சனி, 20 ஜனவரி, 2024

சற்றே இடைவெளிக்குப் பிறகு… - மனக் குரங்கு..

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடியும் அளவிற்கு இந்த உலகில் யாருமே பணக்காரர்கள் இல்லை - ஆஸ்கார் வைல்ட்.

 

*******

 

சற்றே இடைவெளிக்குப் பிறகு:




 

ஜூலை 30, 2023 - இந்த நாள் தான் வலைப்பூவில் கடைசியாக நான் பதிவு எழுதியது! அதற்குப் பிறகு சென்ற வருடம் முழுவதும் இங்கே எழுதவில்லை. இந்த வருடத்திலும் இங்கே எழுதவில்லை. முகநூலிலும் கூட எதுவும் பெரிதாக எழுதவில்லை. முகநூலில் அவ்வப்போது எதோ எழுதினாலும், எழுதுவதிலும், படிப்பதிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் போனது. இது தான் காரணம் என்று பெரிதாக எதையும் சொல்வதற்கு இல்லை என்றாலும், மனதில் எதிர்மறை எண்ணம் - “நாம் எழுதி என்ன ஆகிவிடப்போகிறது?” எனும் எண்ணம் வந்துவிட அதன் பின்னர் யார் என்ன சொன்னாலும் எழுதுவதற்குத் தோன்றவே இல்லை.  நண்பர் நெல்லைத்தமிழன் அவர்கள் அடிக்கடி எனது WhatsApp வழி மீண்டும் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார்.  வலைப்பூவிலும் மற்ற நண்பர்களும் அவ்வப்போது நினைவூட்டிக்கொண்டே இருந்தார்கள்.  வீட்டிலும் நான் எழுதாமல் இருப்பது குறித்து அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்ததோடு நிச்சயம் எழுதவேண்டும் என்றும் சொல்லியபடியே இருந்தார்கள்.  ஆனாலும் இந்த மனக் குரங்கு எதற்கும் அசையாமல் “எழுதி என்ன ஆகிவிடப் போகிறது?” என்ற எண்ணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. 

 

சற்றேறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு (சரியாக 173-நாட்களுக்குப் பிறகு) இதோ இன்று மீண்டும் ஒரு பதிவுடன் வந்திருக்கிறேன்.  முன்பு போல தினம் ஒரு பதிவு எழுதுவது சாத்தியமா என்று தெரியவில்லை. எழுத விஷயங்கள் இல்லாமல் இல்லை. இதை எழுதலாம், அதை எழுதலாம் என்பது போன்ற சிந்தனைகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது என்றாலும் அதை செயல்படுத்தவும் வேண்டுமே! முடிந்தபோது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை நீண்ட இடைவெளி இல்லாது எழுத வேண்டும் என்றும் தோன்றுகிறது - எல்லாம் அவன் செயல்! மீண்டும் மனக்குரங்கு மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு எண்ணத்தைப் பிடித்துக் கொள்ளாமல் இருக்க எல்லாம் வல்ல ஈசன் துணையிருக்கட்டும்! 

 

இந்த இடைவெளியில் என்ன செய்திருக்கிறேன்?  

 

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.  அலுவலக ரீதியாகவும், சொந்த ரீதியாகவும் சில பயணங்கள் செய்திருக்கிறேன்.  அலுவலக ஆணிகள் அதிகம் பிடுங்கி இருக்கிறேன்.  2023-ஆம் ஆண்டு ஒரு கலந்து கட்டிய ஆண்டாகவே இருந்திருக்கிறது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் மனக்குரங்கு ஆட்டி வைக்க எதையும் எழுதாமல் சும்மாவே இருந்திருக்கிறேன்.  சரி எழுதத்தான் இல்லை - நண்பர்களின் வலைப்பூக்களையேனும் படித்தாயா? என்று கேள்வி கேட்டால், அதற்கும் பதில் எதிர்மறையாகவே இருக்கும் - அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகள் படித்ததோடு சரி.  அனைவருடைய பதிவுகளும் படிக்கவோ, அப்படி படித்த பதிவுகளுக்கான சிந்தனைகளையோ பகிர்ந்து கொள்வது மிகவும் குறைந்து விட்டது. மின் புத்தகங்கள், அச்சு நூல்கள் என படித்ததும் மிகவும் குறைவு.  அலுவலக ஆணிகளை பிடுங்குவதிலும் வெட்டியாக பொழுதை போக்குவதிலுமே அதிகம் நேரம் செலவு செய்திருக்கிறேன்.  திரும்பிப் பார்க்கும் போது நேரத்தினை சரியாக பயன்படுத்தாமல் போனோமே என்கிற எண்ணமும் வந்து மனதை வாட்டுகிறது!   

 

நண்பரின் அன்பு:

 

நண்பர் பரிவை சே குமார் அவர்கள் அவ்வப்போது WhatsApp வழி தகவல் பரிமாற்றம் செய்து வந்தார். அவர் இயங்கி வரும் கேலக்ஸி பக்கத்தில் எனது பயணத் தொடர்களை எழுத விண்ணப்பம் வைத்தார். புதிதாக எழுத மனம் இல்லை என்று சொல்ல, எனது பதிவுகளிலிருந்து சிலவற்றை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்க, அதற்கு ஒப்புதல் சொன்ன பிறகு, எனது வலைப்பூவில் எழுதிய ஒரு சில பதிவுகளை அங்கே பகிர்ந்து கொண்டார். நண்பரின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி. அப்படி வெளியிட்ட ஒரு பதிவுக்கான சுட்டி கீழே!

 

தில்லி கேட் - Galaxy Book Sellers and Publishers (galaxybs.com)

 

எழுத விஷயம் இல்லையா?

 

இத்தனை இடைவெளி ஏன்? உங்களிடம் எழுத விஷயமா இல்லை என்று அடிக்கடி எனது இல்லத்தரசி கேட்டுக் கொண்டே இருந்தார்.  உண்மை தான் விஷயம் இல்லாமல் இல்லை! நிறைய நிகழ்வுகள் என்னைச் சுற்றி நடந்து கொண்டே இருக்கின்றன.  அலுவலக ரீதியாகவும், சொந்த ரீதியாகவும் சந்தித்த மனிதர்கள், கலந்து கொண்ட நிகழ்வுகள், பார்த்த இடங்கள், வித்தியாசமான விஷயங்கள் என எழுதுவதற்கு நிறையவே விஷயங்கள் இருந்தன.  இப்போது கூட எழுத வேண்டும் என அமர்ந்து விட்டால் வரிசையாக எழுத ஆரம்பித்து விடலாம்.  சமீபத்தில் (சென்ற வருடத்தின் கடைசியில்) வாரணாசி நகரில் சுமார் ஒன்பது நாட்கள் தொடர்ந்து இருந்தேன்.  அப்போது பார்த்த விஷயங்கள், சந்தித்த மனிதர்கள் என எழுத நிறையவே விஷயங்கள் உண்டு.  ஆனால் முன்பு சொன்னது போல மனக்குரங்கு எழுதவிட்டால் தானே! ஒரு வழியாக மனக்குரங்கின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரு பதிவினை எழுதி விட்டேன்.  இதை ஏற்பதும், ஏற்காமல் போவதும் உங்கள் பாடு!  தொடர்ந்து எழுதுவது குறித்து உங்களிடம் கேள்வியை கேட்கிறேன்! அந்தக் கேள்வி….

 

ஒரு விஷயம் மறைக்காமல் சொல்லுங்கள் - நான் எழுதி என்ன ஆகிவிடப்போகிறது? நான் எழுதுவதால் யாருக்கேனும் ஏதேனும் பயன் உண்டா? இல்லை எதோ எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் கதையாக இங்கே பிதற்றிக் கொண்டு இருக்கிறேனா - மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்! 

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

 

22 கருத்துகள்:

  1. உங்கள் அனுபவங்கள் உங்களோடேயே இருந்து விடாமல் எல்லோருடனும் பகிரப்பப்படும்போது எங்களுக்கும் அவை அனுபவங்களாகின்றன.  நீங்கள் எழுதிய பயணக்கட்டுரைகள் மூலம் உங்கள் கண்வழியே நானும் நிறைய இடங்கள் பார்த்திருக்கிறேன்.  என்னால் நிச்சயமாக அந்த எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது.  ஆனால் அந்த இடங்கள் பற்றிய சிறிய அறிவையாவது உங்கள் பதிவுகள் எனக்கு கொடுத்திருக்கின்றன.  உங்கள் புகைபபடங்கள் பலவற்றை ரசித்திருக்கிறேன்.  உங்கள் காலை வாக்கியம் பலவற்றை ரசித்திருக்கிறேன்.  கடை விரிப்போம்.  கொள்வார் கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடை விரிப்போம்… கொள்வார் கொள்ளட்டும்… // நல்லது ஸ்ரீராம். அப்படியே தான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். தங்களது வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வெறும் பாட்டிக் கதைகள் என்றால் எழுத்தைப் படிக்காத்தாலோ இல்லை எழுதுவதை நிறுத்திவிட்டாலோ ஒரு மாறுதலும் வந்துவிடாது. உங்கள் எழுத்தில் பரந்துபட்ட அனுபவம், மனிதர்கள் சந்திப்பு, புதியிடங்கள் எனப் பல்வேறு வகையும் இருப்பதால்தான் ஏன் எழுதவில்லை என்ற கேள்வியே எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, பாட்டிக்கதைகளும் ஸ்வாரசியமாக இருக்கும் தான். 😅

      கீதா

      நீக்கு
    2. பாட்டிக் கதைகள் - சில சிவராஸ்யமானவை என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்களது தொடர் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    3. பாட்டிக் கதைகளும் சுவாரசியம் தான் - எனக்கும் அப்படியே தோன்றுகிறது கீதா ஜி.

      நீக்கு
  3. வாரணாசியில் நான்கு நாட்கள் இருந்தபோதே எல்லாம் பார்த்துவிட்டதாக மனதில் தோன்றியது. ஒன்பது நாட்கள் வாரணாசியிலா?

    கங்கையின் அக்கரை மணல் வெளியிப் பகுதிக்குச் சென்று கங்கையில் குளித்தேன். இருபது அடி தூரம் வரை இடுப்பளவு ஆழத்தில் குளித்தேன். படகோட்டி அதற்கு மேல் போக்க்கூடாது எனத் தடுத்தார். ஒரே பள்ளமாக இருக்குமோ? எவ்வளவு ஆழம் இருக்கக்கூடும் என யோசித்தேன். வாரணாசி பற்றி எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணாசி - தனக்குள் பல விஷயங்களை பூட்டி வைத்திருக்கும் இடம் நெல்லைத்தமிழன். அங்கே பார்க்கவும், பேசவும் நிறைய விஷயங்கள் உண்டு. மிகவும் பழமையான நகரம் என்பதால் இன்றைக்கு அத்தனை பேசப்படாத விஷயங்கள் இன்னமும் நிறையவே அங்கே இருக்கின்றன. பொறுமையாகத் தேடித் தேடிச் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.

      நீக்கு
    2. துளசி கோபால்29 ஜனவரி, 2024 அன்று 2:59 PM

      @ நெல்லைத் தமிழன்,

      நான்கு நாட்களில் பார்த்துவிட்டதாகத் தோன்றுவது ஏதோ ஒரு மனமயக்கம்தான். அங்கிருக்கும் கோவில்களை முழுதுமாக ரசிக்க ஒரு மாதமாவது இருக்கவேணும் என்றுதான் என் நினைப்பு. இன்னொரு முறை காசிப்பயணம் வாய்க்கும் அறிகுறி தோன்றியுள்ளது. பலிக்கட்டும் என்று காத்திருக்கின்றேன் !

      நீக்கு
    3. //இன்னொரு முறை காசிப்பயணம் வாய்க்கும் அறிகுறி தோன்றியுள்ளது. பலிக்கட்டும் என்று காத்திருக்கின்றேன் !// - ஆஹா… விரைவில் காசி பயணம் வாய்க்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. வெங்கட் ஜி வாங்க...மகிழ்ச்சி. உங்கள்.எழுத்கள் மூலம்.பல விஷயங்கள், அனுபவங்கள் தகவல்கள்,.இடங்கள்.தெரிந்து கொள்ள முடியும். மிக அழகாகவும் எழுதுவீங்க. ஊக்குவிப்புகள். நல்ல பாசிட்டிவ்.. ஸ்ட்ரோக். அதைப்பிடித்துக்கொள்ளுங்கள்...உடும்புப் பிடியாக...எனவே தொடர்ந்து எழுதுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊக்குவிப்புகள். நல்ல பாசிட்டிவ்.. ஸ்ட்ரோக். அதைப்பிடித்துக்கொள்ளுங்கள்...உடும்புப் பிடியாக...எனவே தொடர்ந்து எழுதுங்க...//

      தங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி. நேரம் எடுத்து எழுத வேண்டும். இப்போது விடுமுறையில் இருப்பதால் எழுத முடியும். அலுவலகம் சென்ற பிறகு கொஞ்சம் கடினம். பார்க்கலாம்.

      நீக்கு
  5. எழுதுவதை தங்களது மனதுக்கு ஓர் திருப்தியை, தன்னம்பிக்கையை நிச்சயம் கொடுக்கும் ஜி.

    பிறரது கருத்தை பெரிதாக கருதாமல் எழுத நினைப்பதை தொடர்ந்து எழுதுங்கள்.
    இது நீங்கள் எனக்கு சொன்ன வாசகம் தான்.

    தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போது அது பலருக்கும் அபாண்டமாக அமையலாம்.

    ஆகவே தொடர்ந்து எழுதுங்கள் ஜி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அபாண்டமாக//
      மன்னிக்கவும் "பாடமாக" என்று படிக்கவும்.

      நீக்கு
    2. //பிறரது கருத்தை பெரிதாக கருதாமல் எழுத நினைப்பதை தொடர்ந்து எழுதுங்கள் - இது நீங்கள் எனக்கு சொன்ன வாசகம் தான்.//

      நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கில்லர்ஜி. தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனக்கும் எண்ணம். முடிந்த வரை பதிவுகளை இங்கே வெளியிடுவேன். தொடர்ந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. அபாண்டமாக - பாடமாக - அப்படியே படித்தேன் கில்லர்ஜி. சில சமயங்கள் இப்படித்தான் நாம் எழுத நினைத்தது வராமல் வேறு வார்த்தை வந்து விடுகிறது.

      நீக்கு
  6. வலையுலகத்தில் பதிவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. காரணம் தெரியவில்லை. ஒரு சலிப்பு, ஒரு போராய்மை. அதனால் பயனர்கள் தற்போது எழுதிக்கொண்டிருப்பவர்களிடம் இருந்து கூடுதல் தீனி எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்வது. வாசித்தோம் மறந்தோம் என்ற நிலையில் தான் பதிவுலகம் செல்கிறது.

    கடமைகள் பொறுப்புகள் துரத்துகின்றன என்ற போதிலும் எழுதுவதை மீண்டும் தொடங்குவதற்கு வாழ்த்துக்கள்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாசித்தோம் மறந்தோம் என்ற நிலையில் தான் பதிவுலகம் செல்கிறது.// - நீங்கள் சொல்வது உண்மை. வலைப்பூவில் எழுதுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் முகநூலில் எழுதுகிறார்கள். அல்லது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ஒன்றிரண்டு வரிகள் எழுதுவதிலேயே மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

      தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  7. வணக்கம் வெங்கட், எங்கள் ப்ளாக் தளத்தில் வெங்கட் மீண்டும் பதிவுகள் தருவார் என்று நெல்லைத்தமிழனுக்கு சொல்லி இருந்தேன், அது போல நீங்கள் வந்து விட்டீர்கள். மகிழ்ச்சி.

    உங்களுக்கு எழுத விஷயமா இல்லை ஆதி கேட்டது போல! நிறைய இருக்கே! காசி இப்போது புது வடிவம் பெற்று இருக்கிறது. முன்பு போல இல்லை. அதை எழுதினால் படங்கள் போட்டால் நாங்கள் வீட்டிலிருந்தே தரிசனம் செய்து கொள்வோம்.இனி பயணம் செய்ய விரும்புவர்களுக்கு கையேடாக உங்கள் பதிவுகள் இருக்குமே!

    ஏன் பயனில்லை என்கிறீர்கள்.
    மனச்சோர்வு, உடல் சோர்வு சில நேரம் ஏற்படும் அதை புறம் தள்ளி எழுதுங்கள் உற்சாகம் பிறந்து விடும். இந்த வருடம் புதிய ஆரம்பமாக இருக்கட்டும். வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களுக்கு எழுத விஷயமா இல்லை ஆதி கேட்டது போல! நிறைய இருக்கே! காசி இப்போது புது வடிவம் பெற்று இருக்கிறது. முன்பு போல இல்லை. அதை எழுதினால் படங்கள் போட்டால் நாங்கள் வீட்டிலிருந்தே தரிசனம் செய்து கொள்வோம்.இனி பயணம் செய்ய விரும்புவர்களுக்கு கையேடாக உங்கள் பதிவுகள் இருக்குமே!// - உண்மை தான் கோமதிம்மா. எழுத நிறைய விஷயங்கள் உண்டு தான்.

      தொடர்ந்து எழுத வேண்டும். முடிந்த வரை எழுதுவேன். தங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிம்மா…

      நீக்கு
  8. வெங்கட்ஜி... முன்னைப்போல பிளாக்கில் படித்து கருத்து எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்கள். அதனாலும் 'எழுதி எழுதி என்னத்த' என்ற எண்ணம் வருகிறதோ? இதைத்தான் திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் சார் காரணமாகச் சொல்லுவார். இருந்தாலும் தொடர்ந்து எழுதும்போது, அதற்கு வரும் கருத்துக்களைப் படிக்கும்போது உற்சாகம் வரும் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு போல அதிகம் கருத்துக்கள் வருவதில்லை என்பது உண்மை தான். முன்பெல்லாம் எனது பதிவுகளின் பேக்கப் பார்வைகள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் என்ற கணக்கில் இருக்கும். இப்போதெல்லாம் நூறு கூட தாண்டுவதில்லை! பெரிய பதிவுகளை படிக்க பலருக்கு இஷ்டம் இல்லை. இத்தளத்தில் இயங்கிவர்கள் பலரும் இப்போது இயங்கவில்லை. புதியவர்கள் இதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதுமில்லை.

      தொடர்ந்து எழுதுவோம். தங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....