சனி, 16 நவம்பர், 2024

காஃபி வித் கிட்டு - 211 - லோலார்க் குண்ட் - கடவுளைக் கண்டேன் - நிலை - Make It Special - மூளை - சிந்தனைகள் - சகிப்புத்தன்மை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினேழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



இந்த வாரத்தின் சுற்றுலா : லோலார்க் குண்ட்



வாரணாசி குறித்த பதிவுகள் இங்கே அதிகம் எழுதி இருந்தாலும், நான் இதுவரை எழுதியிராத ஒரு இடம் குறித்து இன்றைய நாளில் பார்க்கலாம்.  வாரணாசி நகரில் லோலார்க் குண்ட் என்கிற ஒரு குளம் இருக்கிறது.  இதுவரை எனது வாரணாசி பயணங்களில் நான் பார்த்திராத  இடங்களில் இதுவும் ஒன்று. அழகிய குளம் என்பதோடு மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. இந்த குளத்தின் தரிசனமும் இங்கே செய்யும் ஸ்நானமும் நீங்கள் மனதில் வேண்டியதெல்லாம் கொடுக்கக்கூடியது என்பது தான் இந்தக் குளத்தின் பெருமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. எனது வாரணாசி பயணங்களில் இதுவரை ஏனோ இன்னும் இங்கே செல்லவோ, அல்லது குளிக்கவோ வாய்ப்பு அமையவில்லை. ஒரு வேளை இன்னும் நேரம் வரவில்லையோ என்னவோ?

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : கடவுளைக் கண்டேன்.....


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கடவுளைக் கண்டேன்..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


கடவுளைக் காணும் போது கேட்க நினைத்த கேள்விகளைச் சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தினைச் சொல்லி விடுகிறேன்.  கேள்வி கேட்பதற்கும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாமல் எதையாவது கேட்டு விபரீதமான விளைவு உண்டாக வாய்ப்புண்டு.  அதற்கு ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறேன்.  இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும் – இருந்தாலும் பதிவிற்குச் சம்பந்தமுண்டு என்பதால் இங்கே அக்கதையைச் சொல்லி விட்டே ஆரம்பிக்கலாம்!


ஒரு முறை எறும்புகள் எல்லாம் சேர்ந்து தங்கள் கூட்டத்தை நடத்தின.


அந்தக் கூட்டத்தில், “நாம் ஒன்றாக வரிசையாகச் சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு யானை வந்து நம்மை மிதித்து விடுகிறது. நம் கூட்டத்திலிருக்கும் எறும்புகளில் குறைந்தது ஆயிரம் எறும்புகளாவது இறந்து போய் விடுகின்றன... இதைத் தடுக்க இந்த யானைக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்று அனைத்து எறும்புகளும் புகார் தெரிவித்தன.


இதைக் கேட்ட எறும்புகளின் தலைவன், “ஆமாம், யானை மிகப்பெரிய உருவம். யானையிடமிருந்து நம்மைப் பாதுகாக்க, நாம் கடவுளிடம்தான் ஒரு நல்ல வரம் வாங்க வேண்டும்” என்றது. 


“ஆமாம், நாம் கடவுளிடம் வரம் கேட்பது நல்லதுதான். எறும்பாகிய நாம் கடித்தால் கடிபட்டவர் இறந்து போய் விட வேண்டும் என்று வரம் கேட்க வேண்டும்” என்றன.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் : நிலை



ஒரு சில ஓவியங்கள் பார்க்கும் போதே மனதை எதோ செய்து விடும்.  ஒரு பெரிய நகரத்தில் தனது குழந்தையுடன் கையேந்தும் ஒரு பெண்மணியை ஓவியமாக தீட்டியிருக்கிறார் இந்த ஓவியர்.  பார்க்கும்போதே மனதை ஏதோ செய்கிறது இந்த ஓவியம்.  ஆனாலும் ஓவியரின் திறமைக்காக இங்கே இந்த ஓவியத்தினை பகிர்ந்து கொண்டேன். பாருங்களேன். 


******



இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Make It Special 


சமீபத்தில் வெளியான Oneplus அலைபேசியின் விளம்பரம் ஒன்று உங்கள் பார்வைக்கு. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்…


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம். 


#MakeItSpecial For Everyone This Festive Season | Never Settle (youtube.com)


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது :  மூளை


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது பகுதியில் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு விஷயம்.  எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு எனது நன்றி.


ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. ஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், "முதலாளி, மூளையிருக்கா...?" என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், “என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?” என்று கிண்டலுடன் கேட்டுவிட்டுச் செல்வான்.  இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் கொண்டிருந்தார். 


நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் அக்கடைக்காரருடன் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார். அவரிடம் அந்தக் கடைக்காரர் தினமும் ஒருவன் தன்னைக் கேலி பேசி வருவதைச் சொன்னார். இதைக் கேட்ட கடைக்காரரின் நண்பர், "அட இவ்வளவு தானே, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.


கடையை மூடப்போகும் சமயம், அந்தத் தலைக்கனம் பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா...?" என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்குக் கடைக்காரரின் நண்பர் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.  தலைக்கனம் பிடித்தவனுக்கு உச்சந்தலையில் யாரோ குட்டியது போலிருந்தது. நண்பனின் சாதுர்யமான பதிலைக் கேட்ட கடைக்காரர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.


நாம் ஒருவரை மட்டம் தட்டி பேசினால் நம்மை மட்டம் தட்ட வேறொருவர் இருப்பார். எனவே யாரையும் கேலியாக பேசுவது கூடாது...


******


இந்த வாரத்தின் பகிர்வு :  நல்வாழ்வியல் சிந்தனைகள்…


விஜி வெங்கடேஷ் அவர்கள் அவருக்கு WhatsApp வழி வரும் நல்வாழ்வியல் சிந்தனைகள் சிலவற்றை தொடர்ந்து எனக்கும் பகிர்ந்து கொள்வார்.  அப்படி வந்த சில சிந்தனைகள் உங்கள் பார்வைக்கு…


❤️கடலில் கல்  எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை. கல்  தான் காணாமல் போகிறது. விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் நாம் கடலாக இருப்போம்.


❤️யாரையும் திட்டாதீர்கள். சாபம் இடாதீர்கள். கெடுதல் நினைக்காதீர்கள். நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும். இதுவே பிரபஞ்ச  நியதியாகும்.


❤️துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால் எல்லாமே வெற்றி தான்.


❤️வாழ்க்கை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது. அது உங்களை அப்படியே பிரதிபலிக்கின்றது.


❤️நீங்கள் எல்லாவற்றையும் அன்போடு அணுகும்  போது வாழ்வின் எல்லாமும் அன்பையே உங்களிடம்  பிரதிபலிக்கின்றது.

சீரிய சிந்தனைகள், உங்களுக்கும் பிடித்திருந்தால், வரும் வாரங்களிலும் காஃபி வித் கிட்டு பதிவில் வெளியிடப்படும். 


******


இந்த நாள் இனிய நாள் :  சகிப்புத்தன்மைக்கு ஒரு தினம்



இந்த நாளை International Day for Tolerance என்று கொண்டாடுகிறார்கள் என்பது இந்த வாரத்தின் “இந்த நாள் இனிய நாள் தகவல்”.  1995-ஆம் ஆண்டிலிருந்து UNESCO இந்த நாளை இப்படி கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. சகிப்புத்தன்மையின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களிடையே புரிதல் மற்றும் மரியாதையை மேம்படுத்துதல், சகிப்புத்தன்மை இல்லை எனில் உண்டாகும் ஆபத்துகள் ஆகிவற்றை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு தினம் கொண்டாட்டம்.  இந்த வருடத்தின் International Day for Tolerance - க்கான Theme  என்ன தெரியுமா?  "Promoting Respect and Understanding Worldwide" தான். இப்படியான கொண்டாட்டங்களில் ஏதேனும் பயன் இருந்தால் சரி! கொண்டாட்டங்கள் மட்டுமே பிரதானமாக இருக்க, புரிதலே இல்லாமல் இருந்தால் எந்த வித பயனும் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டால் நல்லது. 

 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 நவம்பர் 2024

11 கருத்துகள்:

  1. வாசகம் படித்ததும் உண்மைதானே என்று மனம் சொல்லியது!

    லோலார்க் குண்ட் பார்க்க அழகாய் இருக்கிறது. 

    அவ்வளவு எளிதாக ஒரு தலை நனைத்தலில் செய்த பாவங்கள் தீர்ந்து விடுமா?

    பதிலளிநீக்கு
  2. - கடவுளிடம் கேட்க ஆசைப்படும் உங்கள் பத்து ஆசைகளை முன்னரும் படித்திருக்கிறேன்.  எறும்பின் வேண்டுதல் கும்பகர்ணனை நினைவுபடுத்தியது!

    - ஓவியம், மனதில் பதிகிறது.  பின்னால் மாடமாளிகை.  முன்னால் இந்தப் பெண் ஒரு குழந்தையுடன் பசியாற யாசகம்.  

    பசிவர அங்கே மாத்திரைகள் - பட்டினியால் 
    இங்கு யாத்திரைகள்...
    இருவேறுலகம் இதுவென்றால் 
    இறைவன் என்பவன் எதற்காக?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் கவிதை சூப்பர்!!!!!

      அது போல கீழ வர வர காக்கைகள் முதல் நாய்கள் வரை.......இதை வாசித்து சிரித்துவிட்டேன்!!!

      கீதா

      நீக்கு
    2. கண்ணதாசன் கவிதை நன்றாய் இல்லாமல். இருக்குமா?!

      நீக்கு
  3. சாதாரணமாகவே நான் நாய் ரசிகன் என்பதாலும் முன்னாள் ஒன் ப்ளஸ் ரசிகன் என்பதாலும் விளம்பரத்தை ரசித்தேன். 

    வரவர காக்க்கைகள் முதல் நாய்கள் வரை எல்லா விலங்குகளும் நிறைய சிந்திக்க ஆரம்பித்து விட்டன.

    பதிலளிநீக்கு
  4. மூளை இருக்கா?  கேள்வி!  அந்த புத்திசாலியின் பதில் போலவே வேறு நல்ல பதில்களும் படித்திருக்கிறேன்!

    திருமதி விஜி வெங்கடேஷ் பகிர்ந்துள்ளவை பின்பற்றத்தக்கவை.  என் அனுபவத்திலும் நான் உணர்ந்தவை.

    பதிலளிநீக்கு
  5. வாசகம் சூப்பர். உண்மை! அது சரி அதுக்கு ஏன் பெண்களின் செருப்பைப் போட்டு விட்டிருக்காங்க? அதற்கு ஏதோ அர்த்தம் இருப்பது போல இருக்கிறதே!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. லோலார்க் குண்ட் - வாவ்! மிக அழகாக இருக்கிறது. இதைப் பார்த்ததும் உங்கள் பயணக்குறிப்பான ராணி கி வாவ் இடமும் நினைவுக்கு வந்தது.

    கடவுளைக் கண்டேன் - ஏதோ தட்டுப்படுகிறதே தொடர் பதிவாக வந்ததோ அப்ப எல்லாம் வலையுலகில் தொடர் பதிவுகள் கோர்த்துவிடப்படுமே அப்படி ஏனென்றால் நாங்களும் எழுதிய நினைவு. பார்க்கிறேன் அதுதானோ என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அந்தப் பதிவில் கதை அருமையான கதை. கதையை அப்படியே நாம் எடுத்துக் கொள்ளாமல் உட்பொருளைத்தான் நாம் சிந்திக்க வேண்டும் என்ன சொல்கிறது கதை என்பதை

    உங்கள் கேள்விகளும் சூப்பர் பலர் மனதிலும் இருப்பவைதான் இல்லையா?

    ஓவியம் - நிலை - என்னவோ செய்கிறது. மனதில் கதை சட்டென்று ஒன் லைன் தோன்றினாலும் இப்ப அதை develop செய்யும் நிலை இல்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. விளம்பரம் ரொம்ப சூப்பர் ரொம்ப ரொம்ப ரசித்தேன். செல்லம் செம க்யூட்!

    மூளை - சூப்பர் பதில். ரசித்தேன்

    விஜி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் அனைத்தும் அருமை. சில அனுபவங்களிலும் கற்றவை.....குறிப்பாக முதலாவது.

    சகிப்புத் தன்மைக்கு ஒரு தினம் இருப்பது இப்போதுதான் அறிந்து கொள்கிறேன். ஆனால் பாருங்க இதுக்கு எதுக்குத் தினம்? நீங்கள் சொல்லியிருக்கும் கடைசி வரியை டிட்டோ செய்கிறேன், ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. லோலார்க்குண்ட் நல்ல அழகாக இருக்கிறது.

    ஓவியம் அவர்களின் நிலை மனதை பிசைகிறது.

    விளம்பரம் மனதை தொட்டது.

    வாசகங்கள் அருமை.

    மூளை நல்ல பதிலடி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....