திங்கள், 31 ஜூலை, 2023

கதம்பம் - பச்சை மலை மர்மம் - சிந்தனை - சோள பக்கோடா - ரம்புட்டான் பழம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


கேட்கப்படும் கேள்விகள் ஆணவமாக இருந்தால், கொடுக்கப்படும் பதில்கள் திமிராக இருப்பதில் தவறில்லை.

******


பச்சை மலை மர்மம் - வாசிப்பனுபவம்


ஆசிரியர்கள் நந்துசுந்து - பாலகணேஷ்!



நேற்றைய பொழுதில் நான் வாசித்த விறுவிறுப்பான நாவல் இது! வாசிக்கத் துவங்கினால் முடியும் வரை வைக்க முடியவில்லை! நூல் தலைப்புக்கு ஏற்றாற் போல் பச்சைமலையும் அங்கு நிகழும் மர்மங்களும் தான் ஒற்றை வரிக் கதை என்றாலும் வித்தியாசமான கோணத்தில் திகலுடன் துவங்கி துப்பறியும் கதையாக பயணிக்கிறது!


மூலிகைகள் கொட்டிக் கிடக்கும் பச்சைமலையில் உள்ள விசேஷமான காளி கோவிலுக்கு வரும் ரமேஷ்சந்த் குடும்பத்தாருக்கும், தேவதா பத்திரிக்கைக்காக பச்சைமலை குறித்த தொடர் எழுத வரும் பிரசாத்துக்கும், மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்ள வந்த பாட்டனி ஸ்டூடண்ட்டான பாமினிக்கும் கிடைத்த அனுபவங்களை விவரிக்கிறது பச்சைமலை மர்மம்!


பச்சைமலையில் இருக்கும் சத்ரு சம்ஹார சித்தர் ஒரு மர்மமாகவே கதை முழுவதும் இருக்கிறார். ஆன்மீகமும், திகிலுமாக தொடரும் கதையில் துப்பறியும் கதாபாத்திரங்களாக கிஷனும் சுரபியும் கதையின் சுவையை மேலும் கூட்டுகிறார்கள்! புதிர்களை விடுவிக்க உதவுகிறார்கள்!


மொத்தத்தில் இந்திரா செளந்தர்ராஜன், ராஜேஷ்குமார், சுஜாதா என்று நாம் ரசித்து வாசிக்கும் எழுத்து ஜாம்பவான்களின் கலவையாய் நல்லதொரு நாவலை வாசித்த திருப்தி ஏற்பட்டது!


ஆசிரியர்கள் நந்துசுந்து அவர்களுக்கும் நகைச்சுவையான எழுத்துக்கு சொந்தக்காரரான  கணேஷ் சாருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் வாசித்துப் பாருங்கள்!


&*&*&*&**&*&*


இன்றைய சிந்தனை - 29 ஜூலை 2023:



காலை உணவாக இன்று அவல் உப்புமா தான் செய்து சாப்பிட்டோம்! சாப்பிட்டுக் கொண்டே மகளிடம் இதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அம்மா செய்வது போலவே தான் தாளிப்புடன் அவல் சேர்த்து கலந்து வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கினேன். சில நேரங்களில் வறுத்த நிலக்கடலையும் சேர்ப்பது வழக்கம்! அம்மாவும் அப்படி சேர்ப்பாள்!


அன்று குட்டிப்பெண்ணாக இருந்த போது அம்மா செய்து தந்த  அவல் உப்புமாவின் சுவையே வேறாக இருந்தது! இன்று அதே செய்முறை தான் ஆனால் சுவையில் ஏன் இந்த வித்தியாசம்??? அன்று இருந்த அவலின் தரமா? அம்மாவின் கைப்பக்குவமா? அல்லது சுவையான சிறுவாணித் தண்ணீரில் ஊற வைத்திருந்ததாலா?


இப்படி நிறைய எண்ணங்கள் வந்து அலைமோதின! எந்த உணவாக இருந்தாலும் அதை சூடாக கொதிக்க கொதிக்க  சாப்பிடணும் என்று நினைப்பேன்! அது டீயானாலும் சரி! சப்பாத்தி உப்புமா என்று எதுவானாலும்..🙂 அம்மா செய்து தந்து அப்படி கொதிக்க கொதிக்க ருசித்த உணவுகள் எல்லாம் அன்றோடு சரி...🙂


&*&*&*&**&*&*


சோள பக்கோடா - 29 ஜூலை 2023:



மாலை நேரம் எதையாவது செய்து சாப்பிடலாம் என்ற போது ஸ்வீட் கார்ன் தான் இருந்தது! அதனுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு சிறிதளவு அரிசிமாவு சேர்த்து பக்கோடாக்களாக போட்டு எடுத்தேன். மேலே க்ரிஸ்பியாகவும் உள்ளே மெத்தென்ற பக்குவத்திலும் நன்றாகவே இருந்தது! இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவின கேரட், கோஸ் எல்லாம் சேர்ப்பது நம் விருப்பம் தான்.


இந்த ரெசிபி 'ஸ்வீட்கார்ன் பால்ஸ்' என்ற பெயரில் என்னுடைய 'லாக்டவுன் ரெசிபீஸ்' மின்னூலில் இடம்பெற்றுள்ளது! லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து தந்த 25 ரெசிபிக்கள் அதில் இடம்பெற்றுள்ளன!


&*&*&*&**&*&*


ரம்புட்டான் பழம் - 29 ஜூலை 2023:



இந்த வார காய்கறி சந்தையில் வாங்கிய பழம் இது! கால் கிலோ 60ரூ என்று பழ வியாபாரி சொன்னதும் சற்று யோசித்தேன்! உடம்புக்கு நல்லதுன்னு சொன்னா யோசிக்க கூடாதும்மா! இந்தா சாப்பிட்டு பாரு! என்று நறுக்கித் தந்தார்! மேலே முரட்டுத் தோலும் உள்ளே நுங்கு போன்று மெத்தென்ற பழமும் அதனுள்ளே கொட்டையுமாக இருந்தது!





டெல்லியில் கோடை காலத்தில் தள்ளுவண்டியில் போட்டு விற்கும் Litchi-ஐ நினைவுபடுத்தியது! கால் கிலோவுக்கு பத்து பழம் நின்றது! இன்னும் யூட்டியூபில் ஷார்ட்ஸில் பார்க்கும் சில பழங்களான water apple, star fruit எல்லாம் சிறுவயதில் சாப்பிட்ட நினைவு! மகளிடம் சொன்னால் என்ன விட்டுட்டு எல்லாத்தையும் நீ சாப்பிட்டிருக்க பாரு! என்று கோபம் கொள்கிறாள்...🙂 கோவையில் வசித்ததால் ஊட்டியிலிருந்து வந்திருக்கலாமோ...🙂


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


8 கருத்துகள்:

  1. குற்றாலத்தில் ரம்புட்டான் சாப்பிடாத நாளில்லை...

    பதிலளிநீக்கு
  2. பச்சைமலை மர்மம் ஈர்க்கிறது. சோள பக்கோடா சூப்பர்.

    ரம்பட்டான், மங்குஸ்தான், லிச்சி, எல்லாம் நிறைய முன்பு சாப்பிட்டிருக்கிறேன்.
    ஆதி, அங்கு விலை பரவாயில்லையே ரம்பட்டானின் விலை. இங்கு விலை கிலோ 400, 450 ஒரு சில இடங்களில் 500 கூட சொல்றாங்க மங்குஸ்தானுக்கு. லிச்சி கிலோ 170 - 200

    ஸ்டார் ஃப்ரூட், ஜம்பக்காய் எல்லாமே கிலோ 100 அதற்கு மேல்.

    ஸ்டார் ஃப்ரூட் வைத்து நான் ஸ்டார்ஃப்ரூட் ஹோரே என்று புளியோதரை போலச் செய்தேன் புளிக்குப் பதில் ஸ்டார் ஃப்ரூட் போட்டு வதக்கி....நன்றாக இருந்தது. ஸ்டார் ஃப்ரூட் Salad அப்படியேயும் சாப்பிடலாம். புளிக்குப் பதில் இதைச் சேர்த்து ரசமும் செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ஆதி கோவைக்கு ஊட்டியிலிருந்து வரும் இவை..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பச்சைமலை சுவாரஸ்யமான அறிமுகம்.

    இந்தப் பழங்கள் நமது நாட்டில் தாராளமாக கிடைக்கும்.
    யம்பு , ஸ்ராபுரூட், வீட்டிலே உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. பச்சைமலை கதை விமர்சனம் அருமை.
    நானும் இந்த பழங்கள் சாப்பிட்டு இருக்கிறேன்.
    அந்தக்காலத்தில் குற்றலாம் போய் வருபவர்கள் எல்லாம் மறக்காமல் வாங்கி வருவார்கள்
    ரம்புட்டான் பழம். இப்போது எல்லா பழங்களும் "பழமுதிர்சோலை கடையில்" எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அம்மாவின் கைமணம், மற்றும் நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. சுவையான கதம்பம்.  பேஸ்புக்கிலும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. பேபி கார்னை நறுக்கி வெஜிடபுள் புலவோடும் சேர்க்கலாம்.அதை மட்டும் வைத்தும் சப்ஜி பண்ணலாம். இப்போதெல்லாம் விலாவரியாகச் சப்பாத்தி.சப்ஜி எனப் பண்ணுவதில்லை. குறைத்து விட்டோம். சாதாரணமாக சாம்பார்ப் பொடி போட்டுத்தக்காளி, வெங்காயம் வதக்கிய சப்ஜியோடு நிறுத்திவிட்டேன். பனீரெல்லாம் வாங்குவதை நிறுத்தியே எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....