வியாழன், 21 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - உத்திராகண்ட் - மலையேற்றம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்து செல்ல தயார் செய்து கொள்ள வேண்டும். 

 

******

 

ருபின் பாஸ் குறித்து இது வரை இரண்டு பகுதிகளாக வெளியிட்டு இருக்கிறேன். முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! பயணம் குறித்தும் தொடர்ந்து நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு ப்ரேம்!

 

*****



கோசங்கு கிராம சாலை....

 

எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள் (13-06-2016) அதிகாலையில் எழுந்து காலை உணவை தயார் செய்தோம். காலை 6.15 மணியளவில், எங்கள் பயணத்தின் அடுத்த கட்ட இலக்கான ஜாக்காவிற்கு ஜிஸ்குன் கிராமத்தின் வழியாக பயணத்தைத் தொடங்கினோம். ருபின் ஆற்றின் கரையோரமாகவே 15 நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு மலையேற்றம் தொடங்கியது.  காலை 7.00 மணி அளவில் நாங்கள் கோசங்கு என்ற கிராமத்தின் சாலையில் இருந்தோம்.



சாலையோரத்தில் தொலைவைச் செல்லும் கற்கள்....

 

இந்தச் சாலை உள்ளடங்கிய கிராமங்களாகிய டோட்ரு (DODRU), க்வார் (KWAR) போன்ற கிராமங்களை ஷிம்லா மாவட்டத்தில் உள்ள ரோடு (ROHRU) எனும் வளர்ச்சியடைந்த நகரத்துடன் இணைக்கிறது.  அது மட்டுமல்லாது இந்த சாலை, கடல் மட்டத்திலிருந்து  14830 அடி உயரத்தில் இருக்கும் சான்ஷல் பாஸ் வழியே அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சான்ஷல் பாஸ் பகுதிகள் நவம்பர் முதல் ஏப்ரல் வரை பனியால் மூடப்பட்டு இருப்பதால் ரோடு மற்றும் க்வார் கிராமங்கள்  ஷிம்லா உடன் தொடர்பில்லாமல் இருக்க வேண்டியிருக்கிறது!  ஆறு மாதங்கள் வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டிய நிலை தான் இன்றைக்கும் இங்கே!



ஜிக்சுன் கிராமத்தில் வசிக்கும் நபர்களில் சிலர்....
 

இந்தப் பாதை வழி எங்கள் இலக்கு பயணிக்கும் போது வழியில் வரும் ஜிக்சுன் கிராமமும் இருக்கிறது.  அதன் பிறகு எங்கள் இலக்கான ஜாகா கிராமம் வரை செல்லத் தேவையான சாலையும் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  (தற்போது சாலை அமைக்கப்பட்டிருக்கலாம்!) இந்த சாலை வழி ஜிஸ்குன் கிராமம் வரை, அங்கே கிடைக்கும் ஜீப் மூலம் எங்களால் பயணித்திருக்க முடியும் என்றாலும் நாங்கள் அங்கே சென்று சேர வேண்டி நான்கு கிலோமீட்டர் தொலைவினை நடந்தே கடப்பதாக முடிவு செய்தோம்.  அந்த நடைப்பயணத்தில் ருபின் நதியின் ஓரமாகவே நடந்து சென்ற போது, நதியின் ஓரங்களில் இருந்த சில கிராமங்களை பார்த்துக் கொண்டே சென்றது எங்களால் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். 



நதியும் நதியின் குறுக்கே பாலமும்....



ஆடுகள்....


மேய்ப்பர்கள்....
 

வழியில் சில மேய்ப்பர்களை அவர்களுடைய ஆட்டு மந்தையுடன் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறைகள் குறித்து உரையாடினோம். தொடர்ந்து பயணித்த போது அந்த சாலை மேல் நோக்கிய ஒரு மாற்றுப் பாதையில் செல்ல, அந்த வழியே நாங்களும் தொடர்ந்தோம்.  சாலை மோசமான நிலையில் இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து பயணித்து காலை 10.15 மணியளவில் ஜிஸ்குன் கிராமத்தின் எல்லைகளை அடைந்தோம். அங்கே ஒரு கோப்பை தேநீர் அருந்திவிட்டு, அங்கேயே மதிய உணவு சாப்பிட முடிவு செய்தோம். அந்த உணவகத்தின் இளம் உரிமையாளர், மதிய உணவு தயாரிக்க குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தேவைப்படும் என்றும், அதுவரை நாங்கள் ஒரு அறையில் ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார். 



ஓய்வெடுத்தபோது....



கிராமத்து மனிதர்கள்....

 


கிராமத்தில் குழந்தைகள்....

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கே ஓய்வெடுத்த பிறகு, நாங்கள் எங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு, ஜிஸ்குன் கிராமத்தின் வழியாக மேலே செல்லத் தொடங்கினோம். வழியில் சில வீடுகள் மற்றும் அந்த வீடுகளில் இருப்பவர்களின் சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம்.  சுமார் ஒரு கிலோமீட்டர் கீழ் நோக்கிய பாதையில் நடந்த பிறகு, ஒரு ஓடையில் மீது அமைக்கப்பட்ட சிறிய மரப்பாலத்தைக் கடந்தோம்.  அதன் பிறகு ஜாக்கா நோக்கிய செங்குத்தான மலையேற்றம் தொடங்கியது. மெதுவாகவும் மன உறுதியுடனும் அந்த செங்குத்தான பாதையில் தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த பிறகு ஒரு குன்றின் மேல் தொங்கிக்கொண்டிருப்பது போல அமைந்த அழகான ஜாக்கா கிராமத்தைப் பார்த்தோம். 



தொங்கும் வீடுகள்....


சிறுமியும் சிறுவனும்....
 

அந்த இடம் வரை மலையேற்றம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது மட்டுமல்லாது எங்கள் ஆற்றலை அப்படியே உறிஞ்சி எடுத்தது போல இருந்தது.  நாங்கள் வழியில் இருந்த கிராமத்தில் ஒரு சிறுவனையும் ஒரு சிறுமியையும் சந்தித்தோம், அவர்களின் பணிவு மற்றும் விருந்தோம்பல் எங்களை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து மேலும் அரை மணி நேரம் மேல்நோக்கி நடந்த பிறகு, கிராமத்தில் வீடு வைத்திருந்த உரிமையாளர், எங்களுக்கு சைகை செய்து அந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னதோடு, அந்த வீட்டில் இருந்த ஒரு அறையை எங்களுக்குக் காண்பித்தார்.  மேலும் அவரது வீட்டிலேயே உணவு வசதியும் இருந்ததால் நாங்கள் அங்கேயே அன்றைய இரவு தங்குவது என்று முடிவு செய்தோம். மாலையில் கிராமத்தின் உள்ளே சென்று மாலையில் கிராமத்தின் சில படங்களை எடுத்தோம்.  அடுத்த நாள் பயணத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை வரும் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள்.

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

18 கருத்துகள்:

  1. அறியாதவர்களாக இருந்தாலும், 'இங்கே தங்கி கொள்ளுங்கள்' என்று இடம் காட்டும் ணல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.  சுலபமாக எல்லோரும் படம் எடுக்க  சம்மதிக்கிறார்கள் போலும்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பகுதிகளில் இருக்கும் மனிதர்கள் - நல்லவர்கள் தான். எல்லா இடங்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பழகுவதற்கும் இனிமையானவர்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதிவில் வந்திருக்கும் படங்களூம்
    அதில் வரும் மகளிர் மற்றும் குழந்தைகளையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
    இத்தனை செங்குத்துப் பாதையில் எப்படித்தான் ஏறினார்களோ . மலைப்பாக இருக்கிறது.
    அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள். மலைச் சரிவில்
    அமைந்திருக்கும் வீடுகள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கிராமத்து பெண்கள் அழகாக இருக்கிறார்கள்.
    படம் பிடிக்க சம்மதம் சொன்னது ஆச்சர்யமே...

    பதிவு சுவாரஸ்யமாக செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் சென்ற நண்பர்களும் அதே மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது உள்ளூர் பாஷையும் (பஹாடி!) அறிந்தவர்களும் என்பதால் படம் பிடிக்கச் சம்மதம் சொல்லி இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பயணம் ரசிக்கும்படி இருக்கிறது... நகரத்து மனிதர்களுக்கு இத்தகைய கிராம, மலை, ஆறு, இயற்கைச் சூழ்நிலை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். இயற்கைச் சூழலுக்கு சென்று வருவது நல்ல விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பயணம் அசாத்தியமான பயணம்!! அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்காதா என்று மனம் நிஜமாகவே ஆசைப்படுகிறது. அந்தப் பெண்மணிகள், சிறுவன் சிறுமி, குழந்தைகள் மேய்ப்பர்கள் எல்லார் மனதும் கண்களில் தெரிகிறது. அன்பு! அழகு! என்ன அழகு மனிதர்கள். தங்கச் சொல்லி உபசரிப்பு, குழந்தைகளின் அன்பு உபசரிப்பு பணிவு....ஆமாம் எளிமையான மனிதர்கள்.

    படங்கள் மனதை ரொம்பக் கவர்ந்தன என்பதோடு நாமும் அவர்களைச் சந்திக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றவைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி பயணங்கள் செய்ய எனக்கும் ஆசை தான். இன்னமும் சிறு வயதிலேயே பயணத்தினை தொடங்கி இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. இனிமையான மனிதர்கள், சிறப்பான சூழல் என எல்லாமே பிடித்தவையாக இருக்கும் இந்த இடங்களில். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வாசகம் அருமை

    இந்தக் கிராமங்கள் குறித்து அறியும் போது வியப்பு, 6 மாதம் வெளியுலகத் தொடர்பு இல்லாமல்...சாப்பாட்டிற்குத் தேவையானவற்றை சேமித்து வைத்துவிடுவார்கள் போலும். அந்த வீடுகள் எல்லாம் வாவ் போட் வைக்கின்றன. தினசரி சாப்பாடு தேவையானவை எங்கு கிடைக்கும் எந்த இடத்திற்குச்சென்று வாங்குவார்கல் என்பதும் கூடவே எழுந்தது.

    பாலம் உள்ள படம் அருமை அழகு! படங்கள் எல்லாம் அருமை மனதை ஈர்க்கின்றன. சிறப்பான பயணத்தை உங்கள் நண்பர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆவலுடன் தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      ஹிமாச்சல் மற்றும் உத்திராகண்ட் பகுதிகளில் நிறைய கிராமங்கள் வருடத்தின் ஆறு மாதங்களுக்கு மேல் வெளியுலகிலிருந்து தொடர்பே இல்லாமல் இருப்பவை. ஹிமாச்சலில் சில இடங்கள் இப்படிக் கண்டதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. சிரமம் என்றாலும் இந்தப் பயணம் ரசனை மிகுந்துள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமங்கள் நிறைந்த பயணம் என்றாலும் ரசனையானது தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மிகவும் அருமையான ரசனையான பயணம். படங்களும் மிக அழகு. ரம்மியமான சூழலில் அழகான மக்கள், கிராமம் எல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். படத்தில் பார்க்கும் எங்களுக்கே அப்படி என்றால் நேரில் பார்த்த அனுபவித்த அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம்/பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. கிராமங்களும் நல்மனம்கொண்டு தங்க இடம் கொடுக்கும் மனிதரும் உதவும் இளகிய மனம் படைத்த மக்களும் காண்பதற்கு அரிது. அவர்கள் நன்குவாழ பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....