செவ்வாய், 4 ஜூலை, 2023

கதம்பம் - பொழுது போக்கு - Pico work - என்ன பேசுவது? - 10 ரூபா தகராறு! - சீதாப்பழ ஐஸ்க்ரீம்! - Minimalism...!! - சுத்தம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தினம் தினம் பொழுது போக்கு - 22 ஜூன் 2023:



ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒரு விதத்தில் உபயோகமானதாய் தான் செலவிடுகிறேன். மகளுக்கு இன்னும் கல்லூரி துவங்காததால் Daily Routine என்பது இல்லாமல் அன்றாடம் எனக்கு நானே ஒரு திட்டமிடலுடன் செயல்படுகிறேன். கூடலழகி இரண்டாம் பாகம் வாசிப்பில் இருக்கிறது! ஆதித்ய கரிகாலனின் வாழ்வில் ஏற்படும் அதிரடியான திருப்பங்களுடன் பயணிக்கிறது!


மகள் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் முழுவதுமாக வாசித்து விட்டாள். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் விதத்தில் இருப்பதாய் சொன்னாள்! புத்தக வாசிப்பும், மதிய நேரத்தில் ப்ரைமில் படம் பார்ப்பதுமாக அவளின் பொழுதுகள் செல்கிறது! கல்லூரி திறந்து விட்டால் நேரம் சரியாக இருக்கும்!


Pico work



டெல்லியில் புடவை, துப்பட்டா போன்றவற்றிற்கு ஓரம் அடிப்பதற்கு பதிலாக pico தான் செய்து கொள்வார்கள். என் தையல் டீச்சர் (என்னவர் தான்!) வேறு அவ்வப்போது அசரீரி போல் என்னிடம் 'எப்பவும் புடவைக்கு ஓரம் தானே தைக்கிற! ஒரு தடவை  பிகோ பண்ணி பாரேன்! என்று சொல்லிக் கொண்டிருந்தார்..🙂 செய்து பார்த்த பின்பு தான் அட! ஈஸியா இருக்கே என்று தோன்றியது...🙂


என்ன பேசுவது???


மகள் புத்தகம், அலைபேசி, லேப்டாப் என்று நேரத்தை செலவிடுகிறாள்! ஏதாவது பேசிண்டு இருக்கலாம் கண்ணா! என்றால் என்னம்மா பேசறது!! என்கிறாள்..🙂


மாலை நடைப்பயிற்சியின் போது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கும் என்னவரிடம் சற்று நேரம் பேசலாம் என்றால் 'என்னம்மா பேச இருக்கு!! திரும்பத் திரும்ப ஒரே விஷயங்கள் தான் என்கிறார்...🙂 அது சரி!! 21 வருடங்கள் ஆகி விட்டதே...🙂


*&*&*&*&*&*&


10 ரூபா தகராறு! - 23 ஜூன் 2023:




10ரூ கம்மி பண்ணி குடுத்தா தான் என்னய்யா???


ஏம்மா! இந்தக் கடையே பத்து ரூபா கடை தாம்மா! அதெல்லாம் குறைக்க முடியாது!


மூணு நாலு வாங்கினா பத்து ரூபா கொறைச்சு தான் குடுக்கணும்!


அட போம்மா! யாவாரத்த கெடுத்துகிட்டு...! மொதல்ல நடைய கட்டு! உன்ன மாதிரி நாலு பேர் வந்தா போதும்....! 


உன்ன மாதிரி ஆளுங்க கடை நடத்தினா நாங்கள்லாம் என்ன ஆகறது...! என்று தொடர்ந்து தகராறு அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


45, 65 என்று முன்பெல்லாம் ஆங்காங்கே சைனா பஜார் நடைபெற்றுக் கொண்டிருக்கும்! இந்த பஜார்களில் டெல்லியிலும் வாங்கியிருக்கிறேன்! இங்கு வரும் போதும் வாங்கியிருக்கிறேன்! இந்த பஜார் சில நாட்களே நடைபெறும்! பின்பு வேறு இடத்திற்கு மாற்றி விடுவார்கள்!


அங்கே வாங்கியவை என்றால் நினைவில் இருப்பது வீடு போன்ற அமைப்பில் ஆடியோ கேசட்டுகளை வைத்துக் கொள்வதற்கான அலமாரியும், ஒன்றின் உள்ளே ஒன்றாக ஆறு டப்பாக்களும் இந்த பஜார்களில் தான் வாங்கியிருக்கிறேன்! 


அப்போது திருவரங்கத்தில் ராஜகோபுரம் அருகே காந்தி ரோட்டில்  'யானை கட்டி சத்திரம்' என்று சொல்லப்படும் மண்டபத்தில் நடைபெறும்!


இப்போது எதையெடுத்தாலும் 10ரூ என்ற பெயரில் நிரந்தரமான கடைகளாகவே அவை போடப்பட்டுள்ளன. பெரும்பாலானவை அங்கு 10ரூ தான் என்று சொன்னாலும்  சில பொருட்களுக்கு விலை வித்தியாசப்படும்! தரமான பொருட்களும் அங்கு உண்டு! அதேசமயம் யூஸ் அண்ட் த்ரோ மாதிரியான பொருட்களும் அங்கு உண்டு!


ராஜகோபுரம் வரை சென்றால் இந்தக் கடையிலும் ஒரு ரவுண்ட் வருவது வழக்கம்! அடுக்களைக்கு உபயோகமான பொருள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கச் சென்ற போது தான் இந்த தகராறு...🙂 இவர்களின் நடுவே மாட்டிக் கொண்டிருப்பது நேர விரயம் என்று அங்கிருந்து வெளியே வந்து விட்டேன்...🙂


*&*&*&*&*&*&


சீதாப்பழ ஐஸ்க்ரீம்!  - 24 ஜூன் 2023:




வழக்கமாக வாங்கும் ஐஸ்க்ரீம் கடையில் கப் என்றதும் அமுல், அருண், க்வாலிட்டி வால்ஸை தவிர்த்து இம்முறை Sitaphal ஃப்ளேவரில் இருக்கு! சாப்பிட்டு பாருங்க என்றார் கடைக்காரர்! எடைக் குறைப்பு முயற்சியில் இருந்தாலும் 'என்றாவது ஒருநாள் சாப்பிட்டா தப்பில்ல'!! என்று மனதளவில் என்னை நானே சமாதானம் செய்து கொண்டு இருவரும் வாங்கி சுவைத்தோம்..🙂


இந்த ஐஸ்கிரீம் சீதாப்பழத்தின் சுவையில் நன்றாகவே இருந்தது. இனிப்பு தான் சற்று கூடுதலாக இருந்தது! கேரள தயாரிப்பாம்! இது ஒரு ஹெல்தி ஐஸ்கிரீம் என்று with prebiotic & probiotic கொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்! 


சீதாப்பழம் எனக்கு பிடிக்கும் என்றாலும் அதை சாப்பிட மிகவும் பொறுமை வேண்டும் என்று நினைப்பேன்...🙂


என்னவர் தன் சிறுவயதில்  நெய்வேலியில் வீட்டின் வேலி முழுவதும் காய்த்து குலுங்கும் சீதாப்பழங்களை விரைவில் சாப்பிட, பழத்தை பாதியாக பிய்த்து விழுதுடன் மொத்தமாக வாயில் போட்டுக் கொண்டு சுவைத்து பின்பு கொட்டைகளை வரிசையாக துப்பிக் கொண்டே இருப்பாராம்.. :)) நீங்களும் இப்படி பண்ணியிருக்கிறீர்களா???


Minimalism...!!


பிள்ளைக்குட்டிகளை பிரசவிக்கவும்

பத்திரப்படுத்தவும் 

பக்குவமாய் திட்டமிட்டு

அமைத்துக் கொண்ட 

பதமான கட்டுமானம்!


பால்கனியில் தண்ணீரை தள்ளி விட வைத்திருக்கும் வைப்பரில் குளவி கூடு அமைத்துள்ளது! செங்கல், சிமெண்ட், டைல்ஸ் என்று அலைய வேண்டிய தேவையில்லை! 


இன்றைய சிந்தனை:


அப்பாவை பார்த்தே வளர்ந்ததால் அப்பாவின் சுத்தமும் நேர்த்தியும் எனக்கும் ஒட்டிக் கொண்டு விட்டது! அதை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை! எங்கும் எதிலும் சுத்தம் என்பதை எதிர்பார்ப்பது பிழையோ என்று இப்போது தோன்றுகிறது!! கிடைத்த அனுபவங்கள் அப்படி! ஊரோடு ஒத்து வாழ்தல் என்று சுத்தத்தை பற்றி  கவலைப்படாமல் என்னால் இருக்க முடியுமா???



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

18 கருத்துகள்:

  1. கூடலழகி வாசிக்க எனக்கும் ஆவல்தான்!  பார்ப்போம்!

    முகம் பார்த்து நேரமில்லா கணினி அலைபேசி நேரங்கள்!

    கதம்பம் சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. இனிய பொழுது போக்குகள். எனக்கும் கூடலழகி வாசிக்கும் ஆசை இருக்கிறது.

    Pico - எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஓரம் அடிப்பதை விட இது. முன்பு அதற்கான தையல் இயந்திரம் இருந்தது. நானே என்னுடைய சுடிதார் Set, Short Tops தைத்துக்கொள்வதால் அதன் ஓரங்களையும் அப்படித்தான் செய்வது வழக்கம். இப்போது இருப்பது பழைய வகை Merit அதில் Pico தைக்க Pressure foot ஒன்று இருக்கு அதை மாற்றிவிட்டால் தைக்கலாம். ஆனால் இன்னும் அதைப் பயன்படுத்தும் நேரம் வரவில்லை. புதிய சூடிதார் இன்னும் தைக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. உங்கள் Pico work நன்றாக வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  5. என்ன பேசுவது??? - ஹாஹாஹாஹாஹா....மகள் வளர்ந்துவிட்டார்!

    சைனா பஜாரில் சில சமயம் நல்ல பயனுள்ள பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்கும். நானும் சும்மா என்ன வந்திருக்கிறது என்று ஒரு சுற்று சுற்றி வருவது உண்டு.

    அட! சீத்தாப்பழ icecream !

    //சாப்பிட, பழத்தை பாதியாக பிய்த்து விழுதுடன் மொத்தமாக வாயில் போட்டுக் கொண்டு சுவைத்து பின்பு கொட்டைகளை வரிசையாக துப்பிக் கொண்டே இருப்பாராம்.. :)) நீங்களும் இப்படி பண்ணியிருக்கிறீர்களா???//

    அதே அதே....இப்போதும் அப்படியேதான்!!! பழத்தைப் பிய்த்து ஒரு ஸ்பூன் வைத்து சுரண்டி வாயில் போட்டு....ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பேசுவது? - பல சமயங்களில் பேச ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகிறது கீதா ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. Minimalism...!! - அழகா சொல்லிருக்கீங்க....அதானே!! சிக்கனமான வீடு. அதுவும் தேவைப்படும் பொழுது. இப்படி நான் பல கூடுகளைக் கண்டு வியந்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுகள் தான் எத்தனை அழகு! ஆண்டவன் அனைத்து உயிரினங்களுக்கும் இப்படி திறமைகளை தந்திருப்பது வியப்பு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. சுவாரஸ்யமான பதிவு
    நானும் சிறுவயதில் பாம்பன் சின்னம்மா வீட்டில் சீத்தாப்பழம் இப்படித்தான் சாப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. கதம்பம் முகநூலில் வாசித்தவை, மீண்டும் வாசித்தேன்.
    பேச்சை குறைக்கும் சாதனங்கள். பேச ஒன்றுமே இல்லையா! ஆச்சரியம் தான். அப்பாவும், மகளும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. அனைத்தும் அருமை. பலருக்கு பேரம் பேசி வாங்கினால்தான் திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரம் பேசுவதில் சிலருக்கு அலாதி ஆனந்தம் தான் அரவிந்த். எனக்கு அது இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....