செவ்வாய், 26 டிசம்பர், 2017

மீண்டும் குழந்தைகளாவோம் – பிரதாப்கட்[ர்], ஹர்யானா…





மீண்டும் குழந்தைகளாவோம்....


மீண்டும் குழந்தைகளாவோம்....

தலைநகர் வாழ்க்கை கொஞ்சம் சவாலான விஷயம். பெரும்பாலான நேரம் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து அலுவலகம் சென்று சேரவும், அலுவலகத்திலிருந்து வீடு சேரவும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகும். எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்றாலும் – அலுவலகம் மூன்று கிலோமீட்டர் தூரம் தான் – நேரடி பேருந்து இல்லை! பெரும்பாலான நாட்களில், நடை, பேருந்து, நடை என இருக்குமென்பதால் 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ஆகிவிடுகிறது. வீடு, சமையல், அலுவலகம், வீடு திரும்பி மீண்டும் சமையல், மற்ற வேலைகள், தூக்கம் என Routine and Boring Schedule இந்த தலைநகர வாழ்க்கை.


வண்டியை பூட்டிட்டு கிளம்பலாம் வாங்க....


பூத்துக் குலுங்கும் கடுகுச் செடிகள்....

எனக்குப் பரவாயில்லை, குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு இன்னும் பிரச்சனையும், வேலைகளும் அதிகம்.  ஒரு நாளாவது, கொஞ்சம் நிம்மதியா, உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு கிடைத்தால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்தால் எப்படி இருக்கும் என சிந்திக்காத தலைநகர் வாசிகள் மிகக் குறைவு. அப்படி ஒரு நாள் அமைந்தால் எப்படி இருக்கும்? எங்கள் பகுதியிலுள்ள சில நண்பர்கள் ரொம்ப நாட்களாகவே இப்படி ஒரு நாள் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எப்போது திட்டமிட்டாலும், ஏதாவது தடை வந்து விடும் – சரியாக அமையாது, ஒத்து வராது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு பிறந்த நாள் விழாவில் நண்பர்கள் அவரவரது குடும்பங்களுடன் சேர்ந்து இருந்த நாளில் [வெள்ளிக்கிழமை] ஞாயிற்றுக்கிழமையே அப்படி பயணம் செய்வது முடிவு செய்யப்பட்டது.


வாயிலில் இசையோடு வரவேற்பு....


கிராமத்துக் காட்சி ஒன்று....

ஒரே நாள் என்பதால், தில்லியைத் தொட்டடுத்த இடமாக இருந்தால் நல்லது. ஹர்யானா மாநிலத்தில் அப்படி ஒரு இடம் தான் ஜஜ்ஜர் மாவட்டத்திலுள்ள பிரதாப்கட்[ர்] பண்ணை. எங்கள் வீட்டிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த இடம். காலை 09.30க்கு ஆரம்பித்தால், மாலை 05.30 மணி வரை அங்கேயே இருக்கலாம். பெரியவர்களுக்கு ரூபாய் 1230/--உம். பத்து வயதுக்குட்பட்ட சிறியவர்களுக்கு ரூபாய் 690/--உம் கட்டணமாக வசூலிப்பார்கள் – அதில் உணவு, விளையாட்டு என அனைத்தும் அடக்கம். போக்குவரத்து செலவு நம்முடையது! மளமளவென ஏற்பாடுகள் நடந்தன. சனிக்கிழமை மதியத்திற்குள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன – 21 பேர் கொண்ட குழு பிரதாப்கட்[ர்] நோக்கி பயணம் செய்ய தயார்!


மாட்டு வண்டியில் நான்....


தண்ணீர் எடுக்கச் செல்லும் கிராமியப்  பெண்....

சனிக்கிழமை இருந்த ஒரு திருமண வரவேற்பு முடிந்து நான் வீடு திரும்பிய போது இரவு பன்னிரெண்டு மணி! அடுத்த நாள் காலை 07.30 மணிக்கு வண்டி வந்து விடும் என்பதால் தூங்க முயற்சித்து உறங்கியபோது மணி 01.30. சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்ற நினைப்புடனே உறங்க, அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது – மொத்தம் மூன்றரை மணி நேர உறக்கம் மட்டுமே! ஆனாலும் பயணம் போகப்போவது உற்சாகம் தர, சரியான நேரத்திற்குப் புறப்பட்டுவிட்டேன் –. அன்று பார்த்து எங்கள் வீட்டின் அருகே இருக்கும் தால்கட்டோரா விளையாட்டு அரங்கத்திலிருந்து ஏதோ ஓட்டம் – வாகனங்களை வர விடவில்லை என்பதால் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து வர தாமதமானது. வேறு வழியாக வரச் சொல்லி வீட்டிலிருந்து அனைவரும் புறப்பட்டபோது காலை 08.00 மணி.


ட்ராக்டர்ல ஒரு ரவுண்டு போலாம் வரீங்களா?.... 


Trampoline-ல் குதித்து மகிழும் எங்கள் குழு இளைஞர்....

ஒன்றரை மணி நேரத்தில் நாங்கள் பிரதாப்கட்[ர்] சென்றடைந்தோம். நுழைவாயிலிலேயே, ஹர்யானாவின் பாரம்பரிய உடையில் இருந்த ஒரு பெண்மணி வருபவர்கள் அனைவருக்கும் பொட்டிட்டு, பூக்கள் தூவி வரவேற்பு கொடுத்தார். நுழைவுச் சீட்டுக்கான கட்டணம் கட்டிய பிறகு அனைவருக்கும் ஒரு அட்டை கொடுத்தார்கள் – அதில் என்னென்ன Activity எனக் கொடுத்திருக்க, அந்த Activity செய்தால் அதில் ஒரு துளை செய்து விடுவார்கள் – மீண்டும் உங்களால் அந்த Activity செய்ய முடியாது. என்னென்ன விளையாட்டு/விஷயங்கள் இங்கே உண்டு – அது ஒரு பெரிய பட்டியல்….


கோதுமையிலிருந்து தூசியை/தோலை பிரிக்கும் காட்சி.... 


அங்கே வந்திருந்த பள்ளிச் சிறுவர்கள்....


Activity Sheet - இவையெல்லாம் இங்கே....

வில்-அம்பு, பலூன் சுடுதல், கவண்கல், ஈட்டி [Dart!], ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் [DJ Music], ஒட்டக உலா, ஒட்டக வண்டியில் உலா, மண்பாண்டங்கள் செய்தல், இராட்டை சுற்றுதல், மெஹந்தி/மருதாணி [வரும் பெண்களுக்கு அங்கே இருப்பவர்கள் போட்டு விடுவார்கள்!], பண்ணையில் இருக்கும் பசு, எருமை, ஆடு, கோழி, ஒட்டகம் ஆகியவற்றிற்கு உணவு தருதல், மண்குளியல், பம்புசெட் குளியல், கயிறு இழுத்தல் போட்டி, சாக்கு ஓட்டம், மட்ரி ஃபோட் [கண்களைக் கட்டிக்கொண்டு நடந்து எதிரே தொங்கும் பானையை உடைத்தல்], கயிற்றுப் பாலத்தில் நடை, கோலி குண்டு, பட்டம் விடுதல், லட்டூ [பம்பரம்] விடுதல், பிட்டூ [7 கல் அடுக்குவது!]…. இருங்க, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்…  - கிட்டிப்புள், கிரிக்கெட், வாலிபால், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஃபுட்பால், வீழ்தடுப்புறை [பேசாம Trampoline-னு ஆங்கிலத்தில் சொல்லிடலாம்], ட்ராக்டர் பயணம், எருமைமாட்டு வண்டியில் பயணம், வயல்வேலைகள், என இத்தனையும் இங்கே நாம் செய்யலாம்!


பாஜ்ரா ரொட்டி தயாரிக்க அடுப்பு....


ஒட்டக சவாரி....

மேலே சொன்னவை தவிர, காலை உணவு, மதிய உணவு, தேநீர், சிற்றுண்டி, எலுமிச்சை பானம் [ஷிக்கஞ்சி], மோர், பால், ஜிலேபி, தண்ணீர், என எவை வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தவிர கரும்பு, முள்ளங்கி போன்றவையும் கேட்டு வாங்கி நீங்கள் சாப்பிட முடியும். காலை 09.30 மணிக்கு இந்த பண்ணை திறக்கும்போதே அங்கு சென்றுவிட்டால், மாலை 05.30/06.00 மணிக்கு மூடும் வரை அங்கே இருந்து விதம் விதமாக விளையாடலாம், ஆடலாம், உண்ணலாம்! குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களும் குழந்தைகளாக மாறி விதம் விதமான விளையாட்டுக்களிலும், போட்டிகளிலும் ஈடுபட இங்கே வாய்ப்பு! கிடைத்த வாய்ப்பை அனைவருமே சரியாக பயன்படுத்திக் கொண்டோம். குழந்தைகள் சில விளையாட்டுகளை ரசித்தார்கள் என்றால், பெரியவர்கள் சில விளையாட்டுகளை/விஷயங்களை ரசித்தார்கள்.    


தண்ணீர் பானை மற்றும் சும்மாடு இரண்டிலும் அலங்காரம்.... 


மண்பாண்டம் செய்யலாம் வாங்க....

கோலிகுண்டு விளையாடி, பம்பரம் விட்டு, குழந்தைகள், பெரியவர்கள் என சிலர் Trampoline-ல் குதித்து விளையாட, கிராமிய சூழலில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள, ஹர்யானாவின் பாரம்பரிய உடையில் அனைத்து குடும்பிகளும் புகைப்படம் எடுத்துக்கொள்ள, இடைவிடாது உணவு உண்ணவே சிலரும், சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, மண் குளியல், பானையை தலையில் வைத்து நடப்பது, என நாள் முழுவதும் ஒரே கொண்டாட்டம் தான். எல்லோருடனும் நானும் நன்கு ரசித்தேன் – கூடவே புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். என்னையும் சில நண்பர்கள் புகைப்படம் எடுத்துத் தந்தார்கள்! இல்லையெனில், பெரும்பாலான பயணங்களில் என் புகைப்படம் இருப்பதே இல்லை!


விலையுயர்ந்த முர்ரா இன எருமை....


மண்குளியல் தொட்டி....
முல்தானி மிட்டி எனும் Body Pack!

இங்கே தரும் உணவு பற்றியும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். பெரும்பாலும் நிறைய அளவில் செய்யும்போது உணவு அவ்வளவு தரமாக/சுவையாக இருப்பதில்லை. இங்கே தந்த காலை உணவும் சரி, மதிய உணவும் சரி ரொம்பவே நன்றாக இருந்தது. காலை உணவாக, பூரி, பராட்டா, ஆலு சப்ஜி, தயிர், ஊறுகாய், வெண்ணை, ஜிலேபி, என அனைத்தும் இருக்க, எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்! மதிய உணவில் தந்தூரி ரொட்டி, பாஜ்ரே ரொட்டி, மக்காச் சோள ரொட்டி, என் விதம் விதமாக ரொட்டிகள், விதம் விதமான சப்ஜி என அனைத்துமே அசத்தலாக இருந்தது. பாஜ்ரே தா ரொட்டி, மக்கி-Dhaதா ரொட்டி, சர்சோன் கா சாக் போன்றவை கிராமத்துப் பெண்கள் விறகு அடுப்புகளில் சமைத்துத் தருவதால், கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். முள்ளங்கி ஃப்ரெஷ்-ஆகக் கிடைப்பதால் அப்படியே சாப்பிடலாம்! கரும்பும் நிறையவே சாப்பிடக் கொடுக்கிறார்கள்.


மீண்டும் குழந்தைகளாவோம்....
மட்ரி ஃபோட் - பானை உடைக்க புறப்பட்ட குழு உறுப்பினர்...



எனக்கு உணவு கிடைத்தது, உனக்கு கிடைச்சதா?....

தலைநகர் வரும் வாய்ப்பு இருப்பவர்கள், ஒரு நாள் பயணமாக இந்த பிரதாப்கட்[ர்] பண்ணைக்குச் சென்று வரலாம். அவர்களது இணைய தள முகவரி - http://www.pratapgarhfarms.com/.  மேலதிகத் தகவல்கள் தேவை எனில் அவர்களது தளத்தில் தந்திருக்கும் அலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் – என்ன ஹர்யான்வி மொழியில் பேசுவார்கள்! ஆங்கிலம் நிறையவே தகறாறு அவர்களுக்கு!


அரிக்குது... கொஞ்சம் சொறிஞ்சு விடறீங்களா? மூக்கு அங்கே போகல!....


பண்ணையில் விளைந்திருந்த நூல்கோல்....

நாள் முழுக்க கிராமிய சூழலில் விளையாட்டு, உணவு, என அனைத்தும் ரசித்து மகிழ்ந்தோம். கதவைப் பூட்டும் வரை அங்கேயே இருந்து புறப்பட மனதே இல்லாது அங்கிருந்து புறப்பட்டோம். மீண்டும் குழந்தைகளான எல்லோரும் ஒரு மிக்க சொன்னது – “இன்னுமொரு முறை இங்கே வரணும்!”   

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

18 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமாக பொழுது போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அத்தனை விஷயங்கள் அங்கே இருந்தன!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதிவுடனேயே தம லிங்க் தந்து விடுங்களேன். கணினி வழி வந்தாலும் தம பட்டை காணோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் பதிவுகள் Schedule செய்து வைத்திருப்பது தான். இங்கே இருக்கும் குளிரில் காலையில் எழுந்து இணைப்பு தர கொஞ்சம் தாமதமாகிவிடுகிறது! :) விடுமுறை நாட்களில் இன்னும் அதிக தாமதம்!

      இப்போது இணைத்துவிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அழகிய படங்களும், சுவாரஸ்யமான விடயங்களும் ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. நல்ல ஸ்வாரஸ்யம்!!! அருமையாக இருக்கிறது படங்கள். அடுத்த முறை தங்கை வீட்டிற்குச்
    (குருகிராம்) செல்லும் போது செல்ல வேண்டும் என்று சென்ற முறை சென்ற போது முடிவு செய்தது...எப்போது வாய்ப்புக் கிடைக்கும் தெரியவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை இங்கே வந்தால் சென்று வாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. மீண்டும் குழந்தைகளாகலாம்!..

    அருமை - அழகிய படங்களுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. சென்னையிலும் இதுபோல் ஒன்று இருக்கிறது. உங்களுக்கு இந்த டிரிப்புக்கு 1500 ரூ ஆயிருக்கும்னு நினைக்கறேன் (போக வர). மற்றபடி நல்லா எஞ்சாய் செய்யும்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் இருப்பது Chowki Dhani - ஒரு Franchise - முதன் முதலில் ஜெய்ப்பூர் எல்லையில் ஆரம்பித்தார்கள். ஜெய்ப்பூரில் சென்றிருக்கிறேன் - குடும்பத்துடன்! ப்ரதாப்கட்[ர்] அளவு நன்றாக இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. சூப்பரா இருக்கு சகோ சுற்றிபார்ப்பதற்க்கு டில்லி வரும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாய் இங்கே போகணும்
    ஆக்டிவிட்டீஸ் பட்டியல் சூப்பர் உண்மை குழந்தைகளாய் மாறும் நேரம் மிகவும் மண் குதூகலத்தை அடையும் படங்கள் இணைப்பு அத்தனையும் கவரும் படி
    அலைபேசி வழியாக த.ம இருக்கிறதே கணனியில் அதை சொடுக்கினால் ஒட்டு காண்பிக்கிறது சரிதானே..... நான் இவ்வ்வாறுதான் சமீபமாய் உங்களுக்கு அளித்துளேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த.ம. பற்றிய கவலை வேண்டாம். விழுந்தால் ஓகே. இல்லை என்றாலும் பெரிதாய் நஷ்டமில்லை. படிப்பது முக்கியம்!

      தில்லி வரும் வாய்ப்பு இருந்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  8. நூல்கோல் இலை முள்ளங்கி இலை மாதிரிதான் இருக்கு....

    காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி.. கங்கை வெள்ளம் பொங்கும்போது அடங்கிவிடாது...ன்னு பி.ஜி.எம் ஒலிக்கலையாண்ணா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி.ஜி.எம். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  9. நம்முள் இருக்கும் சிறுவர்களை விழித்தெழச் செய்யும் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....