வியாழன், 7 நவம்பர், 2024

கதம்பம் - எதுவும் மாறவில்லை - தீபாவளி கொண்டாட்டம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தில்லியில் ஒரு நரசிம்மர் ஆலயம் - நகர் வலம் ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


எதுவும் மாறவில்லை - 21 அக்டோபர் 2024: 



நவராத்திரி கொண்டாட்டங்கள் எல்லாம் இனிதாக நிறைவுற்று அடுத்து இதோ தீபாவளியும் நெருங்கிக் கொண்டே இருக்கிறது! நவராத்திரிக்குப் பிறகு என்னடா இவளைக் காணவில்லையே என்று என்னை நினைத்தீர்கள் என்றால் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!


எப்போதும் போல இந்த வருடமும் சிறப்பான நவராத்திரி தான் என்றாலும் இந்த வருட சரஸ்வதி பூஜையில் பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய புத்தகங்கள் நோட்டுகள், பிரிண்ட் அவுட்கள், பேனா என்று வைக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன்! இறைவனின் அருளால் இதைப் போல எப்போதும் நிகழணும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்!


இந்த கொண்டாட்டங்களில் என் வகுப்புகளையும் பாடங்களையும் முற்றிலும் மறந்தும் விட்டேன்…:) அதன் பிறகு வகுப்புக்குச் சென்றால் எல்லாம் மறந்துவிட்டாற் போன்ற உணர்வு! அடுத்த வாரம் யூனிட் டெஸ்ட் வருகிறதே என்பதை நினைத்தால் மனதில் குழப்பமும், பயமும் ஒருசேர பற்றிக் கொண்டுவிட்டது!


கவலைகளோ, குழப்பமோ, பொறுப்புகளோ இல்லாத சின்னஞ்சிறு பருவத்தில் கற்பூரம் போன்று மனதில் பற்றிக் கொண்ட விஷயங்களைப் போல இப்போது இல்லையே! சிரமப்பட்டு தான் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது! இப்போது அதையும் முற்றிலும் மறந்துவிட்டதைப் போல உணர்ந்தால்…!!


இந்த விஷயத்தில் என் ஆசிரியர் கூட என்னைக் குறித்து மிகுந்த கவலை கொண்டார்! எப்போதும் துடிப்புடன் பதில் கூறுபவள்! இப்போது வகுப்பில் நான் அமைதியாகவே எதற்கும் பதில் சொல்லாமல் இருந்தேன்! 


என் உணர்வுகளை புரிந்து கொண்டு உடன் பயிலும் நட்புகளும், ஆசிரியரும் என்னைத் தேற்ற அவர்களின் அன்பும், என் மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கையும் என்னை உற்சாகப்படுத்தி மீண்டும் களத்தில் இறங்க வைத்தது! முட்டி மோதி எல்லாவற்றையும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்..🙂


நேற்றைய பொழுதில் வகுப்பில் வைத்த யூனிட் டெஸ்ட்டில் எழுத்துத் தேர்விலும் சரி! Multiple choice question paperஇலும் சரி! துளியும் குறையாமல் முழு மதிப்பெண்களையும் அள்ளி விட்டேன்..🙂 அப்போது வந்த மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் எல்லை தான் ஏது..🙂


எத்தனை வருடங்கள் ஆனால் தான் என்ன! என்னுடைய இயல்பான  குணம் இன்னும் மாறவில்லை என்பதை உணர்ந்தேன்! மகள் கூட என்னை கலாய்த்தாள்! பயமாயிருக்கு! குழப்பமா இருக்குன்னு சொன்ன பாப்பாவா இப்ப full marks எடுத்திருக்கு…:) 


தம்பி எப்போதும் விளையாட்டு மைதானத்தில் தான் இருப்பான்! அவனை அம்மா தான் இழுத்துக் கொண்டு வந்து படிக்கச் சொல்வாள்! எனக்கு யாரும் அப்படிச் சொல்ல வேண்டியதில்லை..🙂 அவன் பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தை புரட்டி பாஸாகி விடுவான்..🙂 98 மார்க் எடுத்தாலும் குறைந்த இரண்டு மார்க்கை எண்ணி கவலைப்படுபவள் நான்…:) ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் இரண்டும் இரண்டு துருவங்கள்…:)


நேற்றைய பொழுதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் ரொம்ப ரிலாக்ஸாக எனக்குப் பிடித்த இசைஞானியின் பாடல்களைக் கேட்டபடியே உடன் சேர்ந்து முணுமுணுத்தவாறே இனிமையான நேரத்தை செலவழித்தேன்..🙂 மகள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டாள்!


*******


தீபாவளி கொண்டாட்டம் - 25 அக்டோபர் 2024: 



தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது! புத்தாடையை எப்போது அணிந்து கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வம்! அம்மா செய்யும் பலகாரங்களை சுவைக்கும் ஆர்வம்! பட்டாசை உடன்பிறந்தவர்களோடு பங்கிட்டுக் கொள்ளும் போது ஏற்படும் சண்டை!  என்று சிறுவயதின் பண்டிகைச் சுவடுகள் ஏதும் இல்லா நாட்கள்!


நினைத்த போதெல்லாம் புத்தாடை வாங்கிக் கொள்ள முடியும் சுதந்திரமும், வாழ்வியல் முறையும், பொருளாதாரமும் நம்மை சற்று மாற்றித் தான் உள்ளது!  நம் தலைமுறைக்கு கிடைத்த சந்தோஷமும் உற்சாகமும் கூட இன்றைய தலைமுறையினரிடம் இருப்பதில்லை!

கஷ்டமான ஜீவனம் என்றாலும் அப்பாவோ அம்மாவோ பண்டிகைகளில் என்றுமே குறை வைத்தது இல்லை! எங்கள் வீட்டில் தீபாவளிக்கு மட்டும் தான் புத்தாடை என்பதால் அதை போட்டுக் கொண்டு அழகு பார்ப்பதில் எங்களுக்கும் மிகுந்த ஆர்வம் இருந்தது! குழந்தைகளின் சந்தோஷத்தை ரசிப்பதில் பெற்றோருக்கும் நேரம் இருந்தது!


உங்க ஹஸ்பண்ட் இவ்வளவு நாள் இங்க இருந்தாரே! தீபாவளிக்கும் இருந்துட்டு போயிருக்கலாம்! உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல! நேற்று ஒரு தோழி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்! ஒரு புன்னகையுடன் அவரிடம் சொன்னேன்! அப்பா அம்மா தம்பியோடு பண்டிகைகளை கொண்டாடியது ஒருவித சந்தோஷம்!  அதுக்கப்புறம் ஒருவித சந்தோஷம்! எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு! 


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் என்னை மாற்றிக் கொள்ளவே இல்லை! நான் நானாகத் தான் இருக்கிறேன்!! அம்மா பண்ணின மாதிரியே தான் நான் இன்னும் பலகாரங்களைச் செய்யறேன்! கடையில் வாங்கி மனையில் வைக்கும் பழக்கம் எனக்கு இன்னும் வரல! முடிந்தவரை  சம்பிரதாயங்களைக் கூட பின்பற்றுகிறேன்!


எனக்கு கிடைத்த அனுபவங்கள் நிச்சயம் அவளுக்கும் கிடைக்கணும் என்று ஒவ்வொரு வருஷமும் குட்டிப் பொண்ணை உற்சாகமாகவும்  சந்தோஷமாகவும் பண்டிகைகளை கொண்டாட வைக்கணும் என்ற எண்ணம் மட்டுமே என்னிடம் உள்ளது! நாளைய தலைமுறைக்கு நம் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பரிசளிப்போம்!


படக் குறிப்பு - மிகவும் கனிந்த வாழைப்பழங்கள் வீட்டில் இருக்கவே அதை வைத்து நேற்று நான் செய்த வாழைப்பழ கேக்! சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

7 நவம்பர் 2024


4 கருத்துகள்:

  1. நாட்கள் இடைவெளி விழுந்து பாடங்கள் மறந்துபோனது போன்ற குழப்பத்தை வெற்றிகரமாக கடந்து வந்ததற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

    தீபாவளி பற்றிய வரிகள் நெகிழ்ச்சியை கொடுத்தன. எங்கள் வீட்டிலும் கடையில் வாங்கி மனையில் வைக்கும் வழக்கம் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. ஆதி உங்கள் வகுப்புகள் உங்களை பிஸியாக வைத்திருக்கும் என்று தெரியும். அதனால் உங்க பதிவுகள் இல்லைனாலும் புரிந்து கொள்ள முடியும். எப்படியோ விட்டதைப் பிடித்துவிட்டீகள்.

    //தம்பி எப்போதும் விளையாட்டு மைதானத்தில் தான் இருப்பான்! அவனை அம்மா தான் இழுத்துக் கொண்டு வந்து படிக்கச் சொல்வாள்! எனக்கு யாரும் அப்படிச் சொல்ல வேண்டியதில்லை..🙂 அவன் பரீட்சைக்கு முதல் நாள் புத்தகத்தை புரட்டி பாஸாகி விடுவான்..🙂 98 மார்க் எடுத்தாலும் குறைந்த இரண்டு மார்க்கை எண்ணி கவலைப்படுபவள் நான்…:) ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் இரண்டும் இரண்டு துருவங்கள்…:)//

    ஆண் குழந்தைகள் அப்படித்தான் ஆதி. பெண் குழந்தைகள்தான் பெரும்பாலும் நீங்கள் நினைத்தது போல் நினைப்பாங்க.

    என் வகுப்பிலும் இப்படியான தோழிகள் இருந்திருக்காங்க. ஆனா நான் இப்படி நினைச்சதில்லை ஹிஹிஹி பாஸானா போதும் என்று. தேர்வுகளில் பாடங்களில் நான் ரொம்ப ரொம்ப சுமார் எங்க வீட்டு ஆண்பிள்ளைகளையும் விட சுமார். எனக்குப் பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதை விட பாடங்களைப் படித்து புரிந்து கொண்டுவிட்டால் போதும்... பல விஷயங்களை வாசித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம். எனவே அதில் மனம் செல்லும் கட்டுரை, பேச்சுப் போட்டி, கவிதை ஓவியம் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. உங்க தேர்வி முழு மதிப்பெண் எடுத்ததுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

    நம் வீட்டிலும் தீபாவளி என்றால் வீட்டில் செய்வதுதான். தீபாவளி என்றில்லை, இப்போது எண்ணைப் பண்டகள் இனிப்புகள் செய்வதில்லை என்றாலும் கூட மற்ற தினங்களிலும் கூட ஏதாச்சும் வேண்டும் என்றால் வீட்டில்தான் செய்வது. கடையில் வாங்குவதில்லை.

    வாழைப்பழ கேக் சூப்பர்!! ஆசையோடு பார்த்துக் கொள்கிறேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் முயற்சியுடன் தேர்வு பெற்றதற்கு பாராட்டுகள்.

    தீபாவளியும் தின்பண்டங்கள் பற்றிக் கூறியது நன்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....