திங்கள், 29 ஜனவரி, 2024

தினம் தினம் தில்லி - (KH)காரி (B)பாவ்லி - ஆசியாவின் மிகப் பெரிய சந்தை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


 

*******



 

தலைநகர் தில்லி - மிகவும் பழமையான இந்த நகரில் பல புதிய விஷயங்கள் சேர்ந்து கொண்டே இருந்தாலும், இன்னமும் பல விஷயங்கள் பழமையானவை.  பழமையின் நினைவுகளை இன்றைக்கும் கண்முன்னே காண்பித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் இங்கே உண்டு.  பழைய தில்லி என்று வழங்கப்படும் தில்லியின் பகுதி பெயரிலே இருப்பது போல மிகவும் பழமையான ஒரு பகுதி! முகலாயர் காலச் சின்னங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டாலும் பழமையின் எச்சங்கள் இன்றைக்கும் நிறைந்திருக்கும் பகுதி.  தலைநகர் தில்லியில் பல இடங்களில் (B)பாவ்லி என்ற பெயர்கொண்ட நீர் நிலைகள் பரவி இருந்தன - சில நீர் நிலைகள் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றால் எத்தனை பழமையானவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  

 

(B)பாவ்லி என்றால் என்ன?  




 

ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Step Well! தரையிலிருந்து படிகள் வழி சில நிலைகளைக் கடந்து கீழே சென்று அங்கே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மழை நீரைக் கொண்ட கிணறு போன்ற அமைப்பு தான் (B)பாவ்லி. மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்துக் கொள்ள இப்படி பல இடங்களில் (B)பாவ்லி-களை அமைத்து வைத்திருந்தார்கள் அந்தக் கால ராஜாக்கள். கோடைக் காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருந்த சமயங்களில் இந்த நீர் நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் தான் மக்களுக்கு பயன்தரக் கூடியதாக இருந்தது.  குடிநீருக்கென்றே சில (B)பாவ்லிகள் பயன்பட்டன என்றால் சில மற்ற விஷயங்களுக்காக - குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு - என பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டன.  தில்லியில் மட்டும் இப்படியான (B)பாவ்லி-க்கள் நூற்றுக்கணக்கில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் தலைநகர் தில்லியில் Gகந்தக் கி (B)பாவ்லி, மஹாராஜா அகர்சேன் (B)பாவ்லி, நிஜாமுத்தீன் (B)பாவ்லி, ஹிண்டு ராவ் (B)பாவ்லி, புராணா கிலா (B)பாவ்லி, ஃபெரோஸ் ஷா கோட்லி (B)பாவ்லி என வரிசையாக பல இடங்களை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். அப்படியான ஒரு (B)பாவ்லி தான் (KH)காரி (B)பாவ்லி!

 

(KH)காரி (B)பாவ்லி - இந்த வார்த்தைகளில் (B)பாவ்லி என்பது குறித்து நிறைய சொல்லியாயிற்று! முதல் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?  (KH)காரி அல்லது (KH)காரா என்றால் உப்புத்தன்மை கொண்ட என்று அர்த்தம்.  அதாவது (KH)காரி (B)பாவ்லி என்பது காரணப் பெயர் - இந்தக் கிணற்றில் இருக்கும் தண்ணீரானது உப்புத்தன்மை கொண்டது என்பது தான் இந்தப் பெயருக்கான காரணம்! இந்தக் கிணறு இங்கே இருந்ததன் அடையாளமாக இன்றும் இப்பகுதி  (KH)காரி (B)பாவ்லி என்று அழைக்கப்பட்டாலும் இந்தக் கிணறு இப்போது இங்கே இல்லை. ஆனால் அதே பெயரில் இங்கே ஒரு மிகப்பெரிய சந்தை  - ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றும் சொல்கிறார்கள் - உண்டு.  அந்தச் சந்தையின் பெயர் கூட (KH)காரி (B)பாவ்லி தான்!  இங்கே கிடைக்காத பொருட்களே இல்லை. அதிலும் குறிப்பாக உலர் பழங்களுக்கான மிகப்பெரிய சந்தை இது.  அனைத்து மளிகை பொருட்களும்,  மசாலாப் பொருட்களும் இங்கே மொத்த விலைக்கு (WHOLESALE) வாங்கலாம். 


 

மொத்த விலை கடைகள் மட்டுமல்லாது சில்லறை விலை கடைகளும் உண்டு என்றாலும், பலரும் இங்கே வந்து வருடத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது - குறிப்பாக முதியவர்கள் இருக்கும் வீடுகளில் உள்ளவர்கள் இங்கே தான் வந்து வாங்குகிறார்கள். இப்போதைய இளைஞர்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை - அது மட்டுமின்றி இங்கே வந்து செல்வதற்கான, கூட்டத்தில் தேடி அலைவதற்கான  பொறுமை இல்லவே இல்லை! இருக்கவே இருக்கிறது Blinkit, Zepto போன்ற செயலிகள். வீட்டில் இருந்தபடியே தேவையானத்தைச் சொன்னால் சில நிமிடங்களில் வீட்டு வாசலுக்கு வந்துவிடுகிறது என்பதால் இவற்றையே அதிகம் விரும்புகிறார்கள்.  என்னைப் போன்ற தனிக்கட்டைகளுக்கு மொத்தமாக வாங்கி அதை பாதுகாப்பது சரிவராது என்பதால் நான் அங்கே சென்று பொருட்கள் வாங்குவதில்லை என்றாலும் அங்கே வருடத்திற்கு ஒரு முறையேனும் சென்று கொண்டிருந்தேன்.  

 

எங்கள் பகுதியில் நடக்கும் விழாக்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை நாங்கள் வாங்கிக் கொடுத்து சமையல் ஆட்கள் மூலம் சமையல் செய்து உணவு வழங்குவது வழக்கம். ஒரு குழு காய்கறிகள் வாங்கச் சென்றால் ஒரு குழு மளிகை சாமான்கள், எண்ணெய் போன்றவை வாங்கச் செல்வது வழக்கம். அப்படியான விழாக்கள் சமயத்தில் சில முறை நானும் (KH)காரி (B)பாவ்லி சென்று மாளிகைப் பொருட்களை வாங்கியதுண்டு.  தேவையான பொருட்களின் பட்டியலை அங்கே இருக்கும் பெரிய கடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே கொடுத்தால் எல்லாவற்றையும் மலிவு (மொத்த) விலையில்  தந்து விடுவார் அந்த கடைக்காரர்.  எல்லா பொருட்களையும் கட்டி, மூட்டைகளில் சேகரித்து, அவற்றை தூக்குவதற்கென்று இருக்கும் சுமைக்கூலிகள் எடுத்து வந்து Tata Ace போன்ற வாகனங்களில் வைக்க, அவற்றில் நாங்களும் அமர்ந்து கொண்டு விழா நடக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்ப்போம்.  எங்கள் பகுதியில் இருக்கும் கடைகளில் வாங்குவதை விட மிகக் குறைவான விலையில் நிறைய பொருட்களை வாங்கி வந்திருக்கிறோம்.  பொதுவான விழா எனில் எவ்வளவு செலவு குறைவோ அவ்வளவு நல்லது தானே! 

 

(KH)காரி (B)பாவ்லி - இன்றைக்கு சந்தையாக தெரியப்பட்டாலும், இங்கேயும் ஒரு சிறப்பான கிணறு - மக்களுக்கு பயன்பட்ட ஒரு கிணறு இருந்திருக்கிறது என்பதும், மக்களுக்காக போடப்பட்ட பல திட்டங்கள் இன்றைக்கு இல்லை என்பதும், பழமையை பாதுகாக்க தவறிவிட்ட வேதனையான உண்மையும் இன்றைய பதிவு வழி உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இன்றைய பதிவு வழி தந்த, தில்லி குறித்த தகவல்கள் உங்களுக்கு புதியதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் விரைவில் தில்லி குறித்த வேறு ஒரு தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன். 

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

22 கருத்துகள்:

  1. அந்தக் காலத்தில் அருமையாக திட்டமிட்டு அழகாக ஆட்சி நடத்தி இருக்கிறார்கள்.  இன்றோ ஆட்சிகள் ஊழலில் திளைக்கின்றன.  படிக்கிணறு பார்க்க அழகாய் இருக்கிறது.  அந்தக் காலத்தில் வண்ணமயமாக பொலிவுடன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் நலனை முன்னிறுத்தி ஆட்சி நடத்தியவர்கள் நிறையவே இருந்திருக்கிறார்கள். அவர்களும் மக்களுக்கு எதிரான பல விஷயங்களை செய்திருக்கிறார்கள் என்றாலும், மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். இன்றைக்கு சுயநலமும், அளவிடமுடியாத சொத்துக் குவிப்புமே பிரதான நோக்கமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மார்க்கெட் விவரங்கள் சுவாரஸ்யம்.  எம்மாம் பெரிய உருளை!  உருளைதானே அது?  பல வருடங்களுக்கு முன் இந்த செயலிகள் எது?, மால்கள், சூப்பர் மார்க்கெட்கள்தான் எது?  இப்படி சந்தைக்கு சென்று, இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரை நடந்து, பொருளின் தரம், விலை விவரம் பார்த்துக் கொண்டு மறு நடையில் வாங்குவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தையில் இப்பக்கமும் அப்பக்கமும் ஒரு நடை நடந்து வந்தாலே மகிழ்ச்சியாக இருக்கும் அப்போது. இப்போதும் இப்படியான சந்தைகள் சில ஊர்களில் இருக்கிறது - குறிப்பாக சிற்றூர்களில். தில்லி போன்ற பெருநகரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பது வேதனை. பெரிய உருளை - அது உருளை அல்ல! Gகோலா என்று சொல்லக்கூடிய கொப்பரை அது! அதுவும் ஒரு உலர் பழம் போன்று வடக்கில் விற்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. புதிய செய்தி.அறியாத்தை அறிந்துகொண்டேன்.

    இதைப் படித்தவுடன் சென்னை நினைவுக்கு வந்தது. நுங்கம்பாக்ம் ஏரி, மாம்பலம் பகுதியில் இருந்த ஏரி எனப் பல ஏரிகளும் வீட்டு நிலங்களாகி கான்கிரீட் கட்டிடங்களில் மக்கள் பெருகி, மழைக்காலத்தில் மூழ்கி, வெயில் காலத்தில் தண்ணீருக்கு ஆலாய் பறந்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதியதொரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. இருக்கும் பல நீர் நிலைகளை அழித்துவிட்டு திண்டாடுவதே பல இடங்களில் உள்ள மக்களின் நிலையாக இருக்கிறது - குறிப்பாக சென்னையின் நிலை வேதனையான நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நிர்மலா ரெங்கராஜன்29 ஜனவரி, 2024 அன்று 8:40 AM

    பதிவு அருமை
    Khகாரி Bபோலி என்ற சரியான பெயரே இன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.
    இந்த பெயர் கரி போலி என்றுதான் உச்சரிக்கிறார்கள். எனவே இதன் பொருள் தெரியாமல் நானும் அப்படியே கூறுவேன். இனி திருத்திக் கொள்கிறேன் 👍
    தகவலுக்கு நன்றி சார் 🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      நீக்கு
  5. என் கசின் (தில்லியிலே பிறந்து தில்லியிலேயே வாழ்பவன்), பதின்ம வயதில் சமாதிகள் இருந்த இடத்துக்குப் போய் (போர் வீர்ர்கள், பழங்காலத்தது) ஒரு சமாதியிலிருந்து வாள் எடுத்து வந்தேன், மறுநாள் அதன் கனம் அதிகமானது, இரவு தூக்க முடியாதபடி கனமானவுடன் பயந்து அப்பாக்குத் தெரியாமல் குப்பைத் தொட்டியில் கோட்டுவிட்டு வந்தேன் என்றான். எனக்கு தில்லியில் இருந்து, பழைய சரித்திர சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குப்பைத் தொட்டியில் போட்டு வந்த வாள் - சுவாரசியம். தில்லியில் நிறைய வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் உண்டு - சில இடங்களுக்கு தனியாகச் செல்ல முடியாது என்பதால் (அங்கே தொல்லைகள் அதிகம்!) சென்று வர யோசனையாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  6. உங்கள் பதில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை நண்பர் ஒருவரின் உதவியுடன் தெரிந்து கொண்டு KH)காரி (B)பாவ்லி கடைகளுக்குச் சென்று அவ்வப்போது (2003 லிருந்து 2008 வரை) அங்கே தரமான பொருட்களை குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி வந்தது நினைவில் வந்தது.

    தற்போது அங்கு செல்வதில்லை என்ற வருத்தம்தான். தாங்கள் சொன்னது போல்,  அங்கே கிடைக்காத பொருட்களே இல்லை, அதிலும் குறிப்பாக உலர் பழங்களுக்கான மிகப்பெரிய சந்தை,  அங்கே எல்லா மளிகை பொருட்களும்,  மசாலாப் பொருட்களும் மொத்த விலைக்கு (WHOLESALE) வாங்கலாம்,  இந்த பதிவை படிக்கும் போது எனக்குள் அங்கு சென்று பொருட்கள் தரமானதாகவும்  மற்றும் விலை மலிவானதாகவும் வாங்கிய மகிழ்சியான  தருணத்தை நினைத்து பார்த்து மகிழ்ந்தேன் என்பது குறிப்பிடத் தக்கது.

    மேலும், இந்தபதிவில் அங்கே இருந்த கிணருகள் பற்றிய குறிப்புகள் எனக்குள் சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது‌. நன்றி, வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் இந்த சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் அருமை.

    (B)பாவ்லி. மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்துக் கொள்ள இப்படி பல இடங்களில் (B)பாவ்லி-களை அமைத்து வைத்திருந்தார்கள் அந்தக் கால ராஜாக்கள்.//

    மிக அருமையான திட்டம். (B)பாவ்லி பார்க்க அழகு.


    //அதிலும் குறிப்பாக உலர் பழங்களுக்கான மிகப்பெரிய சந்தை இது. அனைத்து மளிகை பொருட்களும், மசாலாப் பொருட்களும் இங்கே மொத்த விலைக்கு (WHOLESALE) வாங்கலாம். //

    பெரிய குடும்பமாக இருப்பவர்களுக்கு மொத்தவில்லையில் பொருடகள் கிடைப்பது நல்லதுதானே!

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய குடும்பமாக இருக்கும் பட்சத்தில் இப்படி மொத்த விலை கடைகளில் வாங்குவதே நல்லது. பதிவு குறித்த தங்களது கருத்துரைகள் கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. B)பாவ்லி - மிக அழகாக இருக்கிறது கிணறு. பாருங்க எவ்வளவு அழகா முன்ன திட்டமிட்டு நீர் சேமிப்பு செய்திருக்கிறார்கள். இப்போது எல்லாமே அழித்துவிட்டு மழை நீர் சேமிப்பு என்று ஒவ்வொரு வீடுகளிலும் செய்யச் சொல்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் முன்பு ஊருக்கே பயனுள்ளதாக இருந்திருக்கும். அதன் வடிவமைப்பு ரொம்பவே ஈர்க்கிறது.

    இப்போதும் தென்னகத்தில் சில கிராமங்களில் இந்த அளவு பெரிதில்லை என்றாலும் நிலத்தின் கீழே படிகள் வைத்த கிணறுகள் நீர் சேமிப்பிற்கு வயல்களின் அருகே இருப்பதைப் பார்த்திருக்கிறேன் கடம்போடுவாழ்வில் இருக்கு நான் படமும் போட்டிருந்தேன். முன்பு வள்ளியூரில் இருந்தது இப்போது இருக்கா என்று தெரியவில்லை. திருச்சூர் பகுதிகளில் கிராமப்புறத்தில் சில வீடுகளில் தோட்டத்தில் குளம் போன்று அமைத்திருப்பாங்க. அதில் தண்ணீர் சேமித்து வைத்திருப்பாங்க. அப்படி என் நட்பு ஒருவரின் வீட்டில் உண்டு.

    நல்ல விஷயம் இப்போது மறைந்து வருவது வேதனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகர் தில்லியில் பல பழமையான விஷயங்கள் பாதுகாக்கப்படவில்லை என்பது வேதனை தரும் விஷயம் தான். தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதே நிலை தான் என்பது அதீத வேதனை தரும் விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. சந்தை - இந்த பழைய தில்லியில் உள்ள சந்தைக்கு ஒரே ஒரு முறை சென்றதுண்டு சும்மா பார்க்க என்று போய் உலர்பழங்கள் வாங்கி வந்தோம். பெயர் மறந்திருந்தது இப்போது மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே . எனக்கு மிகவும் பிடித்த ஒன்று சந்தை, சந்தையில் பொருட்கள் வாங்குவது என்பது ரொம்பப் பிடிக்கும். ஆமாம் மொத்த விலையில் கிடைக்கும். முன்பிருந்த இடத்தில் இருந்த சந்தைக்கு வாரத்தில் இரு நாட்கள் போவேன் பெரிய சந்தை என்று சொல்ல முடியாது. சென்னையில் இருந்தப்ப பாரீஸ் பகுதிக்குச் சென்று வாங்கியதுண்டு.

    நாம் செயலியில் வாங்கும் பழக்கம் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது சாப்பாடு குறைந்துவிட்டதால் முன்பு போல் உறவினர் வருகை இல்லாததால்அப்படி எல்லாம் சமைப்பதில்லை எனவே தேவைப்படும் போது வாங்கும் வழக்கமாகிவிட்டது.

    என்றாலும் சந்தை என்றால் ஆர்வம் வந்துவிடும். ஈரோடில் தங்கை வீட்டிற்குச் சென்றிருந்த போது அவள் வீட்டருகில் பெரிய சந்தை. பேருந்து நிலையம் அருகே தான். உள்ளே சென்றுதான் நான் காய், பழங்கள் வாங்கி வருவேன்.

    கூடவே எனக்குச் சிறு வயது நினைவும் வந்துவிட்டது. பாட்டியுடன் வடசேரி சந்தைக்குச் சென்று வெஞ்சனசாமன்கள், காய்கள் எல்லாம் வாங்கி வருவது. அப்போது பெரிய குடும்பம் எனவே சந்தைக்குச் சென்று வாங்கி வருவது வழக்கம். லாபமாக இருக்கும் என்பதால். வருடத்திற்கான சில பொருட்களும் வாங்கி வந்ததுண்டு. அது ஒரு காலம்.

    இப்போதும் நாங்கள் இருக்கும் பகுதியில் சந்தை எங்கு இருக்கிறது என்று பார்த்தால் கொஞ்சம் தூரம்.

    பதிவை ரசித்து வாசித்தேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு. நெய்வேலியில் இருந்த போதும் வாரம் இரண்டு மூன்று தினங்கள் வெவ்வேறு பகுதிகளில் சந்தைகள் இருந்தன. செவ்வாய் அன்று சந்தை இருக்கும் பகுதிக்குச் சென்று, ஒரு வாரத்திற்கு வேண்டிய காய்கறிகள் வாங்கி வருவேன். இதோ இன்று கூட வீட்டின் அருகே இருக்கும் திங்கள் சந்தையில் காய்கறி வாங்கி வந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது. மழை நீரை சேமித்து வைக்கும்படியான கிணறு போன்ற நீர் நிலைகளின் விபரங்கள், அதன் பெயர்களை அறிந்து கொண்டேன். படங்கள் பார்க்கவே மிக அழகாக உள்ளது. எவ்வளவு நல்ல செயல்களை அந்த கால அரசர்கள் செய்துள்ளனர்.அதை இன்னமும் நல்லபடியாக பராமரித்து கவனித்து வந்தால் ,நம் வருங்கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.

    அதைப் போல் சந்தைக்குச் சென்று குறைந்த விலையில் ஒரே நேரத்தில் பல பொருட்களை வாங்கிக் கொள்ளவும் வழி செய்திருப்பதும் பாராட்டப்படக் கூடிய விஷயம். பருப்புகள், மற்ற சாமான்களின் தரம் பார்க்கவே நன்றாக உள்ளது. அதே சமயம் விலையும் குறைவாக.. இப்போதும் இது போல் மொத்தமாக, அதுவும் குறைந்த விலைகளில் உள்ளதாக பார்த்து வருடம் முழுவதும் வேண்டியதாக வாங்கி பத்திரப்படுத்துகிறவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதுவும் கூட்டுக் குடும்பங்களாக உள்ளவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும். இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள நல்ல கட்டுரை. ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஆம் சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும். கிடைக்கிறது என்பதும் நல்ல விஷயம். ஆனால் அங்கிருந்த கிணறு அதுவும் மழை நீர் சேகரிப்பிற்காக அக்காலத்தில் கட்டியிருந்த கிணறு இல்லாமல் போனது வேதனைதான். இப்படித்தான் பலதும் அழிந்து போகிறது. அழிந்தவைகள் அழிந்தவைகளே. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாற்றம் ஒன்று தான் மாறாதது// - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....