிகளுடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
ஞாபகமாக என்னைப் பார்த்தவுடன் செளக்கியமா
இருக்கறயா?? குழந்தை செளக்கியமா?? எனக் கேட்டு என் கைகளை பற்றி தடவிக் கொடுத்து,
"உன் வீட்டை பார்க்கும் போதெல்லாம் நினைச்சுப்பேன், வரணும்னு" ஆனா முடியறதில்லை
என்றார்.
பரவாயில்லை, முடியற போது வாங்கோ. உங்க
ப்ரெண்ட்ஸையும் அழைச்சிண்டு வாங்கோ. என்று அவர்களுக்கும் அழைப்பு விடுத்தேன்.
அந்த கைகளில் தான் எத்தனை மென்மை!!!
அந்த வருடலில் தான் எத்தனை அன்பு!!
திருவரங்கமும் தெப்பக்குளமும்:
ரங்கநாதர் கோவிலின் தெப்பக்குளம் இது.
நேற்று தான் தெப்போற்சவம் நடைபெற்றது. நம்பெருமாள் உபயநாச்சியருடன் தெப்பத்தில் காட்சி
தந்தார். வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் வரவழைத்து நிரப்பியிருக்கிறார்கள்.
காய்கறி வாங்கிக் கொண்டு தெப்பக்குளத்தின்
வழியே வரும்போது கம்பித்தடுப்பின் வழியே க்ளிக்கியவை.
வடுமாங்காய்:
இந்த வருடம் கண்ணிலேயே தென்படவில்லை.
விளைச்சல் குறைவு போல. கிடைத்த ஒரு கிலோ வடுவில் உப்பு, காரம், மஞ்சள், கடுகு அரைத்து
சேர்த்திருக்கிறேன். மிளகாய்க்கு பதில் மிளகாய்த்தூளும் சேர்ப்பார்கள். நான் அம்மா
செய்த முறையிலேயே அரைத்துப் போட்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பழுதில்லாமல் வர
வேண்டும் என்ற பிரார்த்தனையோடு.
பதிவர் சந்திப்பு:
பன்முகத் திறமையாளரான
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கீதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு
முன்பே, தான் தமிழகத்துக்கு வருகை தருவதாகவும், அப்படி வரும் போது என்னையும், ரோஷ்ணியையும்
சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் மெசெஸஞ்சரில் சாட்டிங்கில் தெரிவித்திருந்தார்.
தேதி எதுவும் குறிப்பிடவில்லை.
இப்படியிருக்க, நேற்று எதிர்பாராத சந்திப்பாக தன் சகோதரருடன் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார்.
கோபு சாரை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்தார்.
தன் சகோதரரிடம் என்னவரைப்
பற்றியும் மகளின் திறமைகளையும், என்னைப் பற்றியும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
என் வலைப்பூவில் நான்
பகிர்ந்து கொண்ட புத்தக வாசிப்பனுபவங்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். (இப்போதெல்லாம்
வாசிப்பு குறைந்து விட்டது கீதா!) அடுத்ததாக என் சமையல்! சமீபகாலமாக என்னைப் பற்றிச்
சொன்னால் என் சமையல் பகிர்வுகள் தான் பரவலாகச் சொல்லப்படுகிறது.
என்னைப் பெற்றவளுக்கு
தான் நன்றி சொல்லணும். சிறுவயதிலிருந்தே என்னை அடுக்களை வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கிறாள்.
நானும் இதை மகளிடம் செயல்படுத்துகிறேன்.
சரி! எங்கேயோ ஆரம்பித்து
தடம் மாறிவிட்டது. கீதாவின் எழுத்தாற்றல் பற்றி நானும் சொன்னேன். அவரின் எழுத்துக்கு
முன்னர் நான் சிறு தூசு என்று!!
ரோஷ்ணியின் ஓவியத் திறமையை
எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக்கூடாது என்றும், சுலபமாக அவள் வரைந்து விடுவதாகவும்,
அவளின் ஓவியங்களில் அவளுக்கென்று தனி பாணி இருப்பதாகவும், இதை அவளிடம் தெரிவிக்கும்படி
சொன்னார்.
சற்றே உரையாடி விட்டு
எந்த உபசரிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் கிளம்பி விட்டார். என்னவரிடமும் அலைபேசியில்
அழைத்து பேசவைத்தேன்.
தன்னுடைய நேர நெருக்கடியிலும்
எங்கள் இல்லம் தேடிவந்து சந்தித்தது மனதை நெகிழ்த்தியது. இப்படியாக இனியதொரு தோழியை
சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. புத்துணர்வு கிடைத்தது.
தமில் என் மூச்சு:
தமிழ்மக்களிடம் தமிழ் சிக்கி சின்னா பின்னமாகிறது. தொலைக்காட்சியில், நாளிதழ்களில்,
சுவரொட்டிகளில், கடைகளின் பதாகைகளில் என எங்கும் கொலை.
இன்று செய்திச் சேனல் ஒன்றில் கூடாரமான - கூடாராமான என்றாகி விட்டது.
சுவரொட்டி ஒன்றில் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி என்பதில் முதலாம் - முதாலம் என்றாகி
விட்டிருந்தது.
இதை விட சென்ற வாரம் பேருந்தில் நானும் மகளும் திருச்சியின் தில்லை நகர் வழியாக
உறையூர் வரை சென்று வந்தோம். அப்போது மகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததில்,
"அம்மா முதுகுத்துண்டு என்று போட்டிருந்தது என்றாள்".
துணிக்கடையாக இருக்கும் என்றேன். பக்கத்துல எலும்பு, மூளை என்றெல்லாம் போட்டிருக்கே
என்றாளே பார்க்கலாம்! சிரித்து மாளலை. முதுகுத்தண்டு - முதுகுத்துண்டாகி விட்டது.
ரோஷ்ணி கார்னர்:
மகள் எடுத்த
புகைப்படங்கள் இரண்டு….
உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லலாமே!
மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
ஆதி வெங்கட்
சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுகைப்படம் ஸூப்பர் ரோஷ்ணிக்கும் பாராட்டுகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபடங்கள் அருமை நண்பரே,வடுமாங்காய் என்றதும்
பதிலளிநீக்குநாக்கினில் எச்சில் ஊறுது...😜😜😜
வடு மாங்காய் - பலருக்கும் பிடித்தது தானே.... அதான் சாப்பிடத் தோன்றுகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரையோரம் சிதறிய கவிதைகள்.
திருவரங்கம் கோபுரம் புகைப்படம் அருமை!
பதிலளிநீக்குவடுமாங்காய் என்றதும் சுமார் முப்பது வருடங்கள் முன்னால் எங்கள் ஊர் அருகில் உள்ள வெள்ளிமலை சுவாமிஜி மதுரானந்தஜி அவர்களின் ஆஸ்ரமத்திற்கு சென்றிருந்தபோது அவர்கள் கொடுத்த நீராகாரமும், வடுமாங்காயும்தான் நினைவுக்கு வரும்.
ஆஹா வடுமாங்காய் உங்கள் நினைவுகளையும் மீட்டியிருக்கிறது என்பதறிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
மாவடு படம்தான் என்னை இங்கு ஈர்த்தது. பார்த்தவுடனேயே, ஒரு கிண்ணத்தில் மோர் சாதமும் புதிதாகப் போட்ட வடுவும் இருந்தால் போதும் என்று தோன்றியது.
பதிலளிநீக்குகிண்ணத்தில் மோர் சாதமும் புதிதாகப் போட்ட வடுவும் - ஆஹா எனக்கும் இப்ப சாப்பிட ஆசையா இருக்கே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
முதலில் மகள் எடுத்த புகைப்படங்களுக்கு பாராட்டுகள். மாங்கா வடுவும் பிள்ளைத்தாச்சியும் செய்தி மனதைத்தொட்டுவிட்டது.
பதிலளிநீக்குமகளிடம் தங்களது பாராட்டுகளைச் சொல்லி விடுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
வியாபாரிகள் திரும்ப அழைத்து நமக்கு அந்தப் பொருளைக் கொடுத்தால் அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள், நம் சாமர்த்தியம் குறைத்து விட்டோம் என்று நினைப்போம். இப்போதுதான் மறுபக்கம் புரிகிறது.
பதிலளிநீக்குஅவர்களுக்கும் மறுபக்கம் உண்டு. எல்லோரையும் சந்தேகமாகவே பார்க்கும் குணம் நமக்கு வந்து விட்டது இல்லையா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீர் நிறைந்த தெப்பக்குளம் அபூர்வக் காட்சி.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு மகிழ்ச்சி.
நீர் நிறைந்த தெப்பக்குளம் - அபூர்வமாகத் தான் ஆகிவிட்டது இந்தக் காட்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தமிழ் படும்பாடு - சிரிப்பு.
பதிலளிநீக்குரோஷ்ணி எடுத்த புகைப்படங்கள் நேர்த்தி, வெகு அழகு. பதினாறடி!
மகளிடம் சொல்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எனக்கு மாவடு ஊறுகாயின் காரம் பிடிக்கும் மாவகளைத் துண்டமும் செய்யலாமா
பதிலளிநீக்குமாவடு - துண்டம் செய்ய முடியாது.... எனக்கும் அதன் காரம் பிடிக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
ரோசனி எடுத்தப் புகைப்படங்கள் அருமை
பதிலளிநீக்குகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று சும்மாவா சொன்னார்கள்
வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமாவடு போட்டோவும் செய்திகளும் வெகுவாக கவர்ந்தது.மாவடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதனால் பார்க்கும் போதே ஞாபகங்கள் நெஞ்சில் நிறைந்தன. நன்றி.
நமக்கு பிரியமானவர்களை சந்தித்து விட்டால் மனதிற்கு மகிழ்வுதான்.அதற்கு ஈடு இணை கிடையாது.
திருவரங்கம் கோவில் போட்டோக்கள் அருமை!தங்கள் மகளின் கலை ஆர்வத்திற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். கதம்பம் நன்று. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
மாவடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. பல இடங்களில் கிடைப்பதில்லையே. ப்ரியா போன்ற நிறுவனங்கள் பாட்டில்களில் போட்டு விற்பது கிடைக்கிறதே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
அன்பு ஆதி, மாவடு பார்க்கவே அருமை. எங்கள் வீட்டிலும் பிஞ்சு விட்டிருக்கும். எடுக்கத்தான் ஆளில்லை.
பதிலளிநீக்குரங்க ரங்கா போட்டுக் கொண்டேன். அருமையான படங்கள். ரோஷ்ணி மேன் மேலும் வளரணும்.
கீதாமதி வந்திருந்தது மிக சந்தோஷம். அன்பே வடிவானவர்.
அனைத்துக்கும் வாழ்த்துகள் அம்மா.
பிஞ்சு விட்டிருக்கும். எடுக்கத்தான் ஆளில்லை. :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
மொபைலில் இருந்து நான் அடித்த கமென்ட் எங்கே போச்?!!!!!
பதிலளிநீக்குசரி மீண்டும் அடிக்கிறேன்...
மாவடு படம் ஈர்க்கிறது ...நாவில் நீர் ஊற வைக்கிறது. இதே மெத்தட் தான் ஆனால் என் மாமியாரும் சரி அம்மாவீட்டிலும் சரி விளக்கெண்ணையில் முதலில் மாவடுவை புரட்டிவிட்டு அப்புறம் உப்பு மட்டும் போட்டு ஊற வைத்து நீர் விட்டதும் அந்த நீரை வைத்தே நீங்கள் சொல்லியிருக்காப்ல எல்லாம் அரைத்து விடுவாங்க..விழுதா இருக்கும்...இதில் நன்றாக ஊறிய ரொம்ப மென்மையாகிடும் மாவடுக்க்ளை எடுத்து பச்சடி/மோர்க்குழம்பு போல் எங்கள் பிறந்த வீட்டில் செய்வதுண்டு...ரொம்ப டேஸ்டியா இருக்கும். அதன் பெயர் அழுகமாங்கா பச்சடி....
எந்த சாமானைக் கூப்பிட்டுக் கொடுத்தால் நாம் கேட்கும் விலையில் முதலில் கொடுக்காமல் மீண்டும் கூப்பிட்டுக் கொடுத்தால் கொஞ்சம் சந்தேகப்புத்தி எட்டிப் பார்க்கும்..ஏமாற்றலோ என்று!!! நீங்கள் சொல்லியிருப்பது காயினின் மறுபக்கம்...சூப்பர்!!! இப்படி சில சமயங்களில் முதல் போணீ என்றால் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்...
அப்புறம் ரோஷ்ணியின் படங்கள் எபி குழுவில் பார்த்தேன் செமையா இருக்கு ரோஷிணிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பெண்புலி!!!
தமிழ்படும் பாடு ஹா ஹா ஹா ஹா ரகம்...நானும் இப்படிப் பார்க்கிறேன் இங்கு...இப்படித் தொடர்ந்து பார்த்தாலோ வாசித்தாலோ எங்கேனும் நம் தமிழ் மறந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழுகிறது!! ஹா ஹா ஹா
கீதா
மொபைலில் அடித்த கருத்து - காக்கா ஊஷ் ஆகிடுச்சு போல!
நீக்குமாவடு போட்ட பச்சடி, மோர்க்குழம்பு - வாவ். இப்படிச் சாப்பிட்டதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அட! ரோஷிணிக்குட்டியின் படங்கள் வியக்க வைக்கின்றன ஈக்கின்றன. வெங்கட்ஜி உங்கள் மகள் உங்களைப் போலவே உருவாகிவருகிறார்!!! வாழ்த்துகள்!!! பாராட்டுகள்.
பதிலளிநீக்குதமிழ் பிழைகள் சிரிக்க வைத்துவிட்டன.
மாவடு பழக்கமில்லை வீட்டில் செய்வது இல்லை...
விற்பனையிலும் மனிதம் இருப்பது மனதைத் தொட்டது. இப்படியும் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்று..
அனைத்தும் அருமை சகோதரி ஆதி
துளசிதரன்
மாவடு - கேரளத்தில் பழக்கமில்லையோ?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
மாவடு நாவில் நீர் ஊற வைக்கிறது. இனிமேல்தான் வாங்கி போட வேண்டும்.
பதிலளிநீக்குநம் ஊரில் எளிய மனிதர்கள் பிள்ளைத்தாய்ச்சி பெண்களிடம் காட்டும் இரக்கம் அலாதிதான்.
ஸ்ரீரங்கம் கோவில் தெப்பம் மற்ற கோவில் தெப்பங்களைப் போல் இல்லாமல் பெரிதாக மாடி வீடு போல் இருக்கும்.
புகைப்ரோ படங்கள் அருமை! ரோஷிணியின் ஓவியங்களை வியந்திருக்கிறேன். புகைப்பட கலையிலும் அவளிக்கிருக்கும் திறமை ஆச்சரியமூட்டுகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்குமுகநூலில் ஆதி பகிர்ந்திருந்தார். மாவடு இன்னமும் கிடைக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கோம். கீதா மதியைச் சந்திக்காமல் தவற விட்டு விட்டேன். தெரியாமல் போச்சு. ரோஷ்ணியின் திறமை ஃபோட்டோகிராஃபியிலும் கொடிகட்டிப் பறக்கட்டும். :)
பதிலளிநீக்குமாவடு இந்த வருடம் குறைவு தான் அதுவும் நல்ல வடு கிடைக்கவில்லை என்று அம்மாவும் சொன்னார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
மாவடுவின் படமே அதன் சுவையை சொல்வதாக இருக்கிறது. நல்லுள்ளம் கொண்ட வியாபாரிகளும் இருக்கிறார்கள் என்பதை அந்த கடைக்கார பெண்ணின் எண்ணம் காட்டுகிறது.
பதிலளிநீக்குரோஷனி எடுத்த படங்கள் மிக நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
நீக்கு