சனி, 2 ஏப்ரல், 2022

காஃபி வித் கிட்டு - 147 - ஜென் கதை - சிந்த்பூர்ணி - பதிவர் சந்திப்பு - பூக்கள் - அடுத்த பயணம்

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

லாபமும், நஷ்டமும் நீ எடுத்த முடிவினால் வந்தது என்பதை நீ ஒப்புக்கொள்ள ஆரம்பித்தால் வெற்றி அடைவாய் - வாரன் பஃபெட்.

 

******

 

ரசித்த ஜென் கதை - ஒன்பது திருடர்கள்:

 

ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது.. இங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள்.

 

இவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர்.

 

கிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டுக் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.

 

விஷயம் அறிந்த ஒன்பது திருடர்களும் ஜென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர். குருவுக்கு அது தெரிந்துவிட்டது.

 

அப்போது அவர் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஜென் குரு தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பறந்து கொண்டிருந்த ஈயினை அடித்தார், பார்க்காமலே. ஒவ்வொரு முறையும் ஒரு செத்து விழுந்தது. ஒரு முறை கூட குறி தவறவே இல்லை.

 

ஒன்பது முறை…  ஒன்பது ஈக்களை மிகத் துல்லியமாக அடித்துக் கொன்றார். பின்பு திரும்பிப் பார்த்தார்.

 

மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை!

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: சிந்த்பூர்ணியில் கவலைகளை மறப்போம்...

 

2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சிந்த்பூர்ணியில் கவலைகளை மறப்போம்.... அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலுக்கான பாதையில் முன்னேறினோம். சாதாரணமாக இக்கோவிலில் நவராத்திரி சமயங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் அப்படி திருவிழாக்கள் இல்லாத காரணத்தினால் அத்தனை கூட்டமில்லை. மிகச் சுலபமாக தேவியை தரிசிக்க முடிந்தது. நின்று நிதானித்து அன்னையின் சரண் பற்றினோம். இக்கோவிலில் இருக்கும் தேவியின் பெயர் சின்னமஸ்திகா தேவி.

 

சிந்த்பூர்ணி கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. சக்தி பீடங்கள் பற்றிய கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சதி தேவியின் உடல் 51 பகுதிகளாக பிரிந்து 51 இடங்களில் விழ, அவ்விடங்களில் சக்தி பீடங்களாக தேவிக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மா சிந்த்பூர்ணி அப்படி ஒரு சக்தி பீடம் தேவியின் நெற்றி/தலைப் பகுதி விழுந்த இடம் என்று சொல்கிறார்கள். அதனால் இங்கே இருக்கும் தேவிக்கு தலை கிடையாது. அலங்காரம் தான்.

 

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சிந்தையில் இருக்கும் அனைத்து கவலைகளையும் போக்க வல்லவள் என்றும், அவளைச் சரணடைந்தால் போதும் என்றும் நம்புகிறார்கள்.  உலகியல் கவலைகளை மறந்து விட இத்தலம் சிறப்பானது என்றும், எல்லா கவலைகளையும் அன்னையிடம் விட்டு கவலையில்லாத மனிதனாக வாழ இதை விட வேறு வாய்ப்பில்லை என்றும் நம்புகிறார்கள்.  இக்கோவில் பற்றிய வேறு சில வரலாறும் உண்டு. அதைப் பற்றியும் வேறு சில அனுபவங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

 

முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்! 

 

******

 

பதிவர் சந்திப்பு - பதிவர் அமுதா கிருஷ்ணா :

 

வலைப்பூவில் எழுதி வந்த, தற்போது முகநூலில் எழுதிக் கொண்டிருக்கும் சகோ அமுதா கிருஷ்ணா ஒரு பயணப் ப்ரியை.  அவரது பயணங்கள் ஸ்வாரஸ்யமானவை.  சமீபத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக பயணத்தில் இருந்தார் - ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், தில்லி, உத்திரப் பிரதேசம் என சுற்றி வந்த இடங்கள் பல.  அது குறித்து அவர் தனது முகநூலில் எழுதி வருகிறார்.  ஹிமாச்சலிலிருந்து வாரணாசி செல்லும் வழியில் தில்லி வந்த போது நாங்கள் சந்தித்தோம்.  வீட்டிற்கு அவரும் சக பயணிகளும் வந்து ஒன்றிரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு சென்றார்கள்.  பயணம் பல நல்ல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருகிறது என்பதிலிருந்து மேலும் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம். இனிமையான சந்திப்பாக அமைந்தது!  அவரது முகநூல் பக்கத்தில் அவரது பயணங்கள் குறித்து படிக்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் நிழற்படம் - பூக்கள் :





 

டால்கட்டோரா பூங்காவில் நடைப் பயணத்தின் போதும் நண்பர்களின் சந்திப்பு நடந்தபோதும் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு!

 

******

 

இந்த வாரத்தின் தகவல் - அடுத்த பயணம் :

 

விரைவில் ஒரு பயணம் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது - எங்கே, எப்போது, என்ன இடம் போன்ற தகவல்களுடன் விரைவில் பதிவிடுகிறேன்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பயணம் செல்லப் போவது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.  வட இந்தியாவில் தான் பயணம் ! பயணத்தில் ஆரண்யமும் உண்டு! எந்த இடம் என்று யாராவது சொல்ல முடிந்தால் சொல்லலாம்! 

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

20 கருத்துகள்:

  1. ஜப்பான் கதை அருமை.

    பூக்களின் படங்கள் அழகு.

    புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி. வாழ்த்துக்கு நன்றி.a

      நீக்கு
  2. பயணங்கள் என்றுமே வாழ்க்கையில் இனிமை சேர்க்கும். சுவாரஸ்யம் கூட்டும். புதிய பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் பல விஷயங்களை நமக்குத் தருபவை. ஆதலினால் பயணம் செய்வோம்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மனோம்மா.

      நீக்கு
  3. ஜென் கதை அருமை...

    பட்டாம்பூச்சி போல் மலர்கள் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. ஜப்பான் கதை அற்புதம்.மலர்கள் படங்கள் அனைத்தும் கண்ணை கவர்ந்தது. உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்தியமைக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  5. வசந்த நவராத்திரியில் சக்தி பீட தரிசனம் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பானும்மா.

      நீக்கு
  6. வினோதமான பூக்கள்!  ஜென் கதை - மனபலமில்லாத திருடர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஶ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அன்பின் வெங்கட்,
    என்றும் நலமுடன் இருங்கள்.

    தாங்கள் அடுத்துப் பயணம் செய்ய இருப்பது மகிழ்ச்சி.
    நைமிசாரண்யமா:)
    பாதுகாப்புடன் சென்று வாருங்கள்.
    பதிவின் வாசகமும், ஜப்பானிய சென் கதையும்
    நுண்ணிய கருத்தைச் சொல்கின்றன.

    நல்லதொரு பதிவிற்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதில் சரிதான் வல்லிம்மா. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  8. பூக்களின் படங்கள், ஜென் கதை எல்லாமே மிக அருமை.

    உங்கள் பயணம் மீண்டும் தொடங்கியிருப்பது பற்றி மகிழ்ச்சி. எங்களுக்கும் பல தகவல்கள் படங்கள் கிடைக்கும்.

    வாழ்த்துகள் வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. பயணம் குறித்து சில தகவல்களை முகநூலில் எழுதி வருகிறேன்.வலைப்பூவில் எழுத வேண்டும்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. முதலில் கண்ணில் பட்டது உங்கள் பயணம் பற்றிய தகவல். வாழ்த்துகள் ஜி! ரொம்ப நாள் கழித்து இல்லையா..சூப்பர்.

    ஆரண்யம் என்றால் காடு....காட்டுக்குள் பயணமா..தண்டகாரண்யம் என்று ராமாயணத்தில் வருமே அந்தப் பகுதியோ? அது பெரிய பரப்பு அதில் சத்திஸ்கார் பகுதிப்பயணமோ??!!! சரி எதுவோ காட்டுக்குள் போகப் போறீங்க என்று தெரிகிறது. செம திரில் பயணம் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் ஜி. எதிர்பார்க்கிறேன் இடம் பதிவு எல்லாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பயணம் அமைந்தது. பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. முகநூலில் பயணம் குறித்த தகவல்கள் எழுதி இருக்கிறேன். இங்கே இனிமேல் தான் எழுத வேண்டும். த்ரில் பயணம் அல்ல, பக்தி மார்க்கம்! :)1

      நீக்கு
  10. ஆரண்யம் என்றதும் பல மனதில் ஓடியது இன்னொன்று நினைவுக்கு வந்தது. நைமிச்சாரண்யமும் அதுவோ?!!! அது முதல் கருத்தில் சொன்னேனா விட்டுவிட்டேனோ...

    பூக்கள் படம் மிக மிக அழகு. என்ன ஒரு கலர் ! vibrant!

    ஜென் கதை - சிரித்து ரசித்தேன்.

    ஓ பதிவர் அமுதா முகநூலில் எழுதுகிறாரா.

    சிந்த்பூரணி பற்றி வாசிக்கிறேன் ஜி

    கீதா




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி. இந்தப் பயணத்தில் முதலில் சென்ற இடம் நைமிசாரண்யம் தான். அதைத் தொடர்ந்து இன்னும் சில இடங்கள்.

      பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....