வியாழன், 7 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதினைந்து– வாழைத்தண்டு மடலில் ஒரு மண்டபம்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய யாரிவள் பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை! முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழக் கற்றுக் கொள்வோம் - யாரோ!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே!

 

யாரிவள்! பகுதி பதினைந்து - வாழைத்தண்டு மடலில் ஒரு மண்டபம்!


 

கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த அந்தக் குடியிருப்பின் விளையாட்டுத் திடலில் மாதந்தோறும் சுவற்றில் பார்த்த சினிமாக்களை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாள் அல்லவா! அதே விளையாட்டுத் திடலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் ஒரு  சிறப்பான நிகழ்வு தான் ஐயப்ப பூஜை! அந்த ஒரு வாரம்  விழாக்கோலத்துடன் குடியிருப்பே அமர்க்களப்படும்!

 

இதற்காக கேரளாவிலிருந்து யானை வரவழைக்கப்பட்டு, செண்டை மேளங்கள் முழங்கிட, பந்தல் அமைக்கப்பட்டு சாஸ்தாவை வழிபட ஏற்பாடு செய்யப்படும். வாழைத்தண்டின் மடல்களால் ஆன அழகான மண்டபம் உருவாக்கப்பட்டு அதில் தான்  ஐயப்பன் அருள்பாலிப்பார்! வேத மந்திரங்களும், சரண கோஷங்களும் அதிர்வலைகளை ஏற்படுத்துமாறு இருக்கும்!

 

பூஜையை ஒட்டி மூன்று நாட்களுக்கு குடியிருப்பு மக்களுக்கு அங்கே அன்னதானம் ஏற்பாடு செய்யப்படும். மூன்று வேளையும் தலைவாழை இல்லையில் மணக்க மணக்க கேரளத்து உணவுகள் பரிமாறப்படும். அடை பிரதமன், கோதுமை பிரதமன், நேந்திரங்காய் உப்பேரி, இஞ்சிப்புளி, அவியல் , தோரன், எரிசேரி என அனைத்தும் இடம்பெறும்!

 

பூஜையன்று மாலை பட்டுப்பாவாடை சரசரக்க பெண் குழந்தைகள் கைகளில் விளக்கு ஏந்தி செண்டை மேளங்களும், யானையும் உடன் வர இவர்கள் பகுதியிலிருந்து  நடையாக கலெக்டர் பங்களா அருகில் உள்ள சாரதாம்பாள் கோவில் வரை அழைத்துச் செல்லப்படுவர். பின் மீண்டும் பூஜை நடைபெறும் இடத்துக்கு திரும்ப வேண்டும். இவளும் சிங்காரித்துக் கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்கள் விளக்கு ஏந்தி சென்றிருக்கிறாள்! பெரியவளான பின் செல்ல இயலாது!

 

அந்த ஒருவாரம் முழுவதும் அவ்வப்போது விளையாட்டுத் திடலுக்கு ஓடிச்சென்று  சிறு பிள்ளைகளுக்கு யானையை பார்ப்பதில் அத்தனை ஆர்வம்! யானை இப்போது என்ன செய்கிறது? எப்படி சாப்பிடும்? நம்மள மாதிரி படுத்து தூங்க முடியுமா? எப்படி குளிக்கும்? என்று வரிசையாக கேள்விகளை பாகனிடமும், விழாக் கமிட்டியில் உள்ளோரிடமும் கேட்டுக் கொண்டிருப்பர்..🙂

 

குதூகலத்துடன் சுற்றி வந்து பார்க்கும் பிள்ளைகள் யானையின் ஒரு சப்தத்தை கேட்டவுடன் அலறியடித்துக் கொண்டு தெறித்து ஓடுவார்கள்..🙂 மீண்டும் அதே வேடிக்கைத் தொடரும்..🙂 இவளும் அந்தக் கூட்டத்தில் ஒருவள் என்று சொல்லவும் வேண்டுமா!!!!

 

இப்படி அந்தக் குடியிருப்பே கோலாகலமாக கொண்டாடும் விழாவாக இருக்கும்! சுற்றிச் சுற்றி அக்கம் பக்கத்தில் மலையாளிகள் வசித்ததால் அவர்களின் உணவு, கலாச்சாரம், உடை, வழிபாடு என்று அனைத்தும் இவளுக்குள் பதிந்து போனது. அதோடு அவர்களின் பாஷையும் இவளுக்கு மனசிலாகும் கேட்டோ! 

 

தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. யானையைப் பார்ப்பதில் அந்த வயதில் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.ஓ...  இதுமாதிரி நிகழ்வுகள் எங்கள் குடியிருப்புகளில் நிகழ்ந்ததில்லை.  குடியரசு தின, சுதந்திர தின கொண்டாட்டங்கள் போட்டிகள், விளையாட்டுகள், காலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொண்டாட்டங்கள் என்றுமே மகிழ்ச்சி தரக்கூடியவைதான். தங்களின் வருகைக்கும் பதிவு குறித்த கருத்துக்களை நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. //அவர்களின் பாஷையும் இவளுக்கு மனசிலாகும் கேட்டோ//

    ஹா.. ஹா.. ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ஆதிகுட்டிக்கு தோன்றிய யானை பற்றிய நினைப்புகளும் கேள்விகளும் அருமை.
    நானும் சிறு வயதில் நிறைய ஐயப்ப பீஜைகளில் கலந்து கொண்டு இருக்கிறேன்.
    நினைவுகள் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பதிவு குறித்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. ரொம்ப மகிழ்ந்திருப்பீர்கள் அதுவும் ஆனை வேறு. நல்ல மகிழ்வான அனுபவங்கள் இல்லையா. அந்த வயதில் சுவாரசியம். இப்போதும் யானை என்றால் சுவாரசியம் தான்.

    ஆமாம் ஆதி கோயம்புத்தூர் பகுதியில் ஐயப்ப பூஜை நன்றாக நடக்கும் அதுவும் கேரளத்தவர் நிறைய இருப்பதால். ஆனை பற்றிய உங்கள் அனுபவங்கள் எனக்கும் சிறு வயதில் டிட்டோ. ஊரில்.

    இப்பவும் நடக்கிறதா?

    இந்தத் திடலில்தான் மகனுக்குக் கராத்தே வகுப்பு நடக்கும். தினமும் நான் அவனை வண்டியில் வைத்துக் கொண்டு பீளமேட்டிலிருந்து வருவேன். மூன்று வருடங்கள். 97, 98, 99 காலை 6 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும். சில சமயம் 5.30க்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணை என்றாலே எல்லோருக்கும் சந்தோஷம் தான். தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. மகிழ்சியான நினைவுகள் தொடருட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  7. ஆமாம் ஐயப்ப பூஜைக்கு இப்படி வாழைமரப்பட்டையிலிருந்து அமைப்பதுண்டு. ஆனையும் ஜெண்டையும் இணைந்ததுதான் பெரும்பாலான கேரளத்து திருவிழாக்கள்.

    மகிழ்வான இனிமையான நினைவுகள். தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. யானை பார்த்த இனிய நினைவுகள். எங்கள் பகுதியில் கோவில் திருவிழாக்கள் வேட்டை திருவிழா வேஷங்களும்தான் .

    அப்பா மத்திய மாகாணத்தில் இருந்ததில். பெரகரா பார்க்க அழைத்துச் செல்வார் அங்குதான் யானைக்ககூட்டத்தை பார்த்து அதிசயித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இனிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....