ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி இரண்டு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?


இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ்மனது தான். அது என்ன நினைக்கிறதோ அதற்காக முயற்சி செய்ய வைத்து அதை நோக்கியே உன் வாழ்க்கைப் பயணத்தை அமைக்கிறது.
 
இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தமான் சுற்றுலாப் பயணத்தின் போது எடுத்த சில படங்களை நிழற்பட உலாவாக வெளியிட்டு இருந்தேன். அப்பதிவினை பார்க்காதவர்கள் வசதிக்காக, இதோ இங்கே அப்பதிவின் சுட்டி…


அந்தமான் – பல தீவுகள் இணைந்து தான் அந்தமான் நிகோபார் தீவுகள் என்று இன்றைக்கு அழைக்கிறோம் – ஐநூற்றுக்கும் மேற்பட்ட தீவுகள் இங்கே இருந்தாலும் மனிதர்கள் வசிக்கும் தீவுகள் பத்தில் ஒருபங்கு கூட கிடையாது. எங்கெங்கும் கடல், கடல், கடல் மட்டுமே – கடலும் தென்னையும், கடல் அலைகளின் அழகும் கொட்டிக் கிடக்கின்றன இந்த இடத்தில். ஒரு வாரத்தில் சென்று எல்லா இடத்தினையும் பார்த்து வந்து விட முடியாது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் மொத்தமாக 17 நாட்கள் இங்கே பயணம் செய்து வந்திருக்கிறார் – ஆனாலும் அவர் சொல்வது – நான் இன்னும் இங்கே நிறைய இடங்களைப் பார்க்க வில்லை என்று! அவருக்கே அப்படி என்றால் நான் சென்று வந்தது அதில் பாதிக்கும் குறைவான நாட்களே! ஆனாலும் பார்த்த இடங்களில் எல்லாம் அழகுக் கொட்டிக் கிடக்கிறது! எத்தனை அழகு அங்கே. நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று அந்தமான் நிகோபார் தீவுகள். வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்த மாதிரி இடங்களுக்குச் சென்று வாருங்கள். இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக மேலும் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு…


படம்-1: பாக்கு மரத்தின் வேர்ப்பகுதியில் முளைத்திருந்த வேறு ஏதோ இலை ஒன்று...


படம்-2: நீலக்கடலின் ஓரத்தில்... பாட்டு நினைவுக்கு வருகிறதா?


படம்-3: ஓய்வில்லாமல் கரையை நோக்கி ஓடி வரும் அலைமகள்...


படம்-4: நாங்களும் கலைஞர்களே என்று இதைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும் எனச் சொல்லும் நண்டுகள்...


படம்-5: ஓய்ந்து தேய்ந்து இப்படி ஆகிவிட்டேன் என்று சொல்கிறதோ?


படம்-6: மரத்துண்டு கூட மீன் போன்று காட்சி தருகிறதோ கடலில் மிதந்து மிதந்து...



படம்-7: யாரும் வராமல் சூரிய ஒளி மட்டுமே வரும்படி படம் எடுக்க நினைத்தாலும் முடியவில்லை...


படம்-8: சூரியனுக்கும் மேகங்களுக்கும் போட்டி - யார் பெரியவர் என்று!


 படம்-9: இயற்கையின் எழிலை என்ன சொல்ல - உள்வாங்கிய கடல்!


படம்-10: வீழ்வேன் என்று நினைத்தாயோ? மிச்சம் இருக்கும் ஏதோ ஒரு மரம்...


படம்-11: கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிய கடல்!


படம்-12: தூரத்தே ஒரு கப்பல் - எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது! 


படம்-13: இயற்கையின் வண்ணக் கலவை - தூரத்துப் பச்சையை மங்கச் செய்யும் நீலம்!


படம்-14: உள்வாங்கிய கடல் விட்டுச் சென்ற அக்டோபஸ் ஒன்று! சப்தம் கேட்டால் உடல் முழுவதையும் சுருக்கிக் கொண்டு கல்போல ஆக்கிக் கொண்டது...


படம்-15: இயற்கையின் எழில் - மண் போல இருந்தாலும் இவையும் கற்களே!


படம்-16: இயற்கை அமைத்த பாலம்! 


படம்-17: சூரிய உதயத்தினைப் பார்க்கச் சென்ற ஒரு காலையில்...


படம்-18: எனக்குள்ளும் உயிருண்டு... என்னைத் தொட்டு விடாதே!


படம்-19: சூரிய உதயம் - வெளியே வரலாமா எனக் கேட்கிறதோ சூரியன்...


படம்-20: இதோ வந்துட்டே இருக்கேன்... கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்ன சூரியன்! 

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் ஜீவி ஸார் பதிவுகளை நினைவு படுத்துகிறது.

    மரத்துண்டு - மீன் படம், சூரிய ஒளி படம் எல்லாம் மிக அழகு.  வீழ்ந்த மரம் மியூசியத்தில் இருக்கும் ஏதோ கலைப்பொருள்மாதிரி இருக்கிறது.    தண்ணீர் இலலாவிட்டாலும் ஆக்டொபஸ் உயிர் வாழுமா?  இயற்கை அமைத்த பாலம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் ஜீவி சார் பதிவுகளை நினைவுபடுத்தியதில் மகிழ்ச்சி ஸ்ரீராம். அவரது பதிவுகள் படித்து நாளாயிற்று - நின்று நிதானித்து வாசிக்க வேண்டிய பதிவுகள் தற்போது வெளியிடப்படும் மனம் சம்பந்தப்பட்ட பதிவுகள்.

      கடல் உள்வாங்கும்போது ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் மீதம் இருக்கும் - அப்படியான இடங்களில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த அக்டோபஸ்-உம் அப்படியே. மாலை மீண்டும் கடல் கரை தொடுவதால் கவலையில்லை!

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    முதல் வாசகம் அருமை.
    கடல் படங்கள் எவ்வளவு பார்த்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. தீவுகளின் கடல் வனப்புகள் அழகாக உள்ளது.

    கடலில் தவழ்ந்து தவழ்ந்து மீன் மாதிரியே மாறி விட்ட மரத்துண்டு நன்றாக உள்ளது. ரசித்தேன்.

    சூரியன் படங்கள் மற்ற இயற்கை காட்சி படங்கள் அனைத்தும் பார்வைக்கு இதமளிக்கின்றன.

    கல் பாலம் இயற்கை வடித்த சிலையாக கண்களை கவர்கிறது.

    வீழ்ந்த மரம் "நான் இன்னமும் வாழ்கிறேன்". என கூறுவதாக உள்ளது.

    அந்த ஆக்டோபஸ் மீண்டும்" கடலன்னை வந்து என்னை அழைத்துச் செல்ல வேண்டுமென" கண் மூடி பிரார்த்திப்பது போல் இருக்கிறது. அத்தனையும் அழகுடன் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல், மலை, வனம் என இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பார்க்கப் பார்க்க அலுப்பு தட்டுவதே இல்லை எனக்கு. சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் இழப்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

      படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      அக்டோபஸ் பிரார்த்தனை - நல்ல கற்பனை - மாலையே கடலன்னை மீண்டும் கரை தொடுவாள் என்று அதற்கு நம்பிக்கை உண்டு - மனிதர்களுக்கு தான் நம்பிக்கை இருப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகோவியம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அழகு...
    கடலோரத்தில் காற்றாட நடந்தாற் போல் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலோரத்தில் காற்றாட ஒரு நடை... ஆஹா இனிமையான அனுபவம் தான் அந்த நடை துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அன்பு வெங்கட், அந்தமான் இவ்வளவு அழகா.தங்குமிடம் எல்லாம் வசதியாக இருந்ததா.
    மிக மிக அழகான கடற்கரைப் படங்கள்.
    நல்ல காட்சிகள் அதற்கேற்ற காப்ஷன்ஸ். அந்த மீன் மரத்துண்டு, பாவப்பட்ட ஆக்டோபஸ்,அலைகள் ,டெட்வுட் எல்லாம் சூப்பர். மிக நன்றி மா. அந்தமான் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் அழகான இடம் தான் வல்லிம்மா.. தங்குமிடங்களும் நிறையவே உண்டு - ரிசார்ட்கள் உட்பட. அதிகம் அலைச்சல் இல்லாமல் பார்க்கலாம்.

      படங்களும் அதற்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சக்தி வாய்ந்தது ஆழ்மனது. சொன்னது யார்? ஓஷோ? படங்கள் நன்று. அந்த மானை பாருங்கள் அழகு என்ற அந்தமான் காதலி திரை பட பாடல்  நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னது யார் என்பது தெரியவில்லை - படித்ததில் பிடித்ததை இங்கேயும் பகிர்ந்து கொண்டேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. உங்கள் முதல் வருகையோ? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஆஹா... மகிழ்ச்சி. இதுவரை பெயரும் படமும் இல்லாமல் கருத்துரைத்ததில் மாற்றம் - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அழகு.
    இயற்கை அமைத்த பாலம் மிக அருமை.
    காத்து இருக்க சொன்ன சூரியன் அழகு.

    அத்தை இருக்கும் போது போகாமல் விட்டு விட்டேனே! என்ற ஆதங்கம் உங்கள் படத்தைப்பார்க்கும் போது தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... இப்போதும் கவலை இல்லை. திட்டமிட்டு ஒரு முறை சென்று வாருங்கள் கோமதிம்மா... படங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான படங்கள். அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். கடலின் வித விதமான காட்சிகள் கண்களைக் கவர்கின்றன. ஆக்டோபஸ் என்ன செய்யுமோ எனக் கவலைப் பட்டேன். பின்னூட்டங்களில் பதில் சொல்லி விட்டீர்கள். பட விழாவைத் தொடர்ந்து சென்று வந்த விபரங்களும் விரைவில் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா... சென்று வந்த விவரங்கள் எழுத வேண்டும். விரைவில் எழுதுவேன்.

      அக்டோபஸ் பற்றிய கவலை - :) உங்கள் நல்மனதுக்கு ஒரு நன்றி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அனைத்தும் அழகோ அழகு... ரசித்த வைத்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அந்தமானைப் பாருங்கள் அழகு!
    அந்த மானைப் பாருங்கள் அழகு!

    அழகே தான் வெங்கட்!

    அடிமரத்தில் துளிர்த்து நிற்கும் ஆரோக்கியமான இலையும்; வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று நீங்கள் கேட்கும் கேள்வியில் நிமிர்ந்து நிற்கும் மரக்கொப்பும் சொல்லும் வாழ்க்கைச் செய்திகள் நம் புதுவருட சங்கல்ப்பத்துக்கும் பொருந்தும்.

    பகிர்வுக்கு நன்றி வெங்கட். தொடர்ந்து காண ஆவல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மணிமேகலா ஜி. இன்னும் படங்கள் உண்டு. முடிந்தவரை வெளியிடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அருமை. அவைகளுக்கு தாங்கள் தந்திருக்கும் தலைப்புகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் படங்களுக்கான தலைப்புகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அற்புதமான படங்கள் அந்த படங்களுக்குக் கீழே கொடுத்திருக்கின்ற விளக்கம் அதைவிட அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் அதற்கான விளக்கங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கடல் என்றாலே அழகிய காட்சிகள்தான். நாங்கள் இருப்பதுவும் கடலுக்கு அண்மையில்தான்.படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....