செவ்வாய், 30 ஜனவரி, 2024

டேராடூன் பயணம் - Mindrolling Monastery, Dehradun - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட (KH)காரி (B)பாவ்லி - ஆசியாவின் மிகப் பெரிய சந்தை பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஏற்கனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள்… மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தினை விட்டுச் செல்லுங்கள் - எமேர்சன்.

 

*******



Mindrolling Monastery, Dehradun

 

டேராடூன் பயணத்தில் இது வரை ஐந்து பகுதிகளாக உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஐந்தாம் பகுதிக்குப் பிறகு ஒரு பெரிய இடைவெளி - கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளி! :) இதோ தொடங்கி விட்டேன். இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளில் முடித்து விடுவேன். இத்தொடரின் இதற்கு முந்தைய பகுதிகளை நீங்கள் இதுவரை படித்திருக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன். இணைப்பில் சொடுக்கி ஒவ்வொரு பகுதியாக படித்துவிடலாம்! 

 

டேராடூன் பயணம் - பகுதி ஒன்று - அடாது மழைபெய்தாலும்

 

டேராடூன் பயணம் - பகுதி இரண்டு - இயற்கையும் நாமும்

 

டேராடூன் பயணம் - பகுதி மூன்று - நீச்சல் குளம்

 

டேராடூன் பயணம் - பகுதி நான்கு - டப்கேஷ்வர் மந்திர் 

 

டேராடூன் பயணம் - பகுதி ஐந்து - ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர்



மடாலய வளாகத்தில்….


இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அடுத்த ஒரு இடம் ஒரு புத்த மத வழிபாட்டுத் தலம்/மடாலயம். டேராடூன் பகுதியில் நிறைய புத்த மத வழிபாட்டுத் தலங்கள்/மடாலயங்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று என்றால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் Mindrolling Monastery தான்.  இந்த வழிபாட்டுத் தலம்/மடாலயம் பழமையான ஒன்று இல்லை என்றாலும் தற்போது பெரும்பாலான  பயணிகள் செல்வது இந்த வழிபாட்டுத் தலத்திற்கே. ஒவ்வொரு நாளும் காலை எட்டு (குளிர் காலங்களில் ஒன்பது மணி) மணிக்கு திறந்தால் மாலை ஏழு மணி (குளிர் காலங்களில் ஆறு மணி) வரை திறந்திருக்கும் இந்த வழிபாட்டுத் தலத்திற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை. இடையில் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணி முதல் இரண்டு மணி வரை வழிபாட்டுத்தலம் மூடி இருக்கும்  என்பதையும் உங்கள் தகவலுக்காக இங்கே சொல்லி விடுகிறேன். வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கே சென்று அமைதியான சூழலில் மூழ்கி இறை பக்தியில் ஈடுபட்டு அனுபவ முத்தெடுக்கலாம். 

 

எதற்காக இது போன்ற Monastery கட்டுகிறார்கள்?



மடாலய வளாகத்தில் அலுவலக நண்பர்களுடன்….

துறவிகள் தங்களது மனதை சலனமற்றதாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள பயிற்றுவிக்க இது போன்ற மடாலயங்கள் ஒரு சிறந்த இடம். புத்தரின் போதனைகள் மற்றும் கொள்கைகளைக் கற்றுக்கொள்வதற்கான இடமாகவும் இது போன்ற வழிபாட்டுத் தலங்கள்/மடலாயங்கள் உள்ளன. அப்படிப் பார்த்தால், Mindrolling என்கிற பெயர் இந்த மடாலயத்திற்கு கொஞ்சம் பொருத்தமற்றது.  ஆனால் அதில் தான் ஒரு சிறு குறிப்பு உள்ளது.  ஆங்கிலத்தில் Mindrolling என்று எழுதி இருந்தாலும் இதனை உச்சரிப்பது கொஞ்சம் வித்தியாசமானது! “இந்தப் பெயரை எல்லோரும் தவறாக உச்சரிக்கிறார்கள். உண்மையான உச்சரிப்பு 'மின்-ட்ரோலிங்' என்று” திபெத்தியர்கள் கூறுகிறார்கள் - அதாவது இந்த உச்சரிப்புக்கு சரியான அர்த்தம் - “விடுதலைக்கான இடம்”.  அப்படிப் பார்க்கும் போது இந்த வழிபாட்டுத் தலத்திற்கு இந்தப் பெயர் பொருத்தமானது என்றே தோன்றுகிறது.



மடாலய வளாகத்தில்….
 

Rigzin Tendak Lingpa என்பவர் இந்த மடாலயத்தை 1676 ஆம் ஆண்டில் கட்டினார் என்கிறது தகவல்.  ஆனால், இந்த மடாலயம்/வழிபாட்டுத் தலம் பல்வேறு இயற்கை சீற்றங்களாலும், அந்நிய படையெடுப்புகளாலும் பலமுறை சேதத்திற்கு உள்ளானது. Khochhen Rinpoche என்கிற மடாதிபதி, சக துறவிகளின் உதவியுடன் 1965 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவியிருக்கிறார். தற்போது இருக்கும் வளாகம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 2000-ஆம் ஆண்டில்! இரண்டு வருடங்களில் இந்த வளாகம் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டிற்கு 2002-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு இருக்கிறது.  இங்கே இருக்கும் புத்தர் கோயில் மற்றும் இங்கே அமைக்கப்பட்ட வளாகத்தின் முக்கிய நோக்கம் பௌத்தத்தின் நான்கு பள்ளிகள் (Nyingma, Sakya, Kagyu, and Gelak) என்று அழைக்கப்படும் பள்ளிகளில், Nyingma School பள்ளியின் கலாச்சார மற்றும் மத புரிதலைப் பாதுகாப்பதாகும். 






ஸ்தூபா குறித்த விவரங்கள்…
 

தற்போது இந்த இடம் மிகவும் சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.  நாங்கள் சென்றிருந்தபோதும் புத்த மதத்தைத் தழுவிய மடாதிபதிகளும், அவர்களது சிஷ்யர்களும் இங்கே அதிக அளவில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.  அப்படி ஒரு அமைதி அந்த வளாகம் முழுவதும் - அதைக் கெடுக்கும் விதமாக அங்கே வந்திருந்த சில சுற்றுலா பயணிகள் நடந்து கொண்டது மனதுக்கு வருத்தம் தருவதாக இருந்தது. கோயிலுக்குள் அவர்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருக்க, இவர்களோ செல்ஃபி எடுப்பதிலும் காணொளிகள் எடுப்பதிலும் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.  வளாகத்தில் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  மிகப்பெரிய சிலைகள், ஸ்தூபாக்கள் என ஒவ்வொன்றும் அழகு.  வெளியே இருந்த ஒரு பதாகையில் கோயில் குறித்த பல விஷயங்களை எழுதி இருந்தார்கள்.  அதைப் பார்த்தபோது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. (பார்க்க படங்கள்)


பெரிய பிரார்த்தனை உருளை சுற்றும் போது…  


இந்த மடாலயம் அதன் அழகிய சுற்றுப்புறங்களுக்கும், அதன் நேர்த்தியான ஜப்பானிய பாணி கட்டிடக்கலை மூலம் வெளிப்படுத்தும் பிரம்மாண்டத்திற்கும் நன்கு அறியப்பட்டதாகும். புத்தரின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சுவர் ஓவியங்களையும், புத்தரின் உயரமான சிலையை ரசிக்கவும், அதன் அழகை அதிகரிக்கும் பெரிய ஸ்தூபியை பார்வையிடவும் நீங்கள் இந்த இடத்தில் சில மணி நேரம் செலவிடலாம்.  இங்கே இருக்கும் பெரிய ஸ்தூபி 2002-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது - இது நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில்  ஒன்றாக இருக்கிறது. ஸ்தூபியின் உயரம் 220 அடி மற்றும் 100 சதுர அடி அகலம் கொண்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்தூபி என்றும் சொல்லப்படுகிறது. இந்த மடாலயம் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது, இதில் புத்தர் மற்றும் குரு பத்மசம்பவா ஆகியோரின் சிலைகளும் உள்ளன. முதல் மூன்று தளங்களில் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற சுவர் ஓவியங்கள் மற்றும் நான்காவது மாடியில் முழு டெஹ்ராடூன் பள்ளத்தாக்கின் 360 டிகிரி காட்சியை பார்க்க வசதியாக ஒரு திறந்தவெளி மேடை ஆகியவை இந்த இடத்தில் இருக்கின்றது. மடாலயத்தைச் சுற்றி அற்புதமான பசுமையான தோட்டம் ஒன்றும் ஒரு புத்தகக் கடை ஒன்றும் இருக்கின்றன.



மடாலய வளாகத்தில் நான்…
 

பொதுவாக இது போன்ற புத்தமத மடாலயம்/வழிபாட்டுத் தலம் போன்ற இடங்களுக்குச் செல்லும் சமயம், அங்கே இருக்கும் ஓவியங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.  எத்தனை சிறப்பாக, வண்ணமயமாக வரைந்து இருக்கிறார்கள் என்று வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.  போலவே, இங்கே இருக்கும் பிரார்த்தனை உருளைகளைச் சுற்றி விடுவதும் வழக்கமாக செய்யும் செயல்.  இங்கேயும் இந்த பிரார்த்தனை உருளைகள் விதம் விதமாக இருக்கின்றன.  வெட்ட வெளியில் இருக்கும் ஒரு மிகப் பெரியச் சிலை கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது.  இந்தச் சிறப்பான இடத்தில் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக இருந்தோம்.  சில மணித்துளிகள் உள்ளே அமைதியாக அமர்ந்து தியானம் செய்யவும் முடிந்தது.  பிறகு அங்கே இருந்த கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை பார்த்து விட்டு, தாகசாந்தியும் செய்து கொண்டோம்.  இந்தப் பயணத்தில் நான் பார்த்த இடங்களில் பிடித்த இடமாகவும் இருந்தது.  பயணம் குறித்த மேலும் சில தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

16 கருத்துகள்:

  1. God is No Where வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்கிறது அந்த இடத்தின் பெயர்.  அந்நியர்களுக்கு எப்போதும் நமது கலாச்சார இடங்களை அழிப்பதே வேலை!  பெரிய பிரார்த்தனை உருளையை சுற்றும்போது நீங்கள் அதிகம் தெரியாதபடி காணொளி எடுக்கப்பப்ட்டிருப்பதன் மர்மம் என்ன!!  விவரங்கள் தெரிந்து கொண்டேன்.  தொடர்கிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களை விட உருளைக்கு அதிக கவனம் கொடுத்திருப்பார் காணொளி எடுத்தவர் என்று தோன்றுகிறது. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. புத்த மடாலயம் பற்றிய விவரங்கள் சிறப்பு. பழைய பகுதியையும் இது எப்போ, எங்கே என்ற விவரத்திற்காகப் படித்துவிட்டேன். Intermission ரொம்ப அதிகமில்லையா? அதனால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Intermission கொஞ்சமல்ல நிறையவே அதிகம் தான்! :( பதிவு குறித்த தங்கள் கருத்துகளைக் கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. புத்த மடாலயம் பற்றிய சிறப்பு செய்திகள் அருமை, மற்றும் பெரிய ஸ்தூபி - இது நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று என்பது கூடுதலான விவரங்களை தெரிவித்திருந்தீர்கள்.

    நன்றி.
    R ரங்கராஜன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் டேராடூன் பயணம் அப்படியே நிற்கிறதே என்று ஆனாலும் வெங்கட்ஜி கண்டிப்பாக வருவார்...இது ஒரு தற்காலிக இடைவெளி, மனதிற்கான ஓய்வு என்ற நம்பிக்கை இருந்தது. எழுதுவதற்கு மனதிற்கான ஓய்வு மிக அவசியம். (நாம ஒன்றும் ரூம் போட்டு எழுதறதில்லையே அன்றாடக் கடமைகள், பணிகள், கவலைகள், பிரச்சனைகள், tension இவற்றின் நடுவில் தானே எழுதுகிறோம்!)

    புத்த மத preaching லும் பிரிவுகள் இருக்கிறதா! தகவல் இது, முழுவதும் வாசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் டேராடூன் பயணம் அப்படியே நிற்கிறதே என்று ஆனாலும் வெங்கட்ஜி கண்டிப்பாக வருவார்...இது ஒரு தற்காலிக இடைவெளி, மனதிற்கான ஓய்வு என்ற நம்பிக்கை இருந்தது.//

      என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கு நன்றி.

      புத்த மதத்திலும் பிரிவுகள் உண்டு. புத்தர் இருந்த சமயத்தில் உருவ வழிபாடு கிடையாது. அவருக்குப் பிறகு உண்டான சில பிரிவுகளில் தான் உருவ வழிபாடும் ஆரம்பித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. ஸ்தூபிகள் ஒவ்வொன்றையும் வாசித்தேன். சிறிய எழுத்துகள் பெரிதாக்கினாலும். ஓரளவு வாசிக்க முடிந்தது. ஒவ்வொரு ஸ்தூபியின் விளக்கங்களும், Shrine room பற்றிய தகவல்களும் வாசித்துக் கொண்டேன். புத்த மடாலயங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அமைதியாக இருக்கும் என்பதால். சிம்லா/மணாலி போயிருந்த போது பார்த்ததுதான் அதன் பின் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த அளவு பெரிதாக இல்லை.

    இந்த வளாகம் மிகப் பெரியதாக இருக்கிறது. காணொளியும் கண்டேன்.

    Mind-rolling பொருள் விளக்கம் தெரிந்து கொண்டேன். நல்ல பொருத்தமான பெயர்தான்.

    இந்தப் பதிவு அப்போது அங்கு கன மழை நாளின் போது அலுவலகக் காரணமாக முக்கியஸ்தர்களை வர வேற்று Hectic பயணத்தில் மேற்கொண்டது இல்லையா...அதுதான் நினைவில் வந்தது. மாடித்தளத்தில் இருந்த நீச்சல்குளம் படம் போட்டது நினைவில் இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருக்கெடுத்து ஓடிய ஒரு சிறிய ஆற்றின் கரையில் அமைந்த பாறையில் கோயிலும், உள்ளே நீர்க்கசிவு கூட இருந்ததே அந்தப் படமும் நினைவுக்கு வந்தது. ஆஞ்சநேயர் கோயிலா சிவன் கோயிலா அது அமட்டும் மறந்துவிட்டது. அந்தப் பதிவுக்குப் போய் பார்த்தால் தெரிந்துவிடும்

      கீதா

      நீக்கு
    2. ஸ்தூபிகள் குறித்த விளக்கங்கள் வேறு எங்கும் பார்த்ததில்லை. அதனால் தான் அவற்றை படம் எடுத்துக் கொண்டேன். பல புதிய தகவல்கள் அந்தப் பதாகைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. சிறிய எழுத்துக்கள். பெரிது படுத்தி தான் நானும் படித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
    3. சிவன் கோயில் தான் - டப்கேஷ்வர் மஹாதேவ் மந்திர். ஆற்றின் அருகே ஒரு பெரிய ஆஞ்சநேயர் சிலையும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. ஒரே மாதிரி தோன்றினாலும், கிட்ட நோக்கினால் வித்தியாசங்கள் இருக்கும் 8 விதமான ஸ்தூபிகள், இந்த இடத்தில் இருக்கும் அந்த ஸ்தூபிகளின் விளக்கம் படங்களுடன் தந்தது நன்று. புத்தமடாலயத்தின் விவரங்கள் மடாலயத்தின் பெயர் விளக்கம் எல்லாமே சிறப்பு.

    Emerson ன் வரிகள் வாசித்ததும், Robert frost ன் 'The road not Taken' கவிதை நினைவுக்கு வந்தது.

    முந்தைய பகுதிகளையும் வாசித்துக் கொண்டேன். நல்ல அனுபவங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்தூபி, மடாலயம் குறித்த பதாகைகளில் இருந்து விளக்கங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததாக இருந்தது என்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. பிரார்த்தனை உருளைகளை சுற்றி விட்டால் அவர்கள் புனித நூல் முழுவதையும் படித்தது போல. நாங்களும், நேபாள், முக்திநாத் கோவில்களில் சுற்றி விட்டு இருக்கிறோம்.
    பயண விவரம் மிக அருமை.
    காணொளி அருமை. படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு முறை உருளையைச் சுற்றும்போதும் “ஓம் மணி பதமே ஹம்” என்ற மந்திரத்தை உச்சரிப்பார்கள். நாங்களும் அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தோம். படங்களும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....