வியாழன், 18 ஜனவரி, 2024

சிதம்பர ரகசியம் - இந்திரா சௌந்தரராஜன் - வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களைக் கைப்பற்றி அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள் - ஒரிசன் ஸ்வெட் மார்ட்டென். 

 

*******


 

திருச்சி அருகே இருக்கும் மகேந்திர மங்கலம் என்ற ஊரில் தான் இந்த நூலின் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதாக நூலின் ஆசிரியரான எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சார் குறிப்பிடுகிறார். சமீபத்தில் Kindle appல் நான் வாசித்த நூல் தான் சிதம்பர ரகசியம்!

 

சிறுவயதில் அப்பாவுடன் சிதம்பரம் கோவிலுக்குச் சென்ற போது ஆடல்வல்லான் அருகே ஒரு திரையை விலக்கி இது தான் சிதம்பர ரகசியம் என்று காண்பித்த காட்சி என் மனதில் நிழலாடியது! பஞ்சபூத ஸ்தலங்களில் இங்கு ஈசன் ஆகாயமாக காட்சித் தருகிறார்!

 

மகேந்திர மங்கலம் காவிரிக் கரையோரமாய் அமைந்த ஊர்! வேதங்களை கற்றுக் கொள்ள ஏற்ற இடம் என்றும் ‘மஹாபெரியவா’ இங்கு தான் வேதங்களை கற்றுக் கொண்டார் எனவும் தெரிய வருகிறது! 

 

அகத்தியர் ஸ்தாபித்த ‘மழை லிங்கம்’ இங்கு இருப்பதாகவும் அதைத் தேடிக் கண்டெடுத்து பூஜித்தால் வறண்டு போன காவிரித்தாய் குளிர்ந்து போய் பிரவாகமாக பெருக்கெடுத்து ஓடுவாள் எனவும் சித்த புருஷர்களால் நம்பப்படுகிறது!

 

இப்படியொரு சூழலில் தான் அந்த ஊருக்கு ராஜேந்திரன் என்ற மருத்துவரும் அவரின் குடும்பமும் வருகை தருகிறார்கள்! அவர்களின் பூர்வீக வீட்டில் காலெடுத்து வைத்த நொடி முதல் அதிரடியான பல திருப்பங்கள் நிகழ்கிறது! அவர்கள் வீட்டின் பரணில் வைத்திருந்த ஒரு மரப்பெட்டியில் விலைமதிப்பற்ற பல ஓலைச்சுவடிகள் கிடைக்கின்றன!

 

அவர்கள் வாழ்வில் இடம்பெறும் பல சித்த புருஷர்களும், அங்கு நடைபெறும் காவிரி புஷ்கரமும் என கதை நகர்கிறது! விலைமதிப்பற்ற அந்த ஓலைச்சுவடிகளை காக்கும் சித்தர்களும், சுயநலத்தால் அதைக் கைப்பற்ற ஒரு கும்பலும் அது தொடர்பான காட்சிகளும் எனச் செல்கிறது!

 

இடையிடையே இப்போதைய மனிதர்களின் சுயநலமான  மனப்பாங்கும், அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு என சமூகத்தின் மீதான கருத்துகளும் சொல்லப்பட்டுள்ளது! 

 

இப்படியான சூழலில் அந்த ஓலைச்சுவடிகளை எப்படி காத்தார்கள்? ராஜேந்திரன் குடும்பத்தில் நிகழ்ந்த அதிசயங்கள் என்ன? போன்றவற்றை இந்த நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். இந்த நூலில் ஆங்காங்கே தென்படும் எழுத்துப்பிழைகளை தவிர்த்தால் நிச்சயம் சுவாரசியம் தான்!

 

கிண்டில் கருவி அல்லது அலைபேசியில் உள்ள கிண்டில் App-இல் படிக்க நினைத்தால் அமேசான் பக்கத்தில் கீழே உள்ள சுட்டி வழி தரவிறக்கம் செய்து படிக்கலாம்.  

 

Chidambara Ragasiyam (Tamil Edition) eBook : Indira Soundarajan: Amazon.in: Kindle Store 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

9 கருத்துகள்:

  1. சில வாரங்களுக்கு முன் இவரின் மகாதேவ ரகஸ்யம் பற்றி சொன்னீர்கள்.  அன்றே தரவிறக்கி படிக்காத தொடங்கி அபப்டியே நிற்கிறது!  நேற்று கூட தொடர வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் 'ஜோ' (நல்லாயிருக்கு!) திரைப்படம் பார்த்து நேரம் சென்று விட்டது!  இதுவும் கிடைக்கிறதா, என்று பார்த்து இறக்கிக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாதேவ ரகசியம் வாசிக்கத் துவங்கி விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி சார். ஜோ என்ற திரைப்படம் வந்துள்ளது என்பது என்னைப் பொறுத்தவரையில் புதிய தகவல் சார். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    2. இன்று அதைவிட நல்ல படம் பார்த்தேன்.  நெட்ப்ளிக்சில் ஹி நானா என்கிற படம்.  நானி நடித்தது.  நன்றாக இருக்கிறது.  நெகிழ வைக்கிறது.  நானி நல்ல படங்களை செலெக்ட் செய்து நடிக்கிறார்.

      நீக்கு
    3. சிதம்பர ரகசியம் கிடைக்கவில்லை. கிடைத்த இடங்களில் தரவிறக்க முடியவில்லை!!

      நீக்கு
    4. மகள் தான் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பாள் சார். அவளுக்கு தெரிந்திருக்கும் நீங்கள் சொல்லும் படம்.

      நீக்கு
  2. ஆதி, சிதம்பர ரகசியம் நான் கதை வாசித்ததில்லை ஆனால் இது தொடராக வந்தது. அப்போது பார்த்திருக்கிறேன் சென்னையில் மாமனார் மாமியார் வீட்டில் இருந்த நேர்ந்த போது. முழுவதும் பார்க்க முடியவில்லை நன்றாக இருந்தது ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சி தொடராகவும் வந்திருந்ததா!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. கதை விமர்சனம் அருமை.
    வாசகம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....