புதன், 31 ஜனவரி, 2024

வாசிப்பனுபவம் - சூடா ஒரு கப் டீ - சிறுகதைகள் - ரிஷபன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட டேராடூன் பயணம் - Mindrolling Monastery, Dehradun பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


 

*******

 



சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறேன்.  சில நாட்களாக, கிடைக்கும் நேரத்தில், வீட்டில் இருக்கும் அச்சு நூல்களை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.  சில வாங்கியவை, சில அந்தந்த நூலாசிரியர்கள் கொடுத்தவை.  காசு கொடுத்து வாங்கியவற்றைக் கூட பிறகு படிக்கலாம் என்று வைக்கலாம், ஆனால் நூலாசிரியர்கள் கொடுத்தவற்றை பிறகு படிக்கலாம் என்று வைத்துவிடுவது ஒரு நல்ல வாசகனுக்கு அழகல்ல.  ஆனால் அப்படி நடந்து விடுவது வேதனையான உண்மை.  சென்ற அக்டோபர் மாதம் தமிழகம் வந்தபோது நண்பர், மூத்த எழுத்தாளர், 2000 சிறுகதைகளுக்கு மேல் பிரபல வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவற்றில் எழுதியவர் என வரிசையாக அவர் குறித்து எழுத முடியும் என்றாலும் தன்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ளாத ரிஷபன் ஜி அவர்கள், மூன்று அச்சு நூல்களைத் தந்தார்.  அந்த மூன்று நூல்களையும் அக்டோபர் மாதம் திருவரங்கத்தில் இருக்கும் சமயம் படிக்க முடியவில்லை. அக்டோபர் கடைசியில் தில்லி சென்று (புத்தகங்கள் திருவரங்கத்தில் இருக்க!) தற்போது தான் மீண்டும் திருவரங்கம் வந்திருக்கிறேன்.  இந்த சமயத்தில் அவர் தந்த மூன்று நூல்களையும் வாசித்து விட்டேன். அப்படி வாசித்த ஒரு நூல் - சூடா ஒரு கப் டீ - மொத்தம் பதினோரு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அந்த நூல் குறித்து இன்று இங்கே பார்க்கலாம். 

 

நண்பர் ரிஷபன் அவர்களின் சிறுகதைகள் எப்போதும் படிக்கும்போதே ஒருவித வியப்பினை எனக்கு அளிக்கும். மனுஷன் என்னமா எழுதுகிறார்! ஒவ்வொரு கதையும் மனதுக்குள் புகுந்து ஏதேதோ மாயங்கள் செய்துவிடுகிறதே!” - ஒவ்வொரு கதை படிக்கும்போதும் மனதுக்குள் தோன்றும் விஷயம் இது.  இந்தத் தொகுப்பில் இருக்கும் பதினொரு கதைகளும் அதே ரகம்.  ஒவ்வொரு கதை படித்த பின்னும் சில நிமிடங்கள் அந்த சிறுகதையின் கதாபாத்திரங்கள் குறித்த சிந்தனைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.  அந்த கதாபாத்திரம் நம் கண்முன்னே நடமாடும் விதத்தில் இருக்கும் கதாசிரியரின் எழுத்து நடை. உதாரணத்திற்கு இந்தத் தொகுப்பில் இருக்கும் முதல் கதை - தொகுப்பின் தலைப்பான கதை - சூடா ஒரு கப் டீ” கதையில் வரும் கதாபாத்திரம் - டீ விற்கும் குணா என்னும் பெண்மணி.  அவர் பேசுவதாக வரும் இந்த வரிகள்….

 

“இந்த ஆம்பளைங்க புத்தி இருக்குதே… கெஞ்சினா மிஞ்சுவாங்க. மிஞ்சினா கெஞ்சுவாங்க.”

 

“நான் அப்படி இல்ல.”

 

“ஒண்ணு சொல்லட்டுமா. என் கணிப்பு தப்பாது. ஒனக்கு அடிப்படையாவே எப்பவும் ஒரு குழப்பம். சந்தேகம். திட புத்தி இல்லை. அது தப்பில்லை. ஒவ்வொருத்தர் குணம் அப்படி. சிலபேர் தெளிவாயிருவாங்க. சிலர் லாஸ்ட் வர குழப்பிக்கிட்டே.”

 

என்ன சொல்கிறாள். அவ்வழியே பார்த்தேன். 

 

“வாழ்க்கை எப்பவும் ரோடு போட்டு வச்சிருக்காது. நாம தான் நம்ம ரூட்டுக்கு ரோடு போட்டுக்கணும். நீ புத்திசாலி. கப்புனு புடிச்சுக்குவே. ஒரு டீ குடிச்ச எல்லாம் சரியாயிரும்.”

 

மொத்தம் பதினொன்று கதைகள் - சூடா ஒரு கப் டீ கதையில் ஆரம்பித்து, திரும்பி வரத் தெரிந்த பூனை, மீண்டும் பூக்கும், பையில் என்ன வச்சிருக்கே போன்ற தலைப்புகளில் இருக்கும் கதைகளில் தொடர்ந்து “எனக்கு நீ வேணும்” என்கிற கதையுடன் தொகுப்பு முடிகிறது.  ஒவ்வொரு கதையும் மனதில் அப்படியே பச்செக்கென்று ஒட்டிக்கொள்ளும் விதமாக அமைத்து விடுவதில் கதாசிரியர் மிகவும் திறமைசாலி.  AGS - ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியர் - பள்ளி நாட்களில் கம்பீரமாகப் பார்த்த ஒரு ஆசிரியரை, வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும் ஒரு மாணாக்கன், அவரின் முதுமையில் பிசிறடித்த தொனியில் “பையில் என்னடா வச்சுருக்க?” என்று கேட்டு முன்னாள் மாணவரின் சட்டையிலிருந்து காசு எடுத்துக் கொள்ளும் அவரை பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்.  அந்த தலைமை ஆசிரியரின் நிலை, கதாசிரியரின் வார்த்தைகளில் நம் கண் முன்னே வரும்போது, அந்த ஆசிரியருக்காக நம்மையும் கவலை கொள்ள வைக்கும் - கதையின் முடிவு நம்மையும் சோகத்தில் ஆழ்த்திவிடும்.  

 

குட்டா மற்றும் உத்தவர் கதைகள் நம்மை அப்படியே கிருஷ்ணாவதார காலத்திற்கு அழைத்துச் சென்று விடும். குட்டா கதை - கிருஷ்ணருக்கும் ராதைக்குமான காதல் என்றால், உத்தவர் கதை கிருஷ்ணர் கோபிகைகள் மீது கொண்ட அன்பு பற்றியது.  கதைகள் குறித்து நான் இங்கே சொல்வதை விட, நீங்களாகவே படித்தால் கதைகளின் தாக்கத்தினை நீங்களும் நிச்சயம் உணர்ந்து கொள்வீர்கள்.  ஒவ்வொரு கதையும் படித்து முடித்தபின்னர் உங்கள் மனதிலிருந்து அகலாது - சில நாட்களுக்கேனும்.  பின்னர் எப்போது படித்தாலும் மீண்டும் அதே ஈர்ப்பு கிடைப்பது இவரது சிறுகதைகளில் மட்டுமே.  இந்த 11 கதைகள் கொண்ட தொகுப்பினை Pustaka Digital Media Private Limited நிறுவனத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.  அச்சுப் புத்தகத்தின் விலை ரூபாய் 110/- (முதலாம் பதிப்பு - 2023). அவர்களது இணைய தளம் வழியாக இந்த அச்சு நூலை வாங்கிக் கொள்ளலாம்.  கூடவே புஸ்தகா தளத்தில் உறுப்பினர் என்றால் மின்புத்தகமாகவும் படிக்கலாம்.   இந்த சிறுகதைத் தொகுப்பினை வாங்கி அதில் இருக்கும் சிறுகதைகளை படித்துத்தான் பாருங்களேன். மீண்டும் வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். 

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

 

10 கருத்துகள்:

  1. ரிஷபன் ஜியின் கதைகள் - எழுத்துகள் பற்றி கேட்கவும் வேண்டுமா?  அவர் மனதில், அவர் கைகளில் அப்படி என்ன ஊற்று இருக்கிறது என்று தோன்றும்.  அன்பின் ஊற்று.  நேசத்தின் ஊற்று.  வழுக்கிக்கொண்டு போகும் எழுத்தும் உணர்வும் இதயத்தில் தங்கிவிடும்.  

    பதிலளிநீக்கு
  2. ரிஷபன் அண்ணாவின் கதைகள் நான் எபியில் அவை வந்த போது வாசித்தவையே. அவருடைய எழுத்தும் எழுத்து நடையும் என்னை மிகவும் கவர்ந்தவை. நம்மை உள்ளுக்குள் இழுத்துவிடுபவை.
    உங்கள் வாசிப்பனுபவத்தில் சொல்லியிருப்பவை உட்பட.

    மிக்க நன்றி வெங்கட்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கதைகளில் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் உள்ள சில பகுதிகளைச் சொல்லியிருப்பதே வரிகளே அக்கதைகள் அருமையாக இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகின்றன. உங்களின் வாசிப்பனுபவம் அருமை. தொடரட்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.
    ரிஷபன் அவர்கள் கதை எல்லாம் அருமையாக இருக்கும்.
    உங்கள் புத்தக விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. திரு ரிஷபன் சார் அவர்களின் கதை தொகுப்பைப் பற்றிய விமர்சனம் அருமை. நீங்கள் தந்த பகுதிகளே படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எல்லா கதைகளையும் படிக்கும் ஆவலை உண்டாக்குகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      ரிஷபன் ஜி கதைகள் அனைத்துமே அருமையாக இருக்கும். அவ்வப்போது அவரது கதைகளை முகநூலில் பகிர்ந்து கொள்வார் அவர். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....