திங்கள், 4 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பன்னிரெண்டு – மரத்தடி வகுப்புகள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய கேதார் தால் நிழற்பட உலா பதிவினை படிக்காதவர்கள்/பார்க்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமேஇன்று காலை வெளியிட்ட மகளுக்கு ஒரு கடிதம் பதிவினையும் படிக்காதவர்கள் படித்துவிட வேண்டுகிறேன்.  இந்த பதிவினை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வசதியென்பது பணத்தில் மட்டுமில்லை; மனசுக்கு நிம்மதியான வாழ்க்கையும் வசதியான வாழ்க்கை தான் - யாரோ!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

யாரிவள்! பகுதி பன்னிரெண்டு - மரத்தடி வகுப்புகள்!



 

இவள் இப்போது எட்டு வயது குட்டிப்பெண்ணாக வளர்ந்துள்ளாள்! தன்னுடைய எண்ணத்தில் உதித்த சிந்தனைகளை எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது இவளுக்கு! படிப்பில் சுட்டியாகவும், ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவியாகவும் இருந்தாள்.

 

எவ்வளவோ மாற்றங்கள் இவளுக்குள் உடலிலும், மனதிலும் ஏற்பட்டாலும் அம்மா கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் உணவை அப்படியே திரும்ப வீட்டுக்கு சுமந்து வருவதில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..🙂 வீட்டிலும் அதே பாடு தான்! முதுகில் ரெண்டு அடியுடன் சாப்பிட்டால் தான் வீட்டுக்குள் வரலாம் என வீட்டுக்கு வெளியே படியில் உட்கார வைத்தாலும், சாப்பாட்டு தட்டோடு பல மணிநேரங்கள் உட்கார்ந்து கொண்டிருப்பாள்..🙂

 

பள்ளியில் சரியாக சாப்பிடாத பிள்ளைகளை எல்லாம் தலைமையாசிரியர் முன்பு அமர வைத்து அவரின் கண்பார்வையில் சாப்பிட வைத்தனர்! அம்மாவின் புகாரின் பேரில் இவளும் அந்த கும்பலில் உட்கார வைக்கப்பட்டாள்! அப்படியாவது சாப்பிட ஆரம்பித்து இவள் திருந்தினாளா என்றால் ம்ம்ஹும்ம்..🙂 ஒவ்வொரு நாளும் எப்படியோ தப்பித்து விடுவாள்..🙂

 

மெட்ரிகுலேஷன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்த இவள் பள்ளிக் கட்டணத்தை உயர்த்தியதால் அருகிலிருந்த அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டாள். குட்டித்தம்பி இரண்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்.  மாதம் நாற்பது ரூபாயாக இருந்த கட்டணம் நூறு ரூபாயாக உயர்த்தப்பட்டது! அப்பாவால் இரு பிள்ளைகளுக்கும் செலவிட இயலாத  நிலை!

 

ஆசிரியர்களுக்கோ இவளை அனுப்ப மனமேயில்லை! இவளை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். அப்பா அதற்கெல்லாம் மறுப்பு சொல்லி அரசுப் பள்ளியில் இருவரையும் சேர்த்து விட்டுவிட்டார்.

 

மெட்ரிகுலேஷன் பள்ளியில் மூன்றாம் வகுப்புக்குள் கணினி அறிவியல் வரை பயின்றவள்! இங்கே நான்காம் வகுப்பில் ஆங்கிலத்தை அடிப்படையிலிருந்து கற்றாள். அத்தனை ஏற்றத்தாழ்வு இருந்தது கல்விமுறையில்! இங்கேயும் ஆசிரியர்களுக்கு பிடித்த பெண்ணாக மாறிப் போனாள்.

 

ஓட்டுக் கட்டிடமாக இருந்தது பள்ளி.  பெஞ்சுகள் பற்றாக்குறையால் கீழே அமரும் நிலை! ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில் இடப்பற்றாக்குறையால் அவ்வப்போது மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்றன! மரத்தடியில் நடைபெற்ற வகுப்புகள் இவளுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது! 

 

காற்றோட்டமாய் பெரிய குடை போன்று பரந்து விரிந்த மரத்தின் நிழலில் மண்ணில் அமர்ந்து  எல்லோரும் ஆசிரியர்  சொல்லித் தரும் பாடங்களை கவனிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் சொல்லித் தரும் பாடத்தில் வரும் கதாப்பாத்திரமாய் தன்னை நினைத்துக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்!

 

மண்ணில் அமர்ந்திருப்பதால்  பாடத்தின் இடையே அங்கே இருக்கும் எறும்புகளின் இருப்பிடங்கள், அவை உணவை சேமிக்கச் செய்யும் திட்டமிடல்கள், ஊர்ந்து செல்லும் மரவட்டை என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதில் இவளுக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது! 

 

அங்கே இவள் சென்ற சுற்றுலாக்கள், கற்ற பாடங்கள் போன்றவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அனுபவங்கள்.  ரோஷ்ணியும் உங்களைப்போல பள்ளியில் சாப்பிடுவதில் அடமா, சமர்த்தா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணி சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார் ஶ்ரீராம். அது பள்ளியாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  2. அன்புள்ள ஆதி, என்னுடைய பள்ளி காலங்களில் இப்படி மரத்தின் அடியில் அமர்ந்து பாடங்கள் நடந்த்தியது ஞாபகம் வந்தது. நானும் தங்களை போலவே 6ம் வகுப்பு வரை sacred heart convent பள்ளியிலும் பின்பு 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியிலும், தொடர்ச்சியாக அரசு கலை கல்லூரியிலும் படித்தேன். இப்பொழுது தான் இத்தனை ஆர்பாட்டம் பள்ளிகளில் சேர்க்க. பள்ளியின் இனிய நாட்களை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.சாப்பிடாமல் இருந்ததற்கு இப்பொழுது தண்டனையாக என் மகன், என்னைப் போலவே சாப்பிட அடம் பிடிக்கின்றான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது பள்ளி நினைவுகளையும் இந்தப் பதிவு மீட்டு எடுக்க உதவும்படி இருந்ததில் மகிழ்ச்சி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. என்ன அருமையான் அனுபவங்கள். சாப்பாட்டில் அடமா!! சுட்டிக் குட்டி!!

    எனக்கும் பள்ளியில் மரத்தடி அனுபவம் உண்டு அதே போல எறும்பு பூச்சிகளைக் கவனித்ததுண்டு. அந்த குணம் மகனுக்கும் இருந்தது!!

    தொடர்கிறேன் உங்கள் சுவாரசியமான அனுபவங்களை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. உங்கள் அனுபவங்களும் நினைவுக்கு இப்பதிவு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  5. சாந்திநிகேதன் பள்ளி போல ! நல்ல அனுபவம்.

    சொல்லும் விதம் சுவாரசியம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. நல்ல அனுபவங்கள்.

    மரத்தடி வகுப்புகள் எமக்கு ஐந்தாம் வகுப்பு வரை கோடையில் இடையிடையே இருந்தன மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்தடி வகுப்புகள் மகிழ்ச்சி அளிப்பவை தான் மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....