அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ராஜா காது கழுதைக் காது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சென்ற சில வாரங்களாக நகர்வலம் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதியது நினைவில் இருக்கலாம். அந்த வரிசையில் இன்றைக்கு அடுத்த பதிவு!
வடக்கும் தெற்கும் - திருச்சியில் நகர்வலம்…
தலைநகர் தில்லியில் நகர்வலம் சென்று வருவது பற்றி, தொடர்ந்து எழுதி வந்தது நினைவில் இருக்கலாம். கடந்த சில நாட்களாக திருச்சி/திருவரங்கம் வாசம் என்பதால் ஒரு சில தினங்கள் வேலை நிமித்தமாக நகர்வலம் வர வேண்டியிருந்தது. தில்லியில் என்றால் வேலை இருக்கிறதோ இல்லையோ பொழுது போக்க நகர்வலம் செல்வது வழக்கம். இங்கே அப்படி தேவையில்லையே! திருவரங்கத்தினை பொறுத்தவரை உள்ளூர் பேருந்துகளுக்கு பஞ்சமே இல்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என வந்து கொண்டே இருக்கும். நள்ளிரவு வந்தால் கூட பேருந்து (அரை மணி நேரத்திற்கு ஒன்று) கிடைக்கும் என்பது ஒரு பெரிய வசதி. தலைநகரில் கூட இந்த அளவிற்கு இரவு நேர பேருந்துகள் கிடையாது. எப்போதும் ஜேஜேவென கூட்டம் இருக்கிற இந்த திருவரங்கம் பேருந்துகளில் செல்வதில் நிறைய வசதி - ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை எத்தனை விஷயங்கள் நாம் கேட்க, பார்க்க கிடைக்கின்றன. அப்படி பார்த்த, கேட்ட விஷயங்கள் இன்றைய நகர்வலம் பதிவில்…
நகரில் எங்கே சென்றாலும் வெளி மாநில உழைப்பாளிகள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். பேருந்திலும் அவர்கள் நிறையவே வருகிறார்கள். சமீபத்தில் திருச்சியின் மத்திய பேருந்து நிலையம் சென்றபோது வட மாநிலத்திலிருந்து வந்திருக்கும் உழைப்பாளிகள் 50 பேருக்கும் மேலாக மூட்டை முடிச்சுகளுடன் மொத்தமாக பார்க்க முடிந்தது. அவர்களில் ஒரு இளைஞர் என்னிடம் வழி கேட்டபோது ஹிந்தியில் அவர்களுடன் உரையாட முடிந்தது. எந்த மாநிலத்திலிருந்து, எங்கேயிருந்து வருகிறார்கள், என்ன வேலை தெரியும், யார் உங்களை எல்லாம் இங்கே அழைக்கிறார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தேன். “டேக்கதார்” என்று ஹிந்தியில் ஒரு சொல் உண்டு. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Contractor. இப்படியானவர்கள் மூலம் தான் இப்படி நிறைய பேர் இங்கே வருகிறோம், இப்போது நானும் எனது சகோதரனும் பிழைப்பு தேடி இங்கே வந்திருக்கிறோம் என்றார். என்ன வேலை தெரியும் என்றால் “சுனாய் கா காம்” என்றார். அதாவது சுவர்களில் Plastering work! மேஸ்திரி என்கிறார்!
திருச்சியில், திருவரங்கத்தில் என எங்கே பார்த்தாலும், Belt விற்பவர்கள், பூட்டு விற்பவர்கள், சைக்கிள் பம்ப் விற்பவர்கள், கம்பளி போன்றவை விற்பவர்கள், ஒட்டடை குச்சி விற்பவர்கள், என பார்க்கும் வியாபாரிகள் பலரும் வட இந்தியர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். திருச்சியின் பிரபல NSB சாலையில் நின்று கொண்டு துப்பட்டா விற்பவர்கள், தோடு விற்பவர்கள், துணி விற்பவர்கள் என அனைவருமே வடக்கர்கள் தான். இங்கே வந்த சில நாட்களிலேயே தமிழில் தட்டுத்தடுமாறி பேசக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பானி பூரி விற்கிறார்கள் - நம் ஊர் மக்களும் அவற்றை மாங்கு மாங்கென்று வாங்கி சுவைக்கிறார்கள். தில்லியில் கூட இவ்வளவு பானி பூரி விற்பனை இருக்காது என்று தோன்றும் அளவுக்கு விற்பனை நடக்கிறது. இத்தனைக்கும் அங்கே கிடைக்கும் பானிபூரியின் சுவை நிச்சயம் இங்கே இருக்காது என்றாலும் இங்கே விற்பனை படு ஜோராக நடக்கிறது. திருவரங்கத்தில் இப்படியான ஒரு பானி பூரி விற்பனை செய்யும் இளைஞரிடம் பேச்சுக்கொடுக்க, நல்ல விற்பனை ஆகிறது. மாதத்திற்கு 35-40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது என்கிறார்.
இது மட்டுமல்ல, வீட்டின் அருகே இரண்டு செங்கல் சூளைகள் இருக்கின்றன. அங்கே மொத்தமாக வேலை செய்வது ஒரு வடக்கு தேச குடும்பம். மொத்தமாக அவர்களை வைத்தே வேலை வாங்குகிறார் இடத்தின் உரிமையாளர் அல்லது அவர்களுக்கு செங்கல் வேலை முழுவதும் குத்தகைக்கு கொடுத்து விட்டார் என்று தெரிகிறது. உள்ளே ஒரு குடும்பமே - குழந்தைகள் உட்பட இருக்கிறார்கள் - அனைவரும் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. வீட்டின் அருகே இருக்கும் பல கட்டுமான பணிகளிலும் வேலை செய்பவர்கள் அனைவருமே வடதேசத்தில் இருந்து இங்கே வந்து பணிபுரிபவர்கள் மட்டுமே. பக்கத்தில் 300 வீடுகள் கொண்ட குடியிருப்பு ஒன்று வருகிறது - அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள் - அதில் சுமார் 20 பேர் மட்டுமே தமிழர்கள் மற்ற அனைவருமே வடக்கர்கள். கட்டும் வீடுகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கப் போகும் போது அவர்களும் என்னிடம் பேசினார்கள்.
எங்கே பார்த்தாலும் இப்படி அவர்கள் உழைத்து, சம்பாரித்துக் கொண்டிருக்க, அதே நமது ஊரில் இன்னொரு பக்கம், நம் தமிழக இளைஞர்களும், பெரியவர்களும் போதைக்கு அடிமையாகி தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்கள். குடி போதை மட்டுமல்லாது சினிமா மோகம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. கட்அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பால் அபிஷேகம்! உழைக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் சுகமாக, சும்மாவே இருக்க வேண்டும், ஆனால் தனக்குத் தேவையானவை அனைத்தும் கிடைக்க வேண்டும், இலவசமாக மட்டுமே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. நேற்று பேருந்தில் பயணிக்கும்போது எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த வட இந்திய இளைஞர் தனது வேலை குறித்தும், இங்கே தான் சம்பாதிக்க முடிகிறது என்றும் பேசிக்கொண்டிருக்க, அதே பேருந்தில், வடிவேலு போல, “எவ்வளவு தண்ணி அடிச்சாலும் நான் ரொம்ப ஸ்டெடி ஆ இருப்பேன், கம்பியெல்லாம் நாங்க பிடிக்கறதில்ல!” என்று வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டு, தொடர்ந்து உளறலும், பிதற்றலுமாக இருந்தார். தனது உமிழ் நீர் தன் மீதே விழுவது கூட தெரியாத அளவுக்கு போதை! “நான் இப்படியே தான் நிப்பேன், நீ வேணும்னா வேற பஸ்ஸுல வா என்று” அவரை முறைத்துப் பார்த்த சக பிரயாணியிடம் வம்பு வேறு! இது போன்றவர்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது.
எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணங்கள் தொடர்ந்து என் மனதில். இது போன்ற நிகழ்வுகள் மனதுக்கு உகந்தவையாக இல்லை என்றாலும் இதுவே நிதர்சனம். இப்படியே சென்றால் தமிழகம் வட இந்தியாவாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை!
தொடர்ந்து வலம் வருவோம்… தொடர்ந்து பேசுவோம்…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
13 நவம்பர் 2024
வங்காள தேசத்திலிருந்தா, வங்காள மாநிலத்திருந்தா? தேசத்திலிருந்து என்றால் சட்ட விரோதம் இல்லையா?
பதிலளிநீக்குதமிழ்நாடு முழுக்க இபப்டி வடமாநிலத்தவரால் நிறைந்து வருவது சற்றே கவலைக்குரியதுதான்!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை மற்றும் உண்மையை சொல்கிறது. இன்றைய வாசகமும் அருமை. தங்கள எண்ணங்களை, கவலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. வெளி மாநிலத்தவர் செய்ய முடிந்த வேலைகளை தமிழ் நாட்டவர் செய்ய சோம்பல்படுவது வேதனைதான். நிறைய தொழில்கள் இப்படித்தான் முடங்கி விட்டன. விஞ்ஞான வளர்ச்சி வேலைகளை எளிதாக்குவதும் ஒரு சோம்பலுக்கு காரணம். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் சமுதாயக் கவலை புரிகிறது .
பதிலளிநீக்குதமிழ் நாட்டின் இளைஞர்களின் போக்கு கவலைகொள்ள வைக்கிறது. இதுபோன்றுதான் பண்பில் சிறந்து விளங்கிய நமது வடமாகாணத்து இளைஞர்களின் இன்றைய நிலை. குடி, போதை,ப்பொருள் என தலைகால் புரியாத சமுதாயம் உருவாகிறது. எமக்கு கவலை கொள்ள வைக்கிறது.
ஜி இங்கும் வெளி மாநிலத்தவர் அதிகம். அதாவது உழைப்பாளிகளைச் சொல்கிறேன். உணவகங்கள், மருத்துவமனைகளில் கூட, துணிக்கடைகள், என்று பல பல இடங்களிலும் அவர்கள் தான் அதிகம். அதுவும் வடகிழக்கு மாநிலத்தவரும் இங்கு நிறைய இருக்கிறார்கள். இங்கு அவ்வப்போது மண்ணின் மைந்தர்கள் குரலெழுப்புவார்கள். எங்கள் வாழ்வாதாரத்தை வெளிமாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டுவிட்டார்கள் என்று. அதிலும் அவர்கள் அதிகமாகச் சாடுவது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா தெலுங்கானாவை!
பதிலளிநீக்குகீதா
ஜி உங்கள் வருத்தத்தை அப்படியே ஏற்கிறேன் கவலைக்குரிய விஷயம். அதே சமயம் இப்படியும் சொல்லலாமோ? அரசு வட மாநிலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்காமல் இருக்கின்றன எனலாமோ? அரசு நிர்வாகம் அதாவது மாநில அரசு நிர்வாகம் தொழில்கள் என்று? குறாந்த கூலுக்கும் உழைக்க அவர்கள் தயாராக இருக்காங்க.
பதிலளிநீக்குஇங்கும் பலரையும் பார்க்க முடிகிறது. நேபாலிகள் நிறைய நம் வீட்டருகில் இருக்காங்க ஒரு கிராமமே வந்திருக்கு. அந்த நாட்டில் அவர்களுக்குப் பிழைக்க வசதிகள் இல்லை இங்கு வீட்டு வேலைகள் செய்கிறார்கள். நம் வீட்டு மாடியில் இரு பெண்கள். குழுவாக ஒரு கட்டிடத்தில் வீடெடுத்துத் தங்கியிருக்காங்க. இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் நேபால் மக்களும் ஹிந்தியை கற்றுக் கொண்டு பேசி சமாளித்து விடுவதால் ஹிந்தி பேசும் குடும்பங்களுக்கு எளிதாக இருக்கிறது. நேபால் மக்களுக்கு விசா தேவையில்லையே.
கீதா
இங்கு கட்டுமானப் பணிகளில் வட மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை. கிருஷ்ணகிடி, தருமபுரியைச் சேர்ந்தவர்கள், ஆந்திர எல்லை மக்கள், கர்நாடகா மக்கள் தான். மற்ற தொழில்களில், ரிசப்ஷனிஸ்ட் முதல் வடமாநிலத்தவர்களைப் பார்க்கலாம். ஹிந்தி தெரிந்தாலே போதும் பெங்களூரில் பிழைத்துக் கொள்ளலாம். கன்னட பாஷை கூடக் கற்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. இங்குள்ளவர்களும் ஓரளவு ஹிந்தி பேசுகிறார்கள். இங்கு நம் வீட்டருகில் இருக்கும் கல்யாணமண்டபத்தில் ஒரு வடமாநில குடும்பமே தங்கியிருக்கிறது அவர்களதான் அதைப் பராமரிக்கிறார்கள்!
பதிலளிநீக்குகீதா