அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இன்றைய
வாசகம்:
அன்னம்
நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்குச் சென்றுவிடும்.
அது போல மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்
– சாணக்கியர்.
ஆதியின்
அடுக்களையிலிருந்து – சத்து கா லட்டு – 16 October 2019:
டெல்லியிலிருந்து வரும் போது sattoo என்று சொல்லப்படுகிற
கொண்டக்கடலை மாவு வாங்கி வந்து அதை வைத்து பராட்டா செய்து பகிர்ந்திருந்தது நினைவிருக்கலாம்.
Sattoo நிஜமாகவே சத்துமிக்கது. உடலுக்கு பலம் சேர்க்கக்கூடியது.
அங்கு இதை வைத்து ஜூஸ் செய்வதாகவும் இணையத்தில் பார்த்தேன்.
நான் sattoo வை வைத்து லட்டு செய்துள்ளேன். மிகவும் சுவையாகவே
இருந்தது. நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்.
வான்மேகம்
பூப்பூவாய் தூவும்! – 18 October 2019
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை என்று செய்திகளில்
வாசிக்கும் போது சிலுசிலுவென்று இருந்த என்னுடைய மழைநாட்களின் நினைவலைகளில் மூழ்கிப்
போனேன்.
கோவையில் என் பள்ளிநாட்களில் மழையில் நனைந்து கொண்டே வந்தது.
புத்தகங்களும், நோட்டுகளும் என்னோடு மழையில் நனைந்ததற்காக அம்மாவிடம் முதுகில் வாங்கிக்
கொண்ட உதை...:) பின்பு அதை காய வைக்கும் படலம்...:)) 'மழை விடற வரைக்கும் கொஞ்சம் நேரம்
எங்கேயாவது நின்னு வந்தா என்ன??' என்று அம்மா சொன்னாலும், நான் நனைந்து வரவே விரும்புவேன்..:)
மழை நின்ற பின் தண்ணீரில் விட்ட காகிதக் கப்பல்கள்..:)
சூடாக சாப்பிட அம்மா செய்து தந்த பண்டங்களான வேகவைத்த அல்லது வறுத்த வேர்க்கடலை, உப்பு
மட்டும் சேர்த்து வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, காரம் சேர்த்த பொரி. அதிலும் எனக்கு மட்டும்
தனி ருசி. பொரியில் வேர்க்கடலை, பொட்டுக்கடலையுடன், வெங்காயம் மற்றும் தேங்காயெண்ணெய்
கலந்து சாப்பிட மிகவும் விருப்பம் :)
நம்ம ஊரில் அம்மாக்கள் ஜலதோஷம் வந்து விடும், துணியெல்லாம்
ஈரமானால் காயாது என்று சொல்லிக் கேட்டிருப்போம் :) டெல்லியில் மழை வந்து விட்டால் குடும்பத்துடன்
மாடிக்குச் சென்று நனைந்து மகிழ்வார்கள்.
முதல்முறை 'இந்தியா கேட்'டுக்குச் சென்ற போது அடித்து
பெய்த மழை. அந்தப் பகுதிக்கு சற்று தூரத்தில் தான் மரங்கள் இருக்கும், அதனால் ஒதுங்க
இடமில்லாமல் இருவரும் நனைந்தோம். அதன் பின் இந்தியா கேட்டுக்குச் சென்ற போதெல்லாம்
அன்று மழையில் மகிழ்ந்ததை நினைத்துக் கொண்டு மழை வராதா என ஆவலுடன் காத்திருந்தோம் :)
இப்படி மழையில் மகிழ்ந்த நாட்களை அசை போட்டால் அந்த நாட்களுக்கே
சென்ற உணர்வு வருகிறது :) திருவரங்கத்தில் மழை என்பது அரிது. பூமி நனைவதற்குள் நின்று
விடும். அடித்து பெய்யும் மழையில் நன்றாக நனைய வேண்டும் என்று நெடுநாட்களாக ஆவல்!!!
உங்களுடைய நினைவடுக்குகளில் உள்ள மழைநாட்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மஃப்ளர்
– 22 October 2019:
சிறு தூறலும் கதிரவன் எட்டிப் பார்க்காத இன்றைய நாளின்
பகல் பொழுது, திருமணமான புதிதில் டெல்லியில் கற்றுக் கொண்ட கலையுடன் சுவாரஸ்யமாய்ச்
செல்கிறது :) அவ்வப்போது கொஞ்சம் வாசித்தலும் :)
ஒரே விதமான வேலையை செய்வதை விட மாற்றங்கள் புத்துணர்வைத்
தருகிறது.
மத்தாப்பு
தீபாவளி - 27 October 2019:
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அப்பா வைக்கும் சரத்தில்
ஆரம்பிக்கும் எங்கள் தீபாவளி! எண்ணை வைத்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டு, அப்பா
அம்மாவை நமஸ்கரித்து ஆசிகளை பெற்றுக் கொண்டு பட்டாசு, மத்தாப்புகளுக்குச் செல்வோம்.
100 ரூபாய்க்கு பெரிய வயர்கூடை நிறைய அம்மா வாங்கி வரும்
பட்டாசுகளை மூன்று பாகமாக பிரித்துக் கொள்வோம். எனக்கு, தம்பிக்கு, கார்த்திகைக்கு.
நெடுநாட்களுக்கு வெடிகள் என்றாலே எனக்கு பயம் :) மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரத்தோடு
முடித்துக் கொள்வேன். அதனால் தம்பிக்கு கொண்டாட்டம் :) அப்புறம் தம்பியிடம் தான் கற்றுக்
கொண்டேன் :)
ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அம்மா தயார் செய்து வைத்த
பட்சணங்களை ருசித்து, அக்கம் பக்கம் பகிர்ந்து அன்றைய நாள் இனிமையாக கடந்து செல்லும்.
வருடத்துக்கு ஒரே ஒரு புத்தாடை தான் என்பதால் எப்போது அதை அணிந்து கொள்ளப் போகிறோம்
என்ற ஆவல் இருக்கும்..பண்டிகை சமயம் தான் பட்சணங்கள் நிறைய கிடைக்கும். தொலைக்காட்சியில்
பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இன்று எப்போது வேண்டுமானாலும் புத்தாடைகள் வாங்கிக்
கொள்ளலாம். வேண்டியதை செய்து ருசிக்கலாம். வாங்கி சுவைக்கலாம். நாள் முழுதும் தொலைக்காட்சியில்
நிகழ்ச்சிகள். அதனால் தான் என்னவோ அப்போதிருந்த ஆர்வம் இப்போது இருப்பதில்லை.
ஆதியின்
அடுக்களையிலிருந்து – 30 October 2019:
கரகர மொறுமொறுவும்! கறிவேப்பிலை மைசூர்பாகும்!!
தீபாவளி ஜோரெல்லாம் குறைந்ததும் நேற்று செய்தவை. என்னால
பரிசோதனையெல்லாம் செய்யாம இருக்கவே முடியாது :) அரிசி மாவில் செய்த முள்ளு முறுக்கும்,
கஞ்சி போடுவதற்காக வாங்கிய சத்துமாவில் செய்த பார்த்த முறுக்கும், மைசூர்பாகும்.
பொதுவாக பண்டிகை இருந்தால் நானே வீட்டில் அரிசிமாவு தயார்
செய்து கொள்வேன். இது சாதாரண நாளில் சாப்பிடுவதற்காக என்பதால் கடையில் வாங்கிய அரிசிமாவு
தான். ஆனால் வெள்ளையாகவே நன்றாக வந்தது. சத்துமாவிலும் முறுக்கு நன்றாக வருமான்னு சந்தேகம்
இருந்தது. ஆனால் வாயில் கரையும் சுவையான சத்துமிக்க முறுக்கு.
அப்புறம் மைசூர்பாகும் சுத்தியல் எல்லாம் தேவைப்படலை
:) வாயில் கரைந்தது :) ஆனா ஒரே ஒரு விஷயம். வீட்டிலேயே எடுத்த வெண்ணெயில் செய்த பண்டங்கள்
தான் எல்லாமே. நெய் காய்ச்சும் போது கடைசியில் முருங்கைக்கீரை இல்லாதிருந்தால் கறிவேப்பிலை
சேர்ப்பேன். அதனால் மைசூர்பாகில் கறிவேப்பிலையின் மணம் :) மகள் கூட இதுவரை யாருமே கறிவேப்பிலை
மைசூர்பாகு சாப்பிட வாய்ப்பில்லை என்று கலாய்த்தாள்:) ஆனாலும் சுவையாகவே இருந்தது.
ரோஷ்ணி
கார்னர் – 31 October 2019:
Step Rack!! - Best out of waste!
மளிகைப் பொருட்களை வைக்கும் போது பின்புறம் இருக்கும்
பொருட்களும் தெரியும் விதமாக ஒரு Step Rack வேண்டுமென நினைத்து இணையத்தில் தேடியதில்
Amazonல் 499 க்கு மூன்று தட்டுகள் கொண்ட அலமாரி இருந்தது. பிளாஸ்டிக் தான். அதை வாங்க
மனம் ஒத்துக்கலை :) ஒன்று பிளாஸ்டிக்கை தவிர்க்க நினைத்தேன். இன்னொன்று விலை! மகளிடம்
இது பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது, "500 ரூ அனாவசியமா செலவு பண்ண மனசு வரலடா
கண்ணு!" இதே மாதிரி அட்டை பெட்டிகளை வெச்சு உன்னால செய்ய முடியுமா? வெயிட்டும்
தாங்கணும்! என்றேன்.
அவள் செய்து கொடுத்தது தான் இது. இதே போல இன்னொரு பெட்டி
கிடைத்தால் மூன்றாவது தட்டும் செய்து விடலாம். கிஃப்ட் பேப்பர் கொண்டு ஒட்டினால் இன்னும்
அழகாகி விடும். இதில் வைத்திருக்கும் பாட்டில்களும் காலியான தேன், ஜாம் பாட்டில்களை
சுத்தம் செய்து Reuse செய்து கொண்டது தான்.
என்ன ஃப்ரெண்ட்ஸ், இந்த Step Rack அழகாக இருக்கா?
என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
சத்து கா லட்டு... சூப்பர்.
பதிலளிநீக்குவானம் மழையால் பூமியோடு சேர்த்து மனங்களையும் குளிர்விக்கிறது. மீண்டும் துளிர்த்துப் பயிராகும் பழைய நினைவுகள்.
தீபாவளி நினைவுகள் சுவாரஸ்யம்.கறிவேப்பிலை மைசூர்பாகு... ஹா.. ஹா... ஹா... புதிய ரெசிப்பி!
சமையலறையில் ஏறுபடிஅமைப்பு நல்ல ஐடியா...
மொத்தத்தில் சுவையான கதம்பம்.
சத்தூ என அழைக்கப்படும் இந்தப் பொருள் வடக்கே, குறிப்பாக பீஹாரில் ரொம்பவே பிரபலம்! சத்தூ கா பராண்டா சில சமயங்களில் சுவைத்திருக்கிறேன்.
நீக்குகறிவேப்பிலை மைசூர்பாகு - ஹாஹா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் அருமை.
சத்து கா லட்டு பார்க்கும் போதே சுவைக்கத் தோன்றுகிறது. நன்றாக உள்ளது.
மழை நினைவுகள் அருமை. எனக்கும் மழையில் நனைந்த அனுபவம் உண்டு. ஆனால் அம்மாவுடன் இருந்த போது தூறல்கூட ஒத்துக் கொள்ளாது எனற கண்டிப்புடன் தூறலை கண்ணால் பார்த்ததோடு சரி..:)
தீபாவளி படசணங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நான் கூட கறிவேப்பிலை போட்டு மைசூர்பாகா என்ற ஆவலில் படித்து வந்தேன். கடைசியில் கறிவேப்பிலை கலந்த நெய்யில் என்று அறிந்து கொண்டேன். அந்த வாசனையை மானசீகமாக உணர்ந்தபடி மைசூர்பாகை சுவைத்தேன். நன்றி.
சமையலறையில் தங்கள் மகள் செய்த அலமாரி நன்றாக உள்ளது. புதிதாக செய்து அசத்தும் தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.
அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதம்பம் தொகுப்பின் அனைத்து பகுதிகளையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் அருமை... அதிலும் Step Rack - Super...
பதிலளிநீக்குஸ்டெப் ரேக் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தில்லி மழையில் ஆரம்பித்து சத்து லட்டு, முறுக்கு, ஸ்டெப் ராக்
பதிலளிநீக்குஎல்லாமே சுவை ஆதி.
அம்மா என்றும் உங்களுடன் ரோஷ்ணி வடிவில் இருப்பார். வாழ்த்துகள்.
பதிவின் அனைத்து பகுதிகளையும் நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சாணக்கியரின் அடிகளை அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்து தந்த வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சத்து கா லட்டு...அருமை
பதிலளிநீக்குStep Rack!! - Best out of waste!...வாவ்
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சத்து கா லட்டு பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது. இம்மாதிரி விஷயங்களை எ.பி.யில் பகிர்ந்து கொள்ளலாமே. இனிப்புக்கு சர்க்கரை, அல்லது வெல்லசக்கரை இவற்றில் எதை சேர்த்தீர்கள்?ரோஷ்ணியின் கைவண்ணத்தில் step rack அருமை!
பதிலளிநீக்கு//எபியில் பகிர்ந்து கொள்ளலாமே?// லாம்! ஸ்ரீராமும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! பார்க்கலாம் ஆதி எழுதி அனுப்புகிறாரா என! :)
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிறுவயதில் மழையில் நனைந்தால் ஜுரம் வந்து விடும் என்று அம்மா நனைய விட மாட்டாள். எப்போதாவது ஸ்கூலிலிருந்து வரும் பொழுது நனைய நேரிட்டால் அப்பா தலையை துவட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு குமுட்டியில் இருக்கும் தணலில் கை கால்களை சூடு படுத்திக் கொள்ளச் சொல்லுவார். என் மகனுக்கு மழை நேரங்களில் மதிய உணவில் மிளகு குழம்பும், மாலையில் பஜ்ஜியும் வேண்டும். இப்போது கூட வானம் மூட்டமாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் சிறுவயதில் நம்மை மழையில் நனையவிட மாட்டார்கள். இப்போது நனைந்து வருவது கொஞ்சம் தயக்கமாகவே இருக்கிறது இல்லையா... குமுட்டி தணலில் கை கால்களைச் சூடு படுத்திக் கொள்ளச் சொல்லும் பாசமான அப்பா... மழை சமய பஜ்ஜி, பக்கோடா - ஆஹா என்னவொரு சுகம் இல்லையா பானும்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பத்தில் தந்த அனைத்துமே அருமை. இரசித்தேன்!
பதிலளிநீக்குகதம்பத்தில் பகிர்ந்து கொண்ட அனைத்தும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅருமை.மகளுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு