அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தாயுமானவன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
*******
ஆஞ்சநேயர் தரிசனம் - 11 ஜனவரி 2024:
ஜெய் ஸ்ரீராம்!
இன்று, திருவரங்கத்தின் அருகே இருக்கும் மேலூர்
கிராமத்தில் எழுந்தருளிக் கொண்டிருக்கும் 37 அடி ஆஞ்சநேயரை தரிசித்து சஹஸ்ரதாரா அபிஷேகத்தை காணும் பேறு பெற்றேன்.
நல்லதே நடக்கணும். ஜெய் ஸ்ரீராம்! 🙏 🙏
*******
மகாதேவ ரகசியம் - வாசிப்பனுபவம் - 10 ஜனவரி 2024:
இளம் தொழிலதிபரான சரண்யன் தன் தந்தையின் மறைவுக்குப்
பின்னர் அவரின் தொழிற்சாலையை கவனித்துக் கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து
வருகிறான்! இதில் விருப்பமில்லை என்றாலும் பிசினஸை அவன் தொடர்ந்து நடத்திச்
செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்!
சொக்கன்பட்டி கிராமம் சிவனின் சொத்து என்று
சொல்லப்படும் ஊர்! அங்கு ஒரு காலத்தில் அரசர் சுந்தர பாண்டியனால் எழுப்பப்பட்ட
கோவில் ஒன்று கால ஓட்டத்தில் மண்ணில் புதையுண்டு போய்க் கிடக்கிறது! அந்தக்
கோவிலில் அப்போது அரசனால் அம்பாளும் லிங்கமும் தங்கத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன!
காலத்தின் ஒட்டத்தில் கோவில் மண்ணில் புதையுண்ட
நிலையில் அந்த விக்கிரகங்கள் என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்காக
சரண்யனின் தந்தை சக்கரவர்த்தி அங்கு நிலம் வாங்கி பணிகளை துவக்குகிறார்! அதன் பின்
அவர் எதிர்பாராத விதமாக இறந்தும் போய்விடுகிறார்!
தந்தை சக்கரவர்த்தியின் மறைவுக்குப் பின்னர் அங்கு
வரும் சரண்யனுக்கு அந்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த விடாமல் பல விபத்துகளும்,
பணியாளர்களின் இழப்புகளும் ஏற்படுகிறது! எதனால் இப்படி ஏற்படுகிறது என்று அவனுக்கு
எதுவுமே தெரியவில்லை! இந்த சூழ்நிலையில் தான் வெளிநாட்டிலிருந்து அவனுடைய காதலி
கிளாரா அவனைத் தேடி வருகிறாள்!
சிவன் சொத்து குலநாசம் என்ற சொல் வழக்குக்கு ஏற்ப
அந்த ஊரில் நிலம் வாங்கி தொழிற்சாலை வேலையை துவங்கியதால் தான் சரண்யனின் தந்தை
மறைந்தார் என்றும் புதையுண்ட கோவிலை அவர் வெளிக்கொணர முயற்சி செய்ததால் தான் பல
விபத்துகளும் இழப்புகளும் ஏற்படுகிறது என்றும் எல்லோராலும் நம்பப்படுகிறது!
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் தான் கிளாரா
சரண்யனுக்கு உதவியாக களத்தில் இறங்குகிறாள்! உண்மையில் அங்கு நடக்கிறது! கோவிலால்
தான் இத்தனை விபத்துகளா! இல்லை வேறு யாருக்காவது இந்தக் கோவில் வெளிவருவதில்
விருப்பமில்லையா! என்றெல்லாம் அறிந்து கொள்ள முயற்சி செய்கிறாள்!
மண்ணில் புதையுண்ட கோவில் விக்கிரகங்களுக்கு
என்னவாயிற்று? இங்கு நிகழும் சம்பவங்கள் உண்மையில் தெய்வத்தின் செயல் தானா? அரசன்
அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்! என்று சொல்வார்களே! போன்ற பல
புதிர்களுக்கான விடையை புத்தகத்தை வாசித்தால் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்!
Kindleல் நான் வாசித்த இந்த நூல் மிகவும்
விறுவிறுப்பான திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவே இருந்தது என்று சொல்வேன்! என்னை நிறைய யோசிக்கவும் வைத்தது!
*******
உடம்புக்கு வந்தால்… - 11 ஜனவரி 2024:
ஜுரம் உங்களுக்கு வந்ததுக்கு பதிலா எனக்கே
வந்திருக்கலாம்! என்ன பாடு படுத்தறேள்! ஒருநாள் நான் இப்படி படுத்துண்டா யார்
செய்வான்னு பார்க்கலாம்!
பொம்மனாட்டிகளால எல்லாத்தையும் சமாளிக்க முடியும்னு
லோகத்துல சொல்றது பொய்யில்ல!
மேல் துண்டால் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு
போர்வைக்குள் புகுந்தபடி அனத்திக் கொண்டு எல்லோரையும் அமர்க்களப்படுத்தும்
அப்பாவிடம் தான் அம்மா இப்படி சொல்வாள்…:)
&&&&&&&
வாரணாசியிலிருந்து ஜூரத்தோட வந்தேன், டாக்டர்ட்ட
போனேன்! டிரிப்ஸ் ஏத்துனாங்கன்னு பதிவு போட்டு எல்லாரையும் பதற வெச்சிட்டீங்களே!
அதுக்கப்புறம் இப்ப எப்படியிருக்கீங்கன்னு சொல்ல வேண்டாமா?? என் பொண்டாட்டி என்ன
‘ஊர்சுத்தி’ன்னு சொன்னான்னு சொல்ல வேண்டாமா??
ஒரு வீட்டில் இரண்டு பதிவர்கள் இருப்பது ப்ளஸ்ஸா?
மைனஸா? அது ஒருபுறம் இருக்கட்டும்!
என்னவரின் உடல்நிலை பற்றி தொடர்ந்து விசாரித்துக்
கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி. இங்கு வந்த பின்னும்
மருத்துவரிடம் காண்பித்து ஊசி போட்டுக் கொண்டு, மருந்துகளும் எடுத்துக் கொண்டு
வருவதில் இப்போது நன்றாக இருக்கிறார். இருமல் தான் இன்னும் இருக்கிறது! அதற்குள்
எனக்கும், மகளுக்கும் கூட சளியும் ஜூரமும், உடல்வலியும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டது!
தேங்காய்ப்பால் பிழிந்து புழுங்கலரிசி கஞ்சியும்,
தினமும் ஒரு ரசமாக மிளகு ரசம், பூண்டு ரசம், இஞ்சி ரசம், நெல்லிக்காய் ரசம், தினம்
ஒரு கஷாயமாக சுக்கு கஷாயம், நிலவேம்பு கஷாயம், வெத்தலை கஷாயம், சித்தரத்தையும்
அதிமதுரமும் நசுக்கி சேர்த்த வெந்நீர், நெஞ்சு சளிக்கு வெந்நீர் ஒத்தடம் என்று
கொடுத்து கவனித்து வருவதில் அவரிடம் நல்ல முன்னேற்றம்!
எங்களுடன் சேர்ந்து இருக்க ஒரு வாய்ப்பு
கிடைத்துள்ளதாக நினைத்துக் கொள்கிறேன்! இறைவனுக்கு நன்றி!
*******
மார்கழி கோலங்கள் - 2023-24 - பகுதி 4
இந்த வருட மார்கழியில் வீட்டு வாசலில் போட்ட சில
கோலங்களை இந்தப் பதிவிலும், இந்தப் பதிவிலும் மற்றும் இந்தப் பதிவிலும் வெளியிட்டு இருந்தேன். இந்த நாளில் இன்னும் சில கோலங்கள்
உங்கள் பார்வைக்கு!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சுவாரஸ்யமான கதம்பம். மகாதேவ ரகசியம் பற்றி ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னால் நீங்கள் சொல்லி, நானும் புத்தகம் தரவிறக்கி படிக்க தொடங்கியதை சிதம்பர ரகசியம் பதிவில் சொல்லி இருந்தேன்! வெங்கட்டுக்கு உடல்நிலை சீரானது குறித்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஆமாம் சார். மகாதேவ ரகசியம் வாசித்து விட்டீர்களா?
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
கோலங்கள் அழகு. தில்லி வெங்கட் பூரண குணமடைவதில் மகிழ்ச்சி. அவருக்குத்தான் ஶ்ரீரங்கம் வந்ததற்கு சில பல கோயில் உலாக்கள் போயிருக்கலாமே என்று தோன்றியிருக்கும்.
பதிலளிநீக்குஇந்திரா சௌந்திர்ராஜன் கதைகள் மெய் போலும்மே என்பது போலவே செல்லும். பாவம் அவர்... அவருடைய நாவல்கள் மின்னூலாக சுலபமாக இணையத்தில் கிடைக்கிறது.
உண்மை தான் சார். அவருக்கு எப்போதுமே எங்கேயாவது போக வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்!
நீக்குஇந்திரா சாரின் நாவல்களை kindle monthly subscription மூலம் தான் டவுன்லோட் செய்து வாசிக்கிறேன். இலவச டவுன்லோட் அல்ல!
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
ஜி பூரண நலம் பெற வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவிமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குமகாதேவ ரகசியம் சுவார்சியமாக இருக்கும் போலத் தெரிகிற்து.
பதிலளிநீக்குவெங்கட்ஜி க்கு உடல் நிலை நன்றாகியிருப்பது மிக்க மகிழ்ச்சி. இப்ப வரும் இருமல் டக்கென்று நிற்பதில்லை பலருக்கும். ஒருவருக்கு வந்தால் வீட்டில் தொற்றிக் கொண்டுவிடுகிறது. இதுவும் முன்பு பரவியதன் பங்காளி என்றுதான் சொல்கிறார்கள். இப்படி உருமாறி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் என்றும் சொல்றாங்க. நாங்களும் வெளியில் போறப்ப குறிப்பாகக் கூட்டம் இருந்தால் மாஸ்க் போட்டுக் கொண்டுவிடுகிறோம். வீட்டில் வயதானவரும் இருக்கிறாரே!
கோலங்கள் எல்லாம் மிக அழகு,
கீதா
ஆமாம் இருமல் வந்தால் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டுத் தான் செல்லும்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் அருமை. தங்களுக்கு மார்கழியில் ஆஞ்சனேயர் தரிசனம் கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சி. இன்று உங்கள் பதிவின் வழி எங்களுக்கும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
மகாதேவ ரகசியம் நூலைப்பற்றிய விமர்சனம் நன்றாக உள்ளது. எப்போதோ இதைப் படித்த நினைவும் வருகிறது. அது வேறோ எனவும் தெரியவில்லை. கதாசிரியர் இந்திரா சௌந்திரராஜனின் சில புத்தகங்களை முன்பு படித்துள்ளேன். கதையின் தலைப்புக்கள் நினைவில்லை.
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் உடல் நலம் தேறி வருவதற்கு மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் அவர் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இப்போது இந்த சளி, இருமல் தொடர்ந்து அனைவருக்குமே வருகிறது. குணமடையவும் நீண்ட நாள் எடுத்துக் கொள்கிறது. எனக்கும் ஒரு மாதத்திற்குப் பின் போவேனா எனப் போகிறது. காலை குளிருக்கு நீண்ட நேரம் இந்த தொந்தரவு உள்ளது. .
கோலங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்திரா சாரின் புத்தகங்களில் சித்தர்களும் சிவமும் என முக்கியமாக இருப்பார்கள் என்பதால் ஒருசில கதைகள் முன்பே படித்தது போலவே தான் இருக்கும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.
கதை விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குகோலங்கள் அருமை.
//உங்களுக்கு வந்ததுக்கு பதிலா எனக்கே வந்திருக்கலாம்!//
உங்களுக்கு வந்ததற்கு பதிலா எனக்கு வந்து இருக்கலாம்.
என் அம்மா, நான் எல்லாம் இப்படித்தான் அலுத்து கொண்டோம்.
அம்மா அப்பாவிடம் உங்களுக்கு உடம்புக்கு வந்தால் இப்படியா பட பயம் போடுவது?
''சுக்கு கஷாயம் குடித்து விட்டு கடப்பாறையை முழுங்கி விட்டு நாங்கள் வேலை செய்கிறோம் நீங்கள் இப்படியா ஊரை கூட்டுவீர்கள்" என்பார்கள்.
சின்ன தலைவலி கூட தாங்க மாட்டார்கள், என் அப்பாவும், என் கணவரும்.
உங்கள் அன்பான கவினிப்பில் விரைவில் குணமாகி விட்டார் வெங்கட் .
பொங்கலை உங்களுடன் சிறப்பாக கொண்டாடியும் விட்டார். மகிழ்ச்சி.
அதே தான் அம்மா. அமர்க்களம் செய்து விடுகிறார்கள்! நமக்கு வந்தால் எதையும் பெரிதுபடுத்தாமல் இருந்து விடுவோம்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.