சனி, 27 ஜனவரி, 2024

காஃபி வித் கிட்டு - 180 - தைத் தேர் - தைப் பூசம் - சமயபுரத்தாள் - பயணம் குறித்த முகநூல் குழு - வண்ணத்துப்பூச்சி பூங்கா - அடையாளம் - பிறந்த நாள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன்னர் வெளியிட்ட திருவரங்கம் கோவில் - சேஷராயர் மண்டபம் - ஒரு தூண் சிற்பங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது; ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை - டிஸ்ரேலி.

 

******

 

பூபதித் திருநாள் : தைத் தேர் 2024




 

கடந்த 24-ஆம் தேதி திருவரங்கத்தில் தேர் திருவிழா… பூபதித் திருநாள் என்று அழைக்கப்படும் கொண்டாட்டங்களில் ஒரு பங்காக தைத் தேர் என்று அழைக்கப்படும் சிறு தேரில்  அரங்கனின் வீதி உலா.  காலை ஆறரை மணிக்கு வடம் பிடிக்கலாம் என்று தெரிந்தது.  காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றபோது வடக்கு வாசலை தாண்டியிருந்தது தேர்.  பக்கவாட்டில் கிடைத்த இடத்தில் தேரைத் தாண்டிச் சென்று கிழக்கு உத்திர வீதியில் நின்று கொண்டேன்.  வடக்கு வாசல் வழி வரும்போது வெய்யில் படும் என்று நான்கு பக்கங்களிலும் திரை கட்டிவிட்டார்கள் என்பதால் வடக்கு வாசல் பக்கம் அரங்கனை தரிசிக்க இயலாது! கிழக்கு உத்திர வீதியில் நின்று கொண்டு மக்களை கவனித்தபடி அரங்கனின் வருகைக்காக நானும் காத்திருந்தேன்.  வடக்கு உத்திர வீதியிலிருந்து கிழக்கு உத்திர வீதிக்குத் திரும்பும் இடத்தில் அதிக நேரம் எடுத்தது.  ஒருவழியாக தேர் திரும்ப, அதீத வேகத்தில் அரங்கன் வீதி உலா!  நின்று நிதானித்து அரங்கனை தரிசித்தேன்.  ஆண்டாள், லக்ஷ்மி, இரண்டு குதிரைகள் என முன்னாள் வர அரங்கன் திருத்தேரில் வீதி உலா!  இன்றைக்கு எடுத்த சில படங்களும் காணொளிகளும் உங்கள் பார்வைக்கு.








 


******

 

தைப்பூசமும் சமயபுரத்தாள் வருகையும் : 

 

தைப்பூசம்..... 25-01-2024 அன்று கொள்ளிடக்கரை கோவிலில் சிறப்பாக நடந்தது. மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் காவடி புறப்பாடு. மாலை ஆறு மணிக்கு மேல் வடக்கு அடையவளைந்தான் தெருவில் காவடிகளை பார்த்ததோடு வீதி உலா வந்த வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானையும் தரிசனம் செய்து கொண்டேன். பறக்கும் காவடி, அலகுக் காவடி, பால் குடங்கள் என விதம் விதமான வேண்டுதல்கள்..... பறக்கும் காவடி பார்க்கும் போதே உடலில் ஒரு சிலிர்ப்பு...... 

 

பிறகு பொடி நடையாக கொள்ளிடக்கரை வரை சென்று அங்கே எழுந்தருளி இருந்த சமயபுரம் மாரியம்மன் மற்றும் உத்தமர் கோவில் பெருமாளையும் தரிசனம் செய்து திரும்பினேன். ஒவ்வொரு தைப்பூச நாளிலும் மாரியம்மன் கொள்ளிடக்கரை வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதோடு திருவரங்கம் பெருமாள் தரும் சீரும் பெற்றுச் செல்வார்.

 

சென்ற ஆண்டும் தைப்பூச நாளில் திருவரங்கத்தில் இருந்து தைப்பூச நாளில் காவடிகள் பார்த்த நினைவு மனதுக்குள்...... எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும். தைப்பூச நாளில் எடுத்த படங்களும் காணொளிகளும் உங்கள் பார்வைக்கு. 







 

******

 

இந்த வாரத்தின் தகவல் - பயணம் குறித்த முகநூல் குழுக்கள்:



 

சமீபத்தில் முகநூலில் பயணம் குறித்த சில குழுக்களில் என்னை இணைத்துக் கொண்டேன்.  எனது பங்களிப்பு அங்கே ஒன்றும் இருக்கப் போவதில்லை என்றாலும் பயணம் குறித்து அங்கே பலரும் எழுதும் தகவல்கள் எனக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அங்கே இணைத்திருக்கிறேன்.  அவ்வப்போது அந்தக் குழுக்களில் இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், சில தகவல்கள் தேவையற்றவையாக இருக்கிறது!  தேவையானவற்றை எடுத்துக் கொள்வோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்ற எண்ணத்துடன் அந்தக் குழுக்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அப்படிப் பார்த்த ஒரு பதிவில் அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஒரு கிராமமான கஹோ எனும் இடம் குறித்து சில படங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் ஒரு நபர்.  ஆஹா என்ன அழகு அந்த இடம் (ஒரு படம் உங்கள் பார்வைக்கு!) இந்த கிராமம் தான் சீன எல்லையிலிருந்து இந்தியாவில் இருக்கும் முதல் கிராமம் என்கிறது தகவல்.  இணையத்தில் இந்த இடம் குறித்து தகவல்கள் நிறையவே இருக்கின்றன.   இந்த இடம் குறித்த ஒரு காணொளி பார்த்தேன். நீங்களும் பார்க்க நினைத்தால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.  

 

India's First Village KAHO || India China Border in Arunachal Pradesh (youtube.com)

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : வண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி

 

2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

ஒவ்வொரு முறை திருவரங்கம் வரும்போதும் ”இங்கே ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா இருக்கிறது, போக வேண்டும் என்று மகள் சொல்வாள்.  ஆனாலும் அங்கே போக முடிந்ததில்லை. எங்கே இருக்கிறது என சிலரிடம் விசாரித்தால் யாருக்கும் தெரியவும் இல்லை.  ஆனால் இம்முறை தான் திருவரங்கத்தில் சில இடங்களில் “வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழி” என்ற பதாகைகளைக் காண முடிந்தது. பிறகு தான் தெரிந்தது ஒரு விஷயம் – இரண்டு வருடம் முன்னரே இது அமைப்பதற்கான அறிவிப்பு வந்தாலும், இரு மாதங்களுக்கு முன்னரே இப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள் என்பது!

 

பூங்கா திறக்கப்பட்ட விஷயம் இம்முறை தெரிந்து கொண்டதும் அங்கே சென்று வந்தோம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவரங்கம் என்று சொன்னாலும், இது இருப்பது திருவரங்கம் தாலுகாவில் உள்ள அணைக்கரை என்ற இடத்தில் தான்.  திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக சென்றால் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் 25 ஹெக்டேர் அளவு பரப்பளவில் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.  இன்னும் பாதி இடத்திற்கு மேல் வேலைகள் முடிக்கவில்லை என்றாலும் வேலை முடிந்த இடங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. 

 

முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை : அடையாளம்…

 

இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக சொல்வனம் தளத்திலிருந்து, ஸிந்துஜா அவர்கள் எழுதிய “அடையாளம்” என்ற சிறுகதையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு! 

 

ஓர் இளம் பெண் தெருவில் வளையல் கடை வைத்திருந்த கிழவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். 

 

“ரொம்ப விலை சொல்லுறையே?”

 

“நீதான் போணி பண்ணி வைக்கணும். மகாலட்சுமி மாதிரி இருக்கே. உனக்கு வேணுங்கிறதை எடுத்துக்கோ. பாத்துப் போட்டுக் கொடு” என்றான் கிழவன்.

 

“தாத்தா, நல்லா ரீல் விடறே. ஆனா நானும் உன்னையப் போலத்தான். காசு இல்லாத மகாலட்சுமி” என்று அவள் சிரித்தாள். கறுப்பாகவும் இல்லாமல் சிவப்பாகவும் இல்லாமல் மாநிறத்தில் இருந்தாள். உயரமாகவும் லேசாகப் பூசிய மாதிரியும் காணப்பட்டாள். முகமும், கைகளும் பளபளவென்று மின்னின. எவரையும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்க்க வைக்கும் தோற்றம்.

 

அப்போது “யோவ் மாரிசாமி, நீ எப்போய்யா இங்கே  வந்தே?” என்றபடி அவர்களை ஒருவர் நெருங்கினார்.

 

முழுக்கதையும் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!

 

அடையாளம்  – சொல்வனம் | இதழ் 310|14 ஜன 2023 (solvanam.com)

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: பிறந்த நாள் 

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக Pathkind Diagnostics விளம்பரம் ஒன்று. மனதைத் தொடும் விதமாக இருக்கிறது.  உங்கள் மனதையும் தொடலாம். பாருங்களேன். 


  

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.

 

Pathkind Diagnostics | #HumFarkNahiKarte | Anand Tiwari (youtube.com)

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

25 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்குப் பின் சுவாரஸ்யமான கதம்பமாக மலரும் காஃபி வித் கிட்டு பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. தொடரட்டும் இப்பதிவு வாராவாரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவு - தங்களது மகிழ்ச்சி எனக்கு உற்சாகம். முடிந்த வரை தொடரவே எண்ணம். 180 வாரங்கள் வந்திருக்கிறது என்பதும், இன்றைய பதிவு 3450-ஆவது பதிவு என்பதும் கூடுதல் தகவல். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. 180 வாரங்கள் வந்திருக்கிறது என்பதும், இன்றைய பதிவு 3250-ஆவது பதிவு என்பதும் கூடுதல் தகவல்.

      நீக்கு
  2. காலையிலேயே அரங்கன் தரிசனமும் காவடியும் காணவைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.  ஆண்டாளை இன்னும் கொஞ்சம் பெரிய காணொளி எடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் அரங்கன் தரிசனமும் காவடி தரிசனமும் - உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். ஆண்டாள் காணொளி - கொஞ்சம் பெரியதாக எடுத்திருக்கலாம் - ஆமாம். ஏனோ சிறியதாக எடுத்து இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வழக்கம்போல நெகிழ வைக்கும் விளம்பரம்.  சட்டென இலேசாய் துளிர்த்து விடுகிறது கண்களில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - கண்களை நீர்க்கச் செய்துவிடுகிறது - உண்மை. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். WHY & WHAT என்ற பெயரில் இருக்கும் youtube தளத்தில் இப்படியான விளம்பரங்கள் நிறையவே இருக்கின்றன. அவ்வப்போது அவற்றை பார்ப்பது வழக்கம்.

      நீக்கு
  4. சுட்டி வழி சென்று கஹு கிராம காணொளி பார்த்தேன். இயற்கை அழகு கொஞ்சும் இடம். நவீன கழிப்பறையும் இருக்கிறது அங்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணாச்சலப் பிரதேசம் கிராமம் குறித்த காணொளி பார்த்ததில் மகிழ்ச்சி. அழகான கிராமம் தான். இப்படியான கிராமங்கள் ஒவ்வொன்றும் பார்க்க மகிழ்ச்சி தான் ஸ்ரீராம். பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நலமா? எப்படி இருக்கிறீர்கள்? பதிவு அருமை. காஃபி வித் கிட்டு பதிவை மிக சுவாரசியமாக தந்துள்ளீர்கள். நிறைய நாட்கள் கழித்து மீண்டும் இந்தப் பதிவு வெளி வருவது மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து வர என் பிரார்த்தனைகள்.

    சனிக்கிழமையாகிய இன்று ஸ்ரீ ரங்கம் தேரோட்ட ம் மூலமாக ஸ்ரீ ரங்கனை தரிசித்து வணங்கி ஆனந்தம் அடைந்தேன். படங்கள் அனைத்தும் அருமை. ஆண்டாள் யானை, புரவிகள் மற்றும் தேர் வலம் வரும் காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன். தேரின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது.

    சமயபுரம் அன்னை, மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அனைவரையும் தரிசித்துக் கொண்டேன். சிறப்பான தரிசன பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      நலமாக இருக்கிறேன் ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு செய்த காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      காலையில் அரங்கன் தரிசனம், சமயபுரத்தாள் தரிசனம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா விபரம் அறிந்து கொண்டேன். இப்போது காரில் போகும் போது கூட இந்த பதாகைகளை பார்த்ததாக நினைவு.

    அருணாசல பிரதேசத்தில் இருக்கும் கஹோ கிராமம் மிகவும் இயற்கை எழிலுடன் அழகாக இருக்கிறது.

    நீங்கள் சுட்டியுடன் தந்த அடையாளம் சிறுகதை படித்தேன். அருமையான எழுத்து நடை. கதாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    விளம்பரம் நெகிழ்ச்சி. மனதை கனக்க வைத்தது. இன்றைய அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட கிராமத்தின் தகவல், விளம்பரம், சிறுகதை என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  7. அரங்கனின் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி நீங்களும் அரங்கனை தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பூபதித் திருநாள் என்று அழைக்கப்படும் தை தேர்திருவிழா பட்ங்கள், காணோலீ நேரில் பார்த்த உணர்வை கொடுத்தது.

    தைப்பூச நாளில் எடுத்த படங்களும் காணொளிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூபதித் திருநாள் மற்றும் தைப்பூசம் குறித்த தகவல்களும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. விளம்பர காணொளி மனதை நெகிழ வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - மனதைத் தொடும் விதமாக இருக்கும் இவர்களது விளம்பரங்கள் எனக்கும் பிடித்தவை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. இன்று படித்த கதம்பம் நன்று.

    பூபதித் திருநாளின் படங்களும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  11. பூபதித்திருநாள் தேர்த்திருவிழா படங்கள், காணொளிகள் மிகவும் சிறப்பு. ஆண்டாளும் லக்ஷ்மியும், வெண்புரவிகளும்!!!! மிக அழகு. காணொளியில் ஆண்டாள்தான் இல்லையா?

    தைப்பூசம் சமயபுரத்தாள் வருகை, காணொளி படங்கள் எல்லாமே அருமை.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா பதிவு வாசித்த நினைவு இருக்கிறதுஇப்போது முழுவதுமம் பணிகள் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு பங்களூரில் பன்னேருகட்டா வண்ணத்துப்பூச்சிப் பூங்கா ரொம்ப அழகாக இருக்கிறது சென்று காணொளிகள் படங்கள் எல்லாம் எடுத்தேன் இனிதான் போட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக எடிட் செய்து கொண்டிருக்கிறேன்..

    கதை, விளம்பரக் காணொளி, அருணாச்சலப் பிரதேச யுட்யூப் காணொளி இனிதான் பார்க்க வேண்டும் ஜி. நாளை பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூபதித் திருநாள் படங்கள், காணொளி மற்றும் தகவல்கள் குறித்த தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. காணொளியில் இருப்பது ஆண்டாள் தான்.

      பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. காஃபி வித் கிட்டு என்று மீண்டும் புத்துணர்வோடு வந்துவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி.

    தேரோட்டப் படங்களும் தைப்பூசம் அம்மன் படங்களும் காணொளிகளும் கண்டு ரசித்தேன்.

    விளம்பரக்காணொளி மனதைத் தொட்டு நெகிழ்த்திவிட்டது.
    ட்டா
    அருணாச்சலப்பிரதேசம் இந்தியா சைனா பார்டர் காணொளியை மிகவும் ரசித்துப் பார்த்தேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு - மீண்டும்! தங்களுக்கும் பதிவின் வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும், விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....