அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வடக்கும் தெற்கும் - திருச்சியில் நகர்வலம் - நகர் வலம் ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
கையெழுத்து பொக்கிஷங்கள் - 28 அக்டோபர் 2024:
வார இறுதிகளில் தான் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு வீட்டை சுத்தம் செய்ய முடிகிறது! மற்ற நாட்களில் அரக்கபரக்க சமையலும், வழக்கமான வேலைகளும், வகுப்புகளுமாகச் செல்கிறது! இதோ இன்னும் தீபாவளிக்கு இரண்டே நாட்கள் தான் உள்ளது! நாளை கூட எனக்கு வகுப்புகள் இருப்பதால் தீபாவளிக்கான தயாரிப்புகளை இன்னும் நான் துவங்கவே இல்லை!
வழக்கமாக இனிப்புகளும் காரங்களும் திட்டமிட்டு செய்து முடிக்க மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வேன்! நேரமின்மையால் இந்த வருடம் இப்படி..🙂 வழக்கத்தை விட்டுவிடாமல் கிடைக்கப் போகும் குறுகிய நேரத்திற்குள் எதையாவது நிச்சயம் செய்ய வேண்டும்!
தீபாவளி என்றதும் எனக்கு நினைவுக்கு வந்தது நாம் மறந்தே போய்விட்ட வாழ்த்து அட்டை அனுப்பும் கலாச்சாரத்தை! வண்ண வண்ணப்படங்களில் அந்தந்த பண்டிகையின் அழகைச் சொல்லும் விதமாக வாழ்த்து அட்டைகள் இருக்குமே! நம்முடைய உறவும் நட்பும் அதில் நமக்காக நாலு வரிகளில் வாழ்த்தையும் எழுதி அனுப்பார்களே! அதையெல்லாம் சேமித்து பத்திரமாக வைத்திருப்போம்!
கடந்த இரண்டு நாட்களாக வீட்டை சுத்தம் செய்த போது சில பொக்கிஷமான எழுத்துகள் கிடைத்தன! அப்பா! நான் அப்பாவை நினைக்காத நாளில்லை! என்னுடைய எந்தவொரு செயலுக்குப் பின்னும் அப்பா தான் பசுமையாக இருக்கிறார்!
குட்டியாக ஒரு புத்தகம் என்றாலும் அதில் தன்னுடைய பெயரையும் வாங்கிய தேதியையும் குறிப்பிடும் வழக்கம் அப்பாவிடம் இருந்தது! மகள் பிறந்த வருடத்திய பஞ்சாங்கத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் அப்பா! நேற்றைய பொழுதில் அப்பாவின் கையெழுத்தை ஸ்பரிசித்து மகிழ்ந்தேன்!
மற்றுமொரு பொக்கிஷமாக 2005ஆம் ஆண்டு 90 வயதைக் கடந்த ஒரு தாத்தா எனக்காக எழுதித் தந்த ஸ்லோகம் ஒன்று! திருவரங்க வாழ்வில் நான் பெற்ற அன்புள்ளங்களில் தாத்தாவும் ஒருவர்! இன்றும் அவரது வீட்டைக் கடந்து செல்லும் போது “வாடா! வாடா! வாடா! உன்ன ஆளேக் காணலியே! எங்க போய்ட்ட!” என்று தாத்தா கேட்பது போலவே தான் தோன்றும்! தாத்தா இவ்வுலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் எழுத்தின் மூலம் வாழ்கிறார்!
வாட்ஸப்பிலும் முகநூலிலும் விதவிதமாக ஆயிரம் வாழ்த்துகள் வந்தாலும் நாமே நம் கைப்பட எழுதும் வரிகளுக்கு வலிமை அதிகம்! நம்முடைய உணர்வுகளை சுமந்து செல்லும் எழுத்துகளுக்கு உயிர் கொடுக்க முனைவோம்!
*******
அமரன் - 2 நவம்பர் 2024:
மகள் SK விசிறி என்பதால் தீபாவளிக்கு வெளியாகும் அமரனுக்கு போக வேண்டுமென்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்! என்னோட கம்பெனிக்கு நீதாம்மா வரணும்! ப்ளீஸ்மா என்றாள்! நான் முதலில் சுவாரசியம் எதுவும் காட்டலை! அவள் என்னிடம் சொல்லும் போது இந்தக் கதையைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை!
அம்மா இது ஒரு பயோபிக் மூவிம்மா! மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரோட லைஃப் ஹிஸ்ட்ரி தாம்மா படமா வந்திருக்கு! என்றாள்! அப்போதும், அந்த மாதிரியான மிடுக்கான கம்பீரமான ராணுவ வீரரின் தோற்றத்துக்கு தகுந்தாற் போல் இவரால் செய்ய முடியுமா!! என்று தான் நினைத்தேன்! இதோ பாரு ட்ரெய்லர் வந்திருக்கு என்று ஒருநாள் என்னிடம் காண்பித்தாள்! அன்று தான் என் எண்ணமும் முற்றிலும் மாறியது!
இதோ அந்தப் படத்தை பார்த்து விட்டு வந்த உணர்வுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்! 31 வயதில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வை நமக்கு உணர்த்தும் கதை! மிகச்சிறிய வயதில் உயரிய இடத்தினை தன் உழைப்பாலும் ஈடுபாட்டாலும் அர்ப்பணிப்பாலும் எட்டி பிடித்து தேசத்தினை திரும்பி பார்க்க வைத்தவர்!
ஒவ்வொரு ராணுவ வீரரின் வாழ்விலும் அன்பு, பாசம், நேசம், காதல் என்று எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் அவர்கள் தேசம் என்ற ஒரே சிந்தனையால் ஒன்றுபட்டு உந்தப்பட்டு கம்பீரமாக எப்போதும் மிடுக்குடன் நாட்டை காப்பவர்கள்!
சிறுவயது முதலே ராணுவ வீரர்களை பார்க்கும் போது எப்போதும் என்னிடம் ஒருவித பிரமிப்பும், சிலிர்ப்பும் ஏற்படும்! கோவையில் எங்கள் பகுதிக்கு அருகில் Red fields என்று ஒரு இடமுண்டு! இந்த இடம் முழுவதுமே Army Regiment, Airforce Administrative college, Navy என்று முப்படைகளுக்கான பகுதியாக இருக்கும்!
காலைநேரத்தில் எங்கள் பகுதியான ரேஸ்கோர்ஸில் உள்ள வாக்கிங் ரோட்டில் Army soldiers அனைவரும் அங்கு குதிரையேற்றம், ஓடுதல், ஜாகிங் செய்தல் என்று பயிற்சி செய்வதை பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன்!
நான், என் தம்பி, பக்கத்து வீட்டு அலெக்ஸ் மூவரும் சேர்ந்து ஒருநாள் Navy dayக்கு சென்று கண்டுகளித்த விஷயங்கள் அனைத்தும் இன்றும் மனதில் பசுமையாக உள்ளன! அங்கு ஸ்கூபா டைவிங் செய்து காண்பித்ததை ஆச்சரியமாக பார்த்தோம்! அங்கு நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் ஒருவர் ராஜா வேஷத்துடன் கதாயுதத்தை தூக்கிக் கொண்டு ஓங்கிய குரலில் கத்திக் கொண்டு வரவும் சிறுவர்களான நாங்கள் மூவரும் பயந்து கொண்டு திசைக்கொருவராக சிதறி ஓடியதும் நினைவில் உள்ளது!
மணிகண்டன் அண்ணா! ராணுவம் என்றால் இவரும் எப்போதும் என் நினைவுக்கு வருவார்! அப்போது அண்ணாவுக்கு 25 வயதிருக்கலாம் என நினைக்கிறேன்! ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அண்ணா வருடத்துக்கு ஒருமுறை ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வருவார்!
எப்போதும் நெற்றியில் சந்தன கீற்றலுடன் புன்னகை ததும்பும் முகத்துடனும் காணப்படும் அவரைச் சுற்றி குட்டீஸான நாங்கள் எல்லோரும் சூழ்ந்து கொண்டு அவரிடம் பல கேள்விகளை கேட்போம்! அண்ணாவும் எங்களுக்கு பொறுமையாக பதிலளிப்பார்! நீ நல்லா படிச்சா அடுத்த வாட்டி நான் லீவுல வரும்போது ‘Hero Pen’ வாங்கித் தருவேன்! என்பார்! ஹீரோ பேனா அப்போது பெரிய விஷயமாச்சே!
இந்தப் படத்திலேயே ராணுவ வீரர் ஒருவர் சோப்பு நுரை பொங்க குளித்துக் கொண்டு இருக்கும் போது அவசர நிலை ஒன்று ஏற்படுகிறது! அவர் எதைப் பற்றியுமே யோசிக்காமல் சட்டென துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்! அது தான் அங்கு நிதர்சனம்! அதேபோன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவசர நிலை ஏற்பட அப்படியே அதை விட்டு விட்டு கடமைக்காக உடனே செயல்படும் நிலை!
இப்படி தேசத்துக்காக ஒவ்வொரு ராணுவ வீரரும் பசி தூக்கம் என்பதையெல்லாம் மறந்து ஒவ்வொரு நொடியும் தேசநலனுக்காக மட்டுமே பாடுபட்டு உழைக்கும் அவர்களுக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்லணும்!
முதலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! அடுத்து ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை திறம்பட செய்து முடித்த கதாநாயகன் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், ராணுவ வீரரின் மனைவியாக திறம்பட நடித்துள்ள கதாநாயகி சாய் பல்லவிக்கும் பாராட்டுகள்! நிச்சயம் இது அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
தேசத்துக்காக ராணுவத்தில் பணியாற்றும் எல்லோருக்கும் ஒரு ராயல் சல்யூட்! 🙏 🙏
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
14 நவம்பர் 2024
தீபாவளி நினைவுகள் சிறப்பு, நெகிழ்ச்சி. அந்தக் கால வாழ்த்து மடல்கள் தீபாவளியைக் காட்டிலும் பொங்கலுக்குத்தான் அதிகம் வரும்.
பதிலளிநீக்குஅமரன் படம் நானும் பார்த்தேன், ரசித்தேன்.
தீபாவளி - அப்போதெல்லாம் நானே கையால் செய்து கொடுப்பதுதான் வழக்கம். தீபாவளியை விட பொங்கல் தான் நிறைய கார்டுகள் கடைகளில் பார்க்கலாம். அதையும் நான் கையால் செய்தே நட்புகளுக்குக் கொடுத்துவிடுவேன் அனுப்பணும்னா காசு வேண்டுமே! அதெல்லாம் வீட்டில் ம்ஹூம் தான்.
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகள் நெகிழ்ச்சி.
அமரன் படம் எல்லோரும் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். எனக்குப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரியலை
கீதா
கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் ரோடு மறக்க முடியாத இடம். என் மகனின் கராத்தே வகுப்பிற்காகத் தினமும் காலை 5.30-6 மணிக்கு வந்து அவன் வகுப்பு நடக்கும் போது நான் அதைச் சுற்றி நடைப்பயிற்சி செய்த இடம். மறக்க முடியாத இடம்
பதிலளிநீக்குகீதா
அருமை..
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்து அட்டையும் நினைவுகளும் அருமை.
பதிலளிநீக்குசமீபகாலமாக தேர்வு செய்து ஓரிரு படங்கள்தான் பார்ப்பதுண்டு . முடிந்தால் பார்க்கிறேன்.