செவ்வாய், 18 ஜூலை, 2023

டேராடூன் பயணம் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட டேராடூன் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நம் கை விட்டுப் போகும் எதுவும் நம்முடையது இல்லை என்று உணர்ந்துவிட்டாலே பாதி துன்பம் நம்மை விட்டு விலகி விடும்.

******


நேற்றைய பதிவில் திடீர் டேராடூன் பயணம் குறித்து சில தகவல்களை எழுதி இருந்தேன். இந்த இரண்டாம் பகுதியில் இந்தப் பயணம் குறித்த மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம் வாருங்கள். 


இயற்கையும் நாமும்




ரம்மியமான காலைப்பொழுது. மலைகள் நாற்புறமும் சூழ்ந்து இருக்க, நடுவே உள்ள சமவெளியில் எங்கள் தங்குமிடம்….. ஜன்னல் வழியே காலை எழுந்தவுடன் கண்ட காட்சி மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. மேகக் கூட்டம் மலைகளின் மீது தவழ்ந்து செல்லும் காட்சி - ஆஹா…. என்ன அழகு. 


அந்த இனிய காலையில் எழுந்து, தயாராகி, அலுவலகப் பணி நிமித்தம் வெளியே புறப்பட்டாயிற்று. இரண்டு மூன்று தினங்களுக்கு நிறைய வேலை உண்டு. நடுவே நேரம் கிடைத்தால் டேராடூனில் கொஞ்சம் உலா வரலாம். இல்லையெனில் எங்கேயும் உலா வர வழியில்லை. நாங்கள் அலுவலகப் பணி நிமித்தம் வெளியே சென்றபோது வழியெங்கும் மழையும் துணையாக வந்து கொண்டிருந்தது. சாலை வழி பயணத்தில் பார்க்கும் நீர் நிலைகள் அனைத்திலும் வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடியதைப் பார்க்க முடிந்தது. எங்கள் வாகன ஓட்டி தினேஷ் குமார் அவர்கள் என் வாழ்க்கையில் இந்த ஆற்றில் இவ்வளவு தண்ணீர் ஓடி பார்த்ததில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி படம் எடுக்கலாம் என்றால் தொடர்ந்து மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. நனைந்து விட்டால், அந்த உடையுடன் அலுவலகப் பணிகளைப் பார்க்க முடியாது என்பதால் அப்படியே காட்சிகளைப் பார்த்தபடியே கடந்து விட்டோம்.


காலையில் பார்த்த இயற்கை காட்சிகள் பிரமிக்க வைத்தன என்றால் இயற்கையின் சீற்றம் பயமுறுத்தியது. மலைப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் வெள்ளத்தில் அடித்து வரப்படுவதை பார்க்கையில், இயற்கையைச் சீண்டிப் பார்க்கும் மனிதர்கள் மீது கோபம் வருகிறது. நமது சுய லாபத்திற்காக இயற்கை அன்னையை சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். இயற்கை சீற்றம் கொண்டால் நம்மால் தாங்க முடியாது என்பதை நாம் எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்வோமா அவ்வளவு நல்லது…… 


பணிச்சுமை…


எங்கேயும் செல்ல இயலாமல் தொடர்ந்து பணிச்சுமை..... காலை ஐந்தரை மணிக்குப் புறப்பட்டு, இரவு 09.30 மணி வரை தொடர்ந்து வேலை - அதுவும் பிடிக்காத வேலை. பொதுவாகவே அரசியல் சம்பந்தப்பட்டவர்களையும், உயர் அதிகாரிகளையும் எனக்குப் பிடிப்பதில்லை. அவர்களையாவது சமாளித்து விடலாம், ஆனால் அவர்களது ஜால்ராக்களை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம்.  அப்படியான வேலை தான் இந்தப் பயணம் முழுவதும். அதுவும் ஒருவர் இருவர் என்றால் பரவாயில்லை..... ஒரு கூட்டத்தையே சமாளிக்க வேண்டும் என்றால்.....


பலமாநிலங்களிலிருந்து வருபவர்களை சமாளித்து ஒரு வழியாக 09.30 மணிக்கு தங்குமிடம் திரும்பி கொஞ்சம் ஓய்வு எடுத்து அதன் பிறகு இரவு உணவு, கொஞ்சம் நடை, இரவு உறக்கம். அடுத்த நாளும் காலை மீண்டும் 04.45 மணிக்கு எழுந்து தயாராகி பயணித்து பணியைத் தொடங்க வேண்டியிருந்தது. ஒரு கூட்டத்தினை சமாளித்த பிறகு கொஞ்சம் ஓய்வு. இரண்டு மூன்று நாட்களாக இதே வேலை தான். 


ஒரு நாள் காலை எங்கள் வாகனம் வரும் வரை கொஞ்சம் இயற்கை எழிலை ரசித்து நடைப் பயணம் மேற்கொண்டு வந்தேன். மலைப்பிரதேசத்தில் காலை நேரம் நடப்பது மிகவும் சிறப்பான விஷயம். இயற்கை எழிலை ரசித்த படி சுத்தமான காற்றையும் சுவாசித்து வந்தால் மனதில் அப்படி ஒரு நிம்மதி கிடைத்து விடும். ஒரு நாள் பொழுதின் பணிச்சுமை தந்த இறுக்கம் தளர்ந்து அடுத்த நாள் பணிக்குத் தயாராக தேவையான சக்தி இந்த நடையில் கிடைத்தது என்று சொல்லலாம். 


தொடர்ந்து கிடைத்த அனுபவங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே…


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


9 கருத்துகள்:

  1. வாசகம் அருமை. உண்மை..

    இயற்கை அழகை வெல்ல முடியுமா!!!? படம் கவர்ச்சி!!! இழுக்கிறது. இப்படியான ஒரு இடத்தில் இருந்தால் மனம் மகிழ்ச்சி அடையும்தான்!! எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

    கூடவே இப்போதைய ஹிமாச்சல் மழை நினைவுக்கு வருகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. எங்கள் வாகன ஓட்டி தினேஷ் குமார் அவர்கள் என் வாழ்க்கையில் இந்த ஆற்றில் இவ்வளவு தண்ணீர் ஓடி பார்த்ததில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.//

    ஓ ஆச்சரியம்தான்! அப்படினா இந்த முறை மழை ரொம்பவே கூடுதலோ அங்கெல்லாம்?!

    //காலையில் பார்த்த இயற்கை காட்சிகள் பிரமிக்க வைத்தன என்றால் இயற்கையின் சீற்றம் பயமுறுத்தியது. //

    ஆமாம்...ஆனால் மனிதர்களும் காரணம்தான்...

    //மலைப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் வெள்ளத்தில் அடித்து வரப்படுவதை பார்க்கையில், இயற்கையைச் சீண்டிப் பார்க்கும் மனிதர்கள் மீது கோபம் வருகிறது.//

    அதே தான் நான் நினைத்துக் கொண்டே வாசிச்சப்ப நீங்களும் சொல்லிட்டீங்க...
    எனக்கும் கோபம் ரொம்ப வரும் ஜி...அதுவும் இங்கு இப்ப ஏரிகள் எல்லாம் அழுக்காகி ப்ளாஸ்டிக் குப்பைகள் கண்ட குப்பைகள் சேர்ந்து மிதப்பதை எல்லாம் பார்க்கறப்ப...

    //நமது சுய லாபத்திற்காக இயற்கை அன்னையை சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். இயற்கை சீற்றம் கொண்டால் நம்மால் தாங்க முடியாது என்பதை நாம் எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்வோமா அவ்வளவு நல்லது…… //

    டிட்டோ!! நான் கருத்தாகப் போட நினைச்சதெல்லாம் பதிவுல வந்துவிட்டது!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பொதுவாகவே அரசியல் சம்பந்தப்பட்டவர்களையும், உயர் அதிகாரிகளையும் எனக்குப் பிடிப்பதில்லை. அவர்களையாவது சமாளித்து விடலாம், ஆனால் அவர்களது ஜால்ராக்களை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம். அப்படியான வேலை தான் இந்தப் பயணம் முழுவதும். அதுவும் ஒருவர் இருவர் என்றால் பரவாயில்லை..... ஒரு கூட்டத்தையே சமாளிக்க வேண்டும் என்றால்.....//

    கஷ்டமான பணி!!

    //மலைப்பிரதேசத்தில் காலை நேரம் நடப்பது மிகவும் சிறப்பான விஷயம். இயற்கை எழிலை ரசித்த படி சுத்தமான காற்றையும் சுவாசித்து வந்தால் மனதில் அப்படி ஒரு நிம்மதி கிடைத்து விடும். //

    டிட்டோ ஜி!! மலைப்பகுதியில் நடைப்பயிற்சி ரொம்ப இதமான ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாசகம் சூப்பர் ஜி

    அரசியல்வாதிகளின் அடிவருடிகளை ஒழித்து விட்டால் இந்த நாடு முன்னேற்றத்தை தொடங்கி விட்டது என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.

    நீர் நிலைகள் அனைத்திலும் வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடியதைப் பார்க்க முடிந்தது. //

    மகிழ்ச்சி. வெண்மேககூட்டம் மலை மீது தவழ்ந்து செல்வதை பார்ப்பது ஒரு மகிழ்ச்சி.

    //இயற்கை எழிலை ரசித்த படி சுத்தமான காற்றையும் சுவாசித்து வந்தால் மனதில் அப்படி ஒரு நிம்மதி கிடைத்து விடும்.//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  6. அலுவலக டென்ஷன் முடிவுக்கு வந்து விட்டதா?  தங்குமிடம் அழகிய இடமாக அமைந்தது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. சுவாரசியமான பகிர்வுகள்.
    ஆம். என் அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளை விட, அவர்களின் வலது கைகளாக தங்களை என்னிக்கொள்ளும் ஜாள்ராக்களின் அலம்பல்களைத் தான் தாங்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. படத்திலுள்ள ரம்மியமான காட்சியை உள் வாங்க முடிகிறது. ஆம், இயற்கையின் சீற்றத்திற்கு மனிதரே காரணம்.

    பதிலளிநீக்கு
  9. அழகிய இடம்.

    பணிச் சுமையுடன் ரசிக்க முடியாமல் இருந்தது மனதுக்கு சற்று வேதனைதான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....