புதன், 19 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி -ஆறு - தில்லி எருமையும் பாலும் இனிப்புகளும்……


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட டேராடூன் பயணம் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


கடந்த சில வாரங்களாக இங்கே எழுதி வரும் தினம் தினம் தில்லி பதிவுகள் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  இது வரை இந்த தலைப்பில் நான்கு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பதிவுகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த கருத்துரைகள் மகிழ்ச்சியைத் தந்தன.  அதே வரிசையில் ஆறாவது பதிவாக இன்றைக்கு ஒரு பதிவினை பார்க்கலாம் வாருங்கள். 


தில்லி எருமையும் பாலும் இனிப்புகளும்……






தமிழகத்தில் இருந்தவரை அம்மா என்னை அழைக்கும் போதெல்லாம் காது கேட்காத மாதிரி உட்கார்ந்திருக்க கடைசியில் கோபத்தோடு, "ஏ டெல்லி எரும" என்று அழைக்க உடனடியாக, '?' என்று கேட்டு அவரிடம் செல்வேன். அம்மா அடிக்கடி அழைத்த மாதிரியே இந்த டெல்லி எருமையும் டெல்லி வந்து சேர்ந்துவிட்டது…. :) இங்கே வந்தபிறகுதான் அப்படி என்ன டெல்லி எருமைக்கு ஒரு பெருமை என்று தெரிந்தது…. நம்மூர் எருமைகள் பார்த்து வளர்ந்த எனக்கு இந்த ஊர் எருமைகள் பார்த்தபோது சிறிய யானை போல தோன்றியது அதன் அளவு பார்த்து. பிரம்மாண்டமாக இருந்த அந்த எருமைகள் ஒவ்வொரு நாளும் கெட்டியான பால் கொடுக்க அதை சாப்பிட்ட மனிதர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் அந்த எருமைகளைப் போல!!!! 


இங்கு எருமைகளுக்கு கொடுக்கும் உணவுகளும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.  கோதுமையை அரைத்து அப்படியே கொடுப்பார்கள் நம்ம நமது ஊரில் கோதுமை தவிடு மட்டுமே கொடுக்க இங்கேயும் கோதுமையையே அரைத்து கொடுப்பது உண்டு. பாலும் நன்று கெட்டியாக இருப்பதால், தயிர், வெண்ணை என எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும். இங்கே வந்து பால் சாப்பிட்ட பிறகுதான் நம்ம ஊர் பால் எவ்வளவு நீர்க்க இருக்கிறது என்று புரிந்தது. நம்ம ஊரில் தண்ணீர் கலப்பது அதிகம் இங்கே தண்ணீர் கலக்காமல் தருகிறார்கள் அதுவும் சில இடங்களில் வீட்டுக்கு வாசல் வரை எருமை உடன் வந்து நம் கண்ணெதிரிலேயே நமது பாத்திரத்திலேயே கறந்து தருவதுண்டு.



இந்த்ராணி கப்

பால் நன்றாக கிடைப்பதால் இங்கே பால் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளும் அதிகம். விதம் விதமான இனிப்புகள் இங்கே கிடைப்பது உண்டு. எத்தனை எத்தனை இனிப்புகள் அவற்றுக்கு வைக்கப்படும் பெயர்களும், சின்னச்சின்ன மாற்றங்களோடு இருக்க அவற்றையெல்லாம் நாம் சுவைக்க முடியும். ஒரு காலத்தில் ஹிந்தி பாட்டு ஒன்று மிகவும் பிரபலமானது. ILU ILU, ILU ILU….. இன்று தொடங்கிய அந்த பாட்டு I LOVE U…. என்று இருக்கும். இந்தப் பெயரில் கூட, அதாவது ILU ILU என்ற பெயரில் கூட பால் இனிப்பு உண்டு. அது மட்டுமா HONEYMOON என்ற பெயரில் கூட பால் இனிப்பு உண்டு. சமீபத்தில் இந்த்ராணி கப் என்ற பெயரில் ஒரு பால் இனிப்பு பார்த்தேன். பொதுவாக ரசமலாய் கேள்விப்பட்டிருக்கலாம். மாம்பழம் சேர்த்த ரசமலாய் சமீபத்தில் சுவைத்தேன். ஆஹா என்ன ஒரு இனிப்பு…. இந்தப் பதிவில் சேர்த்திருப்பது மாம்பழ ரசமலாய் மற்றும் இந்த்ராணி கப் படங்கள்…. தலைநகர் தில்லி வந்தால் நிச்சயமாக ஒரு சில பால் இனிப்புகளை யாவது நிச்சயம் சுவைத்துப் பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கும்…..


மீண்டும் தில்லி குறித்த வேறு ஒரு தகவலுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்…. அது வரை….


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


23 கருத்துகள்:

  1. தகவல்கள் சுவாரஸ்யம். எருமைப் பால் நிறைய பேருக்கு ஒத்துக் கொள்வதில்லை என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமைப் பால் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இங்கே பிறந்ததிலிருந்தே அது தான் என்பதால் யாருக்கும் பிரச்சனை இல்லை ஸ்ரீராம். பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  3. வாசகம் சிரித்துவிட்டேன்!!! ரொம்பவே கஷ்டம்தான்!!!

    அது போல - இந்த 'எருமை' திட்டல் பல வீடுகளிலும் அப்போது ஒலித்திருக்கும்! எங்க வீட்டிலும்தான். ஆனால் என் மகன் சொல்வான் எல்லாரும் ஏன் எருமைன்னு திட்டறாங்களோ ? பாவம் அதுங்களை இப்படியா மனுஷன சொல்லித் திட்டி அவமானப்படுத்தணும்!!!!! அதுங்களை மேய்ச்சுக்கட்டறது ரொம்ப ஈஸி, அதுங்க நல்ல ஜீவன்கள்னு!! வாசகம் ரொம்பவே பொருத்தம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - :)

      எருமை என திட்டு வாங்காதவர் யார்! அதுவும் நமது வயதொத்த பலரும் இப்படியான திட்டை வாங்கியிருப்போம். இப்போதைய குழந்தைகளை யாரும் இப்படியெல்லாம் திட்டுவதில்லை.

      உங்கள் மகனின் எண்ணமும் சிறப்பு. அது தேமே என்று இருக்க, அதனை சக மனிதர்கள் வம்புக்கிழுப்பது சரியல்ல கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பஞ்சாப் எருமைகள், மாடுகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். எம்மாம் பெரிசு...நிறைய பால் கொடுக்கும்தில்லி எருமைகளையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

    இந்திராணி கப் !!!!! இதுதானா!!! ஆனால் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே!
    //இந்த்ராணி கப் என்ற பெயரில் ஒரு பால் இனிப்பு பார்த்தேன். பொதுவாக ரசமலாய் கேள்விப்பட்டிருக்கலாம். மாம்பழம் சேர்த்த ரசமலாய் சமீபத்தில் சுவைத்தேன். ஆஹா என்ன ஒரு இனிப்பு….//

    ரசமலாய் வேறு வேறு flavour இல் பழக் கூழ், பாலில் மிதக்கவிட்டு. இது மாம்பழத் துண்டுகளுடன்!! பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாக!! மாதுளை முத்துகள் கூட மிதக்கின்றனவே!!!!

    பரவால்ல ஒரு நாள் ஒரு வேளையில் இதைக் கொஞ்சமாச்சும் சுவைத்துவிட்டு மற்ற நேரங்களில் உணவை adjust செய்துவிட வேண்டியதுதான்!!!!!!!

    வட இந்தியாவில் பால் இனிப்புகள் அதிகம் என்பதோடு விதம் விதமாகச் செய்றாங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே இருக்கும் எருமைகளைப் பார்க்கும் போதே கொஞ்சம் பயம் வருவது உண்மை. அது சாதுவாகவே இருந்தாலும், சின்ன யானையைப் போன்று இருப்பதால் கொஞ்சம் பயம் வருவதுண்டு கீதா ஜி.

      இந்திராணி கப் - சுவைத்துப் பார்க்கலாம்! ஒரு முறையேனும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. இயல்பாகவே நீர்த்து இருக்கும் பாலில் தண்ணீர் கலப்பது நம்மவர் திற்மை..

    இங்கே பக்கத்தில் பசு வளர்க்கின்றனர்.. இப்படி சத்துள்ள தீவனங்கள் கொடுக்கப்படுவதில்லை..

    பதிவு நன்று..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்துள்ள தீவனங்கள் நம் பக்கத்தில் கொடுப்பதில்லை - உண்மை. இங்கே கொடுக்கும் உணவு வகைகள் சில மனிதர்களுக்குக் கூட கிடைப்பதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. ஆனாலும்
    எருமைப் பால் உடலுக்கு
    நல்லதல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமைப் பால் உடலுக்கு நல்லதல்ல. இருக்கலாம். ஆனால் வடக்கில் கிடைப்பது பெரும்பாலும் எருமைப் பால் மட்டுமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. இடை இடையே ஆங்கிலச் சொற்களுக்குப் பயன் படுத்தியிருக்கும் font படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. கவனிக்கவும். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துரு - சரி செய்து விடுகிறேன். தானாக மாறிவிடுகிறது சில சமயங்களில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஸ்வநாதன்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தில்லி எருமை பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். இந்த திட்டல்களும் இளவயதில் அடிக்கடி கேட்டதுதான்.. :)) .
    அப்பத்தான் எதுவும் (திட்டல்கள்)
    உறைக்காதே... எருமை மாட்டு தோலா என்பார்கள். மாடு மாதிரி உழைக்கிறான் என்பதிலிருந்து எல்லா திட்டுக்களின் பெருமையையும் அது வாங்கிக் கொண்டு விட்டது. :))

    முன்பு எருமை பால்தான் . கிடைக்கும். பசுமாட்டின் பால் கிடைப்பது அரிது. இப்போது பசுவின் பால்தான் எங்கும்.

    இனிப்பு நன்றாக உள்ளது. கண்ணால் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை.
    டெல்லி எருமை இன்று விவித்பாரதியில் எருமை பால், பசும்பால் பற்றி நிறைய சொன்னார்கள். பாசுமாபாலை எத்தனை தடவை என்றாலும் சூடு செய்யலாம், ஆனால் எருமை பாலை அப்படி செய்யமுடியாது என்றும் எருமைமாட்டு பால்குடிப்பதால் உண்டாகும் குண நலன்களை சொன்னார்கள்.

    மாம்பழம் சேர்த்த ரசமலாய் சமீபத்தில் சுவைத்தேன். ஆஹா என்ன ஒரு இனிப்பு…. இந்தப் பதிவில் சேர்த்திருப்பது மாம்பழ ரசமலாய் மற்றும் இந்த்ராணி கப் படங்கள்//

    மாம்பழ ரசமலாய் படங்கள் செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. பால் இனிப்புகளில் எருமைப்பால் இனிப்புகள் மிகவும் சுவையாக இருக்கும்.
    வட இந்திய லசியின் கெட்டிக்கும் இப்பாலே காரணம்.
    என் போன்றோர், நன்கு பசிக்கும்போது மட்டும் அளவோடு சுவைத்தல் நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  12. எங்கள் நாட்டில் எருமை தயிர் பிரபல்யம் கித்துல் பாணி அல்லது தேன் , சக்கரை கலந்து சாப்பிடுவோம். இதன் பால் சாப்பிட மாட்டோம்.

    இந்த் ராணி கப் பார்க்க அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....