அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். வாரத்தின் முதல் நாளாம் இந்த திங்கள் கிழமையை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?
ஒரு மென்மையான வார்த்தை; ஒரு கனிவான பார்வை; ஒரு அன்பான புன்னகை; ஆகியவற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்...
சென்ற மாதத்தின் இதே நாட்களில் நானும் தில்லி நண்பர்களும்
ஒரே குடும்பமாக இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா சென்று வந்தோம்.
நேற்றைய நிழற்பட உலா மூலம் சில காட்சிகளை நீங்கள் கண்டு ரசித்திருக்க முடியும். பார்க்(படிக்)காதவர்கள்
நேற்றைய பதிவினை பார்(படி)த்து வரலாம்!
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் ப்ளேயர்
நகரம். அங்கே இருக்கும் அபெர்தீன் பஜார் பிரபலமானது – மணிக்கூண்டு, நடைபாதைக் கடைகள்,
ஷோரூம்கள், பரபரப்பாக இயங்கக் கூடும் சாலை கொண்ட பஜார் இந்த அபெர்தீன் பஜார். அந்த
பஜார் பகுதிக்குச் செல்லும் வழியில் தமிழர்களின் பராமரிப்பில் அமைந்திருக்கும் ஒரு
ஆலயம் ஸ்ரீ வீர ஹனுமான் மந்திர். அழகான கோவில். தினமும் காலை ஆறு மணிக்குள் கோவில்
திறக்கப்பட்டு கோவிலை நடத்தும் ட்ரஸ்ட் உறுப்பினர்களே ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் என எல்லாப்
பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார்கள். நான் போர்ட் ப்ளேயரில் இருந்த இரண்டு மூன்று நாட்களும்
காலை ஆறு மணிக்கே சென்று ஆஞ்சனேயருக்கு ஒரு ஹலோ சொல்லி, காலை பூஜை முடிந்து கோவிலில்
கொடுக்கப்படும் சூடான பிராசதமும் சாப்பிட்டு வந்தேன் – ஒரு நாள் எலுமிச்சை சாதம், ஒரு
நாள் தயிர் சாதம் என விதம் விதமாக பிரசாதம் – பட்டர் பேப்பரில் வைத்து கொடுக்கிறார்கள்!
தலைப்பில் சொல்ல வந்த உழைப்பாளியின் கதையினை விட்டு கோவிலில்
கிடைக்கும் பிரசாதம் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என நீங்கள் நினைக்கலாம்! அந்தக்
கதைக்கு தான் வருகிறேன். கோவில் வளாகத்தின் அருகே இருக்கும் கடைகளில் கூட பெயர் பலகைகள்
தமிழில் தான்! வித்தியாசமான பெயர்களில் கூட கடைகள் உண்டு – ஹோட்டல் கட்டபொம்மன் என்று
கூட ஒரு உணவகம் உண்டு! அந்த உணவகம் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். இன்றைக்குச்
சொல்ல வந்த விஷயத்தினை இன்றைக்குப் பார்க்கலாம்! கோவில் சுற்றுச் சுவரை பக்கபலமாகக்
கொண்டு சிறு கூரை – அங்கே இரண்டு மேஜை, சில பெஞ்சுகள், இருக்கைகள் – அவ்வளவு தான் நம்ம
சிங்காரம் அவர்களின் கடை! காலை ஐந்து-ஐந்தரை மணிக்கே கடையைத் திறந்து விடுகிறார் சிங்காரம்
என்ற இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் உழைப்பாளி! மாலை ஆறு மணி வாக்கில் கடை மூடிவிடுகிறார்
– சீக்கிரமே இங்கே இருட்டு ஆகிவிடுகிறது - சுடச் சுடத் தேநீர், இட்லி, வடை என மூன்றே
மூன்று தான் விற்பனை – இட்லிக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார்!
விலை ஒன்றும் அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்! எது
எடுத்தாலும் பத்து ரூபாய் மட்டுமே! மல்லிகைப் பூ போன்ற மெத்து மெத்து இட்லி, எண்ணை
சொட்டாத மொறுமொறு வடை, பால்பவுடரில் போட்டாலும் சுவையான தேநீர் என மூன்றுமே பத்து பத்து
ரூபாயில்! வீட்டில் சாப்பிடும் அளவு சுவையானதாகவும் சுகாதாரமானதாகவும் கொடுக்கப்படும்
உணவு அந்தமான் தீவுகளிலும் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி தானே நமக்கும்! எங்கள் தங்குமிடங்களிலேயே
உணவும் உண்டு என்றாலும் சில வேளைகளில் சிங்காரம் அவர்களின் கடைக்குச் சென்று அவரோடு
பேசியபடியே சாப்பிட்டு வந்தோம் நானும் நண்பரும்! நண்பருக்கு அவர் கடை இட்லி, வடை ரொம்பவே
பிடித்துப் போய்விட அதைச் சாப்பிடுவதற்காகவே மீண்டும் ஒரு முறை போர்ட் ப்ளேயர் சென்று
வரலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அதுவும் சிங்காரம்
அவர்கள் பாசத்துடன் கொடுக்கவே சுவையும் அதிகரிப்பதில் ஆச்சரியமில்லை. நாங்கள் தில்லி
திரும்ப வேண்டிய காலையில் எங்களுக்காகவே சுடச் சுட காலை உணவாக இட்லி, வடை என அனைத்தும்
செய்து தந்தார் சிங்காரம்.
கடையில் தேநீர் அருந்தச் சென்றபோது அவரிடம் நானும் நண்பரும்
பேசிக் கொண்டிருந்தோம். அங்கே சென்ற நான்கு ஐந்து தடவையிலேயே அவர் தனது வாழ்க்கை பற்றி
நிறையவே எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். திருச்சி விராலிமலை அருகே இருக்கும் ஒரு
சிறு கிராமம் தான் சிங்காரம் அவர்களின் சொந்த ஊர். ஆனால் போர்ட் ப்ளேயர் வந்து பல வருடங்கள்
ஆகிவிட்டதாம். மகன், மகள், குடும்பம் என எல்லாமே இங்கே தான். வாழ வந்த இடம் போர்ட்
ப்ளேயர் என்றாலும் இங்கே இருந்து மீண்டும் தமிழகம் திரும்ப அத்தனை இஷ்டமில்லை இவர்கள்
யாருக்குமே. சிறிய கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாலும், மகன், மகள் என இருவரையுமே
நன்கு படிக்க வைத்திருக்கிறார். மகன் தமிழகக் கல்லூரி ஒன்றில் Aircraft
Engineering படித்து தற்போது போர்ட் ப்ளேயர் விமான நிலையத்தில் தற்காலிகப் பணியில்
இருக்கிறார். நல்ல வேலை விரைவில் கிடைக்க வேண்டும். மகளும் நல்லதொரு கல்லூரியில் பயின்று
வீட்டில் இருக்கிறார். வேலைக்குப் போவது அவரது இஷ்டம் – ஆனால் அதற்குள் திருமணம் முடித்து
வைத்தால் பிறகு அவர்கள் பாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கூடவே “நாங்க… இந்த வகுப்பைச் சேர்ந்தவங்க. நீங்களும் திருச்சி காரவுக, எங்க ஆளுக அங்கிட்டு
நிறையவே இருக்காக… ஏதேனும் நல்ல பையனா இருந்தா சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு சிறு கடை வைத்து தானும் பிழைத்து, தன் குடும்பத்தினையும் நல்ல நிலைக்குக் கொண்டு
வர உழைத்துக் கொண்டிருக்கும் சிங்காரம் அவர்களுடைய நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் என
வாழ்த்தினோம். கூடவே எங்கள் வயிறும் வாழ்த்தியது! சுடச் சுட இட்லியும் மொறுமொறு வடையும்
சுவையான சாம்பார் சட்னியுடன் உள்ளே சென்று இருந்ததே. ஒவ்வொரு முறை அங்கே சென்றபோதும்
இப்படி நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் அவரிடம். போர்ட் ப்ளேயர் பகுதியில்
நிறைய தமிழர்கள் – பெரும்பாலும் நம் தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள், ஆங்கிலேயர்
ஆட்சிக் காலத்தில் இங்கே கொண்டு வரப்பட்ட வேலைக்காரர்கள் வம்சாவழியினர் என நிறையவே
தமிழர்கள் – நிறைய தமிழ் கடைகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் என தமிழகம் போலவே
இருக்கிறது போர்ட் ப்ளேயர்.
எல்லாம் நன்றாகவே இருந்தாலும், சில பிரச்சனைகளும் இங்கே
உண்டு என்று சொல்லிக் கொண்டிருந்தார் சிங்காரம் – தற்போது வங்காளிகள் அதிகம் வந்து
விட்டார்கள் – எல்லாமே விலை அதிகம் – காய்கறி முதல் அரிசி வரை எல்லாமே மெயின் லேண்ட்
எனச் சொல்லப்படும் இந்தியாவின் மற்ற நகரங்களிலிருந்து கப்பல், விமானம் வழி தான் வர
வேண்டும். 150 ரூபாய்க்கு குறைவாக எந்தக் காய்கறியும் கிடைப்பதில்லை. வீட்டில் சிறு
தோட்டம் போட்டு விளைவித்தால் தான் உண்டு. தேங்காய்க்கு பஞ்சம் இல்லை – கொட்டிக் கிடக்கிறது
என்றாலும் தேங்காய் மட்டுமே உண்டு உயிர் வாழ முடியுமா என்ன? ஆனாலும் தில்லியைப் போலவோ,
மற்ற இடங்களைப் போல இங்கே மாசு இல்லை, சுத்தமான காற்று! அமைதியை விரும்பும் மக்கள்,
இயல்பான, சண்டை சச்சரவு அதிகம் இல்லாத வாழ்க்கை என நன்றாகவே இருக்கிறது வாழ்க்கை. மகளுக்கு திருமணம்,
மகனுக்கு நல்ல வேலை என இரண்டும் அமைந்து விட்டால் நானும் மனைவியும் இன்னும் சுகமாக
இருந்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார் சிங்காரம். உங்களைப் போன்றவர்களுக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு
இருங்கள் என்று வாழ்த்துகளைச் சொல்லியே போர்ட் ப்ளேயரிலிருந்து திரும்பினோம்.
பத்து ரூபாயில் இப்படி மல்லிப்பூ இட்லி, மொறு மொறு வடை
தருகிறார் என்று நினைக்கும்போது தமிழகத்தில் இருந்தாலும் இரண்டு இட்லி 80 ரூபாய் +
வரி என விற்கும் நம் ஊர் சாப்பாட்டுக் கடைகளின் நினைவும் கூடவே வந்து உறுத்துகிறது.
தில்லியில் இரண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டால் 150 ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த 150 ரூபாய்
இருந்தால் சிங்காரம் கடையில் மூன்று வேளை சாப்பிட்டு விடலாம்! லாபம் மட்டுமே குறிக்கோளாக
வைத்து இயங்கும் பெரிய கடைகள் வந்து இது போன்ற சிறு வியாபாரிகளை ஒழித்துக் கொண்டிருப்பதும்
மனதில் வருத்தம் தருகிறது. சிங்காரம் போன்ற நல்ல மனம் கொண்ட உழைப்பாளிகள் நம் தமிழகத்திலும் நிறைய தேவை தான்.
நண்பர்களே, இந்த நாளின்
நம்பிக்கை தரும் உழைப்பாளியின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும்
ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
வாழ்க சிங்காரம் அவர்கள்... அவர் கனவு நிறைவேறி, நல்லதே நடக்கட்டும்.இறைவனைப் பிரார்த்திப்போம். குறைவான விலை மட்டுமல்லாது, சுவையும் பிரமாதம் என்று சொல்கிறீர்கள். அவர் கைவண்ணத்திலேயே தயாரிக்கிறாரா?
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். கண்ணெதிரே சுடச் சுட வடை போட்டுத் தருகிறார். சட்னி, சாம்பார் வீட்டில் தயாராகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாழ்க்கையை குழப்பிக்கொள்ளாமல் அதிக ஆசை படாமல் இருக்கும் சிங்காரம் போன்ற எளிய மனிதர்கள் அசர வைக்கிறார்கள்!
பதிலளிநீக்குவாழ்க்கையைக் குழப்பிக்கொள்ளாமல், அதிக ஆசைப்படாமல் இருப்பவர்கள் குறைவு தான் Bபந்து ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//மகளுக்கு திருமணம், மகனுக்கு நல்ல வேலை என இரண்டும் அமைந்து விட்டால் நானும் மனைவியும் இன்னும் சுகமாக இருந்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார் சிங்காரம். //
பதிலளிநீக்குஅவர் எண்ணத்தை இறைவன் நிறைவேற்றி தருவார்.
உண்மையான உழைப்பாளி சிங்காரம் குடும்பம் வாழ்க வளமுடன்.
உண்மையான உழைப்பாளிகள் பெருகட்டும். நல்லதே நடக்க வேண்டும் என்பது தான் எனது ஆவலும் கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிங்காரம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குதில்லியில் இரண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டால் 150 ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த 150 ரூபாய் இருந்தால் சிங்காரம் கடையில் மூன்று வேளை சாப்பிட்டு விடலாம்! \இதற்காக அந்த்மான் போக முடியுமா
பதிலளிநீக்குஇதற்காக மட்டுமே அந்தமான் போக வேண்டாம்! சுற்றிப் பார்க்கப் போய் வாருங்கள் ஜி.எம்.பி. ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
திருப்தி மனிதர் சிங்காரம் அவர்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநியாயப்படி நேர்மையுடன் இருக்கும் திரு சிங்காரம் அவர்களின் நியாயமான ஆசை நிறைவேற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இவருக்குக் கிடைத்திருக்கும் இந்த மனத் திருப்தி எளிதில் யாருக்கும் கிடைக்காது!
பதிலளிநீக்குஉண்மைதான் கீதாம்மா... பலரும் எளிதில் திருப்தி அடைவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மற்றவர்களுக்கு வயிறார நல்ல உணவு கொடுக்கும் சிங்காரத்தின் நல்ல விருப்பங்கள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். அந்தமான் புகைப்படங்கள் இணைக்கவில்லையா?
பதிலளிநீக்குசிங்காரம் போன்ற நல்லவர்கள் இன்னும் இருப்பது மகிழ்ச்சி தான் பானும்மா... அந்தமான் படங்கள் ஞாயிறில் தனிப்பதிவாக ஒன்று வெளியிட்டேன். நீங்கள் பார்க்கவில்லை போலும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உழைப்பாளிகள் வாழட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு