ஞாயிறு, 21 ஜனவரி, 2024

வாசிப்பனுபவம் - தாயுமானவன் - பாலகுமாரன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட சற்றே இடைவெளிக்குப் பிறகு… - மனக் குரங்கு பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதியவற்றை தேடத் தொடங்குங்கள்; அதுவே உங்களை வெற்றியாளராக உருவாக்கும் - வால்ட் டிஸ்னி.

 

*******



பரமசிவம் என்கிற பரமு, பிரபல மோட்டார் கம்பெனியில் பதினேழு வருடங்களாக வேலை செய்து வருகிறான். ஆரம்பத்தில் டயர்கள் மாற்றும் வேலை, பொருட்களை சரி பார்க்கும் வேலை என்று ஆர்வமுடன் வேலை செய்து இன்று தலைமை ஃபோர்மேனாக இருக்கிறான். யூனியன் லீடராகவும் மாறி உடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்காக பாடுபடுகிறான். தனிப்பட்ட முறையிலும் உதவுகிறான்.

 

பரமுவின் மனைவி சரஸ்வதி என்கிற சரசு. திருமணத்துக்கு முன்பு பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் “பெண்கள் வேலை செய்து விட்டு, வீட்டுக்குச் சோர்ந்து வருவது கூடாது” என்ற வருங்கால கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வேலையை விட்டு விட்டாள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என கண்ணுக்கு நிறைவான குழந்தைகள். பெண் மூத்தவள். கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக குடித்தனம் நடத்துகிறார்கள்.

 

யூனியனில் விரிசல் ஏற்பட்டு, விற்பனைக்கு அனுப்பிய வண்டிகளில் ஏதோ ஒன்று கவனிக்கப்படாமல் பிரச்சனையாகி விட தலைமையிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி, தவறு பரமுவுடையது இல்லையென்றாலும், கெளரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ராஜினாமா செய்து விட்டு வந்து விடுகிறான். குடும்பமும் தலைவன் மனது நோகாமல் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகளும் குடும்ப கஷ்டங்களை பக்குவமாக புரிந்து கொள்கின்றன. வேறு வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் யூனியனில் இருந்த காரணத்தை காட்டி தர மறுக்கிறார்கள். வெளிநாட்டு வாய்ப்புக்காக பணத்தை செலவழித்து ஏமாந்து விடுகிறான்.

 

இருக்கறதையெல்லாம் விற்று சாப்பிட ஆரம்பிக்க, மனைவி தான் முதலில் வேலை செய்த இடத்திலேயே பணியாற்றுகிறேன் என்று சொல்ல, ”நான் இருக்கற போது நீ எதுக்கு போய் கஷ்டப்படணும்” என மறுக்க, சரசு பிடிவாதம் பிடித்து செல்கிறாள். ”இயந்திரங்களோடயே இருந்த நான் இப்போ என்ன செய்யட்டும்” என பரமு விழிக்க ”என் ராசா நீங்க குழந்தைகளை பார்த்துக்கோங்க, கொஞ்ச நாள் நான் சுமை தூக்கறேன்”. என்கிறாள். அப்பாவிடம் எந்த வேலையும் சொல்லி சங்கடப்பட வைக்கக்கூடாது. நீங்களே செய்ய கத்துக்கோங்க என குழந்தைகளுக்கு சொல்லிச் செல்கிறாள். தந்தையின் உதவிகளை மறுத்த குழந்தைகள், பின்பு தந்தையாக செய்ய ஆச்சரியப்படுகிறார்கள். மகளிடமும் சில கற்றுக் கொள்கிறான் பரமு. மனைவியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். முதலில் உப்பே இல்லாத கட்டி கட்டியான உப்புமா, ஃபில்டரில் டிகாஷன் எது என்று தெரியாத கீழ் பாத்திரத்தில் உள்ளதை கொட்டி விட்டு மேலே பொடியோடு உள்ளதை விட்டு கலப்பது, என்று செய்தவன் பின்பு ஒவ்வொன்றாக கற்றுத் தேறுகிறான்.

 

மனைவி முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து விட்டு கணவனது உதவியை மறுத்தும், அவள் நகர்ந்ததும், அவளின் புடவையை காயப் போடுகையிலும், கொல்லையில் பாத்திரங்களை போட்டு தேய்க்கும் போதும் நடக்கும் கேலிகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்கிறான். பணிச்சுமையாலும், குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் திட்டிய சரசுவோடு ஊடல் கொள்ளும் பரமு, குழந்தைகளை ஒரு வார்த்தை கூட சொல்ல விடாத தந்தையாக இருக்கிறான்.

 

இந்த நிலையில் மகளின் பள்ளியிலிருந்து ப்யூன் வந்து மகள் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் தாயை உடனே வரும்படி ஆசிரியர் சொல்லி விட்டதாகவும் சொல்ல, பதறியடித்து ஓடுகிறான் பரமு. பள்ளியில் மகள் பெரிய மனுஷியாகி விட்டதாக சொல்ல, ஒரு நிமிடம் மகளிடமிருந்து தான் அந்நியப்பட்டதாக உணர்கிறான். தந்தையுடன் அனுப்ப மறுக்கும் ஆசிரியரிடம், தான் தந்தையுடன் போக விரும்புவதாக சொல்லி வெட்கத்துடன் வரும் மகளை ஆச்சரியத்துடன் பார்த்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறான். என்ன செய்வது என்று தெரியவில்லை? நேராக லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்று தகவலை சொல்லி மகளுக்கு சொல்லித் தரும்படி சொல்கிறான்.

 

மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் தகவலைச் சொல்லிவிட்டு, வேண்டிய பொருட்களை அவள் சொல்லும் முன் கையிலிருக்கும் மோதிரத்தை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு வாங்க கிளம்பும் தகப்பன்…. இனி மகளை தனியே விட்டு விட்டு வெளியே கூட போகக் கூடாது என மனதுக்குள் நினைத்து கொண்டு காபந்து பண்ணுகிறான்.

 

ஒரு நாள் எல்லோருமாக வெளியே போய் விட்டு வீடு திரும்பும் வேளையில், இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை காத்திருந்தது. பழுதான ஒரு காருடன் தவித்து கொண்டிருந்த ஒருவருக்கு பழுதுகளை சரி பார்த்து வேண்டிய உதவி செய்து தந்து உதவுகிறான் பரமு. அவன் குடும்பம் மொத்தமும் ஒத்துழைக்கிறது. இவர்களுக்கு பிரதி உபகாரமாக வீடு வரை வந்து விடும் அவர் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்டு அவர் பரமுவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். ஆறுமாதம் பம்பாயிலும், ஆறுமாதம் டெல்லியிலும் பணியாற்றியவுடன் சென்னையிலிலேயே பணியாற்றலாம் என சொல்ல மனைவியின் சுமையை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பம்பாய்க்கு பறக்கிறான் பரமு. இனி அவர்கள் வாழ்வில் வசந்த காலம் தான்.

 

இது தான் நான் சமீபத்தில் வாசித்த பாலகுமாரன் அவர்களின் ”தாயுமானவன்” கதைச்சுருக்கம். மனதை நெகிழ வைத்த கதை. அங்கங்கே கண்ணீர் துளியும் துளிர்த்தது…. ”கல்லூரிப் பூக்கள்” என்ற பதிவில் சொல்லியிருந்தது போல் பரணில் இருந்து எடுத்த என்னவரின் புத்தகங்களை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் உடனேயே அவரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கதை தொலைக்காட்சியில் நெடுந்தொடராக வந்திருந்ததாகவும் சொன்னார்.

 

இந்த புத்தகத்தில் உள்ள ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாவன, மோட்டார் துறையை ஆராய்ச்சி செய்தது போல் கதையெங்கும் அவ்வளவு நுணுக்கமான விஷயங்கள். படிக்கும் போது 1997லிருந்து 2000 வரை சென்று வந்தது போல் இருந்தது. ஆம்! அப்போ நான் இயந்திரவியல் துறை மாணவி. படிக்கும், பார்க்கும், வரையும் அனைத்துமே இயந்திரங்கள் தான். நெடுநாட்களுக்கு பிறகு நினைவூட்டி கொள்ளவும் உதவியது.

 

அதே போல் பரமு என்கிற இந்த கதாபாத்திரம் சட்டென்று நம் மனதில் பதிந்து விடுகிறார். இப்படியொரு கணவனும், தகப்பனும் அமைந்து விட்டால் உலகில் வேறு என்ன வேண்டும்! பெண்ணுக்கு எங்கிருந்து தீங்கு நிகழும்….

 

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

 

நர்மதா பதிப்பகம்

16/7, ராஜாபாதர் தெரு

பாண்டி பஜார்

தியாகராய நகர்

சென்னை – 600017

மொத்த பக்கங்கள் – 288

அப்போதைய விலை – ரூ 25 (இப்போ சத்தியமா இந்த விலைக்குக் கிடைக்காது). விசா பதிப்பகமும் இப் புத்தகத்தினை பின்னர் வெளியிட்ட்து. அதன் விலை 125/-.

 

என்ன நண்பர்களே கதைச் சுருக்கத்தினை ரசித்தீர்களா? வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.....

ஆதி வெங்கட்.

 

டிஸ்கி - இது 2013ல் என்னோட வலைப்பூவில் எழுதிய வாசிப்பனுபவம். சமீபத்தில் இதை மின்னூலாகவும் கிண்டிலில் வாசித்தேன். 10 வருடங்கள் ஆனாலும் அன்று ஏற்படுத்திய தாக்கம் மாறவில்லை! அதனால் அதையே மீண்டும் பகிர்ந்திருக்கிறேன்.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

  1. நானும் படித்திருக்கிறேன். ஆரம்ப காலங்களில் மாத ஊதியம் வாங்கியதும் எக்மோர் சென்று ஒன்றோ இரண்டோ பாலகுமாரன் புத்தகங்கள் வாங்கும் வழக்கம் இருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை. என்னவரும் ஆரம்ப காலங்களில் ஊருக்கு வரும் போதெல்லாம் பாலகுமாரன் புத்தகங்கள் வாங்கி வருவாராம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. படித்த கதையாகினும் கதை சுருக்கம் சுவாரஸ்யம்👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதை சுருக்கம் கதையின் அழகியலை வெளிப்படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. தாயுமானவன் படித்து இருக்கிறேன். தொடர்கதை வந்த போதும் . பைண்ட் செய்து அம்மா வைத்து இருந்த போது மீண்டும் படித்தேன்.
    மகளுக்கு தாயாகி இருந்த தருணம் மிகவும் நெகிழவைக்கும் மனதை.
    கதை சுருக்கம் மிக அருமையாக கொடுத்து விட்டீர்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா பைண்ட் செய்து வைத்திருந்தாரா!! அருமை. ஆமாம் அம்மா தயாகிய தருணம் நெகிழ வைக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. இந்தக் கதை முன்பு தொடராக வந்த நினைவு. ஊரில் இருந்த போது. எந்த இதழில் என்று நினைவு இல்லை. அப்போது யாரிடமிருந்தேனும் எப்போதாவது இரவலுக்குக் கிடைத்தால் இடையில் வாசித்த நினைவு. முழுவதும் வாசித்த நினைவில்லை. இப்ப உங்க விமரிசனத்திலிருந்து முடிவு ஊகிக்க முடிகிறது, ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாசிப்பு அனுபவம் அருமை.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. சூப்பரா கதையைச் சுருக்கிச் சொல்லிருக்கீங்க ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....