அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது நண்பர்கள் அனைவரும் அறிந்த விஷயம். ஆனாலும் சில சமயங்களில் பயணம் செய்ய மனம் ஒப்புவதில்லை. ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் எங்கேயாவது செல்லலாம் என்று தோன்றியது. அதனால் நான்கு நாட்களில் பஞ்ச் பிரயாகைகளில் விடுபட்ட மூன்று பிரயாகைகளுக்கு (விஷ்ணு பிரயாக், கர்ண பிராயாக், நந்த் பிரயாக்) சென்று வரலாம் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் மழை காரணமாக அங்கே செல்லவில்லை.
சரி மலைப்பகுதி வேண்டாம், ராஜஸ்தான் செல்லலாம் என்று முடிவு செய்து திட்டமிடத் தொடங்கினேன். ஆனால் அலுவலகத்தில் அதிகரித்த வேலைகள் காரணமாக செல்ல இயலவில்லை. சரி இன்னும் இரண்டு மாதங்கள் எல்லா இடங்களிலும் மழை தான். எங்கேயும் போகாமல் சுழியை அடக்கிக் கொண்டு வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் சென்று வந்தால் போதும் என்று முடிவு செய்தேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என்னை சும்மா இருக்க விட மாட்டேன் என்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் போலும்.
கடந்த 12-ஆம் தேதி, மதியம் அலுவலகத்தில் இருந்த போது மின்னஞ்சல் வழி ஒரு செய்தி. உடனடியாக உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் செல்ல வேண்டும் என்பது தான் அந்த மின்னஞ்சல் வழி வந்த செய்தி. உடனடியாக தேவையான வேலைகள் செய்து அலுவலகம் வழி முன்பதிவு செய்து விமானத்தில் சீட்டு வாங்கியாயிற்று. தில்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் விமானத்திற்கு காத்திருந்தேன்.
பெரும்பாலும் அலுவல் வேலைகள் மட்டுமே இருக்கும், ஊர் சுற்றுவது கடினம், வாய்ப்புக் கிடைக்காது. ஏனோ இந்தப் பயணம் பிடிக்கவில்லை என்று வீட்டில் சொன்னபோது, மனைவியும் மகளும் கோரசாக, "ஊர் சுத்த உங்களுக்கு தான் பிடிக்குமே, என்ஜாய்!" என்கிறார்கள். அலுவலகப் பணி, சனிக்கிழமை முடிந்து விடும். ஆனால் ஞாயிறு வரை அங்கே இருக்க வேண்டியிருக்கலாம் என்பதால் தலைநகர் டேராடூனில் சில இடங்கள் செல்ல வாய்ப்பு இருக்கலாம், என நினைத்துக் கொண்டு பயணத்தினை துவங்கினேன். கூடவே வேறு ஒரு அதிகாரியும்.
தனியே தன்னந்தனியே……
விமான நிலையத்தில் பார்க்கும் காட்சிகள் எப்போதும் என்னை சிந்திக்க வைப்பவையாகவே அமைந்து விடுகின்றன….. தனியே பயணிப்பதால் பொதுவாக வேடிக்கை பார்ப்பதும் சக மனிதர்களை கவனிப்பதுவுமே பிரதான பொழுதுபோக்கு என்று ஆகிவிடுகிறது…… இன்றைய பயணத்தில் கூட விமான நிலையத்தில் காத்திருந்த சமயத்தில் பார்த்த காட்சிகள் சிந்திக்க வைத்தன…..
பலர் தங்களது உடைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிழித்து வைத்து இருக்கிறார்கள். Torn jeans தான் இப்போது பல இளைஞர்களுக்கு பிடித்த உடையாக இருக்கிறது. நல்ல வேளை மறைக்க வேண்டிய இடத்தில் துணியைக் கிழித்துக் கொள்வதில்லை. எங்கள் ஊரில் ஒரு பைத்தியம் ஆன தையல் தொழிலாளி இருந்தார். ஆங்காங்கே உடை கிழிந்து இருக்கும். மனது கொஞ்சம் சரியாக இருக்கும்போது, அந்த கிழிசலை தைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். இப்போது நன்றாக இருப்பதை கிழித்துக் கொள்கிறார்கள். இது புது நாகரிகம். கேட்டால் உனக்கு வயதாகி விட்டது என்றோ, வேணும்னா நீயும் கிழிச்சிக்கோ என்றோ சொல்லக் கூடும். தாறுமாறாக கிழிந்து இருப்பதை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதும் வேதனை! சரி அவர்களுக்குப் பிடித்து இருக்கிறது போட்டுக் கொள்ளட்டும் என்று மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான். வேறு வழி…… 🙂
Excuse me…… கொஞ்சம் சீட்ட மாத்திக்க முடியுமா?
மேலே உள்ள கேள்வியை கேட்ட உடனே கோபம் வருகிறது. அதுவும் மொத்தமே ஒரு மணி நேரத்திற்கு குறைவான பயணம். ஏறி உட்கார்ந்த உடனே இறங்க வேண்டும்….. இதில் சீட் மாற்றி உட்காரக் கேட்பது தேவையா?
தில்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் காத்திருந்த பிறகு விமானத்தில் அமர்ந்து சுமார் 10 நிமிடத்திற்கு மேல் தரையில் பொறுமையாக நகர்ந்து வேகம் எடுத்த சில நிமிடங்களில் மேகக் கூட்டம்….. மிதந்து கொண்டிருக்கும் வேளையில் உணவு thara வேண்டும்.
சில்லென்று சாண்ட்விச் மற்றும் Bombay Banta என்ற மசாலா லெமன் ஒரு குப்பி, இரண்டு cumin biscuit, ஒரு சிறு தண்ணீர் குப்பி அவ்வளவுதான் மதிய உணவு. பறக்கும் 40 நிமிடத்தில் இதைக் கொடுத்து சாப்பிட்ட பின்னர் கழிவுகளையும் வாங்கிக் கொள்ள வேண்டும். பரபரவென்று இயங்க வேண்டியிருக்கிறது இந்த விமானப் பணிப்பெண்களுக்கு.
இந்த குறைந்த சமயத்தில் கூட ஒருவரை ஒருவர் பிரிய முடியாது என அடம் பிடித்த ஒரு பெண்…… நல்ல வேளையாக என்னிடம் கேட்கவில்லை. பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு இளைஞனிடம் கேட்டாள் அந்த இளம்பெண். என்னிடம் கேட்டிருந்தால் "அடப் போம்மா, சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டு!" என்று சொல்லியிருப்பேன்.
ஒரு வழியாக டேராடூன் விமான நிலையத்தில் இறங்கி, அங்கே காத்திருந்த மாநில அரசு அதிகாரிகளுடன் ஒரு சிறு கலந்துரையாடல்…. பிறகு 32 கிலோமீட்டர் சாலைப்பயணம் முடித்து தங்குமிடம் வந்தாயிற்று. திரும்பும் வரை டேராடூனில் டேரா! வழியெங்கும் கூடவே மழையும் தொடர்ந்தது. பார்க்கலாம் என்ன என்ன நடக்கும் என….
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
சுவாரஸ்யமான அனுபவங்கள் ஜி
பதிலளிநீக்குபயண விவரம் அருமை...
பதிலளிநீக்குவாசகம் அருமை. பயண விவரங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமனைவியும் மகளும் கோரஸாக!!!........- சிரித்துவிட்டேன்!!!
பதிலளிநீக்குஉங்கள் பணிச் சுமை புரிகிறது. ஞாயிறு ஏதேனும் இடம் போயிருப்பீங்கனு எதிர்பார்க்கிறேன், ஜி..
கீதா
மழை சமயம் பயணம் கடினம்தான்...ரிஸ்க்.
பதிலளிநீக்குஹையோ! இந்த கிழிசல் ஜீன்ஸ் - இப்ப மீண்டும் fashion. இதைப் பற்றி எழுதியிருந்தேன். என் பாட்டி என் மகனிடம், என்னிடம், சொல்லியதையும்.
நமக்கு வயசாகிப் போச்சு!!!!!!!!!! ??????
கீதா
இடம் மாற்றிக் கேட்டால் எனக்கும் கோபம் வரும் ஜி. ஜன்னல் இருக்கையை விட்டுக் கொடுக்க எனக்கு மனமே வராது!
பதிலளிநீக்குமதிய உணவு இவ்வளவுதானோ? ஒரு வேளை எல்லாருமே இப்போதைய யுவ யுவதிகள்னு நினைச்சிட்டாங்க போல விமானக்காரர்கள்! இங்கு பலரும் இப்படியானதைத்தான் சாப்பிடுவதைப் பார்க்கிறேன் ஜி.
இரு நாள் அனுபவங்கள், ஞாயிறு என்னாச்சு என்று எதிர்பார்ப்புடன்
வாசகம் அருமை
கீதா
அனுபவப் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குபயணம் இனிதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். தொடருங்கள்.
ரயிலில் இடம் மாற்றிக் கேட்டால் எனக்கும் கோபம் வரும்..
பதிலளிநீக்குஜன்னல் இருக்கையை விட்டுக் கொடுக்க எனக்கு மனம் வராது!..
விமானத்தில் இருக்கை எண் கேட்டு வாங்கி விடுவதால் இந்தப் பிரச்சினை இல்லை..
பதிவு அருமை..
உங்களுடன்தொடர்பில். நாமும் பயணத்தில் தொடர்கிறோம்.
பதிலளிநீக்குஅருமையான அணுபவங்கள்.
பதிலளிநீக்குஇடம் கேட்டால் நீங்கள் விட்டுக் கொடுத்துவிடுவீர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.