புதன், 20 நவம்பர், 2024

வாசிப்பனுபவம் - தாசரதி - ரிஷபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Quarantine from Reality பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



சற்றே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.  அதிலும் நண்பர் திரு ரிஷபன் அவர்களின் கவிதை நூலான “தாசரதி” குறித்த வாசிப்பனுபவத்துடன் சந்திப்பதில் அதிக மகிழ்ச்சியும் ஆனந்தமும்.  பல முன்னணி இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.  ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 2000 கதைகள் - ஒவ்வொரு கதையும் படிப்பவர் மனதைத் தொடும் விதமாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை.  படித்து பல நாட்கள் ஆனாலும் அவரது படைப்பில் உருவான காதாபாத்திரங்கள் நம் மனதை விட்டு அகல்வதில்லை என்பது அவரது படைப்புகளின் சிறப்பு. 


சமீபத்தில் திருவரங்கம் சென்றிருந்தபோது அவர் கையாலேயே, அவரது கையொப்பம் இட்ட “தாசரதி” கவிதைத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள முடிந்ததில் மனதுக்கு பேருவகையும் மகிழ்ச்சியும் என்று சொன்னால் அது மிகையல்ல.  மூன்று தலைப்புக்கள் - கண்ணா, தாசரதி மற்றும் ரங்கா… மூன்று தலைப்புகளிலும் முப்பது முப்பது கவிதைகள்.  முப்பது முப்பது நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் எழுதிய கவிதைகள்.  மூன்று தலைப்பிலும் எழுதிய கவிதைகள் ஒரே தொகுப்பாக “தாசரதி” என்ற பெயருடன் ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.  புத்தகத்தின் விலை ரூபாய் 150/-.  புத்தகத்தினைப் பெற அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி - rsrinivasanrishaban@gmail.com.


கவிதைக்கான பாடுபொருள் கண்ணன், ராமன் மற்றும் திருவரங்கத்தின் அரங்கன்… ஒவ்வொருவர் மீதும் முப்பது கவிதைகள். அடடா…   பாடுபொருளாக அமைந்தவர்கள் மீது என்ன ஒரு பேரன்பு.  இறைவனை விதம் விதமாக கொண்டாடுவது, நட்பாக கருதுவது, அன்புடன் பேசுவது, இறைஞ்சுவது என ஒவ்வொரு கவிதையிலும் மனதைத் தொடுகிறார் நூலாசிரியர் திரு ரிஷபன் அவர்கள்.  மூன்று தலைப்புகளிலிருந்தும் ஒவ்வொரு கவிதையை உதாரணத்திற்கு இங்கே தருகிறேன். மற்ற கவிதைகளை நூலில் படித்தால் அவருக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் நிச்சயம் படிக்கும்போது மனதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் மாதிரி கவிதைகளுக்குச் செல்வோம். 


கண்ணா….



பித்து பிடிக்கட்டும்

அப்போதும் 

உன் பெயர் மட்டுமே

உச்சரிக்கும் வரம் வேண்டும்.


அவதாரங்களில்

வேஷம் ஏற்பதில்

அழ விட்டு

வேடிக்கை பார்ப்பதில்

அழைக்காதவர் முன்

போய் நிற்பதில்

ஆகச் சிறந்த நடிகன் நீ.


சுற்றிச் சுற்றி வந்தால்

கண்டு கொள்வதே இல்லை.

வேண்டாம் போ என்று

விலகினால் அனுப்புகிறாய்

சந்நிதி பிரசாதம்.

உனக்கும் வேண்டியிருக்கிறது

ஓர் விளையாட்டு.


தாசரதி….



தாள் கண்டார்

தாளே கண்டார்..

கல்லைப் பெண்ணாக்கினாய்.

ஓடத்தில் கால் வைக்குமுன்

சற்றே நில்லென்று சொல்லி

திருவடி சோதித்தான் குகன்.

'என் சொத்தே இந்த ஓடம்தான்..

பெண்ணாக்கி விட்டால்

என் செய்வேன்'

பாதம் பற்ற எத்தனை

சூட்சமமாய் புத்தி..

பாறையாய்க் கிடக்கும்

என் மனதிலும்

பாதம் பதியேன் ராமா..

பக்தி துளிர்க்கட்டும்

அப்படியாவது !


ரங்கா…



திரைக்கு முன்

காக்க வைக்கிறாய்.

அமுது செய்கிறாய் என்று

காத்திருந்தேன்.

திருவாராதன சப்தம் ஏதும்

கேட்கவில்லை.

அலங்காரம் ஆகிறதோ

எதற்கும் பொறுக்கலாம்.

நாழிகை அதன் போக்கில்

போய்க் கொண்டிருந்தது.

திரையோ விலகியபாடில்லை.

என்னாச்சு இன்று

ஏனிந்த சோதனை

பரிதவிப்பில் பரபரப்பில்

போய் விடலாமா என்று

திரும்ப யத்தனிக்கையில்

மாயத்திரை விலகுகிறது.

'இப்போது சொல்..

நேரம் ஒதுக்க வேண்டியது

நீயா, நானா?'

ரங்கனின் கேலிப்பார்வை !


இறைவன் மீது எத்தனை அன்பிருந்தால் இப்படியெல்லாம் எழுத முடியும் என்பதை இவரது கவிதைகளே நமக்கு உணர்த்துகின்றன.  ஒவ்வொரு கவிதையுமே நமது எண்ணங்களை இறைவனை நோக்கிச் செலுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்.   இந்த நூலை வாங்கி எல்லா கவிதைகளையும் படித்து இன்புறுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை….


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 நவம்பர் 2024.


குறிப்பு: படங்கள் ரிஷபன் ஜி அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...

10 கருத்துகள்:

  1. அவர் விரல்களில் 
    மட்டும் 
    எப்படி இப்படி 
    பேரன்பு மட்டுமே குடியிருக்கிறது?  
    விரல்வழி இறங்கும் 
    அன்பில் தோய்ந்த வார்த்தைகள் 
    எழுத்தாய் வரிகளாய் 
    பரிமளித்து ஓடி
    படிப்போர் நெஞ்சங்களை
    நெகிழ்த்துகின்றன...
    பாகாய் இளக்குகின்றன?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. சகோதரர் ரிஷபன் அவர்களின் பக்தி கவிதை தொகுப்பு பற்றிய விபரங்களை படித்தறிந்தேன். அத்தனையும் சிறந்த பக்தி பாமாலைகள். நீங்கள் பகிர்ந்த அவரின் கவிதைகளை படிக்கும் போது என்னுள்ளமும் பக்தி பரவசத்தில் கனிந்துருகுகிறது கடவுளை நேரில் கண்டு பேசுவது போன்ற பக்தி அனைவருக்குமே சாத்தியமில்லையே ..! பதிவு அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை! நானும் ரிஷபன் அவர்களின் கதைகளின் ரசிகன். அவரது கவிதைகளும் அற்புதமான அனுபவங்களை கொடுக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ரிஷபன் கதைகள் மிகவும் பிடிக்கும். கவிதைகள் படித்ததில்லை. படிக்க வேண்டும். அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! ரிஷபன் அண்ணா கதைகள் ரொம்பப் பிடிக்கும் என்றால் கவிதைகளிலும் அசத்துகிறாரே!!! கவிதை எழுதுவார்ன்னு இப்பதான் தெரிகிறது,

    ரொம்ப ரொம்ப ரசித்து வாசித்தேன் ரொம்ப அழகா எழுதிருக்கிறார் அண்ணா.

    //அழைக்காதவர் முன்

    போய் நிற்பதில்

    ஆகச் சிறந்த நடிகன் நீ.

    சுற்றிச் சுற்றி வந்தால்

    கண்டு கொள்வதே இல்லை.//

    அதானே!!! அப்படிச் சொல்லுங்க!!

    பாறையாய்க் கிடக்கும்

    என் மனதிலும்

    பாதம் பதியேன் ராமா..

    பக்தி துளிர்க்கட்டும்

    அப்படியாவது !//

    சூப்பர்! அதானே...

    போய் விடலாமா என்று

    திரும்ப யத்தனிக்கையில்

    மாயத்திரை விலகுகிறது.

    'இப்போது சொல்..

    நேரம் ஒதுக்க வேண்டியது

    நீயா, நானா?'

    ரங்கனின் கேலிப்பார்வை !//

    ஹாஅஹாஹாஹா ரசித்தேன், ரிஷபன் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இறைவன் மீது எத்தனை அன்பிருந்தால் இப்படியெல்லாம் எழுத முடியும் என்பதை இவரது கவிதைகளே நமக்கு உணர்த்துகின்றன.//

    அதேதான்...

    தாசரதி - தலைப்பும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. திரு. ரிஷபன் அவர்களின் கதைகள் படித்திருக்கிறேன்.

    நீங்கள் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும் மிகவும் ரசனையான முத்துக்கள். படிக்கும்போது சிலிர்க்கின்றது. திரு.ரிஷபம் அவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....