சனி, 29 ஜூலை, 2023

காஃபி வித் கிட்டு - 179 - நட்பு - LIFE - மனிதம் - பார்த்த முதல் நாளே - தொடரும் அபாயம் - காகன்மட் மந்திர் - அப்பாவும் மகளும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - அம்ருத்பானி மற்றும் கடா பிரஷாத் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் எண்ணங்கள்: நட்பு…


நட்பு வட்டத்தில் நிறையவே நண்பர்கள் - ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் நிறையவே நண்பர்களை, இத்தனை வருட வாழ்க்கையில் பெற்றிருக்கிறேன். அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் விதத்திலேயே பழகி வருகிறேன். யாரிடமும் வெறுப்பு காண்பிப்பது இல்லை. அப்படி ஏதேனும் பிடிக்காத விஷயங்கள் இருந்ததெனில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகி விடுவதே எனது வழக்கம்.  பல சமயங்களில் நட்பில் விரிசல் உண்டாக அடுத்தவர்களே காரணமாக இருந்து விடுகிறார்கள்.  பெண்களுடன் பழகும்போது மிகவும் ஜாக்கிரதையாகவே இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனது எல்லை என்ன என்பதை நன்கே உணர்ந்து இருக்கிறேன். இருந்தாலும் சில சமயங்களில் அடுத்தவர்களால் நட்பில் விரிசல் உண்டாகிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பதே எனது வழக்கம்.  ஆனாலும் சில நபர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட்டு நட்பில் விரிசலை உண்டாக்கி விடுவார்களோ என அஞ்ச வேண்டியிருக்கிறது! எதற்காக இத்தனை முகாந்திரம்? என்ன நடந்தது? சொல்கிறேன். 


எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் அலுவலர். பல வருடங்களாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறோம். என்னை விட நான்கு ஐந்து வயது மூத்தவர். நாங்கள் இருவரும் வசிப்பதும் ஒரே பகுதியில் என்பதால் சில நாட்கள் ஒன்றாக அலுவலகம் வருவது உண்டு.  கடந்த வாரத்தில் இரண்டு முறை இரு வேறு நபர்கள், இருவருமே பெண்கள், என்னுடன் வரும் பெண் அலுவலரிடம் கேட்ட கேள்வி, “மேடம், இவர் உங்க ஹஸ்பண்டா?” இரண்டு பேரிடமும் சிரித்தபடியே அவர்களிடம் “இல்லை, நாங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் சக அலுவலர்கள், நண்பர்கள் தான், கணவன் - மனைவி இல்லை” என்று சொன்னாலும்,  அவர்களைக் கடந்த பிறகு, “தேவையில்லாத கேள்விகள், சந்தேகங்கள் இவர்களுக்கு! ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே கூடாதா?” என்று பேசிக் கொண்டு வந்தார். எனக்கும் மனதில் சங்கடம்! என்னடா இது? ஏன் இந்த மாதிரி கேள்விகள் இவர்களுக்கு வருகிறது! என்று யோசித்தேன்.  இந்த கேள்விகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், மனதின் ஓரத்தில் இவர்களைப் போன்றவர்கள் மீது கொஞ்சம் கோபமும் ஏற்படவே செய்கிறது! ஆனாலும், விட்டுத்தள்ளு என்று என் போக்கில் சென்று கொண்டிருக்கிறேன். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!


******


இந்த வாரத்தின் ரசித்த குறும்படம்: LIFE….


இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய ஒரு குறும்படம். வசனங்கள் ஏதும் இல்லை. காட்சிகள் மட்டுமே! ஆனால் இரண்டு நிமிடங்களில் நல்லதொரு செய்தியைச் சொல்லி விடுகிறார் குறும்படம் எடுத்த இயக்குனர்.  பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியைக் காண முடியவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


"Life" - A Silent, Smart & Simple Short Film! - YouTube


******


இந்த வாரத்தின் மனிதம்: நல்ல மனம் வாழ்க…


முகநூலில் பார்த்த செய்தி. நல்ல மனம் கொண்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். செய்தி கீழே!



இவர் அரசு பேருந்து ஓட்டுனர்..


இவர் பணி திருவண்ணாமலை முதல் சென்னை செல்லும் பேருந்தின் ஓட்டுனர்..


நடத்துநர் இல்லா சொகுசு பேருந்து..


சில தினங்களுக்கு முன் இவர் சென்னை சென்று பயணிகளை இறக்கி விட்டு சிரமபரிகாரம் செய்து விட்டு தடபலகை மாற்றம் செய்கையில் பேருந்தில் ஒரு பை கிடைப்பதை பார்த்து எடுத்து உள்ளே என்ன உள்ளது என்று பார்க்க அதர்ச்சி.‌


பணம், நகை, செல் போன் இருந்துள்ளது .‌..


சரி யாராவது வந்து கேட்க கொடுக்கலாம் என இருந்துள்ளார்..


சிறிது நேரத்தில் ஒரு பெண்மனி அழுது கொண்டு நிற்பதை பார்த்து இவர் நம் பேருந்தில் வந்த பெண் போல் உள்ளதே என்ற சந்தேகத்தின் பேரில் அவரை விசாரிக்கையில் பையை தவறவிட்டதாகவும் வந்த பேருந்து எது என தெரியவில்லை என்று அழுது கொண்டு தெரிவித்துள்ளார்..


அம்மா தாங்கள் வந்த பேருந்து ஓட்டுநர் நான் தான் ..


தங்கள் பை என்னிடம் உள்ளது.. வாங்க.. அதிகாரி முன்னிலையில் ஒப்படைக்கிறேன் என் கண்காணிப்பாளர் இடம் அழைத்து சென்று உள்ளார்..


கண்காணிப்பாளர் அப்பெண்மணியிடம் பையில் இருந்த விபரங்கள் கேட்க 15 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம், செல் போன் எண்.. பேசிய விபரம் தெரிவிக்க ஆவணங்களை சரிபார்த்து அப்பெண்மணியிடம் பொருளை ஒப்படைத்துள்ளனர்..


ஏறக்குறைய 10 லட்சம் மதிப்புள்ள பொருள் .. ஓட்டுனர் மட்டுமே அறிந்தவர்.. வேறு யாருக்கும் தெரியாது..


மறைத்து இருக்க முடியும்..


ஆனால் நேர்மையாக உரியவரிடம் பொருளை சேர்த்த இந்த ஓட்டுநரை பாராட்டுவோம்..


வறுமையிலும் செம்மை!!!!


இது போன்று ஒட்டுனர்களை பயிற்றுவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களை பாராட்டுவோம்!!!!


இவர் பெயர் சிவகுமார்..


நல்லவர்களை பாராட்ட நற்செயல்கள் கூடும்..


******


பழைய நினைப்புடா பேராண்டி : பார்த்த முதல் நாளே


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பார்த்த முதல் நாளே - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


1986 – ஜூன் மாதம். பத்தாவது முடித்து பதினொன்றாம் வகுப்பு – நமக்கு பயாலஜி, ஜூவாலஜின்னா ஒரு அலர்ஜி......  கணக்குன்னா ஓகே அப்படின்னு நினைச்சு சயன்ஸ் க்ரூப் வேண்டாம், MPC [Maths, Physics, Chemistry] எடுக்கலாம்னா நாலாவது பயாலஜி தான் இருக்கும் – பேசாம காமர்ஸ் எடுத்துடலாமான்னு எனக்கு பலவித யோசனைகள். எங்கப்பா என்னடான்னா, எப்படியாவது நம்ம புள்ளைய ஒரு எஞ்சினீயர் ஆக்கிடணும்னு ஆசைப்பட்டு நீ முதல் க்ரூப்தான் எடுக்கணும்னு ஒத்தைக்கால்ல நிக்க, ”சரி பாக்க பாவமா இருக்கு, முதல் க்ருப்பே எடுத்துடுவோம்னு முடிவு பண்ணேன். ஆனா விதி வேறமாதிரி இருந்தது! நான் இஞ்சீனியர் ஆகல! சுக்குனீயர் தான் ஆனேன்.....


எனக்கு பயாலஜி மேல இருந்த அலர்ஜி NLC நிர்வாகத்துக்கு யார் சொன்னாங்களோ தெரியல, அந்த வருஷத்துல இருந்து முதல் க்ரூப்ல பயலாஜிக்கு பதில் Computer Science பாடம் தான்னு சொல்லிட்டாங்க! ”ஆஹா தப்பிச்சுட்டேடா கோவாலு!”ன்னு சந்தோஷப்பட்டா அந்த சந்தோஷம் கொஞ்சம் நாளைக்குதான் நிலைச்சுது!


கம்ப்யூட்டர் சயன்ஸ் அந்த வருஷம் தான் முதல்ல ஆரம்பிக்கறாங்க ஸ்கூல்ல, புதுசா டீச்சர் வேலைக்கு வைக்கணும், அதுக்குண்டான எல்லா விஷயங்களும் முடிய கொஞ்சம் மாதங்கள் ஆகும், அதுனால ஒரு ஷார்ட்கட் கண்டுபிடிச்சாங்க! என்ன ஷார்ட்கட்....  ஸ்கூல்ல வேலை செய்யற டீச்சர்கள கூப்பிட்டு ”யாருக்காவது இந்த கம்ப்யூட்டர் பத்தி ஏதாவது தெரியுமா? ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் யாராவது முடிச்சு இருக்கீங்களா?”ன்னு கேட்க, ஒரெ ஒரு கை தான் உசந்துச்சு! அது யாரு கைன்னு கேட்கறீங்களா?


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் : தொடரும் அபாயம்…


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்! நான் ரசித்த வாசகம் உங்கள் ரசனைக்கு…



******


இந்த வாரத்தின் சுற்றுலா : காகன்மட் மந்திர் 



இந்த வாரம் உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகும் ஒரு சுற்றுலாத் தலம், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் குவாலியரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மொரேனா மாவட்டத்தில் இருக்கும் சிஹோனியா என்கிற இடத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த சிவன் கோவில் - கோவிலின் பெயர் காகன்மட் மந்திர். க்ருதிராஜா என்கிற மன்னரால் 1015-1035 AD காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் குறித்து நிறைய தகவல்கள் இருக்கின்றன.  சின்னக் குழந்தைகள் சிறு கற்களை அடுக்கி வீடு கட்டுவது போல, கற்களை அடுக்கிக் கட்டினார்போல இருக்கிறது இந்தக் கோயில். இந்தக் கோயில் மனிதர்களால் கட்டப்பட்டதே அல்ல, ஒரே இரவில் பூதங்களால் கட்டப்பட்டது போன்ற தகவல்களும் இந்தக் கோயில் குறித்து சில தளங்களில் எழுதி இருப்பதையும் பார்க்கமுடிந்தது. அற்புதமான சிற்பங்கள் பலவும் இங்கே இருப்பதை படங்கள் வழி பார்க்கமுடிந்தது - ஆனால் அந்தோ பரிதாபம் - பல சிற்பங்கள் பாழடைந்து, உடைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு சிற்பியின் கடுமையான உழைப்பு இப்படி பாழடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போதே மனதில் வலி தான்.  இந்த இடம் குறித்து ஒரு சிறப்பான தளத்தில் பார்த்தேன். நீங்களும் பார்க்க விரும்பினால் கீழேயுள்ள சுட்டி வழி பார்க்கலாம், படிக்கலாம்!


Kakanmath Temple, Hidden Gem of Morena - Ruins that Defy Gravity | T2B (taleof2backpackers.com)


******


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் : அப்பாவும் மகளும்


இந்த வாரத்தின் ரசித்த ஓவியமாக, இணையதளத்தில் பார்த்த ஒரு ஓவியம் உங்கள் பார்வைக்கு - நீங்களும் ரசிக்கலாமே!



******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


14 கருத்துகள்:

  1. இன்றைய பகுதிகளை ரசித்தேன். நன்று

    பதிலளிநீக்கு
  2. 74களில் என் அப்பா ஹெட்மாஸ்டராக இருந்தபோது, உடன் பணியாற்றும் ஆசிரியைகள் தன் அறைக்கு வரும்போது, நெடிய மூங்கில் குச்சியை நீட்டி அதற்கு அப்பால்தான் அவங்க நிற்கணும் என வழக்கத்தைக் கொண்டிருந்ததை நான் கவனித்திருக்கிறேன். (கங்கா யமுனா சரஸ்வதி என்று யதேச்சையாக பெயர் அமைந்த அந்த மூன்று டீச்சர்களும் மணமாகாதவர்கள், வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அப்போ நான் நாலாவதோ ஐந்தாவதோ)

    பதிலளிநீக்கு
  3. ஓட்டுநர் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்ததை நினைவுபடுத்தியது. ஊருக்கு small zip lock கவரில் எடுத்துச் சென்றிருந்த ஐந்தாயிரத்தை மேசையில் வைத்திருந்தேன். பொதுவா வந்தவுடன் மனைவியிடம் கொடுத்துவிடுவேன், ஆனால் அதிகாலை இரண்டு மணிக்கு வந்ததால் மேசையில் வைத்தேன். என் அறை ஒதுக்குப்புறமானது. மறுநாள் காலையில் நண்பர் வீட்டு விசேஷத்துக்குப் போய்விட்டு மதியம் வந்தபோது பணம் மாயம். என் அறைக்கு சுத்தம் செய்யும் பெண் உதவியாளர் தவிர வேறு யாரும் வரவில்லை. மனைவியிடம் பணம் காணோம் என்றதும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை என்றார். நான், தேட வேண்டிய அவசியமே இல்லை, மேசையில் இருந்ததைக் காலையில் பார்த்தேன். மிக நல்லவள் என அபிப்ராயம் கொண்டிருந்த வேலைக்காரி எடுத்திருப்பாள் என நினைக்கவே எனக்கைக் கசந்தது. மனைவி, அவளிடம் கேட்கவா என்றதற்கு, கேட்கவேண்டாம் என்று சொல்லிட்டேன். நமக்குத் தெரிந்துவிட்டது என்பதையாவது சொல்ல வேண்டாமா என்று கேட்டதற்கு, சரி... இனிமேல் என் தனியறையைச் சுத்தம் செய்யவேண்டாம், அவர் இருந்தால் சுத்தம் செய்தால்போதும் என்று சொல்லிவிடு என்றேன். நானும் அவளிடம் பேசாது பிசியாக இருந்தேன். மறுநாள் அவள் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு அறைக்கு வந்து, கீழே 500ரூ விழுந்துகிடக்கிறது என்றாள். சரிம்மா கட்டிலில் வைத்துவிடு என்றேன். அவள் நோட்டுக் கற்றைகளை வைத்தாள். பிறகு செக் பண்ணியதில் 5000 ரூ. தன் தவறை உணர்ந்துவிட்டதை, நாங்கள் அதைப்பற்றிப் பேசாத்தனால் ஏற்பட்ட மாற்றம் என நினைப்பதா இல்லை, பிறர் பணம் நமக்குக் கெடுதல் தரும் என அவள் உணர்ந்ததைக் காட்டியதா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு பகிர்ந்திருந்தேன். ? நினைவிருக்கிறதா?

      நீக்கு
  4. மனிதர்களை கலங்கப்படுத்துவதில் இந்த சமூகம் தயங்குவதே இல்லை.

    அதேநேரம் உண்மையான அயோக்கியனை போற்றுவார்கள்.

    ஓட்டுநர் திரு. சிவகுமார் அவர்களை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்த வார காஃபி வித் கிட்டு செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    நல்ல நட்பைப் பற்றி குறிப்பிட்டிருப்பது நல்ல விஷயம். உண்மையான நட்பை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து சந்தேகபடுகிறவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். நம் மனது நமக்குத்தான் தெரியும்.

    பேருந்து ஓட்டுனரின் நேர்மையான செயல் பாராட்டத்தக்கது.

    குறும்படம் நன்றாக உள்ளது. ரசித்தேன்.

    சுற்றுலா இடத்தின் விபரமும், ரசித்த ஓவியமும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. யோசிக்காமல் அல்லது வேண்டுமென்றே இப்படி தர்மசங்கடப்படுத்துபவர்கள் நிறைய உண்டு.

    குறும்படம் ஓகே ரகம்.

    சிவகுமாரை மனம் திறந்து நிறைய பாராட்டலாம். எடப்பாடிக்கு தம்பி போல இருக்கிறார்!

    ரசித்த வாசகம் மிக அருமை.

    ஓவியத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. வெங்கட்ஜி!!! நட்பு விஷயங்கள் பற்றி சொல்லியதில் அப்படியே வழி மொழிகிறேன். இந்த நட்பு விஷயம்..... ஆண் நட்பு இருந்தால் இப்படியான கேள்விகள் எனக்கும் வந்ததுண்டு. கல்லூரிக் காலத்தில் வேறு விதமாக இப்போது வேறு விதமாக. ...எனக்கும் கோபம் வரும். ஏன் இப்படி அனாவசியமான கேள்விகள்?!! என்று...பாத்தீங்கனா இந்தக் கேள்விகள் எழுவதும் பெண்களிடம் இருந்துதான் அதிகம் என்பதையும் நான் காண்கிறேன். அப்போதிலிருந்தே புறந்தள்ளப் பழகிவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஓட்டுநரைப் பாராட்டுவோம்.

    கம்ப்யூட்டர் அறிமுகம் - ஹாஹாஹா....ரசித்து வாசித்தேன் அது சரி நம்ம ஸ்ரீராம் எழுதினாரா?!!!! தொடர் பதிவுக்கு?

    அப்பல்லாம் ஏசி வேண்டும் கம்ப்யூட்டர் சொகுசு அப்ப!!! இப்ப நம்ம கைல படாத பாடு படுது! நான் 1996ல் கணினி பழகக் கற்றுக் கொண்டேன். அதன் மும் electronic typewriting. ஏற்கனவே தட்டச்சு கற்றுக் கொண்டிருந்ததால், திருவனந்தபுரத்தில் இருந்தப்ப கற்றுக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இன்றைய வாசகம், பதிவின் வாசகம் இரண்டையும் ரசித்தேன். ஓவியம் அருமை.

    காகன்மட் மந்திர்// படமே அழகாக இருக்கிறது தகவல்களும் பார்த்துக் கொண்டேன். சுட்டி இனிதான் வாசிக்க வேண்டும்.

    அனைத்தும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சிவகுமார் அவர்களுக்கு பாராட்டுகள்...

    நட்பின் அருமை தெரியாதவர்கள் பலர் உண்டு...

    பதிலளிநீக்கு
  11. ஒட்டுனரின் நேர்மையை மெச்சுவோம்
    ஓவியம் அருமை..

    பதிலளிநீக்கு
  12. சிலர் தெரியாமல் கேட்கிறார்களா , தெரிந்து கேட்கிறார்களா தெரியாது.

    குறும்படம் நன்றாக இருக்கிறது.
    ஓட்டுனர் சிவக்குமாரை வாழ்த்தி பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....