அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட இரயில் பயணங்களில் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு பதிமூன்றாம் பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
என்ன அவசரமோ - 16 செப்டம்பர் 2024:
முகநூலில் தொடர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாக எழுதி வந்த நடை நல்லது தொடரில் ஒரு இடைவெளி….. பயணத்தில் இருந்ததால் இரண்டு நாட்கள் நடக்க முடியவில்லை. பதிவும் எழுதவில்லை. பயணம் முடிந்து மீண்டும் நடை தொடர்ந்தது, இதோ நடை நல்லது பதிவும் வந்துவிட்டது. இத்தனை நாட்கள் இந்தியத் தலைநகரில் நடைப் பயணம் என்றால் இன்றைக்கு தமிழகத்தில் திருவரங்கத்தில் நடைப்பயணம். தலைநகரில் காலை நேரத்தில் நடைப்பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு விதம் என்றால் இங்கே வேறு விதம்.
இன்றைக்கு காலை சற்றே தாமதமாக நடக்கச் சென்றபோது தத்தமது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுவிட பெற்றோர்கள் இரு சக்கர வண்டிகளிலும் ஆட்டோக்களிலும் ஏன் இத்தனை வேகமாகச் செல்கிறார்கள் என்று புரியவில்லை. இத்தனைக்கும் பள்ளிக்குச் செல்லும் சாலை மிகக் குறுகிய சாலை. அதில் இரண்டு பக்கங்களில் இருந்தும் வாகனங்களில் ஒரு வித ஒழுங்கும் இல்லாமல் செல்கிறார்கள். அப்படி ஒரு அவசரம்….. எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்று தோன்றியது. அதிலும் சாலையில் நடப்பவர்கள் குறித்த கவலையே அவர்களுக்கு இல்லை.
எந்த நேரமும் நம் மீது ஏதேனும் ஒரு வாகனம் முட்டி விடுமோ என்று பயத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது. ஒரு வித ஒழுங்கு இல்லாத வண்டி ஓட்டுதல் அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் பாதிப்பாக முடியக்கூடும் என்ற எண்ணமே இவர்களுக்கு இல்லை. என்னதான் வாகனம் ஓட்டுவதில் தங்களுக்கு இருக்கும் அனுபவம் குறித்த அதீத நம்பிக்கை இருந்தாலும் ஒரு நொடியில் கூட விபத்து நேர்ந்துவிடக்கூடும் என்ற நினைப்பே இவர்களுக்கு வருவதில்லை என்று தோன்றுகிறது. வருமுன் காப்போம் என்பதை இவர்களில் யாருமே நம்பவில்லை என்றும் தோன்றியது.
ஏன் இந்த அவசரம்? கொஞ்சம் திட்டமிட்டால், சரியான நேரத்தில் எழுந்து, சரியான நேரத்தில் புறப்பட்டால் எந்தவித தடங்கலும் இன்றி சேரவேண்டிய இடத்தைச் சேர முடியுமே….. அதி வேகத்தில் பயணிக்கும் இந்த ஆண்கள்/பெண்கள் ஒருவர் கூட தலைக்கவசம் அணிவதில்லை. குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கிடையாது! ஏதாவது விபத்து நடந்தபின் அதனால் உண்டாகும் இழப்பை குறித்து பின்னர் வருத்தப்பட்டு என்ன பலன் இருக்கப் போகிறது? உணர்ந்து கொள்ள மறுக்கும் இவர்களை என்ன செய்ய?
நேற்றைய தினம் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் இறந்து இருக்கிறார்…. இப்போது அவரின் பெற்றோர் ஹெல்மெட் போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களுக்குச் சொல்ல விபத்திற்குப் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சியை படம்பிடித்து ஃப்ளெக்ஸ் வைத்து இருக்கிறார்கள் என்று எஃப் எம்மில் கேட்டேன். ஆனால் முன்னரே மகனிடம் ஹெல்மெட் போட்டு ஓட்ட வேண்டியதை சொல்லி இருந்தால் ஒரு வேளை விபத்தே நடக்காமல் இருந்திருக்கலாம் அல்லது நடந்து இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லாமல் இருந்திருக்கலாம்……
எதற்கு இந்த அவசரம்…… என்ற யோசனையை தவிர்த்து ஓரமாக நடந்து வீடு திரும்பினேன். இனிமேல் இன்னும் சீக்கிரமே நடக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன்…..
*******
சத்திரம் - 17 செப்டம்பர் 2024:
ஹரித்வார், ரிஷிகேஷ் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு செல்லும் சமயத்தில் அங்கே நிறைய சத்திரங்கள் பார்த்தது உண்டு. இன்றைக்கு காலை நடந்து செல்லும்போது திருவரங்கத்திலும் இப்படியான ஒரு சத்திரம் பார்த்தேன். இங்கே இன்றைக்கும் இப்படியான சத்திரங்கள் அழகான திண்ணைகள் உடன் இருக்கின்றன.
அந்தக் காலத்தில் நல்ல எண்ணத்துடன் இப்படியான சத்திரங்களைக் கட்டி பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்தி இருக்கிறார்கள். கட்டணம் என்று பெரிதாக இல்லை என்றாலும் மற்ற தங்குமிடங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவான கட்டணம் தான். இந்தச் சத்திரத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன, கட்டணம் எவ்வளவு என்று கேட்க வேண்டும். வெளியில் இருந்து பார்க்கும்போது அதன் அழகான திண்ணைகள் கண்களுக்குப் புலப்படும்.
இன்னமும் சில ஊர்களிலேனும் இப்படியான சத்திரங்கள் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். உங்கள் ஊர்களில் இப்படியான சத்திரங்கள் இன்றைக்கும் இருக்கிறதா சொல்லுங்களேன்.
*******
பொறுமை கடுகினும் சிறிது - 19 செப்டம்பர் 2024:
பொறுமை கடலினும் பெரிது என்று தானே கேள்விப்பட்டு இருக்கிறோம், இது என்ன புதிதாக கடுகினும் சிறிது என்று புதிதாகச் சொல்கிறாயே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் இங்கே பலருக்கும் பொறுமை என்பது கடுகின் அளவை விட சிறியதாகவே இருக்கிறது - இருக்கிறது என்பதை விட இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு நாளும் நடைப்பயணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் பார்க்கும் மனிதர்களுக்கு பொறுமை என்பதே இருப்பதில்லை. பொறுமையா அது கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவிற்குத்தான் நடந்து கொள்கிறார்கள்.
சாலைகளில் செல்லும்போது சிறு போக்குவரத்து தடங்கல் வந்தால் கூட அந்தத் தடங்கல் நீங்கும் வரை பொறுமை இல்லை - ஆளாளுக்கு கத்த ஆரம்பித்து விடுகிறார்கள். வண்டிகளில் செல்பவர்கள் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்தி தங்கள் பொறுமையின்மையை பறைசாற்றுகிறார்கள். நேற்று நடக்கும்போது அந்த குறுகிய சாலையில் ஒரு மாட்டு வண்டி - பாரத்தை இழுக்க முடியாமல் இரட்டை மாடுகளில் ஒரு மாடு தடுமாறி, அதன் கால்கள் நகர மறுக்க, மாட்டு வண்டி ஓட்டுபவர் அந்த மாட்டை சுள்ளென்று கயிற்றால் ஒரு அடி கொடுத்தார். அதற்குள் பின்னால் வந்த வண்டிக்காரர் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்தி மாட்டை கதிகலங்கச் செய்தார். அவரைத் தொடர்ந்து மற்ற வண்டிகளில் இருந்தவர்களும் கூட ஒலிப்பானை அழுத்தி தொடர்ந்து ஒலியை எழுப்பி அந்தப் பகுதியில் ஒலியின் அளவை அதிகப்படுத்தி இருப்பவர்கள் அனைவரையும் படுத்தினார்கள். ஒரு சில நிமிடங்களில் மாடு சுதாரித்துக் கொண்டு முன்னே நகர்ந்தது. ஆனால் அந்த ஒரு சில நிமிடங்கள் கூட மனிதர்களால் பொறுக்க முடியவில்லை.
அரசு சார் நிறுவனம் ஒன்றிற்கு நேற்று செல்ல வேண்டிய வேலை இருந்தது. அங்கே ஒரு பெண் தான் அதிகாரி. எனது வேலைக்காக நான் காத்திருந்தேன். அங்கே என்னைத் தவிர இன்னும் சிலரும் காத்திருந்தார்கள். அந்தப் பெண்மணி ஒவ்வொருவராக கவனித்து வேலைகளைச் செய்து முடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவருடைய வேலையை பொறுத்து சரியான நேரம் தான் எடுத்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. திறமையானவர் தான் என்று சான்று பாத்திரம் கொடுக்கலாம் - தவறில்லை. அங்கே எனது வேலை பாதி முடிந்திருந்த சமயம் அங்கே ஒருவர் வந்து சேர்ந்தார். தன்னுடைய வேலையை முதலில் முடித்துக் கொடுங்கள் என்று அவர் சொல்ல, அந்தப் பெண்மணி, சரியாக, “உங்களுக்கு முன்னர் வந்தவர்கள் காத்திருக்கிறார்கள், கொஞ்சம் உட்காருங்கள், இவர்கள் வேலைகளை முடித்து விட்டு உங்கள் வேலையை கவனிக்கிறேன்” என்று சொன்னதும், அந்த மனிதருக்கு கடும் கோபம், “வெய்யில்ல இவ்வளவு தூரம் வந்து இருக்கேன், வேலையை முடிச்சுட்டு திரும்பணும், நீங்க வெய்யில்ல வந்து பாருங்க! ஒன்பது பத்து கிலோமீட்டர் வந்து இருக்கேன்” என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவரது பொறுமையின்மையை நினைத்து வேதனைப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். எனது வேலை முடிந்துவிட அந்தப் பெண்மணியிடம் நன்றி சொல்லி நகர்ந்தேன்.
பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால், பேருந்து நிறுத்தத்திற்கு வந்து ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் பேருந்து வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவருடன் அங்கே நின்றிருந்த இன்னும் சிலரும் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், அரசு என ஒருவரை எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மனிதரும் வரும் போதே சரியாக பேருந்து வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் பேருந்துகள் ஒரு நிமிடத்திற்கு ஒன்று என்று வந்தால் கூடாது போதாது! கொஞ்சம் காத்திருந்தால் பெரிய இழப்பொன்றும் இல்லை. சரியான நேரத்தில் புறப்பட்டால் சரியான நேரத்திற்கு சென்று சேர வேண்டிய இடம் சேர்ந்துவிடலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
யாருக்குமே எதற்குமே பொறுமை என்பதே இல்லை என்பதை பல விஷயங்களில் நம்மால் கவனிக்க முடிகிறது அல்லவா? அதனால் தான் பொறுமை கடுகினும் சிறிது என்று சொல்லி இருக்கிறேன். இன்றைய சூழலில் நிறைய விஷயங்களுக்கு பொறுமை என்பது அவசியமான தேவை. பொறுமை இல்லாவிடில் பல சமயங்களில் நாம் தடுமாற நேரும். பொறுமை நிச்சயம் தேவை என்பதை நான் பல சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன். பொறுமை குறித்த உங்களது எண்ணங்கள் என்ன என்பதை சொல்லுங்களேன்.
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
1 நவம்பர் 2024
நானும் சாலையில் நடமாட்டமில்லாதபோது நடைபயிற்சி செய்வதையே விரும்புகிறேன்.
பதிலளிநீக்குசத்திரம் இருந்த மாதிரி சில கட்டிடங்கள் பார்த்ததுண்டு. இன்னும் இயங்கும் சத்திரங்கள் இருக்கிறதா என்ன?
பதிலளிநீக்குஇப்படி பொறுமை இல்லாத பலரை சந்திக்கும் பாக்கியம் எனக்கும் உண்டு.
பதிலளிநீக்குஇன்றைய வாசகத்தில் சொல்லியிருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் சொல்லி இருக்கும் கருத்துக்களை சென்னை வந்த இந்த இரண்டு மாதங்களாக கவனித்து வருகிறேன். திருமணத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் தான் இருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் இப்படியான ஒரு சூழல் இருந்ததில்லை. இன்றைய சூழலை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.