அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
நிழல் யுத்தம் - 8 அக்டோபர் 2024:
நடைப்பயணத்தின்போது பல வித கதாபாத்திரங்களை சந்திக்க முடிகிறது. ஒரு விதத்தில் அப்படியான சந்திப்பு எழுத்துப் பொருளாகவும் அமைந்துவிடுகிறது. சிலர் நல்ல எடுத்துக்காட்டாக அமைய, ஒரு சிலர் இப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் விதம் விதமான கதாபாத்திரங்களை சந்திக்க நேர்கிறது. பார்க்கும் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு எதையோ சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். அதனை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் நமக்கும் விஷயம் கிடைக்கத்தான் செய்கிறது.
உதாரணத்திற்கு ஒரு கதை மாந்தரை இன்றைக்கு பார்க்கலாம்… காலை 07.00 மணிக்கு நான் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் இன்னுமொரு நபர் நடந்து கொண்டிருந்தார். கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி தனக்குத்தானே பேசிக்கொண்டே நடந்தார். எங்கள் இருவரது நடையும் ஒரே வேகத்தில் இருக்க, அவர் பேசுவதை என்னாலும் தொடர்ந்து கேட்க முடிந்தது. ஒரு வேளை நீலப்பல் காதில் மாட்டிக்கொண்டு பேசுகிறாரோ எனப்பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. தனக்குத்தானே பேசிக்கொள்கின்றார் என்பது உறுதியாயிற்று. அவர் பேசுவதைக் கவனிக்க காரணமாக இருந்தது அவரது வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் - “நானும் எவ்வளவு வேலை தான் செய்யறது… சொல்ற வேலையை எல்லாம் செய்யறேன்… எல்லா வேலையையும் என்னையே செய்யச் சொன்னா என்னதான் பண்ணறது…?” யாரை குறை சொல்கிறார் என்பதும் கேள்விக்குரிய விஷயமே!
என்னை விட சற்றே வயது அதிகம் உடையவர் என்பதால், அவருடைய அம்மா/அப்பா பற்றிய குறையாக இருக்காது என்று தோன்றுகிறது. மகன்/மகள், மருமகள்/மருமகன் பற்றிய குறையாக இருக்கலாம்! அப்படியில்லை என்றால் அவரது மனைவி பற்றிய குறையாக இருக்கலாம்! நேரில் சொல்ல முடியாததை எல்லாம் இப்படி நடைப்பயிற்சியின் போது நிழல் யுத்தமாக செய்து கொள்கிறார் போலும்! பாவம். நேரடியாக சொல்வதில் சில பிரச்சனைகள் இருக்கலாம், இல்லை ஒரு சில முறை முயன்று பின்விளைவுகள் மோசமாக இருந்ததால் இப்படி தனிமையில் நடக்கும்போது உரக்க புலம்பி தன்னுடைய மனக்கிலேசங்களை போக்கிக் கொள்கிறார் என்றே தோன்றியது. தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருந்த அனைத்துமே நிழல் யுத்தமாகவே இருந்தது. அவருடன் தொடர்ந்து சில அடிகள் நடந்தபோது எனக்கே அவரது நிழல் யுத்தம் கேட்க பாவமாக இருந்தது.
தொடர்ந்து அவரது பேச்சைக் கேட்க, எனக்கும் ஒரு மாதிரி இருந்ததால், எனது நடையின் வேகத்தைக் கொஞ்சம் அதிகமாக்கி, அவருக்கும் எனக்கும் இடைவெளியை அதிகமாக்கி அவரது குரல் காதில் விழுவதை தடுத்துக் கொண்டேன். காதில் அவரது குரல் கேட்கவில்லை என்றாலும், அவர் குரல் ஏற்படுத்திய தாக்கம் மனதில் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய நிழல் யுத்தம் குறித்த எண்ணங்கள் மனதில் ஓடியபடி இருந்தது. பல குடும்பங்களில் இப்படியான நிழல் யுத்தம் மட்டுமே நடக்கிறது. இந்தப் பிரச்சனைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. நேரடியாக பேசி, சொல்ல முடியாத விஷயங்களை இப்படித் தனக்குத்தானே பேசிக்கொள்ள முடிந்த சமயங்களில் பேசி, மனதை ஒப்பேற்றிக் கொள்வதாகவே இருக்கிறது. நாளாக நாளாக எல்லா சமயங்களிலும் இப்படி தனியாக பேசுவது ஒரு மன நோயாகவே கூட மாறி விடும் அபாயம் இருக்கிறது.
இப்படியான எண்ணங்களுடன் எனது நடை தொடர்ந்தது. இன்றைய நாளின் நிழல் யுத்தம் குறித்த உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.
******
நடமாடும் ரேடியோ - 9 அக்டோபர் 2024:
ஒரு நடை நல்லது பகிர்வில் நிழல் யுத்தம் புரிந்த மனிதரை பார்த்தோம் என்றால் இன்று வேறு ஒரு கதை மாந்தர். ஒவ்வொரு நாளும் நடையின் போது இவரை பார்க்க நேர்ந்துவிடுகிறது. காலையிலேயே குளித்து முடித்து டிப் டாப் ஆக Pant, Shirt, தோளில் ஒரு ஜோல்னா பை சகிதம் நடக்க வந்துவிடுகிறார். நடைக்கு நடையும் ஆச்சு, அப்படியே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி பையில் போட்டுக்கொண்டு போகவும் முடியும் என்பதே இவரது நடைக்கு காரணமாக இருக்கிறது. கைகளில் வரிசையாக கட்டியிருக்கும் விதம் விதமான கயிறுகள், மணிகள், நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை என பார்க்கும்போதே Devotion Deer (பக்திமான்) ஆக இருக்கிறார். இவரை கவனிக்க நேர்ந்ததற்கு காரணம் மேலே சொன்ன அடையாளங்கள் மட்டுமல்ல. அதற்கு பிரதான காரணம் அவரது ஜோல்னா பையிலிருந்து வந்த ரேடியோ சத்தம். வேறு எங்கேயிருந்தோ ரேடியோ சத்தம் கேட்கிறதோ என முதலில் நினைத்தாலும், தொடர்ந்து சில நாட்களாக கவனித்ததில் ரேடியோ அவரது ஜோல்னா பையிலிருந்து தான் ஒலிக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
ரேடியோவில் நல்ல சத்தமாக FM மூலம் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து, ஒரு நடமாடும் ரேடியோவாக உலா வருகிறார். நடுநடுவே, தனது அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு சாலையில் நின்று எதையோ பார்க்கிறார். பிறகு நடை. சில நிமிடங்கள் கழித்து, நின்று அலைபேசி நோண்டல், பிறகு நடை என இப்படியே தொடர்கிறது இந்த நடமாடும் ரேடியோ மனிதரின் நடை. ஒரு நாள் வாழைப்பழ கடைக்காரர் (இவர் குறித்தும் ஒரு நாள் எழுதலாம்!) அருகே பார்க்க முடிந்தது என்றால் இன்னொரு நாள் தெருவில் நின்று அலைபேசியை நோண்டியபோது பார்க்க நேர்ந்தது. தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்ததில் அவரைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. வாழைப்பழம் வாங்கும்போது ஒரு பெண்மணி, கடைக்காரரிடம் “அண்ணே, இது என்ன பழம், அது என்ன பழம்?” என்று வாழையின் வகை குறித்து கேட்க, நடமாடும் ரேடியோ மனிதர் சொன்ன பதில் - “இது ஒரு மரத்துல வந்தது, அது வேற மரத்துல வந்தது!” என்கிறார் சிரித்தபடி… கடைக்காரரும் சிரித்தபடியே, “இது பூவன் பழம் மா, அது கற்பூரவல்லி” என்றார். எத்தனை முறை பார்த்தாலும் இந்த வாழையின் வகைகள் எனக்கும் புரிவதில்லை - செவ்வாழை தவிர்த்து!
இப்படி தெருவில் நடக்கும்போது ரேடியோ கேட்டுச் செல்வது, அதுவும், Loudspeaker போன்று சப்தமாக கேட்பது என்ன design என்று புரிவதே இல்லை. வீட்டுக்குள் சப்தமாக வைத்து கேட்பதே கூட இப்போதெல்லாம் பிடிப்பதில்லை. குறைவான ஒலியில் கேட்பதே காதுக்கும் இசைந்ததாக இருக்கிறது. ஆனால் இவர் போன்றவர்களோ, தானும் சப்தமாக கேட்பதோடு, ஊரில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி வைத்து நடக்கிறார்கள். தில்லியில் பல இளைஞர்கள் பூங்காக்களில் இப்படி உலா வருவதை பார்த்திருக்கிறேன். சரி, அவர்களாவது இளைஞர்கள்… இவரோ முதியவர்… ஒரு வேளை தனக்கு காது கேட்காது என்பதற்காக, ஊரில் உள்ள எவருக்குமே காது கேட்காது என்று முடிவு செய்துவிட்டாரோ என்று தோன்றியது. ஒரு நாள் அவர் அருகே நடந்தபோது, இதைக் கேட்டுவிட வேண்டும் என்று மனது துடித்தாலும், அவரது ரேடியோ பெட்டியிலிருந்து வந்த பாட்டின் வரிகள், என் மனதை மாற்றிக்கொள்ள வைத்தது… அந்தப் பாட்டு - “என்கிட்ட மோதாதே… நான் ராஜாதி ராஜனடா!”
சிரித்தபடியே எனது நடை தொடர்ந்தது. இன்றைய நாளின் நடமாடும் ரேடியோ மனிதர் குறித்த உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
15 நவம்பர் 2024
நானும் நடக்கும்போது வளாகத்தில் AIR மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். காதில் மாட்டிக்கொண்டு கேட்கக்கூடாதா... இப்படிப் படுத்துறானுவளே என யோசித்திருக்கிறேன். நல்லவேளை... நான் இவர்களை விட வேகமாக நடக்கிறேன். இதுபோல இரயில் பயணங்களிலும் பல இம்சைகளை அனுபவித்திருக்கிறேன். இரண்டாம் ஏசி வகுப்பில் வருபவர்கள்கூட ஐம்பது ரூபாய் செலவழித்து சீப் ஹெட்செட் வாங்கிக்கொள்ளத் தெரியாதா என்று யோசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டு மாதங்களுக்கு முன் காலையில் கும்பகோணம் பார்க்கில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு அறுபது வயதுப் பெண்மணி, சத்தம் போட்டு கோபமாகப் புலம்பிக்கொண்டிருந்தார். முதலில் மனநிலை சரியில்லாதவர் என நினைத்தேன். ஓரிரு நாட்களிலேயே அவர் அங்கு தூய்மை செய்யும் வேலை செய்பவர் என்பதைப் புரிந்துகொண்டேன். வீட்டில் என்ன பிரச்சனையோ...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
சிலருக்கு தன் மனக்குறைகள் இப்படி புலம்பியே வெளி வருகிறது. பாவம்.. அவருக்குள் என்ன மனக்குறைகளோ ..? வீட்டில் சொல்ல முடியாதவை தானாக மனதிலிருந்து அக்கம்பக்கம் பாராமல் இப்படி வெளி வருகிறது. சில பேர் காதில் மாட்டியிருப்பது (பிறர் கண்களுக்கு தெரியாத வண்ணம் மாட்டியபடி) மூலம் இப்படி பேசிக் கொண்டே சாலையில் நடக்கிறார்கள். அவர்களை இப்படியான சந்தேகத்துடன் நானும் பார்த்து பின் தெளிந்திருக்கிறேன்.
டிரான்சிஸ்டர் கையில் வைத்துக் கொண்டு நடப்பது முந்தைய பழக்கமாயிற்றே..! இப்போதுதான் அலைபேசி, மற்றும் அதன் பிற உபகரணங்கள் மூலம் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி வந்து விட்டது. இந்த காலத்திலும் இப்படியான மனிதர்களை சந்திப்பது சுவாரஸ்யந்தான்..! தங்களது பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிழல் யுத்த மனிதர்களின் சிரமம் புரிகிறது. போகிற போக்கில் நானே கூட அப்படி ஆகிவிடுவேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அதற்கு வீடு காரணமல்ல. இந்த சமூகம். சில சமீபத்திய நிகழ்வுகள் மனதைப் பாதித்திருக்க, நியாயத்தைக் கூட எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் சமூகமும், ஏன் அரசாங்கமும் நம்மை வைத்திருக்கிறது.
பதிலளிநீக்குபோதாதற்கு என்னைப் போன்றோர் சொன்னால் அதற்கு வேறு சாயமும் பூசப்படும்.
குஷ்டம்டா சாமி.... ச்சே... கஷ்டம்டா சாமி...
நான் ஒருமுறை கண்பரிசோதனை செய்யச் சென்ற இடத்தில் எனக்கு நிகழ்ந்ததை எங்கள் தளத்தில் எழுதி இருந்தேன். எனக்கு நிகழ்ந்தது என்று சொல்வதை விட நான் நிகழ்த்தியது என்றே சொல்லலாம்!
பதிலளிநீக்குஇது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால். சைதாப்பேட்டையில் வாசன் ஐ கேர் சென்றிருந்தேன். காத்திருக்கும் நேரத்தில் பாட்டு கேட்கலாம் என்று எனக்கு ஆர்வம் தோன்றக் காரணம் நான் முதல் நாள் புதிதாக வாங்கியிருந்த ஹெட்செட். அது எனக்கும் புதிது. அதாவது முதல் முறை உபயோகிக்கிறேன்.
பாடல்களைத் தெரிவு செய்து அதைக் காதில் மாட்டி பாடலை வைத்து விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியபடி 'என்னமா கேட்கிறது' என்று நினைத்தபடி பாடலை அனுபவித்தேன். என் தோளை ஒரு கரம் தொட்டது. பார்த்தால் அங்கு பணிபுரியும் பெண். சட்டென கண்விழித்துப் பார்த்தால் அந்த ஹாலில் இருந்த மொத்த ஜனமும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.
'ஓ.. என் முறை வந்து விட்டதா' என்று காதிலிருந்து ஹெட்செட்டை எடுத்தேன். எடுத்த பின்னும் பாட்டுக்கு கேட்டுக் கொண்டிருந்தது! மொபைலில் ஸ்பீக்கர் ஆப்ஷன் அணைக்காமல் காதில் மாட்டியிருந்திருக்கிறேன்.
சுமார் இரண்டு லிட்டர் தேறியிருக்கும் - வழிந்த அசடு.
வாழைப்பழங்களில் என்னால் பூவன்,கற்பூரவல்லி, இலக்கி, மோரிஸ், செவ்வாழை, ரஸ்தாளி போன்றவற்றை என்னால் இனம் காணமுடியும்!
பதிலளிநீக்குநிழல் யுத்தம் - பாவம் அவர். அவரது குறைகளை எங்கும் சொல்லிக் கொள்ள முடியலை போல இதுவும் ஒரு வெளிப்பாடு. ஆனால் இதுவே நோயாகிவிடாமல் இருந்தால் நல்லது. அத்தனை மன அழுத்தம் இருக்கிறதோ என்னவோ! அவருக்கு என்று அவர் சில நேரம் செலவிட முடியாமல் இருப்பதாலும் இருக்கலாம். இல்லை ஒரு சிலருக்கு ஓரிரு வேலை சொன்னாலே எல்லா வேலையும் செய்வது போல் ஒரு எண்ணம் வரலாம் அப்படியும் இருக்கலாம். எப்படியோ அவர் வீடு செல்லும் முன் தன் கஷ்டங்களைக் கொட்டிவிட்டுச் சென்றால் நல்லதுதான்./
பதிலளிநீக்குகீதா
ஆமாம் சில இப்படி பாடல்களைச் சத்தமாக வைத்துக் கேட்பதுண்டு. மொபைலில் இப்போது. நான் நடக்கும் இடத்தில் இப்படி சிலர் செய்வதுண்டு. ஆனால் எனக்குத்தான் செவி அவ்வளவு துல்லியமாகக் கேட்காதே அதனால் இவை எதுவும் என்னை பாதிப்பதில்லை. நான் வேகமாக நடப்பதாலும். ஆனால் லவுட் ஸ்பீக்கர் கஷ்டமாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
நிழல்யுத்தம் வெளியில் கொட்டமுடியாமல் தொடரும் அவருடைய மனத்தாக்கம்தான் அவர் வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் போலும். மனம்பாதிப்படையாது இருந்தால் சரி.
பதிலளிநீக்குடிரான்சிஸ்டர் இக்காலத்தில் சிரிப்பை வரவழைக்கும்.